Wednesday, 1 September 2021

காணவில்லை - எனக்குப் பிடித்த கதை

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

அந்தி வேளை. ஒளி மரணத்தின் பிடிக்குள் மெல்ல மெல்ல இழுக்கப்பட, இருள் தன் சிறகுகளை விரித்துப் பரப்பிக் கொண்டிருந்தது.

அன்னமுத்தாச்சி, ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டியபடி நிலத்திலிருந்தவாறு சுட்டெடுத்த பனம்பழத்தை தோல் நீக்கி பினைந்து பனங்களி எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.

சுமார் எண்பத்தைந்து வயது மதிக்கத்தக்க தளர்வுற்ற சிறிய உருவம், இளமையில் அழகியாக இருந்திருப்பாள் என்று ஊகிக்கவைக்கும் தோற்றம்.

“சஞ்சீவன், மேனை சஞ்சீவன், ஆட்டோவுக்குச் சொல்லிப்போட்டியோ?”

வீட்டின் உட்புறம் நோக்கி உரத்தகுரலிலே ஆச்சி கேட்டாள்.

ஓம் பாட்டி சொல்லிப்போட்டன், காலமை எட்டரை மணிக்கு வரும்உள்ளேயிருந்து சஞ்ஜீவனின் பதில் வருகிறது.

அடுத்த வருசம் இருக்கிறனோ இல்லையோ? இந்த வருசம் திருவிழாவிலை ஒரு நாளைக் கெண்டாலும் போய் முருகனைத் தரிசிச்சிட வேணும்.

அவளது இருப்பைப் பற்றி அவளுக்கிருக்கும், ஐயத்தின் காரணமாக

திருவிழாக் காலத்தில் முருகனைத் தரிசித்துத் தொழுவதற்காகவே இந்த மூவுருளிப் பயண ஏற்பாடு.

இப்பொழுது அவள் கைலாசவாகனம், சப்பறம் என்று பெரிய திருவிழாக்களுக்குப் போவதில்லை.

சன நெரிசலில் சென்றுவர அவளால் இயல்வதில்லை. நடையிலே ஒரு தள்ளாட்டம், அவளை அழைத்துச் செல்ல ஓராள் தேவைப்பட்டது. போவதற்கு வாகனமொன்று ஒழுங்கு செய்வது அவசியமாக இருந்தது.

அந்த வாகனத்திலே அவளுடன் பூட்டப்பிள்ளைகளும் புறப்படுவார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ளவும் அவள் கஷ்டப்பட்டாள். அதனால் பேரன் அச்சுதன் வேலைக்குப் போகாத நாளாகப் பார்த்து புறப்பட வேண்டியுள்ளது. மகன் சுந்தரேசன் உயிருடனிருந்திருந்தால் அவன் அழைத்துச் சென்றிருப்பான்.

சுந்தரேசனின் நினைவு உள்ளே புரள்வது போலிருக்க நெஞ்சை அடைத்தது. இரண்டு கைகளும் பனம்பழம் பிசைந்ததால் கண்களில் கரைகட்டிய கண்ணீரைத் துடைக்க முடியவில்லை. வலதுகையை முன்னகர்த்தி சட்டையின் கையில் கண்களைத் தேய்த்துக் கொண்டாள்.

இந்தக் கறண்டை நம்பேலாது, எங்களை ஏமாற்றத் தாறதுதானே! இருந்ததாப்போலை நிண்டிடும், பனங்காய்ப்பணியாரத்தை நேரத்துக்குச் சுடவேணும்.”

அச்சுதனின் தாய் மனோன்மனி மாமியாரை விரைவாகப் பனம்பழ வேலையை முடித்துத் தருமாறு நேரடியாகக் கூறாது இப்படியொரு வேண்டுகோள் விடுத்தாள்.

சுந்தரேசனைக் கரம்பற்றிய நாளிலிருந்தே மனோன்மனி இப்படித்தான். அன்ன

முத்தாச்சிக்கும் தன் மருமகள் தனக்குத் தரும் மரியாதை புரிந்த விடயமே.

என்ரை வேலை முடிஞ்சுது பிள்ளை, பனங்களியைக் கொண்டுபோய் மாக்குழைக்கலாம், அப்பனே, முருகாபனங்களிப்பாத்திரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, நீட்டிவைத்திருந்த காலை மடக்கி, கையை ஊன்றி அவள் எழும்பவும் டப் டப்..டப்..டப்பதொடரான சூட்டுச் சத்தம்.

காதுகளைச் செவிடாக்கும் எறிகணை வீச்சும் அதனுடன் சேர்ந்து ஒலிக்கத்

தொடங்கியது.

