அ.ஸ.அப்துல் ஸமது
எனக்கு வயது பதின்மூன்று ஆகிறது. நான் சிக்கந்தர் போடியாரின் வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இதுவரை நான் அறிந்த உலகம் இந்தப் போடியாரின் வீடுதான்.
'என்னைப் பெத்தவ' என்று சொல்லிக்கொண்டு என் உம்மா மாதம் ஒருக்கா போடியார் ஊட்டுக்கு வருவா, போடியார் எனக்குரிய சம்பளம் பதினைந்து ரூபாவையும் அவவிடம் கொடுப்பார். அதுவும் சும்மா இல்லை. என் உம்மா வரும் நாள் பார்த்து, போடியார் ஊட்டில் ஏதாவது வேலை காத்திருக்கும். 'ஆசியா இந்தக் கொள்ளியைக் கொத்திவிடு, இந்தத் தேங்காய் பதினைந்தையும் உரித்துத் தந்திடு, நெல் மூண்டு மரைக்கால் கெடக்கு. அவிச்சுக் காயவையேன்' இப்படி ஏதாவது வேலை வாங்கிவிடுவா போடியார் பெண்சாதி. இப்படியெல்லாம் செய்தும் மத்தியானச் சாப்பாட்டுக்கு முன்னம் கையில காசக் கொடுத்து என் தாயை அனுப்பிவிடுவாள் அந்தச் சீமாட்டி.
'நான் வாறன் மகள்!' என்று கூறிக்கொண்டு உம்மா போய்விடுவா. உம்மா இப்படி ஒரு வார்த்தை சொல்வதில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. அவ சொல்லாமல் போய்விட்டாற்கூட எனக்கு எவ்வித கவலையும் இல்லை. சிலவேளை இவதான் என்னைப் பெத்தவவா? ஒரு தாய் ஒரு மகள் மீது செலுத்தும் பாசம் இவ்வளவுதானா? என்ற வினாக்கள்கூட என் மனத்தில் எழும்.