ஆராதனாவிற்குத் திருமணம். தாலி
கட்டி முடிந்துவிட்டது. எல்லாரும் வரிசையில் நின்று மணமக்களுக்கு அட்சதை தூவி
வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஹோல் நிரம்ப மகிழ்ச்சி ஆரவாரம்.
ஆராதனாவிற்கு சமீபத்தில்தான்
பதினெட்டு வயது முடிந்திருந்தது.
ஆராதனாவின் அப்பா வழி உறவினர்கள்
எல்லாரும் வாழ்த்துத் தெரிவிக்கையில் “நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்”
என்று மறக்காமல் மாப்பிள்ளையிடம் சொன்னார்கள். அம்மா வழி உறவினர்களுக்கு அந்த
பாய்க்கியம் கிடைக்கவில்லை.
“நான் தான் ஆராதனாவைத் தூக்கி
வளர்த்தேன்.”
“நான் தான் ஆராதனாவைத் தூக்கி
வளர்த்தேன்.” மாப்பிள்ளைக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.
சுமதி மச்சாள் அட்சதை போடும்போது,
அதற்கும் மேலே போய், “உன்ரை அம்மா இதையெல்லாம் பாக்கக் குடுத்து வைக்கவில்லையே” என
மூக்கால் சிணுங்கி ஆராதனாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆராதனாவின் கண்கள்
குளமாகின.
ஆராதனாவின் அம்மா சிவகாமி இறந்து
ஒரு வருடம்கூட ஆகியிருக்காது. அதற்கிடையில் அவசர அவசரமாக அவளின் படிப்பையும்
குழப்பி, கனவுகளையும் சிதைத்து ஏன் இந்தக் கலியாணம் என்பது ஆராதனாவிற்குப்
புரியவில்லை. அப்பா குமரேசன் தன் கடமை முடிந்தது என்பதுமாப் போல் எல்லாவற்றையும்
முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்.
மாப்பிள்ளை ஸ்ரீதர் பொறியியலாளன்.
கம்பீரமாக அருகில் நிற்கின்றான். சுமதி மச்சாள் மூக்கால் ஆராதனாவின் முகத்தை உரசி
முடிய, தனது கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழற்றி யாரும் நினைத்துப்
பார்த்திருக்காத வண்ணம் ஆராதனாவின் கழுத்தில் போட்டாள். ஆராதனா மகிழ்ச்சியில் கண்
கலங்கினாள்.
“எதுக்கு மச்சி இப்ப இது?”
“இல்லை… இது உன் கழுத்தில்தான்
இருக்க வேண்டும்” சொல்லிவிட்டு மாப்பிள்ளையை நிமிர்ந்து பார்த்தாள் சுமதி.
“தம்பி… இவளும் என்னுடைய மகள்தான்.
பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.”
அந்தச் சங்கிலியைப் பிடித்துப்
பார்த்த ஆராதனா திகைத்துப் போய்விட்டாள். அது அவளுடைய அம்மாவின் சங்கிலி. சங்கிலி
அல்ல, அம்மாவின் உயிர். அதில் இருந்த ‘பென்ரனை’க் காணவில்லை. அம்மா இவ்வளவு
கெதியில் இறப்பதற்கு அந்தச் சங்கிலியும் ஒரு காரணமாக இருக்கலாம். அது
அம்மாவிடமிருந்து சுமதி மச்சாளிடம் இடம் மாறியதற்கு ஒரு சம்பவம் உண்டு. ஆராதனா
அந்தச் சம்பவத்தினுள் மூழ்கிப் போனாள்.
w
சிவகாமி… குமரேசனை மணம் முடித்து செம்மண் தோட்டங்கள்
மலிந்த இணுவிலுக்கு வந்து சேர்ந்தவள். அவளது வீடு, கோவில்மணி ஒலி கேட்கும்
தூரத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவிலிற்குத் தெற்குப்புறமாக இருந்தது.
ஒருமுறை ஆராதனா படத்தைப்
பார்த்துவிட்டு வந்த சிவகாமி, தனக்கொரு மகள் பிறந்தால் அந்தப்
படத்தின் நாயகியின் பெயரை அவளுக்கு வைப்பது என்று தீர்மானித்தாள்.
அவள் கனவு நிறைவேறியது.
