சில மாதங்களுக்கு முன்னர் மெல்பேர்ணில் இருக்கும் ஒரு பிளாஸ்ரிக் தொழிற்சாலைக்கு, QA (பொருட்களின் தரத்தை சரி பார்த்தல்) ஆக நானும், இயந்திரத்தை இயக்குவதற்காக ஒரு வெள்ளையினத்தவரும் புதிதாகச் சேர்ந்தோம். அங்கே போனபின்னர் தான் ஒன்றை அவதானித்தோம். அது சீனர்களுக்குச் சொந்தமானது. ஏறத்தாழ 30 இயந்திரங்கள் இருந்தன. அவற்றில் 20 இற்கும் மேற்பட்டவை சீனாவில் இருந்து வந்தவை. மருந்துக்கும் அதில் ஆங்கில எழுத்துகள் இல்லை. பொறியியலாளர்களும், இயந்திரங்களை இயக்குபவர்களும், உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் சீனர்களாக இருக்க, தொழிலாளர்கள் வட இந்தியர்களாக இருந்தார்கள். பூமிப்படத்தில் மாத்திரமல்ல, இங்கேயும் அதே நிலைதான். சீனர்கள் மேலே இருந்தார்கள். ஒரு வெள்ளைக்காரனும் நானும் தான் பிறநாட்டைச் சார்ந்தவர்கள்.
சாப்பாட்டிற்காக அரைமணி நேரம் தருவார்கள். மற்றும்படி எந்தவொரு
இடைவேளையும் இல்லை. தொழிலாளர்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அவர்களுக்கு ரொயிலற்
போகவேண்டியிருந்தால், அந்த நேரத்தில் அவர்களின் வேலையை மேலதிகாரி செய்ய வேண்டும். அவர்
எங்கே செய்வது? அவர் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். தொழிலாளர்கள் ரொயிலற்
முடித்து வரும்போது, நிலம் எல்லாம் பிளாஸ்ரிக் பொருட்கள் குவிந்துபோய் இருக்கும். விட்ட
இடத்திலிருந்து இரட்டிப்பு வேகத்தில் வேலையைத் தொடர வேண்டும். ரொயிலற் - நான் என் வாழ்நாளில்
அங்கு இருந்ததைப் போன்ற ரொயிலற்றை ஒரு இடமும் காணவில்லை. ஒரு ஆள் திரும்ப முடியாது.
நேரே போய் றிவேர்ஷில் திரும்ப வேண்டும். அங்கேயிருக்கும் ரொயிலற் பேப்பர், ரீசைக்கிள்
பேப்பர். கரடுமுரடான நீரை உறுஞ்சாத கெட்ட மணம் கொண்ட வினோதப் பேப்பர் அது.
வேலைக்குபோய் மூன்றாம் நாள் அடைமழை. தொழிற்சாலைக்குள் வெள்ளம்
புகுந்து எல்லாம் நீரில் மிதந்தன. ஒரு பெண் நீரை உறுஞ்சும் பம் ஒன்றினால் நீரை வெளியேற்றிக்
கொண்டிருந்தாள். இயந்திரங்கள் சீனத் தயாரிப்பு என்றாலும் மிதக்கவில்லை. மின்சார வயர்கள்
நீந்தி விளையாடின. ஆனாலும் வேலை எதுவித தடங்கலும் இன்றி நடந்துகொண்டிருந்தது. பாதுகாப்பு
இல்லை என்று சொன்னபோது, வாயில் கை வைத்து உஷ் என்றார்கள், முழுசிப் பார்த்தார்கள்.
அது ஒரு மஜிக் விளையாட்டு.
இயந்திரங்கள் கடுகதி வேகத்தில் பிளாஸ்ரிக் பொருட்களைத் துப்பிக்
கொண்டிருந்தன. ஆயிரம் வெளியே வந்தால் நூறு தான் தேறும்.
சீனர்கள் நான் சொல்வதை விரும்பாமல் இருக்கக்கூடும். ஆனால்
அதுதான் உண்மை. இதில் நான் என்ன குவாலிற்றியைப் பார்ப்பது?
மறுநாள் வெள்ளைக்காரனைக் காணவில்லை.
அதற்கடுத்த நாள் நான்.
No comments:
Post a Comment