Thursday 22 November 2018

அவன் விதி – சிறுகதை


எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான்.

எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன். 25 மில்லியன்  மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்டது.

25 மில்லியன் டொலர்கள்….

இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது?

படிக்கும் காலங்களில் அவன் என்றுமே திறமைசாலியாக இருந்தது கிடையாது. சுமார் ரகம் அவன்.

அகதியாக வந்து வேலை தேடி அலைந்தான். ஒருநாள் ஆங்கில வகுப்பு முடிந்து, சுவிஸ் சலற்றில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது அவனுக்கொரு யோசனை வந்தது. அங்கே வேலை கேட்டுப் பார்த்தால் என்ன? என்ன ஆச்சரியம். வேலை கிடைத்தது. டிஸ்வாசரில் பாத்திரங்கள் கழுவும் வேலை.

பிரியாவைத் திருமணம் முடித்த கையோடு, ஒரு உணவகத்தை விலைக்கு வாங்கினான். பின்னர் தொடர்ந்து அவனுக்கு யோகம் அடித்தது. எல்லாம் பிரியா வந்த நல்ல நேரம்தான் எனச் சொல்லுமளவுக்கு மூன்று பிள்ளைகளுக்கும் ஐந்து உணவகங்களுக்கும் சொந்தக்காரனானான். அவனின் ஆளுமை, ஆற்றல் – எல்லோரும் அண்ணார்ந்து பார்க்குமளவிற்கு கிடுகிடுவென்று உயர்ந்தான். எத்தனையோ பேருக்கு வேலை வழங்கிக் கொண்டிருந்தான்.

ஆயிரம் கனவுகளுடன் பிரியாவை மகாராணியாக்கி வாழ்ந்தான் மனோ.

அகதியாக வந்து இன்று எத்தனையோ தொழிலகங்களுக்கு அதிபதியாக இருக்கும் மனோவிற்கு, மேஜர் விருது வழங்கிக் கெளரவித்தார்.

அந்தக்காலத்தில்தான் நான் எனது மைத்துனனின் கலியாணத்திற்காகச் சென்றிருந்தேன். கலியாணவீட்டிற்கு வரமுடியவில்லை என மிகவும் மனம் வருந்தினான். தனது வீட்டிற்கு வரும்படி எங்களுக்கு அழைப்பு விடுத்தான்.

அவனது வீட்டைப் பார்த்து மலைத்துவிட்டோம். நான்கு கார்கள் தரிப்பிடக்கூடிய கராஜ், இரண்டு மாடிகள் கொண்ட பெரிய பங்களா அது. என்னுடன் பள்ளியில் படித்த மனோவா அவன். அந்தநாட்களில் உடுப்புகளைப் பற்றி எதுவும் அக்கறை கொள்ளாமல் கோமாளித்தனமாகத் திரிந்த அவன், இன்று கப்ஷிப் ஆடைகளுடன் ஒரு கனவான் போலத் தெரிந்தான். அவனுடைய மூன்று பிள்ளைகளும் என்னுடையவையுமாகச் சேர்ந்து வீட்டை ரணகளப்படுத்தினார்கள்.

என் மனைவியை பிரியாவுடன் போய் இருந்து கதைக்கும்படி சொன்னான் மனோ. பிரியா மிகவும் நல்லவள். அவள் தான் எனக்கு எல்லாம் என்றான் மனோ. நான் அங்கு நின்ற தருணங்களில் பலதடவைகள் ‘பிரியா’ எனக் காது புளிக்குமளவிற்கு கேட்டிருந்தேன்.

தான் நவீன வசதிகள் கொண்ட கொமேட் ஒன்றை ரொயிலற்றுக்கு வாங்கியிருப்பதாகவும், அதனைப் பரீட்சித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னான் மனோ. என்னை ரொயிலற் அறைக்கு வரும்படி கூப்பிட்டான். அது ரொயிலற்றா? மிகப் பிரமாண்டமானதொரு அறை. அதற்குள்லேயே பத்துப்பேர்கள் படுத்துறங்கலாம். பின்னர் கொமேட்டைக் கட்டிப்பிடித்து, கையை உள்ளேயுள்ள நீரினுள் அமுக்கி, கொமேட்டில் இருந்த இலற்றோனிக் ஆளிகள் மீது விளையாடினான்.

”மச்சான்… இதைக்கொண்டு தண்ணியின்ரை வெப்பநிலையைக் கூட்டிக் குறைக்கலாம். தண்ணி உள்ளே அடிக்கின்ற வேகத்தையும் அளவையும் கூட்டிக் குறைக்கலாம். எல்லாம் முடிஞ்சவுடனை இதை அமத்தினால் அச்சாவாகக் கழுவிவிடும்.