அப்பம்மா, என்ன சத்தம்?” விடயத்தை ஓரளவு புரிந்தும் புரியாமலும் குழப்பமும் கலக்கமுமாக சஞ்சீவன் ஓடிவந்து அருகே நின்று கொண்டான். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சத்தங்களைக் கேட்ட நினைவு அவனுக்கு இருந்திருக்க வேண்டும்.

அச்சுதனின் மனைவி காவியா, மகள் ஓவியாவைத் தூக்கியவாறு அரக்கப்பரக்க ஓடி வந்தாள்.

மாமி, சண்டை தொடங்கிவிட்டுது போலை, இவரும் மேயக்கட்டின பசுவைக் கொண்டுவர காணிப்பக்கம் போனவர்

அவளின் மனப்பதற்றம் குரலிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது.

அது ஷெல்லடிக்கிறாங்கள், பயப்படாதை அப்பன்.” என சஞ்சீவனை அணைத்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்த மனோன்மணி, அவன் வந்திடுவன் யோசியாதை காவியாஎன அவனின் தாய்க்கும் ஆறுதல் கூறவேண்டிய தாயிற்று. ஆனால் ஒவ்வொரு எறிகணையின் வெடிப்பொலியும் அவளுடைய நெஞ்சை அதிரவைத்துக் கொண்டிருந்தது.

 

ம்மாஎறிகணைச் சத்தங்களால் மிரண்டுபோன பசு கதறிக்கொண்டு ஓடி வந்தது.

சூட்டுச் சத்தங்கள் அமளியாய்க் கேட்குது, காவியா, வெளிக்கிட்டு எங்கையும் போகவேணுமெண்டாலும் பிள்ளையளுக்கு அவசியந் தேவையானதுகளை எடுத்து வையும்அச்சுதன் காவியாவை அவசரப் படுத்தும் பாணியில் கூறிக்கொண்டு வந்தான்.

ஓவியா தாயை இறுகக்கட்டியணைத்தபடி, பயந்து வீரிட்டழுது கொண்டிருந்தாள். முதலாவது பிறந்த தினத்தைக் கொண்டாடி மூன்று மாதங்களேயாகி இருந்தது. அந்தக் குழந்தை ஒவ்வொரு எறிகணை ஓசையிலும் கதிகலங்கித் தவித்தது,

நீண்டநேரம் இருந்து விட்டு எழுந்ததால் நிற்பதற்குத் தடுமாறிய கால்களை நீவிவிட்டுக் கொண்டு, “அப்பனே முருகா, இது என்ன சோதனை?” என்று ஆண்டவனிடம் முறையிட்டாள் ஆச்சி.

அச்சுதன் போய் செம்பை எடுப்பதைப் பார்த்த மனோன்மணிஇப்ப பால் கறக்கப் போறியோ? என்று கேட்டாள்.

ஓவியாவுக்கு வேணுமெல்லோ?”

மாடு மிரண்டு போய் நிக்குது, ஷெல் சத்தமும் ஓயுறதாய்க் காணேல்லை. அது கறக்கவிடாது, பாலும் சுரக்காது.” மனோன்மணி உறுதியாகக் கூறினார்.

கதறியழும் குழந்தையுடன் காவியா பொருட்களை எடுத்துவைக்கச் சிரமப்படுவதைக் கவனித்த ஆச்சி பூட்டியைத் தான் வாங்கி வைத்திருக்க முயன்றாள்.

என்ரை சின்னக் கண்ணம்மா, பாட்டியிட்டை வாங்கோ

பாட்டியின் மடியில் மணிக்கணக்காகக் கிடந்து விளையாடும் குழந்தை, இப்போது கைகளால் தாயை இறுகக்கட்டிக் கொண்டு கால்களை உதறி, கதறி அழுது வரமறுத்தது.

சில மணித்துளிகளுக்குள் அந்த வீடு மத்து இறங்கிய தயிர்ப்பானை போலாகிக் கிடந்தது.

போர் ஆரம்பிக்கலாம்என்ற எதிர்பார்ப்பு இருந்ததுதான். ஆனால் போர் ஆரம்பமானவுடன் என்ன செய்யவேண்டு மென்ற ஆயத்தங்கள் எதுவும் அவர்கள் செய்து வைக்கவில்லை.

ஊரில் என்ன நிலை? அயலவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று அறிய

அச்சுதன் வெளியே சென்றான்.

அன்னமுத்தாச்சி, மனோன்மணி, காவியா எல்லோரும் தமக்குத் தேவையென்று தோன்றிய பொருட்களை எடுத்து ஒவ்வொரு தோற்பையினுள் வைத்தனர்.

