Showing posts with label story. Show all posts
Showing posts with label story. Show all posts

Wednesday, 1 April 2026

`வேடம் தாங்கல்’ ஒரு பார்வை - TamilOsaiOnAir

 


அமரர் மு. பாலசுப்பிரமணியம் நினைவு சிறுகதைப் போட்டியில்(2025) பரிசு பெற்ற `வேடம் தாங்கல்’ என்ற சிறுகதை பற்றி, இவ்வார இலக்கியம் பகுதியில் ஒரு விரிவான பார்வை வந்திருக்கின்றது. மீண்டும் ஒரு பரிசு பெற்றவனாகின்றேன். நன்றி : சிவா துரை, பாஸ்டன் பாலா

Friday, 20 March 2026

மாதுளை மரம் - எனக்குப் பிடித்த கதை

 

T . தம்பிமுத்து
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T . தம்பிமுத்து எழுதி 'நியூ யோர்க்கர்' சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை :The pomegranate tree.

தமிழில்: எழுத்துக்கினியவன்

சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான்.

விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கருப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!”

ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை.

மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம்.

ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதட்டமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் - எங்கள் மைத்துனன் - ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார்.

ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத 'நிலாவரை' கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார்.

Thursday, 11 December 2025

வளரி - சிறுகதை

வேலைக்குச் சென்றவுடன் கன்ரீனில் இருக்கும் குளிரூட்டியில் எனது மதிய உணவை வைப்பதற்காகச் சென்றேன். அங்கே ஏழெட்டுப் புதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சி தன்பாட்டில் வேலை செய்துகொண்டிருந்தது. குளிரூட்டியில் உணவை வைத்துவிட்டுத் திரும்புகையில், கையடக்க ஸ்கேனர் ஞாபகத்திற்கு வந்தது. தினமும் வேலை முடிவடைந்து வீட்டிற்குப் போகும்போது சார்ஜ் செய்வதற்காகப் போட்டுவிடும் கையடக்க ஸ்கானரை எடுத்துக் கொண்டு எனது அறைக்குச் சென்றேன்.

அறை, கட்டடத்தின் கடைத் தொங்கலில் இருந்தது. ஃபில்டர் (filter) தொழிற்சாலையின் நிர்வாகம், டிசைன், வடிகட்டும் அமைவைப் பரீட்சிக்கும் பகுதி என்பவை கட்டிடத்தின் முன் பகுதியிலும் ; கன்ரீன், ரொயிலற், உடை மாற்றும் பகுதி என்பவை நடுப்புறமும் ; இறுதியாக ஸ்ரோர் பகுதியும் இருக்கின்றன. எனது அறை மூன்று பக்கங்களும் கண்ணாடிகளினாலும், கிழக்குப்புறம் கொங்கிறீற்றினாலும் ஆனது. நான் அங்கே போனபோது சூரியன் கிழக்குப்புற ஜன்னலுக்குள்ளால் உள்ளே குதித்திருந்தான்.

“குட்மோனிங் ஜோன்…”

விற்பனை மேலாளரும், கொள்முதல் மேளாளர் ஜோனிடமிருந்து பதில் வரவில்லை. அவர் கொம்பியூட்டருக்குள் மூளையைச் சொருகியிருந்தார்.

கண்ணாடிக்கூண்டுக்குப் பின்புறமாக மார்க்கிரட் போர்க்லிஃப்ட் உடன் சறுக்கீஸ் விடத் தொடங்கியிருந்தார். அவர் சீமெந்துத்தரையில் நிரல்நிரலாக ஃபில்டர் பெட்டிகள் அடங்கிய பலற்களை அடுக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கிழக்குப்புற ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். நான்கு டிரக் வண்டிகள் ஏற்கனவே வந்திருந்தன. நான் எனது இரண்டு கொம்பியூட்டர் திரைகளையும் இயக்கிவிட்டு, வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டேன்.

பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிரல்களை மார்க்கிரட் அடுக்கி முடிந்ததும், நான் அவருக்கு இடையூறு இல்லாமல் எனது வேலையைத் தொடங்கி விடுவேன். வேணியர் கலிப்பர், றூளர், கோ நோ கேஜ் எல்லாவற்றையும் எடுத்து மேசை மீது பரப்பி வைத்தேன். இன்று வரவிருக்கும் ஃபில்டர்களின் விபரங்கள் அடங்கிய பத்திரங்களையும், ஸ்கானரையும் ஒரு றொலிக்குள் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்.

“என்ன மார்க்கிரட்… ஸ்ரோருக்கு கொஞ்சப் பேரை புதுசா எடுத்திருக்கினம் போல? கன்ரீனுக்குள்ளை கண்டனான்.”

“கொரோனா தணிய வேலை சூடு பிடிச்சிட்டுது. அதுதான் கஸ்சுவலா கொஞ்சப்பேரை எடுத்திருக்கினம்.”

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாதிரிக்கு ஒவ்வொன்று எடுத்து றொலிக்குள் போட்டுக்கொண்டு திரும்பும்போது, புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்னை எதிர்கொண்டு விலத்தியபடியே ஸ்ரோருக்குள் நுழைந்தார்கள்.

நெடுநேரம் ஃபில்டர்களை அளவிடுவதாலும், கொம்பியூட்டருக்கு முன்னால் இருப்பதாலும் கண்களுக்கு சோர்வு வந்துவிடுகின்றது. வெளியே சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வருவதற்காகப் புறப்பட்டேன்.

அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.

Friday, 21 November 2025

மங்கா… மான்குட்டி போல – சிறுகதை

 

இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள்.

ஈசனும் சண்முகமும் ஆத்மநண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக - ஒரே அறையில் இருந்தவர்கள்.

"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.

"உங்களுக்கென்ன விசரா…  இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை ஈசனின்ரை மகளின்ரை திருமணத்தைப் பாப்பம்."

"ஓம். ஓம். நீர் சொல்லுறதும் சரிதான். இப்ப மங்காவுக்கு ரெலிபோன் செய்தால், அவள் எங்களை விடமாட்டாள். வந்து தன்னோடை நிக்கச் சொல்லி நாண்டு கொண்டு நிப்பாள்."

வசந்தி சிங்கம் போல கர்ச்சித்தாலும், சமயங்களில் அவள் சொல்வதில் ஒரு நியாயத்தன்மை இருப்பதை உணர்ந்தார் சண்முகம்.

பிரயாணக் களைப்பு. நேர வித்தியாசம். வசந்தி படுத்ததும் உறங்கிவிட்டாள். சண்முகத்திற்கு உறக்கம் வரவில்லை. அருகே இருந்த நிலாமுற்றத்தில் நடை போட்டார். வெப்பம் கலந்த காற்று உடலை வருடிச் சென்றது.

திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த 'சிட்னம்' கிராமம் கண் முன் விரிகிறது. அனேகமாக எல்லா வீடுகளுமே காணியின் அகலப்பாட்டைத் தொட்டு நின்றன. வீதியில் இருந்து காணிகள் சற்றே உயர்ந்திருந்தன. தூரத்தே 'சைலோ' போன்ற மூன்று உருளைகள் பழுப்பு நிறத்தில் குத்திட்டு நின்றன. அருகே விமானநிலையம் இருந்தபடியால் அடிக்கடி விமானங்கள் எழுந்து மிதந்தன.

முன் வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி குப்பை வண்டிலை வளவிற்குள்ளிருந்து வீதிக்கு இழுத்து வந்து கொண்டிருந்தாள். வண்டில் அவளைத் துரத்திக் கொண்டு சரிவு வழியே வந்தது. அந்தப் பெண் வீதியின் இருமருங்கையும் மிரண்டு பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் புகுந்தாள். அவளின் தோற்றமும் மிரட்சியும் அச்சொட்டாக மங்காவைப் போலவே இருந்தது. சண்முகம் ஆடிப் போய்விட்டார். கால ஓட்டத்தில் முதுமையடைந்து அல்லல்பட்டு களைத்துவிட்ட அவர், அருகேயிருந்த தூணைப் பிடித்துக் கொண்டார்.