ஆராதனா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து அந்த வீட்டிலே – அந்தக் கிராமத்திலே ஒரு இராஜகுமாரியாக வலம் வந்து
கொண்டிருந்தாள்.
ஆராதனாவின் வீட்டைச் சுற்றி அவளின்
தகப்பனார் குமரேசனின் உறவினர்கள் வசித்து வந்தார்கள். முன் வீடு
குமரேசனின் அக்கா சாவித்திரி வீடு. பக்கத்து வீடு ஆராதனாவின் மச்சி---சாவித்திரியின் மகள்--- சுமதியினுடையது. குமரேசனின் குடும்பம் பெரியது.
பெற்றோருடன் ஒரு டசின். குடும்பத்தில் மூத்தவள் சாவித்திரி, கடைக்குட்டி குமரேசன்.
ஆராதனாவுடன் விளையாடுவது, அரட்டை அடிப்பது என்றால் அந்தச் சுற்றுப்புறத்தில் உள்ள
சிறுவர் சிறுமியர்களுக்குக் கொண்டாட்டம். எட்டுப்பாத்தி, கிளித்தட்டு, கிட்டிப்புள், மாபிள் என்று பல விளையாட்டுகள் விளையாடுவார்கள்.
ஆராதனா ’மச்சி… மச்சி’ என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி சுமதி வீட்டில்தான்
நிற்பாள். எல்லா மச்சாள்மாரையும் விட, சுமதி மச்சாள் என்றால்
அவளுக்கு உயிர். அவளும் தனது பிள்ளைகளுக்கு என்ன
செய்கின்றாளோ அவை எல்லாவற்றையும் ஆராதனாவிற்கும் செய்தாள். தலைவாரிவிடுவாள், பேன் பார்ப்பாள், பிள்ளைகளுக்கு உடுப்பு
வாங்கும்போது ஆராதனாவுக்கும் சேர்த்து வாங்குவாள். அதே போலவே சிவகாமியும் என்ன விசேட பலகாரங்கள் செய்தாலும், சுமதி குடும்பத்தினருக்கும் சேர்த்தே செய்வாள்.
குமரேசன் வெளிநாட்டிலிருந்து
வரும்போது கொண்டுவரும் உடுப்புகள், சொக்கிளேற், சென்ற் எல்லாம் அவர்களுக்கும்
கொடுப்பான்.
இருவரது வீட்டு வளவுகளையும் ஒரு
கிடுகு வேலி பிரிக்கின்றது. அந்தக் கிடுகு வேலியின் கீழே ஒரு ’பொட்டு’ பிரித்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பொட்டிற்குள்ளால் தான் இரண்டு பக்கச் சிறுவர்களினதும்
நடமாட்டம் இருக்கும். அதேபோல் மேற்புற வேலியில் ஒரு பள்ளம்
இருக்கும். அது பெரியவர்களுக்குரியது. அதனூடாக உணவு, மற்றும் பொருடகள் பரிமாற்றம்
நடக்கும்
விளையாட்டில் பிரச்சினைகள்
வரும்போது சுமதியின் மூத்த மகள் யசோதா பேய் பிடித்தது போலக் கத்திக் கொண்டு தனது
வீட்டிற்கு ஓடுவாள்.
“என்னை ஏன் அம்மா கறுப்பாகப்
பெத்தனீ!” தாயுடன் சண்டை பிடிப்பாள்.
சுமதியின் மூன்று பிள்ளைகளும்
கறுப்பு நிறம் கொண்டவர்கள். கறுப்பெண்டால் கறுப்பு. கன்னங்கரிய கறுப்பு.
என்ன பிரச்சினை என்றாலும்
கறுப்புத்தான் முன்னுக்கு துருத்திக் கொண்டு நிற்கும். இது குழந்தைகள் வளர வளர அதிகரிக்கத் தொடங்கியது. கறுப்பு என்ற இருள் வளர்ந்தது.
ஆராதனா தான் வெள்ளை என்று
ஒருபோதும் பெருமை கொள்வதில்லை. அது தானாக வந்தது. அதற்காக அவள் என்ன செய்யமுடியும்?
படிக்கும் பாடங்களில் புள்ளிகள் குறைந்தாலும் ‘என்னை ஏன் கறுப்பாகப் பெத்தனி’ என்றுதான் யசோதா கத்துவாள். அவளின் அந்தச்
சத்தம் ஆந்தை அலறுவது போல சுற்றுப்புறத்தில் ஒலிக்கும்.