சஞ்சீவன் சில புத்தகங்களை எடுத்து வைத்தான், “புத்தகங்களெள்லாம் காவேலாதடா, போற இடத்திலை படிக்கப் போறியோ? வந்து படிக்கலாந்தானே,”

காவியா அவற்றை வாங்கி மீண்டும் மேசைமீது வைத்தாள்.

முருகேசண்ணை வீட்டடியிலை ஷெல் விழுந்ததாம், எல்லாரும் மகாவித்தியாலத்திலை போயிருக்கலாமென்டு வெளிக்கிடுகினம், என்னத்தை எடுத்தாலும் விட்டாலும் அடையாள அட்டையைப் பத்திரமாய் எடுத்துக்கொண்டு வாங்கோகூறிக் கொண்டே தானும் சில பொருட்களை எடுத்து ஒரு தோற்பையினுள் வைத்துக்கொண்டு அச்சுதன் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில்

தொம்

அருகிலதிர்ந்த சத்தத்தோடு அவல அழுகைகளும் சேர்ந்து ஒலித்தன,

கிட்ட எங்கையோ ஷெல் விழுத்திட்டுது கெதியாய் வெளிக்கிடுங்கோ

அந்தப் பதற்றத்தில்எதை எடுப்பதுஎப்படிச் செயற்படுவது? என்பதே புரியாது போய்விட்ட குழப்பத்தில்எடுத்தவை போதும்,உயிர் தப்புவதே முக்கியம்என்ற நோக்கில் புறப்பட்டார்கள்.

பாட்டி, ஓவியாவின்ரை இந்தச் சாமான்களையும் உங்களின்ரை பாக்கிக்கை வைக்கவோ?”

காவியா சில பொருட்களை அன்னமுத்தாச்சியின் பையினுள் வைத்தாள்.

அப்பனே முருகா

எல்லோரும் வெளியே வந்ததும் ஆச்சி கதவைப் பூட்டி திறப்பைத் தன் பையினுள் வைத்தாள்,

திரும்பிப் பார்த்தால் கிராமமே ஒழுங்கையில் இறங்கி நடந்து கொண்டிருந்தது. சிலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள் என்பவற்றிலும் சென்றுகொண்டிருந்தார்கள்.

நீங்களும் சைக்கிளைக் கொண்டு வாருங்களன்

காவியா அச்சுதனுக்கு ஓர் ஆலோசனை கூறினாள். அச்சுதனுக்கும் அது நல்லாதாகவேபட்டது.

பாட்டி திறப்பைத் தாங்கோ.” என அச்சுதன் கேட்கவும் அன்னமுத்தாச்சி பையினுள் துளாவி அதை எடுக்க சில நிமிடங்களாகின. முன்கதவும் பூட்டு பழுதாகியதால் திருத்துவதற்கென இரண்டு வாரங்களுக்கு முன்கொடுத்தார்கள். அது திருத்தும்வரை பூட்டுவதற்காகவென்று இந்தப்பூட்டைப் போட்டார் முன்னைய பூட்டைத் திருத்தக் கொண்டு சென்றவர். இதன் திறப்பு சிறியது.

இந்தச் சின்னப் பூட்டைப்போட்டு, சாவியைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது,” ஆச்சி மனதிற்குள் புறுபுறுத்துக் கொண்டாள்.

அச்சுதன் கதவைத் திறந்து சைக்கிளை எடுத்து வருவதற்குள் என்ன யோசிச்சுக்கொண்டு நிக்கிறியள், ஷெல் சிவசண்முகம் மாஸ்ரர் வீட்டிலை விழுந்து மாஸ்ரர் சரி, நிக்கிறது புத்திசாலித்தனமில்லை, கெதியாய் நடவுங்கோ.” என்று நடராசா மாஸ்ரர் சொல்லிக் கொண்டே நடந்தார்.

ஆச்சி சாவியை வாங்கி பைக்குள் வைப்பதற்கு முன்பே அவர்களின் கால்கள் அவசரப்பட்டு நடக்கத் தொடங்கின.

சஞ்சீவன் பாட்டியின்ரை கையைப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வா. கவனமாய் எங்களோடை வரவேணும் சனநெருசல், இருட்டு. காவியா மெல்ல நட. பாட்டி கெதியாய் நடந்து கொள்ள மாட்டா. அச்சுதன் கூறிக்கொண்டே ஓவியாவை சைக்கிளில் இருத்தி, அதனை உருட்டிக்கொண்டு நடந்தான்.

ஆச்சி திறப்பை வைத்ததும் அவளிடமிருந்து பையை வாங்கிக் கொண்டு ஆச்சிக்கு அருகே நடந்து சென்றாள் மனோன்மணி.

