Monday 27 September 2021

உலா - எனக்குப் பிடித்த கதை

 
.சட்டநாதன்

அம்மாவின் மடியில் தலைவைத்துஉடலைச் சீமெந்து தரையில் கிடத்திகால்மேல் கால் போட்டுப் பெரிய மனிசத் தனத்துடன், மது தனது ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத்தை அவளுக்கு உரத்துப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்.

சாப்பாடு ஆனதும், இப்படி ஒரு சொகுசும், படிப்பும் அவனுக்குத் தேவைப்படுவது அம்மாவுக்குத் தெரியும்.

அவள், அவனது தலையை வருடியபடி அவனது படிப்பில் ஆழ்ந்திருந்தாள். அப்பொழுது, வெளியே அழுத்தமான அந்தக் குரல் கேட்டது.

'மாமா...!'

மிக மெதுவாகக் கூறியவன், எழுந்துஉறைந்துபோய் உட்கார்ந்தும் கொண்டான்.

புத்தகம் மடங்கித் தூரத்தில் கிடந்தது. அம்மா வெளியே வந்து மாமாவுடன் கதைத்தாள்.

இவன், படியிறங்கி, முற்றத்துக்கு வந்தபோது, இவனைப் பார்த்து மாமா கேட்டார்.

'மது...! நாளைக்குத் தேர்.... மாரியம்மன் கோயிலுக்குப் போவமா....?'

மாமா இவனோடு இப்படி நின்று, நிதானமாய்ப் பேசியதில்லை. 'இந்தப் பேச்செல்லாம் நம்பிற மாதிரி இல்லையே...?' என்பது போல இவன் அவரைப் பார்த்தான்.

மாமா 'கருகரு' என்று அடர்த்தியான முடி வைத்துக்கொண்டிருந்தார். நாற்பது வயதாகியும் நரை காணவில்லை. மேற்சட்டை இல்லாமல் வெற்றுடம்போடு நின்றார். அடர்ந்த மீசை, உதடுகளை மூடி வளர்ந்திருந்தன. பேசும்பொழுது, மீசைக் கற்றைகளுக்கிடையே முன்பற்கள் மட்டும் லேசாகத் தெரிந்தன.

அவனுடைய 'சீஸருக்கு' இருப்பது போல, கூரான வேட்டைப் பற்கள் மாமாவுக்கும் இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

அவர் மார்பு முழுவதும் பச்சை குத்தியிருந்தார். மார்பில் பெரிய சிங்கம். புயங்களிலும் இரண்டு குட்டிச் சிங்கங்கள். கழுத்தில் நீளமான பொன் காப்பிட்ட புலிப்பல் சங்கிலி.

மாமா அசப்பில் சிங்கம் மாதிரித்தான் இவனுக்குத் தோன்றினார்.

மாமா அலுவல் முடிந்து அம்மாவிடம் விடை பெற்றபோது, இவன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

'ஸ்ரீ, தயா மச்சாள் எல்லாரும் கோயிலுக்கு வருவினமா...?'

'எல்லாருந்தான்.'

'மாமி...'

'வரமாட்டா, துடக்கு'

'அம்மா...?'

'இல்லை... நாங்கள் நாலு பேருந்தான்.'

இவன் அம்மாவைப் பார்த்தான். அவளுக்கு அவனது துருதுருப்புப் புரிந்திருக்க வேண்டும். 'என்ன?' என்பது போலப் பார்த்தாள்.

'ஸ்ரீயையும், தயா மச்சாளையும் பாக்கவேணும்....'

 வெய்யிலடா... கவனமாப் போ...' என்றவள், அவன் போவதையே பார்த்தபடி நின்றாள்.

 ................................

மாமி வீட்டில் ஸ்ரீ மட்டும்தான் இருந்தான். தயா மச்சாளைக் காணவில்லை.

ஸ்ரீ, முயல் குட்டிகளுக்குத் தழை போட்டுக் கொண்டிருந்தான்.

வெண்பஞ்சுக் குவியலாய்க் குட்டிகள். வந்தவேலையை மறந்து, இவனும் குட்டிகளுக்குத் தழை எடுத்துப் போட்டான். ஞாபகம் வந்ததும் ஸ்ரீயைப் பார்த்துச் சொன்னான்.

'நாளைக்கு நாம கோயிலுக்குப் போறம்... மாரியம்மன் கோயிலுக்கு...!'

'தேருக்கா...? உண்மையா?'

ஸ்ரீயால் அதை நம்பமுடியவில்லை.

'நான், நீ, தயா மச்சாள், மாமா...'

'அப்பா வரமாட்டாரடா.... பொய்... வரவேமாட்டார்...'

'இல்லை, வருவாரடா... வாறனெண்டு சத்தியமாகச் சொன்னவர்...'

ஸ்ரீ நம்பவில்லை என்பது மதுவுக்குச் சோர்வைத் தந்தது.

இந்தச் செய்தியைத் தயாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பு அவனுக்கு. ஸ்ரீயை முயலோடு 'மினக்கெட' விட்டுவிட்டு அவன் தனியாகத் தயாவைத் தேடிப்போனான்.