இது மச்சான்… இதை அமத்தினால் மசாஜ் செய்துவிடும். இன்னும் எத்தனையோ இருக்கு. கற்லொக்கைப் பாக்கவேணும்” என தன் புதிய கொமேட்டைப் பற்றிப் புளுகித் தள்ளினான்.

மனைவி பிரியா தேநீர் போட்டுத் தந்தார். நாசமாப்போன தேநீர். சுடுநீர் வேறை, சீனி பால் தேயிலை வேறை. அவர் போட்டுத் தந்தார் என்பதைவிட நாங்கள் போட்டுக் குடித்தோம் என்பதே சரி. அதென்னவோ தெரியவில்லை, பணம் வந்தவுடன் இப்படிப்பட்ட கேலிக்கூத்துகள் தானாகவே முளைத்துவிடுகின்றன.

அதன்பின்னர் இரவுச் சாப்பாட்டிற்காக றெஸ்ரோரன்ற் கூட்டிச் சென்றான். பியர் கிளாசை எனக்கு நீட்டி, தனக்கொன்றும் எடுத்துக் கொண்டான். பிரியா கொஞ்சம் வைன் எடுத்துக் கொண்டாள். எங்களுக்கு முன்னாலேயே செவ் சமைத்துத் தந்தார். சும்மா சொல்லப்படாது நன்றாகவே எங்களைக் கவனித்து அனுப்பினான்.

வீட்டிற்குப் போனதும் நானும் மனைவியும் பரிமாறிக்கொள்ள செய்திகள் இருந்தன.

“மனோ அந்தப்பெரிய வீட்டை தனது மனைவியின் பெயரில் எழுதிவிட்டான். பிஸ்னஸ் எப்பவாவது படுத்துக் கொண்டால் பாங்றப்சி (bankruptcy) அடிக்க வசதியாகவிருக்கும்” இது நான் மனைவிக்குச் சொன்ன செய்தி.

“மனோவுக்கும் பிரியாவுக்கும் அவ்வளவு ஒட்டுறவு இல்லைப் போல கிடக்கு” இது மனைவி எனக்குச் சொன்ன செய்தி.

அடுத்தடுத்த வருடங்களில் மனோ – பிரியாவைப் பற்றி வந்த செய்திகள் அதிர்ச்சி தருபவையாக இருந்தன.
@

மனோ நிர்வகிக்கும் கடைகள் ஒவ்வொன்றாகக் கூட, மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இருக்கும் நேரம், ஒட்டுறவு குறையத் தொடங்கியது.

நேரம் காலம் தெரியாமல் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தான். அசதி தீர சிறிது குடிக்கவும் தொடங்கினான். வேலைப்பளுவினால் மனைவி பிள்ளைகளுடன் எரிந்து விழவும் தொடங்கினான்.

மனைவி பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்காமல், முகம் தெரியாத மனிதர்களை வீட்டிற்கு அழைத்துவந்து கொண்டாடினான்.

குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் பிரியா மெல்லத் திண்டாடினாள். மாறத் தொடங்கினாள். கார் ஒன்றைப் பழகி, தானே எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கினாள். கடைகளுக்குப் போனாள், பிள்ளைகளை பாடசாலைக்கு ரியூசனுக்கு ஏற்றி இறக்கினாள்.

ஆனால் மனோவிற்கோ பிரியா மீதும் அவள் அழகின் மீதும் கொள்ளை ஆசை. அவள் எது செய்தாலும் பேசமாட்டான். அவள்மீது உயிராக இருந்தான். எல்லாம் தன்னுடைய குடும்பத்திற்காகவேதான் செய்கின்றேன் என்ற ஒரே நினைப்புத்தான் அவனிடம் இருந்தது.

நாளாக பிரியா மனோவை ஏறெடுத்துப் பார்க்காமல் இருக்கத் தொடங்கினாள். உணவு செய்து கொடுப்பதைத் தவிர்த்து வந்தாள். பிள்ளைகளை அவனுடன் அண்டவிடாமல் தடுத்தாள். பின்னர் ஒருநாள் கட்டிலைப் பிரித்தாள்.

மெதுவாக வெளியே இருந்துவந்த குடிப்பழக்கம் பெருகி, வீட்டிற்குள்ளும் அடியெடுத்து வைத்தது. தனக்குத் தேவையான உணவைத் தானே வாங்கிவந்து கொட்டிச் சிந்தி விளையாடினான்.