பிள்ளைகளுக்கிடையே சண்டை
வந்துவிட்டால், அந்தப் பொட்டு அடைக்கப்படும். அனேகமாக யசோதா தான் அதை பலகை கொண்டு அடைத்து விடுவாள்.
|கோவம் கோவம் கோவம். கண்ணைக் கட்டிக் கோவம், செத்தாலும் பாவம். பாம்பு வந்து கொத்தும்.| இந்தக் கோசத்தை அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னர் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். அதே போல சில நாட்களின் பின்னர் பொட்டின் அடைப்பு நீக்கப்படும். பின்னர் அங்காலே இருந்து ஒரு கை நீளும். பின்பு இங்காலும் இருந்து ஒரு கை நீளும். பின்னர் அடுத்த தடவை பொட்டு அடைக்கப்படும் வரை ஒரே
கொண்டாட்டம்தான்.
காலம் நகர்கின்றது. எல்லோரும் வளர்ந்து பெரியவர்கள் ஆகின்றனர்.
குமரேசன் வெளிநாட்டு வேலை. சிவகாமி தனித்து விடப்பட்டவள் போல் உணர்ந்தாள். அவள் ஐந்து ஆண்
சகோதரகளுடன் கூடப்பிறந்தவள். அவர்கள் குடும்பத்தில் இருக்கும்வரை ராசாத்தி மாதிரி.
பல்லக்கில் தூக்கித் திரிந்தவர்கள், இறக்கி வைக்க வேண்டிய நேரம் வந்ததும்
பாழும்வீட்டில் இறக்கி வைத்துவிட்டனர். அவள் விதி.
இடையிடையே அவளின் சகோதரர்கள் வந்து
போவார்கள். ஏதாவது கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்தக் காலங்கள் மகிழ்ச்சிகரமானவை.
சுற்றிவர இருக்கும் குமரேசனின்
உறவினர்கள் சிவகாமியின் சொத்துப்பத்துகளைப் பிடுங்கிக் கொள்வார்கள். அவள்
ஒரு ஏமாளி. என்னதான் படித்திருந்தாலும், ஆர் என்ன கேட்டாலும் குடுத்துவிடுவாள்.
கணவன் காசு அனுப்பும் தினங்களில் உறவினர்கள் வட்டமிடுவார்கள். காசு கடனாகக் கேட்பார்கள். நகைகளை இரவல் வாங்குவார்கள். கடன், இரவல் என்ற சொற்பதங்களின் அர்த்தம்
பின்னர் போய்விடும். சிவகாமி ஆண்டியாகும்
மட்டும் உருவிக் கொண்டார்கள். திருப்பிக் கேட்டு அடி விழுந்த
சந்தர்ப்பங்களும் உண்டு. குமரேசன் வெளிநாட்டில் இருந்து
வீடு திரும்பும்போது இவற்றைப் பற்றிச் சொன்னால், அவற்றை குமரேசன் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அவருக்கு அவரின் உறவினர்களே பெரிதாகத் தெரிந்தார்கள்.
ஒருமுறை சிவகாமியின் முத்துச்சங்கிலி மீது அவர்கள்
கண்பார்வை விழுந்தது. கலியாண வீடொன்றிற்குப் போய்வருவதற்காக இரவல்
வாங்கியிருந்தாள் சுமதி. அந்தச்சங்கிலி குமரேசன் வாங்கிக் கொடுத்தது அல்ல.
சிவகாமியின் குடும்பத்தில் அவள் ஒருத்தியே பெண் என்பதால் வழிவழியாக வந்த
குடும்பச்சங்கிலியை அவளது பெற்றோர்கள் சிவகாமிக்குக் கொடுத்திருந்தார்கள்.
வழமையாக ஒருவர் மாறி ஒருவர் என சாவித்திரியின் ஐந்து
பெண்களும் போட்டு முடிய, இரண்டொரு மாதங்களில் சங்கிலி வீடு வந்து சேர்ந்துவிடும்.