தலைக்குமேல் ஜிவ்வென இரைந்து சென்ற எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தங்களும் வேட்டுச் சத்தங்களும் கேட்டுக் கொண்டேயிருந்தன. திடீரென இருபது முப்பது எறிகணைகள் தொடர்ந்து சென்று விழுந்து வெடித்தன,

அப்பா இதென்னப்பா விடாமல் தொடர்ந்து வருகுது?” சஞ்சீவன் மிரண்டு போய் பாட்டியின் கையை விட்டுவிட்டு அப்பாவின் அருகே ஒன்றி நடந்துகொண்டு கேட்டான், அவனுக்குப் பதில் கூறமுடியாமல் ஓவியா கதறிக் கதறி அழத் தொடங்கினாள்.  போரைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் இனம் புரியாத திகிலொன்று ஓவியாவுள்ளே புகுந்து அவளை அழவைத்துக் கொண்டிருந்தது.

இதுதான் மல்ரிபரல் ஷெல் அதாவது பல்குழல் எறிகணை எண்டு சொல்லுகினம், போய் விழுகிற இடத்திலை சரியான சேதமேற்படும்.”

ஓம் அப்பம்மா, இவ்வளவு ஷெல்களும் விழுந்தால் எப்படியிருக்கும்?”

சஞ்சீவனின் வினாவிற்கு மனோன்மணி கொடுத்த விளக்கத்தைக் கேட்டு அவன் மனதிலே பயங்கரக் கற்பனையொன்று விரிய பதிலளித்தான்.

காவியா சைக்கிளிலிருந்து அழுத மகளைத் தூக்கிக்கொண்டாள், தாயை இறுக அணைத்தபடி தோளில் முகம் புதைத்து முதுகை இதமாக வருடி, கன்னத்தில் கன்னம் வைத்து ஆறுதல் கொடுக்க முனைந்தாள் தாய், மீண்டும் அதே எறிகணை.

அப்பாசஞ்சீவன் ஓர் அழுத்தங் கொடுத்து அச்சுதனை அழைத்தான்.

அச்சுதன் இதிலை கொஞ்சம் ஆறிப்போட்டுப் போவமே? எனக்குச் சதுரமெல்லாம் பதறுகுது

அன்னமுத்தாச்சியின் முகமெங்கும் முத்து முத்தாக வியர்த்தது,

தண்ணி கொஞ்சம் தரவே பாட்டி?” காவியா கேட்டாள்

வேண்டாம் பிள்ளை. ஒண்டுக்கு இரண்டுக்குப் போறது கஷ்டம்

பக்கத்திலிருந்த ஒரு கல்லில் அன்னமுத்தாச்சி இருந்துவிட்டாள், அருகே காவியாவும் மகளை மடியில் சாய்த்தபடி அமர்ந்து விட்டாள்.

அச்சுதன், சண்டை பலக்குமோடா?”

நோர்வே, சர்வதேசம், கண்காணிப்புக்குழு எல்லாம் இருக்கேக்கை அப்பிடி நடக்காதுஆச்சியின் கேள்விக்கு காவியாதான் பதில் தந்தாள். அந்தக் கேள்வி அச்சுதனை ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாக்கிவிட அவன் மௌனித்திருந்தான்,

காவியாவின் பதில் ஆச்சியை ஆசுவாசப்படுத்தியிருந்தது, சண்டை ஓய்ந்துவிடும். வீட்டிற்குப் போய்விடலாம், அன்னமுத்தாச்சிக்கு ஓரளவு களைப்பு மாறியதுபோலிருந்து, அவர்களுடைய பயணம் தொடர்ந்தது.

மகாவித்தியாலயத்தை வந்து சேர்ந்ததும் ஆச்சியையும் காவியாவையும் ஓவியாவையும் ஓரிடத்தில் இருக்கவைத்த பின்னர் மனோன்மணியையும் சஞ்சீவனையும் கூட்டிக்கொண்டு வகுப்பறைகள் எதற்குள்ளாவது இடமிருக்கிறதா? எனப்பார்த்துவர அச்சுதன் புறப்பட்டான். இடம் கிடைத்தால் அங்கு மனோன்மணியையும் சஞ்சீவனையும் இடம் பறிபோகாது பார்த்துக்கொள்ள விட்டுவரலாம் என்பது அவனது எண்ணம்.

போன எங்குமே இடமிருக்கவில்லை.

என்ன செய்வது?” என்ற யோசனையுடன் நடந்துவரும் போது ஒரு வகுப்பறையின் அருகே நண்பன் நவரத்தினம் நின்றிருந்தான், அச்சுதன் இடம் தேடுவதைப் பற்றிக் கூறியதும் வகுப்பறை ஒன்றிலும் இடமிருக்காது. இங்கை கூட்டிக்கொண்டு வா, ஏதோ சமாளிப்பம்.”என்றான். அச்சுதனுக்கும் வேறு வழி தெரியாததால் ஆச்சியையும், மனைவி, மகளையும் கூட்டிக்கொண்டு வந்தான்.