Friday, 26 September 2025

நாடோடிகள் - எனக்குப் பிடித்த கதை

 

கி.பி.அரவிந்தன் 

நேற்றென்று ஒருநாள் காலமாகிப்போக இன்றென்று ஒருநாள் விடிந்தது. அது ஒரு சனிக்கிழமை.

ஐந்தரை மணிக்கெல்லாம் விழித்துவிட்டேன். படுக்கையில் புரள்கின்றேன். எண்ணங்களும் பல வேறாய் உருள்கின்றன.

உடல் வெளிப்படுத்தும் இளஞ்சூட்டில் குளிர் காய்ந்தபடி அணைந்து உறங்கும் நானும் மனைவியும் உறக்கம் கலைந்த புரளலில் விலகினோம் போலும்.

விலகலிடையே குளிர் நிரவுகின்றது.

இருவரும் மீள மெல்ல அணைந்து கொள்கிறோம். இதமாக இருக்கின்றது.

குளிர் இறங்கிச் செல்கின்ற இளவேனிற் காலாந்தானானாலும் காலை நேரக்குளிரின் இறுக்கப்பிடி இன்னமும் தளரவில்லை. “மாசிப்பனி மூசிப் பெய்யும்" என ஊரில் சொல்வதுண்டுதான். பனியா இது? மூச்சையே உறையச் செய்யும் இக் குளிரின் வீச்சத்தை எப்படி அழைப்பது?

Tuesday, 23 September 2025

நிலவு குளிர்ச்சியாக இல்லை - எனக்குப் பிடித்த கதை



வடகோவை வரதராஜன்

இலண்டன் மாநகரத்தின் அமைதியான `தேம்ஸ்’ நதியில் பெளர்ணமி காலத்தில் படகுச் சவாரி செய்திருக்கின்றேன். வாஷிங்ரனின் `பொடோமோ’ நதிக்கரையில் பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்கிடையில் சில்வர் நைற் கவிதை படித்துக்கொண்டு நிலவில் நடந்திருக்கின்றேன்.

ஆனாலும் அங்கெல்லாம் என்மனம் வெறுமையுற்று ஏங்கிக் கொண்டே இருக்கும். தேம்ஸ் நதியில் படகுச் சவாரி செய்யும் போதெல்லாம் இங்கே கோப்பாய் கடற்கரையில் கைதடிப் பாலக் கட்டில் நான், பாலன், குவி, ஜோக்கர் எல்லோரும் வரிசையாய் இருந்துகொண்டு மினிக்கிவிட்ட தங்கத்தாம்பாளம் போல் கடல் நீரில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பத்தைப் பார்த்து,

      ”சிந்து நதியின் மிசை நிலவினிலே

      சேரநன் நாட்டிளம் பெண்களுடனே

      சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்”

என்ற கவிதையைப் பாடி மகிழ்ந்து மெய்மறந்திருந்த நினைவுகள் என் நெஞ்சத்தில் இனிய உணர்வுகளை உதிர்த்துவிடும்.

Monday, 1 September 2025

தூங்கும் பனிநீர்

 


குரல் வடிவம்/ காட்சிப்படிமம் : கெளசி

Friday, 27 June 2025

மீன் குஞ்சுகள் - எனக்குப் பிடித்த கதை



ச.முருகானந்தன்

வானத் திரையில் சூரியனின் ஒளித்தடம் துவங்கத் தொடங்கிவிட்டது. பீடி ஒன்றைப் பற்ற வைத்தபடி கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சீனித்தம்பி. மார்கழி மாதப் பனிக்குளிரில் அவனது உடம்பு வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது. கடற்கரையில் அவனது சக தொழிலாளர்களான மார்க்கண்டுவும் வீரசொக்கனும் நின்றிருந்தார்கள். அவனைக் கண்டதும் புலனசைத்தார்கள். இந்தச் சில வாரங்களும் தொழில் இல்லாததால் வள்ளங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் சோளகம் பிறந்துவிடும்; தொழிலும் தொடங்கிவிடும்.

நண்பர்கள் மூவரும் கடலில் இறங்கிக் கணுக்காலளவு நீரில் நின்றபடி சோளகம் பிறக்கப் போவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதைப்பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அலைகள் மெதுவாக வந்து போய்க் கொண்டிருந்தன.