திடீரென ஒருநாள் பிரியா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டபோது மனோ நிலை குலைந்து போனான். அப்போது அவனிடம் பன்னிரண்டு உணவகங்கள் இருந்தன. எல்லாமே குடும்பத்திற்காகவே என நினைத்திருந்த மனோ ஆடிப் போனான். அதன்பின்னர் குட்டி போட்ட பூனை போல அவளின் பின்னால் சுற்றிச் சுற்றி வந்தான். ஆனால் அது காலம் கடந்து போய்விட்டது என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

“நீ குடிக்கின்றாய். கிளப்புக்குப் போகின்றாய். கண்ட பெண்களுடன் கூத்து அடிக்கின்றாய். உன்னுடன் வாழ முடியாது.”

நண்பர்களின் சமரச முயற்சி பலிக்கவில்லை. நண்பர்களுக்கு அவர்கள் இருவரில் யார் சரி பிழை என்று புரியாமல் விழித்தார்கள்.

ஒருநாள் மனோ நண்பர்களுடன் வீட்டிலிருந்து குடித்துக் கும்மாளவிட்டான். இடையே அவர்களிடையே சண்டை வந்தபோது, எல்லாரையும் வீட்டைவிட்டுப் புறப்படும்படி பிரியா சத்தமிட்டாள். மனோவை வீட்டைவிட்டு வெளியேறும்படி சொன்னாள். மனோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தினமும் அதையே பிரியா சொல்லி வந்தாள்.

“இது என்னுடைய வீடு. வீட்டை விட்டு வெளியே போகலாம்.”

’இது என்னுடைய வீடு’ என்றபோது மனோவின் மனதினுள் முதாவது இடி இறங்கியது.

குடிப்பழக்கமும் கூடா நட்பும் முன்னேற, பிஸ்னஸ் மெல்ல ஆட்டம் காணத் தொடங்கியது.

ஒருநாள் பிள்ளைகள் பாடசாலை சென்றுவிட்ட மதிய வேளையில், பிற ஆடவன் ஒருவனுடன் சோபாவில் இருந்து பிரியா கதைத்துக் கொண்டிருப்பதை மனோ கண்டான். உள்ளே அறைக்குள் சென்ற மனோ, ஒரு தும்புத்தடி எடுத்துவந்து அவனை விளாசித் தள்ளினான்.

பிரியா பொலிசை வரவழைத்து மனோவை வீட்டிலிருந்து வெளியேற்றினாள்.

அடுத்துவந்த இரண்டு வருடங்கள் மனோ தன் நண்பர்களுடன் இருந்தான். அப்போது அவனது கடைகள் ஒவ்வொன்றாக சரியத் தொடங்கின. வியாபாரம் விசித்திரமானது. எப்பொழுதும் விழித்தபடி இருத்தல் வேண்டும். வீழ்த்துவதற்காக பலர் காத்திருப்பார்கள். அவனது நண்பர்களே அவனை வீழ்த்தினார்கள்.

தான் வாங்கியிருந்த முதலாவது உணவகத்தை விற்க நேர்ந்தபோது, ஆணிவேர் அறுந்து போர்க்களத்தின் நிராயுதபாணியானான்.

பிள்ளைகளை இடையிடையே போய்ப் பார்த்துவந்த மனோ அதனையும் குறைக்கத் தொடங்கினான்.

பிரியா கண்ட கனவுகள் ஒவ்வொன்றாகத் தகர்ந்து போயின.

மனோவின் பன்னிரண்டு கடைகளில் இப்பொழுது இரண்டுதான் எஞ்சியிருந்தன. பன்னிரண்டு கடைகளிலும் பங்குபோடத் துடித்த பிரியா, மனோவின் நிலையறிந்து அழுது தீர்த்தாள். நண்பர்களுக்கு சாபம் இட்டாள்.

இந்த நிலையில்தான் ஒருநாள் குடித்துவிட்டு வீதியில் விழுந்து கிடந்த மனோவை, பிரியாவும் பிள்ளைகளுமாகத் தூக்கிவந்து அவர்களின் பேஸ்மன்றிற்குள் தள்ளினார்கள்.
@

பத்துவருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நான் கனடா வந்தபோது, மனோவை அந்தக் கோலத்தில் சந்திக்க மனம் விரும்பவில்லை. ஒன்றாகப் படித்து, நன்கு பழகிய நண்பர்களுக்கு இப்படி நேரும்போது மனம் பதைபதைக்கின்றது.

“வந்தனி… பாத்திட்டுப் போ. இனி எப்ப நீ வருவாயோ தெரியாது. நீ வரேக்கை மனோ இருப்பானோ தெரியாது.