அன்று இரவு குழந்தைகளைத் தவிர அனைவருக்கும் சிவராத்திரியாக அமைந்தது, பல்வேறு கதைகளுடன் பொழுது போய்க்கொண்டிருந்தது , “சண்டை ஓய்ந்துவிடும் வீட்டுக்குப் போய்விடலாம்என்ற நம்பிக்கையும் அவர்களை விட்டுப் போய்க்கொண்டிருந்தது, பின்னிரவு நேரம் இரத்தினவேல் அங்கே வந்தான்.

என்னாலை அங்கை இருக்க ஏலேல்லை, வந்திட்டன்என்று அவன் கூறவும்இது எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கிற கவலைதான்என நவரத்தினம் ஆறுதல் கூற முற்பட்டான்.

அதில்லையடாப்பா. சிவசண்முகம் மாஸ்ரர் வீட்டுக்காறர் எங்களுக்குப் பக்கத்திலை தான் வந்திருக்கினம், மாஸ்ரரின்ரை உடலை அங்கை விட்டிட்டு வந்திட்டினம், காலமைக்கும் போய்ப் பார்க்கேலுமோ எண்டு சந்தேகமாயிருக்கு.”

இரத்தினவேல் கூறியதைக் கேட்டு எல்லோரும் ஓரிரு கணங்கள் உறைந்து போயிருந்தனர்.

மனோன்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் புரண்டது. 1987ல் இதே போல் அமைதி இதோ வந்துவிட்டதுஎன அவர்கள் எதிர்பார்த்த வேளையில் தொடக்கிய யுத்தத்தின் போது, அவளுடைய வயோதிபத் தாயை உயிருடன் விட்டுவிட்டு வந்து ஒரு மாதத்தின் பின் எலும்புகளாகக் கண்ட நினைவு! அதன்பின் எப்போதுமே அமைதி வந்ததாக வரும் ஆரவாரம் அந்த எலும்புகளைத்தான் அவளுக்கு நினைவூட்டும்,

அரசியல் நிலையை மற்றவர்கள் ஆராய அவள் அதையே நினைத்துக்கொண்டிருந்தாள்.

போரின் உறுமல் ஓயவில்லை, அந்தச் சத்தங்களுடனேயே பொழுது விடிந்தது,

இரவு தோன்றிய போர்ப்பிரச்சனையிலிருந்து இப்போது வேறு பல பிரச்சனைகள் கிளைவிடத் தொடங்கியிருந்தன.

அடிப்படைத் தேவைகள் அனைத்திற்கும் எங்கே போவது? என்ன செய்வது? எதுவுமே தெரியவில்லை. குடிநீருக்கே அல்லாட வேண்டிய நிலை. காற்று.......? அதுகூட போதிய வசதிகளின்றியும் சுகாதாரம் பற்றிய அக்கறையின்றியும் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் காரணமாக அசுத்தத்தைக் காவி வந்தது.

குழந்தைகளுக்கு நிலைமை புரியுமா? பசி அவர்களை அழ வைத்தது.

நேற்றிரவுபனங்களிக்குள் மாவைப் போடாததால் அது பழுதுபடாது தவறிவிட்டதுஎன்று நினைத்தாள். இப்போது குழந்தைகளின் பசிபோக்க உணவு தயாரிக்கக்கூட எதுவுமற்ற நிலை.

ஓவியாவிற்கென்று கொண்டு வந்திருந்த ஒரு பிஸ்கற் பெட்டி இருந்தது. நவரத்தினத்திற்கும் மூன்று பிள்ளைகள், எடுத்துப் பிரித்தால் அரைவயிறும் கால்வயிறுமாக அவர்கள் பசி போகும், ஆனால் அடுத்த பொழுது ஓவியாவிற்கு...?

அது ஆண்டவன் சித்தம்என்று அன்னமுத்தாச்சியின் பையைத் துளாவி அந்த பிஸ்கற் பெட்டியை எடுத்து வந்து காவியா பங்கிட்டாள்.

அச்சுதன் எங்கிருந்தோ ஒரு போத்தலில் சிறிது கொதிநீர் கொண்டு வந்தான். காவியா பால்மாவை அதற்குள்ளேயே போட்டு கலக்கி ஓவியாவிற்குக் கொடுக்கவென ஆயத்தஞ் செய்து கொண்டிருக்கையில்

பாக்கிக்குள்ளே வீட்டுத்திறப்பு கிடக்கு, கவனம் பிள்ளை.” என்றாள் ஆச்சி,

நான் திறப்பை எடுக்கேல்லைப் பாட்டிஎனப் பதிலளித்தாள் காவியா.

