Tuesday, 21 May 2019

விழுதல் என்பது எழுகையே (1)

நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்ட சீலன் நேரம் போனது தெரியாமல் வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். இருட்டிவிட்டதால் பூங்காவில் இருந்தவர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

”என்ன தம்பி... பத்மகலாவைப் பார்க்கிலை தேடுகிறீரோ?” என்றபடியே தோளில் கை பதித்தார் தவம். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட தவம், சீலனின் கண்கள் கலங்கியிருந்ததைக் கண்டுகொண்டார். சாந்தியின் தற்கொலையை தவம் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சாந்தியைப் பற்றி சீலன் வாய் திறக்கவில்லை. சில சம்பவங்களை எப்பவும் மூடித்தான் வைக்கவேண்டும். உலையிலே மூடி கொதித்துக் கூத்தாடும்போது, மூடியைத் திறந்து ஆவியை வெளியேற்றிவிட்டு மீண்டும் மூடித்தானே வைக்கின்றோம்.

சீலனின் நினைவுகளைத் திசைதிருப்ப நினைத்தார் தவம்.

“அது ஏன் தமிழன்கள் தங்கட பெயரை இரண்டு இரண்டா வைச்சிருக்கிறான்கள்?” சீலனைப் பார்த்துக் கேட்டார் தவம். தவம் சொன்னது தன்னையும் பத்மகலாவையும்தான் என்பதை சீலன் புரிந்து கொண்டான். வலிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டே “உங்கடை முழுப்பேர் என்ன?” என்றான். “சொல்லமாட்டேனே!” என்றார் தவராசா என்ற தவம். இருவரும் இருளிற்குள் அகதிமுகாம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். தவம் வந்திருக்காவிடில் தான் முகாமிற்குப் போவதற்கு கஸ்டப்பட்டிருப்பான் என்பதை சீலன் உணர்ந்து கொண்டான்.

தவம் இரவு உணைவை, சீலனுக்கும் சேர்த்து ஏற்கனவே செய்திருந்தார். நேரம் தாமதித்தால் குசினிக்குள் கூத்தாட வேண்டும் என்பதை அவர் அறிவார். அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த ஏனைய நண்பர்கள் சீலனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு சீலனை அறிமுகம் செய்து வைத்தார் தவம். மேசை மீது இருந்த ஒரு விறுமாண்டி, எதையுமே சட்டை செய்யாது ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

“இன்றைக்கு சீலன் அமைதியாக உறங்கட்டும். பிறகு எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம்” சொல்லிக் கொண்ட அவர்கள் தங்களின் அன்றாட காரியங்களைப் பார்க்கத் தொடங்கினார்கள். ஒரு மனிதனின் கவலையைக் கூட்டுவதற்கு அதன் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் விரும்புவதில்லை.

விறுமாண்டிக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் இருந்து, காவல்நிலையத்தில் சொன்ன எல்லாவற்றையும் மறக்காமல் ஒரு பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டான் சீலன். சில ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு அம்மாவுக்கும் தங்கைக்கும் கடிதம் எழுதிக் கொண்டான்.

சீலனின் கட்டில் தவத்திற்கும் விறுமாண்டிக்கும் இடையில் இருந்தது. விறுமாண்டிக்கும் சீலனுக்கும் இடையே இரண்டு அலுமாரிகள் இருந்தன. இரவு நெடுநேரம் சீலனும் தவமும் கட்டிலில் படுத்தபடியே கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உரையாடல் நாட்டுப்பிரச்சினை குடும்பம் ஊர் இளமைப்பராயம் பள்ளிவாழ்க்கை காதல் என்று போய்க் கொண்டிருந்தது.

“அண்ணை உங்களுக்கும் ஒரு தங்கைச்சி, எனக்கும் ஒரு தங்கை. இரண்டு பேருக்கும் அப்பா இல்லை. உங்களுக்கும் ஒரு காதலி இருக்கின்றாள். என்ன ஒரு ஒற்றுமை!” சொல்லிக்கொண்டே கட்டிலின் மறுபுறம் திரும்பினான் சீலன். அங்கே விறுமாண்டி சீலனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“காதலி... காதலி” என்று சொல்லிக் கொண்டே சீலனின் கட்டிலுக்கு அருகில் வந்து சம்மாணமிட்டு அமர்ந்தான் அந்த ஆப்பிரிக்கன். இவர்களின் கட்டில்களுக்கு மேலே இருந்த மூவரும் கொல் என்று சிரித்தார்கள். ’காதலி’ என்ற தமிழ்ச்சொல்லை அவன் அறுத்துறுத்துச் சொல்லியதில் இருந்து தவத்தின் காதல் பற்றிய பிரசித்தம் தெரிந்தது. தவம் தன் இருகண்களையும் இறுக மூடிக் கொண்டார். விறுமாண்டி எரித்திரியா நாட்டைச் சேர்ந்தவன். ஐசாக் என்பது அவன் பெயர். அவன் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான். அவனுக்கும் ஒரு காதலி....