ஐஞ்சுமணி மட்டிலை வெளிக்கிட்டு நில். நான் வந்து உன்னைக் கூட்டிக் கொண்டு போறன்” நண்பன் சதீஸ் தொலைபேசியில் சொன்னான்.

மனோவின் வீடு பத்து வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்ததோ, அப்படியே இருந்தது. அவன் மனைவி பிரியா கதவைத் திறந்தாள். கூடவே ஒரு ஆடவனும் அவளுடன் உரசியபடி எட்டிப் பார்த்தான். வேண்டா வெறுப்பான பார்வை அவள் முகத்தில் தெரிந்தது.

“வாருங்கோ. கன நேரம் நிக்காதையுங்கோ. பிறகு மனோ குழப்படி விடத் தொடங்கிவிடுவான்.”

வீடு நறுமணத்தில் கமகமவென முகிழ்ந்தது. ஒரு அரண்மனைக்குள் நுழைவது போன்ற பரவசநிலை. அவர் எங்களைப் படி வழியே இறக்கி பேஸ்மன்றிற்கு அழைத்துச் சென்றார்.

“இனி உங்கள் நண்பரைச் சந்தியுங்கள். போகும்போது சொல்லிவிட்டுப் போங்கோ” கதவைத் திறந்து நாங்கள் உள்ளே சென்றதும் மீண்டும் கதவைச் சாத்திவிட்டுச் சென்றார் பிரியா.

”இவள் மனோரஞ்சனைப் பூட்டி வைச்சிருக்கின்றாள்” சதீஸ் புற்புறுத்தான்.

உள்ளே வெடுக்கென ஒரு நாற்றம் திடீரென எங்களைத் தாக்கியது. அரன்மனைக்குள் ஒரு நரகமா?

மனோ நாங்கள் வந்ததும் தெரியாமல், கட்டிலில் படுத்திருந்து, ஒருபக்க ஜீன்சை மேலே இழுத்து காலை விறாண்டியபடி மேல் கூரையை விறைத்துப் பார்த்தபடி இருந்தான்.

“மனோரஞ்சன்! இங்கே பார் யார் உன்னைப் பாக்க வந்திருக்கிறது எண்டு” அவனின் மோன நிலையைக் குழப்பினான் சதீஸ்.

அவன் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு,
“உன்னுடைய தம்பியா?” என்று சதீசைக் கேட்டான்.

“அது கரன். ஒஸ்ரேலியாவிலை இருந்து உன்னைப் பாக வந்திருக்கிறான்.”

”எட… நம்ம இஞ்சினியர்!”

என்னத்தைக் கதைப்பது என்று தெரியவில்லை. மனோவின் முகம் ஒடுங்கி என்புருக்கி நோய் வந்தவன்போல காணப்பட்டான். இருப்பினும் நன்றாக உடை அணிந்து ஒரு கனவான் போல தென்பட்டான். கழுத்திலே ‘ரை’ சுருண்டு கிடந்தது. கட்டிலின் சட்டங்களைப் பிடித்திருந்த அவன் கைகள் நடுங்குமாப் போல் இருந்ததை அவதானித்தேன். அவன் கைகளை இறுகப் பற்றி, “எப்பிடியடா இருக்கின்றாய்?” என்றேன்.

எனது பற்றுதலையும் மீறி அவன் கைகள் நடுங்குவதை உணர்ந்தேன்.

“எனக்கென்னடா குறைச்சல். இராசா மாதிரி இருக்கிறன்.

இவள் பெடிச்சி பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு ரியூசனுக்குப் போயிட்டாள். பாவம் அவள் எல்லா வேலையையும் தலையிலை போட்டுக் கொண்டு திரியுறாள். பொறுங்கோ வந்திடுவாள். ரீ எல்லாம் குடிச்சிட்டுத்தான் போகவேணும்.”

பின்பு கன்னத்திலே கையை வைத்து ஜோசித்தான்.

“பொறு… இரு மச்சான். வாறன்” சொல்லியபடியே பின்புறமாக இருந்த அறைக்குள் சென்றான்.

பிரியா தனது புதிய ஆசைநாயகனுடன் கெக்கட்டம் போட்டுச் சிரிப்பது மேலிருந்து கேட்டது.

நான் எனது மூக்கைச் சுழித்து, “இந்த நாத்தம் எங்கிருந்து வருகின்றது?” என சதீசிடம் கேட்டேன்.

“பொறுடா… பேசாமல் இரு. பிறகு நான் சொல்லுறன்.”

மனோ உள்ளேயிருந்து ஒரு சாப்பாட்டுப் பிளேற்றுடன் வந்தான்.