வீட்டை போன உடனை அந்தப் பூட்டுத் திருத்தியாச்சோ எண்டு பார்த்து அதைப் போடுவிக்கவேணும்.” ஆச்சி மனதிற்குள் தீர்மானமெடுத்துக் கொண்டாள்.

வீட்டிலே ஐஞ்சாறு சோப் கிடக்கு. ஒண்டைக்கூட எடுத்து வராமல் விட்டிட்டன்

ஏன் உமக்கு இப்ப சோப்?” காவியா கூறியதைக் கேட்ட அச்சுதன் ஏளனங்கலந்த குரலிலே கேட்டான்

இரவு ஓவியாவைப் படுக்கவைத்த துணியை நனைச்சுப் போட்டாள், வீட்டிலே கேட்டு, காற்சட்டை களட்டிசூபோறவள், இப்ப காற்சட்டையை நனைச்சுப் போறாள். எல்லாம் தோய்ச்சுக் காயப்போட வேணும்.”

இதெல்லாம் எங்கை போய்ச் செய்யப்போறீர்? தண்ணி தேடப் படுகிறபாடு.” அச்சுதன் விரக்தியாகப் பதிலளித்தான்.

வீட்டிற்கு எப்ப போகலாம்?”

மனம் ஏங்கியது.

மதியம் அண்மிக்க அன்னமுத்தாச்சிக்கு நாவரட்சி அதிகமாகியது, இதுவரை அங்கு சாய்ந்து படுக்க மறுத்திருந்தவளுக்கு இப்போது இருக்க இயலவில்லை, மாற்றுச் சேலையாகக் கொண்டு வந்திருந்ததை எடுத்து நிலத்திலே விரித்து படுக்கவென எண்ணியவள், அந்தத் திறப்பின் நினைவுவரவே பையினுள் கையை வைத்து இயன்றளவில் தேடினாள்,

சாவியைக் காணவில்லை.

உடல் அயர்ச்சியையும் ஒதுக்கிவைத்துவிட்டு, ஒவ்வொரு பொருளாக எடுத்துத் தேடினாள், ஆனால் அதைக் காணவில்லை, தன் சேலையையும் நன்கு உதறித் தேடினாள்,

அதைக் காணவேயில்லை.

என்ன நடந்திருக்கும்? அவசரமாக வைத்தபோது கைதவறி விழுந்திருக்குமோ?

ஓவியாவின் பொருட்களை வைத்தெடுக்கும்போது தவறியிருக்குமோ? அன்னமுத்தாச்சி சரிந்து படுத்தாள்.

மூளை எழுந்திருந்து சாவியைத் தேடியது.

பையைச் சரிவரப் பார்க்கவில்லையோ? திறப்பும் சிறியது. எங்கேயாவது செருகுப்பட்டிருக்குமோ?

பாட்டி ஓவியாவின்ரை பாலிலை கொஞ்சம் குடிக்கப் போறீங்ளே? தேத்தண்ணி கூட இல்லாமல் எவ்வளவு நேரம் இருக்கப் போறியள்?”

காவியா பாலுடன் அருகே வந்தமர்ந்தாள். ஆச்சி எழுந்து இருந்துகொண்டாள், நா வரண்டுகிடந்தது, ஆத்மா, நீரைத்தேடித் தவிக்க ஆரம்பித்திருந்தது. இரண்டு வாய் குடித்தாள், குழந்தைப் பால்மா, மனம் வயிற்றைக் குமட்டியது.

நவரத்தினத்தின் மகள் வாணி அந்தப் பாற்போத்தலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த வாய் குடிக்க முடியவில்லை.

அந்தப் பிள்ளைக்குக் குடு மேனை.”

சஞ்சீவனுக்கு பிஸ்கற்ரைவிட தண்ணீர்தான் கொடுத்தது.”

காவியாவினுள் சஞ்சீவன் பற்றிய எண்ணம் பளீரிட்டாலும் வாணியின் பார்வை அந்த இரு மிடறு பாலை அவளுக்குக் கொடுக்க வைத்தது,

பிள்ளைகளுக்குப் பால் வேண்டுமென்றுதான் பன்னிரண்டாயிரம் ரூபாவுக்கு பசு வாங்கி வளர்த்தார்கள்,

பாவம். அந்தப் பசுவும் கன்றும் இப்ப என்ன பாடோ?” காவியா கவலைப்பட்டாள்.

எப்போது வீட்டுக்குப் போகலாம்?”

