அவுஸ்திரேலியாவில் இணையத்தளம் ஒன்றின் சாதனை. பத்தாவது
ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது அக்கினிக்குஞ்சு இணையத்தளம்.
1991 ஆம் ஆண்டிலிருந்து சஞ்சிகை வடிவில் பல இதழ்களை
மணம் பரப்பி, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்து இணையத்தளமாக வடிவெடுத்து இன்று ஒன்பது
ஆண்டுகளை நிறைவு செய்கின்றது அக்கினிக்குஞ்சு.
செய்திகள், இலக்கியம், சினிமா, நேர்காணல்கள்,
ஒளிப்படைப்புகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இந்த இணையத்தளம், பல்லாயிரம்
வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை இணையத்தளத்திற்கு வரும் வாசகர் கடிதங்கள் உணர்த்துகின்றன.
ஒவ்வொரு வருட முடிவிலும் புத்தக வெளியீட்டுவிழா, சிறுகதை – குறுநாவல் போட்டிகள் என
அசத்தும் இவ் இணையத்தளம், கடந்த இரண்டு வருடங்களாக இசையருவிப் பாடல் போட்டி,
படைப்பாளர்/கலைஞர் கெளரவிப்பு என வருவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தி.
முதியவர்களும் வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்கள்.
சுருக்கமாக `முக்கிய செய்திகளை’ச் சுழன்றோடும் ஆரம்ப வடிவமைப்பு. இலங்கை, இந்தியா,
உலகச் செய்திகள் எனத் தனித்தனியான வகைப்பாடுகளில் செய்திகள். பலதும் பத்தும், அன்றாட
நிகழ்ச்சிகள், கதம்பம் என நாளுக்கு நாள் பதிவேற்றம். உலகத்தின் சகல படைப்பாளர்கள்
/ கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரே இடம் அக்கினிக்குஞ்சு.
மெல்பேர்ணிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சிற்கும்,
அதன் ஆசிரியர் யாழ்.பாஸ்கர் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.