அது என்ன மாயமோ தெரியவில்லை. விளையாட்டு தொடங்கிய நேரம்
முதல், பந்து அவுஸ்திரேலியா அணியினருடன் கூடச் சென்றுகொண்டிருந்தது. சக்கர
நாற்காலியின் இரண்டுபக்கச்சில்லுகளையும் தம் கைகளால் உந்தித் தள்ளி சமநிலையுடன் உறுதி
தளராமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கப்டன் பந்தைச் சுழன்று சுழன்று
பிடித்து, லாவகமாகக் கூடைக்குள் எறிந்தபடி இருந்தார். விளையாட்டு முடிய
இரண்டுநிமிட அவகாசம் இருக்கையில் இறுதிப்பந்தை கூடைக்குள் போட்டு விளையாட்டை
முடிவிற்குக் கொண்டு வந்தார் கப்டன். கரகோஷ ஒலி வானைப் பிழந்து எங்கும் எதிரொலித்தது.
பரா ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட அணியின் அவுஸ்திரேலியாக்
குழுவிற்கு தமது நிறத்தில் இருந்த ஒருவர் தலைமை தாங்குவதையிட்டு ஆசிய நாட்டவர்கள்
பெருமிதம் கொண்டார்கள். தமது நாட்டினரின் குழு வெற்றிபெறவில்லை என்பதையும்
அக்கணத்தில் மறந்து, ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியை அவுஸ்திரேலியா அணியிருக்கு
வெளிக்காட்டினார்கள். சக்கரநாற்காலியுடன் மைதானத்திற்குள் வட்டமிட்டபடி,
முகமெல்லாம் பல்லாக தனது கரங்களை உயர்த்தி வேகவேகமாக ஆட்டினார் கப்டன். கப்டனைத்
தவிர குழுவில் இருந்த ஏனைய பதினொரு விளையாட்டுவீரர்களும் வெள்ளையினத்தவராக
இருந்தார்கள்.