இந்தத்தடவை அதைத் திரும்பக் குடுக்காமல் இழுத்தடித்தாள் சுமதி. சிவகாமி சங்கிலி
பற்றிக் கேட்டபோது இதோ தந்துவிடுகின்றேன் என்பாள் சுமதி. ஆனால்
மூன்றுமாதங்களாகியும் சங்கிலி திரும்பி வரவில்லை. சிவகாமிக்கு ஒரு அவசர தேவை வந்து
அதைக் கேட்கப் போனபோது, அப்பிடியொரு சங்கிலியை தான் வாங்கவில்லை என சுமதி சத்தியம்
செய்தாள். சிவகாமி நீதி கேட்டு சாவித்திரியின் வீட்டு முற்றத்தில் நின்று
சத்தமிடத் தொடங்கினாள். பலத்த வாக்குவாதம் நடந்தது.
சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து எட்டிப்
பார்த்தாள் ஆராதனா. மச்சிமார்கள் எல்லாரும் சிவகாமியின் தலைமயிரைப் பிடித்து
இழுக்க, சாவித்திரி சிவகாமியின் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தார்.
”சங்லிலியைக் கேட்பியா? இனிமேல் சங்கிலியைக் கேட்பியா?”
அது நடந்தபோது ஆராதனா மிகவும் சிறு வயதினளாக இருந்தாள்.
அதைப் பார்த்த ஆராதனா பயந்து மிரண்டுபோய், பின்னாலே இருந்த பனை வடலிக்குள்
அன்றையநாள் முழுவதும் பதுங்கி இருந்தாள்.
தனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே இப்படி
நடந்து கொண்டதையிட்டு சிவகாமி கவலை கொண்டாள். அன்றிரவு முதன்முதலாக அவளுக்கு வலிப்பு
நோய் கண்டது. அவர்களே வந்து அவளை வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்றார்கள். அதையே
நினைத்து நினைத்து காலப்போக்கில் உருக்குலைந்தாள்
சிவகாமி. ஒருநாள் நித்திரையில் இறந்து போய்விட்டார்.
இந்தச் சம்பவம் ஆராதனாவின் மனதில் வடுவாகிவிட்டது.
குமரேசன் ஆராதனாவின் எதிர்காலம்
கருதி, வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு ஊருடன் வந்து இருந்து
கொண்டார்.
வெள்ளைப்பூவைத் தேடி
பட்டாம்பூச்சிகள் துரத்தத் தொடங்கின. ஆராதனா எங்காவது தவறிவிடக் கூடும் எனப் பயந்தார் தந்தை. பொருத்தமான வரன் அமையும்போது ஆராதனாவை எங்கையாவது கட்டிக்
கொடுத்துவிட வேண்டும் என விரும்பினார். மச்சிமார்கள் நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டுக்கொண்டு, ஆராதனாவிற்கு மாப்பிள்ளை தேட களம் இறங்கினார்கள். அவர்களுக்கு ஆராதனாவின் வயதையொத்த பிள்ளைகள் இருந்த போதும்
இவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதிலேயே முனைப்பாக இருந்தார்கள். ஆராதனாவில் ’பழகிப் பார்க்கலாம்’ என அவர்கள் முடிவு செய்தார்கள். மச்சிமார் எல்லோரும் ‘வெள்ளைமனம்’ கொண்டவர்கள் என ஆராதனா நம்பினாள்.
ஆராதனா தான் படிக்க வேண்டும் என்று
அடம் பிடித்தாள். மச்சிமார் தொடர்ந்து புகையடித்து
மந்திரம் ஓதினார்கள். இறுதியில் ஒரு பொறியியலாளனை சுமதி
தேர்ந்தெடுத்துக் குடுத்தாள்.
”இஞ்சினியர் மாப்பிள்ளையடி… அம்மாவும் உன்ரை கலியாணத்தைப் பாக்காமலே போயிட்டா. அப்பாவையாதல் மகிழ்ச்சியாக
வைத்திரு.”
எல்லாருமாக ஆராதனாவிற்கு போதனைகள்
செய்தார்கள். இஞ்சினியர் மாப்பிள்ளையின் படத்தை ரகசியமாகப் பொத்திக் குடுத்தாள்
சுமதி. ஆராதனா படத்தை ஒரு கரையில் போட்டுவிட்டு தன் காரியத்தைப் பார்த்தாள்.
“என்னடி கறுப்பெண்டு
பிடிக்கேல்லையோ? ஆள்தான் கறுப்பு. குணமோ தங்கக் கட்டி. படிப்பிலே படு சுட்டி”
என்றாள் சுமதி.