“சோளகம் பிறக்கும் பொழுது அடுத்த பருவத்தோட தாமெல்லாம் கடலுக்குப் போகலாம் போலிருக்கே” என்று குதூகலத்துடன் கூறினான் மார்க்கண்டு. உண்மை தான். சோளகம் பிறந்துவிட்டால் அந்தச் கடலோரப் பிரதேச மீனவ மக்கள் மத்தியில் எத்தனை குதூகலம். வாழ்க்கையில் வசந்தம் வருவது போன்ற மகிழ்ச்சிச் கரையிலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள் எல்லாம் கடலில் ஓடத் தொடங்கிவிடும். மீனவப் பெண்கன் குழந்தைகளுக்குக் கூட சிறுசிறு தொழில்கள் கிடைத்து விடும். பிற இடத்து மீன் முதலாளிகள்கூட அங்கே படையெடுத்து வரத் தொடங்கி விடுவார்கள்.

Monday, 14 April 2025

வாசனைத்திரவியம் - குறுங்கதை

 


நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு குடியிருக்கும் எலிகள், புதிதாக வந்திருந்த எம்மை வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.

Tuesday, 25 January 2022

எங்கே போகிறோம் - சிறுகதைத் தொகுப்பு குறித்தான ஆவூரான் சந்திரனின் அறிமுகம்


 தமிழர் திருநாள், அவுஸ்திரேலியா - 2022

அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கண்காட்சி / வாசகர்களின் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

Thursday, 11 March 2021

எனக்கான வெளி

 
நன்றி : வெற்றிமணி (பங்குனி 2021)

Tuesday, 5 January 2021

புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ்

 


“முதலாவது அழைப்பிதழை யாருக்குக் குடுக்கலாம்?” மனைவியிடம் ஆலோசனை கேட்டான் அகமுகிலன்.

“உங்களுக்குப் பிடிச்ச பேராசிரியர் சிவராசாவுக்குக் குடுங்கோவன்.”

அதுவே சரியெனப்பட்டது அகமுகிலனுக்கு. மாலை நான்கு மணியளவில் சிவராசாவைச் சந்திப்பதற்காக நகரத்துக்கு பஸ் ஏறினான் அகமுகிலன். நகரத்தில் பல்கலைக்கழகத்திற்கு அண்மையாக சிவராசா இருக்கின்றார். அவரது வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கும்போது, எதிர்ப்புறமாக சிவராசாவும் மனைவியும் வந்து கொண்டிருந்தார்கள். வேட்டி நாஷனலுடன் பேராசிரியர் ஜோராக இருந்தார். மனைவி காஞ்சிபுரப்பட்டு, தலை நிறையப் பூக்களுடன் சரக்குச் சரக்கென்று பாதங்களைத் தூக்கிப் பக்குவமாக நிலம் நோகாமல் அடியெடுத்து வந்து கொண்டிருந்தார்.

“சேர்… உங்களைத் தேடித்தான் வந்துகொண்டிருக்கிறன்.”

“நாங்கள் ஒருக்கால் கோவிலுக்குப் போவம் எண்டு வெளிக்கிட்டனாங்கள். ஏன் என்ன விஷேசம்?”

“புத்தக வெளியீட்டுவிழா ஒண்டு வருகுது. தங்களுக்கு முதலாவது அழைப்பிதழைத் தருவோமெண்டு வந்தனான்.”

பேராசிரியரின் மனைவி பதறியடித்துக் கொண்டு அப்படியே நின்றார்.

அழைப்பிதழ் ஒன்றினைப் பவ்வியமாக எடுத்து சிவராசாவிடம் நீட்டினான் அகமுகிலன்.