மனம் தவித்தது,

வீட்டுக் கிணற்றின் தண்ணீர் குடித்தால் போதும்

அன்னமுத்தாச்சி ஒரு பெருமூச்சுடன் மீண்டும் தனது பயணப்பையை ஆராயத் தொடங்கினாள், அந்தச் சாவியை காணவில்லை, வீட்டுத் திறப்பை கவனமின்றி வைத்ததற்காகத் தன்னையே நொந்து கொண்டாள். பயணப்பை வைத்திருந்த இடத்தைச் சுற்றி, கண்பார்வையைத் தீட்சண்யமாக்கித் தேடினாள்.

அதைக் காணவில்லை.

அப்பனே முருகா!”

கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, படுத்துக்கொண்டாள், போர் தொடங்கிய அந்த நிமிடத்தில் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு வந்தால் போதுமென்று தோன்றியது. உண்மைதான், ஆனால் நேரம் மெல்ல மெல்ல நாட்களாகியபோது, அந்த உயிரும் அது குடியிருக்கும் உடலும் வாழ எத்தனையோ பொருட்கள் தேவைப்பட்டன.

அச்சுதனும் நவரத்தினமும் அலைந்து திரிந்து, தேநீர், பிஸ்கற் என அகப்பட்டவற்றைக் கொண்டு வந்த பிள்ளைகளுக்குக் கொடுத்தார்கள்.

இப்படியே வாழமுடியுமா? போர் ஓயாதா? வீட்டுப் பக்கம்போக முடியாதா?

எல்லோரும் ஏங்கித் தவித்தார்கள்.

பாணும் சமைத்த உணவும் வழங்கப்பட்ட போதும் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூட போட்டியிடும் நிலை.

 ஏதாவது சாப்பாட்டுச்சாமான் கிடைத்தாலும் எக்கச்சக்க விலை சொல்லுறாங்கள், கையிலை கொண்டுவந்த காசும் முடியுது.”

அச்சுதன் கூறியபோதுதான் அன்னமுத்தாச்சிக்கு அந்த நினைவு வந்தது.

சீட்டுக்காசை எடுத்த அண்டைக்குத்தானே சண்டை தொடங்கினது, அதை எடுத்துக் கொண்டர மறந்திட்டன்.”

ஆச்சி கூறியதும் எல்லோரும் திகைத்துப் போனார்கள். ஒரு இலட்சம் ரூபா சீட்டு. எண்பத்தையாயிரம் எடுத்தது, எறும்பு சேர்த்த மாதிரி சேர்த்த காசு. அதனை வைத்து கண்ட கனவுகள் பல, இந்தக் கணத்தின் தேவை பணம்.

என்ன அப்பம்மா நீங்கள்...”

தன்னை மறந்து காரமாக ஆரம்பித்த அச்சுதனை ஊடறுத்தாள் மனோன்மணி.

அந்தப்பதகளிப்பிலை எதுதான் நினைவு வரும்? மாமி கவனமாய்த்தான் வச்சிருப்ப, போய் எடுக்கலாம்.

அன்னமுத்தாச்சியின் மனம் அமைதியடையவில்லை. அவள் பறக்கத் துடித்தாள்.

இந்தச் சண்டையிக்கை ஒரு கள்ளனும் போகான், வீட்டை போய் எடுக்கலாம்

மனோன்மணி ஆறதல் கூறினாள், அவளுடைய மனதையே அந்தச் சொற்கள் ஆறுதற்படுத்தவில்லை.

போரின் உறுமல்கள் சற்றுத் தணிவது போலத் தோன்றியது. இப்படியே குறைந்தால் மறுநாள் வீடுகளைப் போய்ப் பார்க்கக்கூடியதாக இருக்குமென்று பேசிக் கொண்டார்கள்

வீட்டுக்குப் போகலாமென்றால்... இந்தச் சாவியைக் காணவில்லையே!” அன்னமுத்தாச்சியின் கவலை கூடியது.

அச்சுதன், அந்தச் சாவியை இன்னும் எடுக்கேல்லை மேனை.” அச்சுதன் அருகே அமர்ந்திருந்தபோது ஆச்சி பேச்சை மெல்ல ஆரம்பித்தாள்;

அதுக்கொரு அவசரமுமில்லை அப்பம்மா, அதையே யோசிச்சுக் கொண்டிருக் காதையுங்கோ,” அச்சுதன் அலட்சியமாகப் பதிலளித்தது அவளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

வீட்டுக்குப் போகவிட்டால் சாவி தேவையென்றது கூட இவனுக்குத் தெரியாதா?” மனம் கேட்டுக்கொண்டது.

மனோன்மணிக்கு மாமியாரின் மனப்பதற்றம் புரிந்தது.

நானொருக்கால் பாக்கைப் பார்க்கட்டுமோ?”