ஆராதனா கடைசியில் மனம்
சம்மத்தித்தாள்.
w
மாப்பிள்ளை ஸ்ரீதர் தனது நண்பர்களுடன் சிரித்துக்
கதைத்துக் கொண்டிருந்தார். பரட்டைத் தலை. முன்னே துருத்தி நிற்கும் ‘பேரழகன்’
பற்கள். கன்னங்கரிய உடல்.
ஆராதனா மாப்பிள்ளையை விழுங்கிவிடுவது போலப் பார்த்தாள்.
அப்பா குமரேசன் ஆராதனாவை அடிக்கடி கடைக்கண்ணால் பார்த்தபடி நின்றார். தன்
கையாலாகத் தனத்தை எண்ணிக் கவலை கொண்டார்.
“நான் நினைத்ததை விட, எனக்கு மணப்பெண் நன்றாக
அமைந்துவிட்டாள்” என்று ஸ்ரீதர் நண்பர்களுடன் பெருமை கொள்ளும் பேச்சு ஆராதனாவின்
காதில் விழுந்தது.
”இவரையும் யாரோ ஒரு பெண் திருமணம் செய்யத்தானே வேண்டும்.
அது ஏன் நானாக இருக்கக்கூடாது” தனக்குத்தானே ஆறுதல் சொல்கின்றாள் ஆராதனா. அவளின்
மனம் தாயைப் போன்றது. இலகுவில் பக்குவம் அடைந்துவிடும்.
ஆராதனாவிற்கு அன்றுதான் முதன்
முதல் சேலை கட்டிய அனுபவம். அது பெரும்
சுமையாக அவளுக்கு இருந்தது. நாள் முழுவதும் சிறுநீர் கழிக்கவில்லை. வியர்வை வேறு
ஆறாக வழிந்து கொண்டிருந்தது. ஹோலில் இருந்த ரொயிலற்றுக்குள் விரைந்தாள்.
ஆராதனா போன சற்று நேரத்தில், தனது
சேலையைச் சரிசெய்து கொள்வதற்காக சுமதியும் ரொயிலற் பக்கம் சென்றாள்.
“அம்மா… அம்மா…” என்று கத்தியபடி
சுமதியைக் கலைத்துக் கொண்டு யசோதா சென்றாள்.
“என்னடி இஞ்சையும் வந்திட்டாயா?”
”என்னம்மா ஆராதனாவின்ரை
மாப்பிள்ளை? ஆராதனாவுக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாமல் எண்ணெய்ச்சட்டிக் கரி
மாதிரி!” மகிழ்ச்சி ததும்பக் கேட்டாள் யசோதா.
“கரிக்குருவியின்ரை சாபம் பலிக்க
வேணுமெண்டு, நான் தானே அவளுக்கு அப்பிடியொரு
கறுப்பு மாப்பிள்ளையைக் கட்டிக் குடுத்தனான்” சிரித்தபடி சொன்னாள் சுமதி.
’கரிக்குருவியின்ரை சாபம்’ என்று தன்னைத்தான் அம்மா சொல்கின்றாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத யசோதா,
“அம்மா… எனக்கு வெள்ளை மாப்பிள்ளை, அதுவும் டொக்ரர் மாப்பிள்ளைதான் வேணும்” என்றாள்.
“பின்ன!” என்றாள் உதட்டுக்குள் சிரித்தபடியே சுமதி.
”இனிப்பாரன்... கலியாணம் முடிந்த
கையோடை நியமம் தவறாது அடுக்கடுக்காக கரிக்குஞ்சுகளைப் பெத்தெடுக்கப் போறாள் ஆராதனா”
ஒருவர் கையை ஒருவர் தட்டி மகிழ்ச்சி கொண்டார்கள் அம்மாவும் பிள்ளையும்.
இந்த உரையாடலைக் கேட்டுத்
திடுக்கிட்டு ரொயிலற்றுக்குள் சிலையாக நின்றாள் ஆராதனா. அம்மாவை ஒருகணம்
நினைத்துக் கொண்டாள்.
”அம்மா… என்னை ஏன் வெள்ளையாகப் பெத்தனி?” ஆராதனாவின்
மனம் அழுதது.
w
No comments:
Post a Comment