அதன் பிறகு விரைவுப் பாதை வழியே ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் சத்தம் மாத்திரம் தொடர்ந்து அங்கு கேட்டது. அந்த வாகன்ங்களின் வேகத்திற்கு ஈடாக மூன்று பேர்களின் மனதினுள்ளும் ’காதல் வாகனம்’ ஓடிக் கொண்டிருந்தது.



வாழ்க்கை என்றுமே சீராக ஓடிக் கொண்டிருப்பதில்லை. சீரழிந்த வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் உண்டு. அடுத்து வந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்கள் சீலனின் மனநிலையை மேலும் புரட்டிப் போட்டன.

|விடுமுறைக்காக மட்டக்களைப்பிற்குச் சென்ற கலா மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திரும்பவில்லை|

|தவம் விதிவிட அனுமதியைப் பெற்றுக் கொண்டு அகதி முகாமை விட்டு வெளியேறியமை|

ஒன்று பேரிடி. மற்றது தவத்தைப் பொறுத்தவரை நன்மைதான் என்றாலும் சீலனுக்கு ஒரு கை ஒடிந்தது போல.

இனி வேலை தேட வேண்டும். பிறகு அம்மாவையும் தங்கையையும் கூப்பிட வேண்டும். அதன் பின்புதான் திருமணம் என்பது தவத்தின் திட்டம்.

“சீலன் நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. நீ இந்த வாழ்க்கையைப் படிக்கும் வரை என்னாலான உதவிகளை வந்து செய்து தருவன்” அகதிமுகாமை விட்டு வெளியேறும்போது தவம் சீலனுக்கு உறுதியளித்தார். என்னதான் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினாலும் எல்லா நேரங்களிலும் எல்லா உதவிகளையும் தவத்தினால் செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான் ஐசாக் கை கொடுத்தான். அவனும் சீலனைப் போல ஆங்கிலம் கதைப்பான். அங்கிருந்த நான்கு ஆபிரிக்கர்களில் ஐசாக்தான் நல்லவன் என்பதைப் போகப் போக தெரிந்து கொண்டான் சீலன்.

தவத்தின் இடம் தொடர்ந்தும் வெற்றிடமாக இருந்தது. அதற்கு தமிழ் கதைக்கக்கூடிய ஒருவன் வந்தால் நன்றாக இருக்கும் என்று சீலன் எண்ணிக் கொண்டான். அகதிகளுக்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ’டொச்’ மொழி வகுப்பிற்கு தினமும் போய் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சூடானியர்கள், எரித்திரியர்கள், சேர்பியர்கள் என்று மேலும் பலர் அங்கே இருந்தார்கள். குளிர் இன்னமும் வாட்டி வதைத்தது. போகப் போக எல்லாம் பழக்கத்திற்கு வந்துவிடும். 
கலா யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முகவரிக்கு இரண்டு கடிதங்கள் எழுதிக் கொண்டான். மட்டக்களப்பு முகவரி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடிதங்களைப் போடுவதற்காக அதிகாலை தெருவில் இறங்கி தபால் கந்தோர் நோக்கி நடந்தான். முதன் முதலாக தனியே புறப்பட்டிருந்தான். கடும் குளிர். பனிப்புகாரினுள், அவனை எதிர்த்தால்போல் பள்ளிக்குச் செல்லும் சுவிஸ் நாட்டுப்பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். சீலனைக் கடக்கும்போது ‘மா... மா...’ என்று ஆட்டுக்குட்டி கத்துவது போலக் கத்திவிட்டுச் சென்றார்கள். அவர்களின் அந்தச் செய்கை சீலனுக்குச் சங்கடத்தை உண்டாக்கியது. தபால் கந்தோரில் முத்திரை கேட்டு வாங்குவதற்குள் போதும் என்று ஆகிவிட்டது. தவம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

அன்று சீலனுக்கொரு கடிதம் அகதிகள் திணைக்களத்திலிருந்து வந்திருந்தது. அகதி அந்தஸ்து வழங்கும் அதிகாரியைச் சந்திப்பதற்கான கடிதம் அது. இரண்டாம்கட்ட விசாரணை. ஆனால் சீலன் அதற்கு இன்னமும் தயாரில்லை. மருத்துவம் படித்தது, பல்கலைக்கழகத்தில் வைத்து அவனை இராணுவம் பிடித்தது, யாழ்ப்பாணம், பூசா சிறைகளில் இருந்ததற்கான ஆதாரங்களை நாட்டு நிலமைகள் காரணமாக எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் அகதி அந்தஸ்து கிடைக்க போதுமானவைதானா? சந்தேகம் மனதில் எழ, சீலன் பல குழப்பமான சிந்தனைகளுக்கு ஆட்பட்டான். 

தொடரும்.....

No comments:

Post a Comment