வழியில், மில்லடி ஒழுங்கையில், கடையன் சீமால் ஆச்சி தான் எதிர்ப்பட்டாள்.

எங்கை... எங்கை என்ரை துரையார் போறார்...?'

'கோயிலுக்கு... மாரியம்மன் கோயிலுக்கு... நாளைக்குத் தேருக்குப்போறம்... அதுதான்'

ஆச்சியின் காலைக் கட்டிப்பிடித்தபடி கூறினான்.

ஆச்சி வெற்றிலை போட்ட வாயால் அவனை எச்சில் படுத்திவிட்டு நகர்ந்தாள்.

ஊரெல்லாம் உலாவந்து இந்தச் செய்தியைச் சொல்ல வேண்டும் போலிருந்தது மதுவுக்கு.

'ராஜி அக்கா வீட்டைதான் முதலிலை போவம்... அங்கைதான் தயா மச்சாள் நிக்கும்...'

அவன்  எதிர்பார்த்தது போல் அங்கு தயா இல்லை. ராஜி, கேதா கூட இல்லை. 'பெத்தா' தான் கட்டிலில் முடங்கிக் கிடந்தாள்.

பெத்தாவுக்கு எதுவும் முடியாது. பார்வை மட்டு மட்டு. காதும் அரை குறையாகத்தான் கேட்டது.

'பெத்துவுக்குச் சொல்லுவமா..?'

மனதில் துருத்தியதை, செயற்படுத்த விரும்பி, அயர்ந்து தூங்கும் பாட்டியைத் தொட்டு உசுப்பினான்.

'பெத்தா... பெத்தா...! நாங்க கோயிலுக்கு... மாரியம்மன் கோயிலுக்குப் போறம்... உனக்கு பாக்குரல், பாக்குவெட்டி, கொட்டப்பெட்டி எல்லாம் வாங்கிவரட்டா...?'

மதுவின் குரல், நீரினாழத்திலிருந்து கேட்பது போலப் பெத்தாவுக்கு இருந்திருக்க வேண்டும். அவள் திடுக்குற்று மலர்க்க மலர்க்க விழித்தபடி, இவனைப் பார்த்தாள்.

பெத்தாவுக்கு எதுவுமே தெரியவில்லை, எல்லாம் ஒரே புகை மூட்டமாக இருந்தது.

'ஆரடா மோனை... எனக்குக் கண்ணும் தெரியேல்லை காதும் கேக்கேல்லை...' கிழவி எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

'இதுக்குச் சொல்லேலாது... ஒண்டும் விளங்காது... சரியான செவிட்டுப் புடையன்'

அலுத்துக்கொண்ட மது, ரதி அக்காவின் நினைவு வர அவளிடம் புறப்பட்டான்.

ரதி அக்கா மெஷினில் ஏதோ தைத்துக்கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும்:

'என்ன...? எங்கடை மதுவனோ வாறது...?'

அவள் நெகிழ்ந்து கரைந்தாள்.

திரும்பித் திரும்பச் சொல்லியும், அசை போட்டும், மனப்பாடமாகிவிட்ட அந்த விஷயத்தை ரதி அக்காவிடமும் அவன் ஒப்பித்தான்.

அக்கா எழுந்து உள்ளே போய் அலுமாரியைத் திறந்ததும் இவனுக்குத் தெரிந்தது, அக்கா காசு தரப் போறாளென்று.

அவனது கையில் ஐந்து ரூபாய்க் குற்றி ஒன்றை வைத்த ரதி, அவனை அணைத்து முத்தமிட்டாள்.

'ரதி அக்காவுக்குத்தான் எச்சில் படாமல் முத்தம் கொடுக்கத் தெரியும்' என நினைத்துக் கொண்டவன், கண்களை இடுக்கிப் பூஞ்சிரிப்பொன்றை உதிர்த்தபடி, அவளிடம் விடை பெற்றுக் கொண்டான்.

மில்லடியில் வரும்போது, யோகு அன்ரியின் ஞாபகம் வந்தது. ஆனால், வீதியைக் கடந்துபோக அவனுக்குப் பயமாக இருந்தது.

'கார், பஸ் ஏதென் திடீரென வந்து தட்டிப்போட்டால்?'

'தூரத்திலை... அரசடியிலை... ஆரது நிற்கிறது... சுதன் சித்தப்பாவா...? வெள்ளையும்  சள்ளையுமாய் உடுத்துக்கொண்டு எங்கை போகப் போறார்...?'

சித்தப்பாவிடம் இதைச் சொல்ல மதுவின் மனம் பரபரத்தது. அவரை நோக்கி வேகமாக ஓடிப்போனான். பின்னால் ராட்சத உறுமலுடன் பஸ் வந்தது. பயந்த இவன் கானுக்குள் ஒதுங்கிக்கொண்டான். பஸ் இவனைக் கடந்து சித்தப்பாவின் காலடியில் சரிந்து நின்றது. சித்தப்பா பஸ்ஸில் ஏறிக்கொண்டார்.