“நல்லது. நல்லது. எத்தினையாம் திகதி மட்டிலை?” அழைப்பிதழை விரித்துப் படிக்கத் தொடங்கினார் சிவராசா. அழைப்பிதழைப் படித்தால் அவருக்குப் `பிரம்மஹத்தி தோஷம்’ பீடித்துவிடும் என்பதுமாப் போல், அவரிடமிருந்து அதைப் பறித்தெடுத்தார் மனைவி. அழைப்பிதழைப் பார்த்த மாத்திரத்தில் அவரின் `பிளட் பிறசர்’ எகிறிப் பாய்ந்தது. செவ்விதழ் அஸ்ட திக்குகளிலும் சுருங்கிப் போயின. தன் மூக்குக்கண்ணாடியை கையினால் மிதத்தி அகமுகிலனைப் பார்த்தார்.

செவ்வக வடிவில் இருந்த புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ், அவர் உள்ளங்கைக்குள் அறுகோண வடிவமாகி சுருங்கத் தொடங்கியது.

“நீரும் வாருமன் கோவில் மட்டும் போட்டு வருவம்.”

“கோவில் சன்நிதியிலை அழைப்பிதழ்களை வைச்சு எடுத்தால் நல்லது எண்டு, வரேக்கை போட்டு வாறன்.”

பேராசிரியரின் மனைவியார் அழைப்பிதழை ஆராதிக்கின்றாரா எனக் கடைக்கண்ணால் இடைக்கிடை நோட்டமிட்டான் அகமுகிலன். அவர் கையில் அழைப்பிதழைக் காணவில்லை. திடுக்கிட்டுப் போனான் அகமுகிலன். அது பூகோளமாகச் சுருண்டு உள்ளங்கைக்குள் அடங்கி இருப்பது போலத் தென்பட்டது.

பலதும் பத்துமென இருவரும் கதைத்துக் கொண்டு கோவில் நோக்கிச் செல்கின்றார்கள். இருபுறமும் கிழுவை வேலிகள் வரிசை கட்டி வெய்யிலுக்கு இதமாக இருந்தன. ஒரு வளைவில், திடீரென பேராசிரியரின் மனைவியின் செருப்படி ஓசை வித்தியாசமாகக் கேட்க திரும்பிப் பார்த்தான் அகமுகிலன். உள்ளங்கையில் சுருங்கிக் கிடந்த அழைப்பிதழைத் தூக்கிப் போட்டு, காலின் மேற்புறத்தால் ஒரு `கிக்’. அது கிழுவை வேலிக்குள் போய்ச் சொருகிக் கொண்டது. ஒன்றுமே நடவாதது போல சரக் சரக் என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்தார் அவர்.

கோவில் வந்துவிட்டது.

“இஞ்சாருங்கோ… உங்களுக்கு கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு நடுவராகக் கூப்பிட்டது எண்டு சொன்னனியளல்லோ! அது எப்ப?”

“சேர்… மறந்திடாமல் வந்திடுங்கோ” பேராசிரியரின் மனைவி சொன்னதையும் பொருட்படுத்தாமக் அகமுகிலனின் குரல் ஓங்கி ஒலித்தது.

அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான் அகமுகிலன்.

அகமுகிலன் போய்விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டபின்,

“நீங்கள் பேராசிரியர் தானே! புத்தகத்தை வெளியிட்டு தலைமையுரை செய்யச் சொல்லிக் கேட்டிருக்கலாம் தானே? அல்லாட்டி… புத்தகத்தைப் பற்றியாவது பேசச் சொல்லிக் கேட்டிருக்கலாம் அல்லவா? சும்மா பார்வையாளரகாப் போகப் போறியளோ? இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறன் அவ்வளவுக்குத் தாழ்ந்து போய் விட்டியளோ நீங்கள்?” கர்ச்சித்தார் பேராசிரியரின் மனைவி.

“எங்கேயுமப்மா… அந்த அழைப்பிதழை ஒருக்கால் தாரும் பாப்பம்” என்றார் பேராசிரியர்.

“இருந்தால் தானே தாறதுக்கு?” என்றார் மனைவி.

 

 

Friday, 18 December 2020

நந்தாவதி – எனக்குப் பிடித்த சிறுகதை

 
நவம் (சீனித்தம்பி ஆறுமுகம்) 

இரவு சரியாக எட்டு மணி, கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் முதலாவது `பிளாட் பாரத்'தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, `ஜம்’மென்று புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது மட்டக்களப்பு மெயில் வண்டி.

