நிலவிலே பேசுவோம்
என்.கே.ரகுநாதன்
மாலையிலே மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது! ஆயிரக்கணக்கான மக்கள்திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி,மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அது ஒழிக்கப்பட வேண்டியஅவசியத்தையும், அதற்கான வழி வகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையேகாந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான்வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள்.
அப்பொழுது மணி எட்டு இருக்கும். அவருக்கு பசி, அத்துடன் கூட்டத்திற் பேசியகளைப்பு வேறு.
சாப்பிட்டு முடித்ததும், அறுசுவையுண்டியின் ருசியில் நாவைத்திளைக்கவிட்டபடியே, உள்ளே இருந்த 'ஓர் குலம்' பத்திரிகையைக் கையில்எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். விறாந்தையின் மூலையொன்றில் கிடந்தசாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு ஜகஜ்ஜோதியாகப்பிரகாசித்துக்கொண்டிருந்த மின்விளக்கின் ஒளியில் பத்திரிகையைப் புரட்டிப்படிக்கத் தொடங்கினார்.
ஒரு பத்திகூட வாசித்திருக்கமாட்டார். வெளியே வாசற்பக்கமாகச் சிலர் பேசுவதுகேட்டது. பத்திரிகையில் படித்திருந்த பார்வையைத் திருப்பி அங்கே நோக்கினார்.