”மச்சான்… வாடா… வந்தனி இதைச் சாப்பிட்டிட்டுப் போ”

சாப்பாட்டுக் கோப்பைக்குள் பாதி கிழறிவிட்டபடி, காய்ந்தும் காயாததுமாக அவன் சாப்பிட்டு அரைகுறையில் வைத்திருந்ததை என்னிடம் நீட்டிச் சாப்பிடச் சொன்னான்.

”மனோ… இப்பதான் நாங்கள் இரண்டுபேரும் வெளியிலை சாப்பிட்டிட்டு வந்தனாங்கள். இன்னொருநாள் சாப்பிடலாம்.”

”கனநேரம் கதைச்சிட்டம் என்ன! அப்ப நீ இன்னொருநாள் பிரியா நிக்கிற நேரமாப் பாத்து வா. வந்து சாப்பிட்டிட்டுப் போ.

மற்றது இன்னொரு விஷயம், சொல்ல மறந்து போனன். பிறம்ரனிலை இரண்டு கடையள்  புதுசா வாங்கி விட்டிருக்கிறன். இந்தமாதம் 20ஆம் திகதி மட்டிலை திறப்புவிழா. மேஜர் அவன் இவன் எண்டு கனக்கப் பேர் வருகினம். சதீஸ் நீ இவனையும் கூட்டிக் கொண்டு வா” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது சதீஸ் என் காலைச் சுரண்டி மனோவின் ஜீன்சின் முன்பகுதியைப் பார்க்கும்படி ஜாடை காட்டினான். மனோ அப்போது  சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் அவனது ஆடை ஊற்றினால் உடைப்பெடுத்து மேலும் ஈரமாகிக் கொண்டிருந்தது.

“நான் இன்னும் மூண்டுநாளிலை ஒஸ்ரேலியா போய்விடுவேன்.”

”எட நான் நினைச்சன் நீ இஞ்சை கனடாவிலை இருக்கிறாய் எண்டு.”

“அப்ப மனோ… நாங்கள் போய் வருகிறோம்.”

“சதீஸ்… நீயாவது விழாவுக்கு வாடா” சொல்லிவிட்டு ஏக்கத்துடன் எங்களைப் பார்த்தான். நாங்கள் அவனிடமிருந்து விடைபெறும்போது மேலுக்கு ரொயிலற் ஃபிளாஷ் பண்ணும் ஒலி பூதாகரமாகக் கேட்டது. அனேகமாக அது அந்த இலக்ரோனிக் ரொயிலற் ஆகத்தான் இருக்கும். அது இப்போது இங்கே பிரயோசனப்படாமல் இவனுக்கு முன்னும் பின்னும் ஒரு கொன்ரோல் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது..

நாங்கள் பிரியாவைத் தேடினோம். ஹோலிற்குள் ஒருவரும் இல்லை. சொல்லாமலே வீட்டை விட்டுப் புறப்பட்டோம்.

மனோ சில நேரம் நல்லபடி கதைக்கின்றான். சிலநேரம் மனநோயாளி போல இருக்கின்றான்.

”பிரியா இன்னும் மனோவுடன் ஏன் இருக்க வேண்டும்? அவனது நோயைக் காரணம் காட்டியே இலகுவாக விவாகரத்துப் பெற்றுவிடலாம் அல்லவா?”

”பெற்றுவிடலாம் தான். பிரியா பயங்கரக் கில்லாடி. கணவன் நோயாளி ஆனபின்னும் தான் அவனை வைத்துப் பார்க்கின்றேன் என்று சமூகத்தில் நல்ல பேர் கேட்கலாம். மற்றது விவாகரத்துப் பெற்றால் தனது சொத்தில் பாதி குடுக்க வேண்டி வரும். இன்னும் கொஞ்சக் காலம் இருந்தால் அவன் இறந்துவிடுவான். ஒண்டுமே குடுக்கத் தேவையில்லை. எல்லாமே சுலபமாக முடிந்துடுவிடும்.

யாருக்குத் தெரியும்.

மனித மனங்கள் விசித்திரமானது. அது ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டது” பெரியதொரு விளக்கத்தை சொல்லிக் கொண்டு வந்தான் சதீஸ்.

”இந்த நாளையிலை எவரையும் நம்ப முடிகின்றதோ இல்லையோ, ஒவ்வொருத்தரும் தமக்கென்று ஒரு சில வைப்பை வைத்திருக்க வேண்டித்தான் உள்ளது” என்றேன் நான்.
@
  
மேன்மை (வைகாசி - 2018)

No comments:

Post a Comment