வண்டி என்றும் போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம்பாறை நீர்ப்பாசன `இராட்சத அணைத் திட்டம்’ மட்டக்களப்புக்கு வந்தாலும் வந்தது மட்டக்களப்பு மெயிலின் நிலையே ஒரு பூரண கர்ப்பிணியின் நிலைதான்.

புறப்பட்ட ஐந்து நிமிஷங்களில், கொழும்பு நகரின் அடுத்த பெரிய ஸ்டேஷனான மருதானையை `நொறுக்கி’க் கொண்டு கடந்து சென்றது வண்டி.

கோட்டையிலிருந்து மருதானே வரையும், கழுத்தை வெளியே நீட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து வந்த நான் இப்பொழுது தலையை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு என் இருப்பிடத்துக்குத் திரும்பினேன்.

இந்த வண்டியில், இரண்டாம் வகுப்பு `சிலீப்பிங் காரி’ல் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.

எனது `படுக்கை’ எண் பதினான்கு. எனது `படுக்கை’க்குச் சரிநேராக மேலே இருந்தது பதின்மூன்றாம் இலக்கப் `படுக்கை’. அது வெறுமையாகவே இருந்தது. இரண்டே இரண்டு `படுக்கை’களே உள்ள அந்தத் தனிப் பெட்டியில், ஏகாங்கியாக நான் மட்டும் பிரயாணம் செய்வது என்னவோ போலத்தான் இருந்தது.

`தடதட’வென்று யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் திறந்தேன்.

Friday, 16 October 2020

நிர்மலன் VS அக்சரா – சிறுகதை

 


நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா.

புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன்.

“நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி.

நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையில் நிர்மலனிற்கு அம்மாவும் அக்காவும் இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் உறவினர் என்று சொல்லிக் கொள்வதற்கு தவராசாவையும் ஈஸ்வரியையும் தவிர வேறு ஒருவரும் அவனுக்கு இல்லை. ஈஸ்வரி நிர்மலனின் அம்மா வழி உறவு. அவர்கள் இருவரும் தான் நிர்மலனின் திருமணத்திற்கான பெற்றோர்கள். இந்தக் கலியாணத்தை சரிவரப் பொருத்தியவர்கள்.

Tuesday, 8 September 2020

யோகம் இருக்கிறது – எனக்குப் பிடித்த சிறுகதை

குந்தவை

 

தன் ஊரைக் கடந்து, யாழ்ப்பாணடவுனுக்கு இட்டுச் செல்லும் அந்த கொழும்புத் துறை வீதியில் ஏறுவதற்குள், அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

“சீ என்ன சாதிச் சனங் கள்ளப்பா இதுகள்" என எரிச்சலுடன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு ஒழுங்கை முடக்கிலும் நின்று அவன் எப்பொழுது வீட்டைவிட்டு வெளிக்கிடுவான் நாவைச் சுழற்றிச் சாட்டையாய் வீசலா மெனக் காத்திருந்தது மாதிரி.

“என்ன தம்பி! கன நாள் லீவோ?” - “ஊரிலே தான் நிக்கிறாய் எண்டு கேள்வி. ஆனா, வெளியிலை தலைக்கறுப்பையே காணன்"- "இனி ஊரோடை தான் தங்கிறதோ?” இந்த சொடுக்கல்களிடையே, அவன் அடிபட்ட நாயாய் “விர்" ரென்று, தன் ஊரைக் கடந்து வந்திருக்கின்றான்.

சற்று முன் "என்ன தம்பி! பிழைப்பெல்லாம் எப்பிடி?” என் பிழைப்பில் அழுத்தம் கொடுத்துக் கேட்டுப் போனானே, அந்த சிவராசா! அவனிடம், சைக்கிள் சீற்றின் இரு புறமும் பிதுங்கி வழியும் அந்த சதையைப் பிடித்து உலுக்கி ”இது மட்டும் நேர்மையாகச் சம்பாதித்ததா?” என கேட்டிருக்க வேண்டுமென்று ஒரு கணம் கிளர்ந்து மடிந்த ஆவேசத்தில் நினைத்துக் கொண்டான்.