இந்த வருடம் (2019) `எதிர்’ வெளியீடாக வந்திருக்கும், கோமகனின்
‘முரண்’ சிறுகதைத்தொகுதியை ஆர்வமாக வாசித்தேன். சில கதைகள் புதிய அனுபவத்தைத்
தந்தன. சில கதைகள் பழகிய தடத்திலே ஓடிச் சென்றன. சுற்றுப்புறச் சூழல் மாசடைதல்,
சமுதாயச் சீர்கேடு, ஆண்-பெண் மற்றும் ஒருபால் உறவுகள், அகதி வாழ்வு எனப் பல
வகைப்பாடுகளில் கதைகள் அமைந்திருந்தன. மனிதர்களுடன் அஃறிணைகளும் கதைகள் பேசின.
முதலாவது கதை ‘அகதி’
ஒரு புறாக்கதை எனப்பிடிபட சற்று நேரமாகிவிட்டது. ‘நான் எனது மனைவி மற்றும்
எமக்குப் பிறந்த 10 மக்களும்…’ என்று முன்கூட்டியே சொல்லியிருந்தாலும், ‘ஒருநாள்
பல்கனியில் எனது சகதர்மினி முட்டை போடுவதற்காக அந்தரப்பட்டு சரியான இடம் தேடி திரிந்து
கொண்டிருந்தாள்’ என்ற பத்தி வந்தபோதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. புறா ஒரு நேரத்தில்
ஆகக்கூடியது எத்தனை முட்டைகள் இடும்?