அதுக்கென்ன ஒருக்கால் பாருமன்

மனோன்மணியின் தேடலுக்கும் பலன் கிடைக்கவில்லை. அன்று சப்தங்கள் பெருமளவு ஓய்ந்திருந்தன, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின் ஆண்கள் சேர்ந்து வீடுகளைப் பார்க்க போவதென்று தீர்மானித்தார்கள்,

வீட்டிலிருந்து எடுத்துவர வேண்டிய பொருட்களை ஒவ்வொருவரும் கூற காவியா ஒரு சிறுதுண்டுக் காகிதத்தில் குறித்து அச்சுதனிடம் கொடுத்தாள்,

நாங்களும் வந்து வீட்டிலை இருந்தாலென்ன? இப்பிடி எவ்வளவு நாள் இருக்கிறது?”

சண்டைக்குப்பிறகு ஊர் எப்பிடி இருக்குதோ? போய்ப் பார்ப்பம், இருக்கேலு மெண்டால் போவம்,”

காவியாவிற்கு ஆறுதல் கூறுவதுபோல் அச்சுதன் பதிலிறுத்தான்,

சாவியைக் காணேல்லை மேனை, என்ன செய்யப்போறாய்?” அன்னமுத்தாச்சி பையைக் குடைந்தவாறே கேட்டாள். அச்சுதன் விரக்தியாகச் சிரித்தான்.

வீடு பூட்டியபடி இருக்குமா?

உந்தச் சண்டைக்கை ஒரு கள்ளனும் போயிருக்கேலாது

மருமகள் ஆறுதலுக்காக கூறிய மனதிற்குள் வைத்திருந்த சொற்களை ஆச்சி கூறினாள், அச்சுதன் மௌனமாயிருந்தான்.

காலை பத்துமணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது. போகத் தயாராயிருந்தவர்கள் புறப்பட்டனர்.

மறக்காமல் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வா, துண்டு எடுத்திட்டியே?”

மனோன்மணி அச்சுதனுக்கு நினைவூட்டினாள்.

சாவியில்லாமல் எல்லாம் எடுக்கக் கஷ்டப்படப் போறான்,ஆச்சி மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்,

வீட்டு முன்பக்கமெங்கையேன் சாவி விழுந்துகிடக்கோ எண்டு பார் மேனை

பயணப்பையுள் வைக்கும்போது தவறிவிழுந்து கிடந்தால் திறப்பை எடுத்து விடலாம் என்றொரு நப்பாசை அவளுள் தலை நீட்டியது.

மனதுள் குவிந்துகிடந்த சோகங்களினிடையே ஒரு சிரிப்பு அச்சுதனிடம் பிறந்தது, ஆச்சியை நோக்கி தலையசைத்து சிரித்துவிட்டு அவன் புறப்பட்டான்.

நேரம் கடந்து சென்று கொண்டிருந்தது.

வீட்டை எப்படித் திறந்திருப்பான்? முந்திய பூட்டென்றால் திறப்பது கஷ்டம், இது அவ்வளவு கஷ்டமாயிருக்காது, எப்படியும் திறந்திருப்பான். அப்பனே முருகா, கதவைத்திறந்து அந்தக் காசை எடுத்து போடவேண்டும்.’

தேவைப்பட்ட ஒவ்வொரு பொருளும் அது இருக்குமிடமும் நினைவில் வந்து கொண்டிருந்தது.

ஏன் இவ்வளவு நேரமாகிறது? எங்களுடைய வீடு திறக்கேலாததுதான் பிரச்சனையோ? ஊரடங்குநேரமாகப் போகிறதே.

தூரத்தில் அவர்கள் வருகிறார்கள், அதோ அச்சுதன், கையில் ஒன்றுமில்லை. கதவு திறக்க முடியவில்லையோ?

அச்சுதனின் முகம் கவலையால் உருவாக்கப்பட்டிருக்கிறதா?

என்னப்பன்? என்ன பிரச்சனை?”

மகனின் முகம் பார்த்து மனோன்மணி காரணம் தேடினாள்.

அச்சுதனின் கண்கள்...? அவனுடைய தந்தை காலமானபோதுதான் இந்தக்கலக்கத்தை காவியா கண்டிருக்கிறாள். அந்தக் கண்களுள் கண்ணீர் வெளிவரத் தயாராய்  நின்றது,

சாவியைக் காணவில்லை எண்டதாலை...” அன்னமுத்தாச்சி கேட்கத் தொடங்க அச்சுதன் கம்மிய குரலில் பதில் கூறினான்,

அங்கை எங்களின்ரை வீட்டையே காணவில்லை அப்பம்மா

ஞானம், ஏப்ரில் 2007.



No comments:

Post a Comment