மதுவுக்கு அது பெருத்த ஏமாற்றமாய் இருந்தது.

அந்த ஏமாற்றத்தையும், சோர்வையும் போக்க வீதியைக் கடந்து, யோகு அன்ரி வீடுவரை போக வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

அன்ரி வீடு பூட்டிக் கிடந்தது. ஆளரவம் இல்லை. இவன் படி ஏறி விறாந்தையில் கிடந்த வாங்கிலில் உட்கார்ந்துகொண்டான்.

'பள்ளியாலை தவம் மாமா இன்னும் வரவில்லைப் போல... அன்ரி எங்க போயிருப்பா...?'

கூடத்துக்கு அப்பாலுள்ள அறையில் ஏதோ சத்தம் கேட்டது. ஆழ்ந்த யோசனையிலிருந்த மது உசாரடைந்தான். வாங்கிலில் இருந்து இறங்கி, அந்த அறையை நோக்கி நடந்தான்.

கதவு நீக்கலால் உள்ளே பார்த்தான்.

யோகு அன்ரியும் தவம் மாமாவும் கட்டிலில். அன்ரி சிவப்பாய் தம்பலப் பூச்சி மாதிரி.... சேலையெல்லாம் குலைந்தபடி... மாமா, கறுப்பா... தேகம் முழுவதும் ரோமம் அடர்ந்து... ஒரு பொட்டுத் துணிகூட இல்லாமல்....

'சீ... இந்த அன்ரிக்கும், மாமாவுக்கும் வெக்கமேயில்லை...'

உதட்டை அஷ்டகோணமாக்கியவன், அந்த அறையை அவர்களைஏறிட்டுப் பார்க்கக் கூடக் கூச்சப்பட்டவனாய், ஒருவகை அச்சத்துடன் வந்த வழியே மெதுவாகத் திரும்பி நடந்தான்.

........................................

இந்துச் சித்தி வீட்டில்தான் தயாவை மதுவால் சந்திக்க முடிந்தது.

மது விஷயத்தைச் சொன்னதும் பட்டாம் பூச்சியின் படபடப்பு தயாவின் கண்களில் தெரிந்தது.

 சித்தி வீட்டிலிருந்து அவனும் அவளும் - ஸ்ரீயைத் தேடிப் போனார்கள்.

 ஸ்ரீ முயல் கூட்டுக்குப் பக்கத்தில் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தான்.

 இவர்களைக் கண்டதும் வந்து சேர்ந்துகொண்டான்.

 மூவரும், கூடத்தில் - குளிர்ந்த சீமெந்துத் தரையில் உட்கார்ந்து கொண்டார்கள்.

 'புதிசா பாவாடை சட்டையிருந்தால் நல்லம்...' இது தயாவின் அபிப்பிராயம்.

 'நான் வேட்டிதான் கட்டுவன்' - ஸ்ரீ

 'முளைச்சு மூண்டிலை விடயில்லை... உமக்கு வேட்டியே வேணும்.... வேட்டி கட்டித் தத்துப் பித்தெண்டு நடந்தால் நல்ல வடிவாத்தானிருக்கும்... கழிசான்தான் போட வேண்டும்...'

தயாவின் தீர்மானமான பேச்சு மதுவினது வேட்டி ஆசையையும் கருக்கியது.

தயாவை அவர்களால் மீற முடியாது. ஆண்டு ஆறில் படிக்கும் அவளுக்கு: ஸ்ரீயும் மதுவும் சிறு பிள்ளைகள். அதனால் அவள் பேசுவதெல்லாம் அவர்களுக்கு வேதவாக்கு.

தயா தொடர்ந்து சொன்னாள்:

'காலையிலை ஏழு மணிக்கு முந்திப் போனால்தான் நல்லது... எட்டு மணிக்கு சாமி தேருக்கு வரும். தேர் வீதி உலா வரேக்கை நிக்க வேணும். சாமிக்குப் பச்சை சாத்தி தேரிலையிருந்து இறக்கி... வசந்த மண்டபத்திலை அபிஷேகம் செய்யிறதைப் பார்க்க வேணும்...'

'கடையள் பார்க்கிறேல்லையா..?'

ஆவலுடன் ஸ்ரீ கேட்டான்.

'பார்க்காமல்...! வீதி எல்லாம் ஒரு சுற்றுச்சுற்றி, ரபர் வளையல், காற்சங்கிலி, ஒட்டுப்பொட்டு எல்லாம் வாங்க வேணும்...'

'எனக்குத் துவக்கு வேணும்...'

மது தனது விருப்பத்தை வெளியிட்டான்.

ஸ்ரீ கூறினான்:

'எனக்கு கலர் கலரா இனிப்பு... பஞ்சு மிட்டாய்.... சூப்புத்தடி... காசு மிஞ்சினா ஒரு அம்மம்மாக் குழலும், விசிலும் வேணும்...'

'சரி... ஸ்ரீ உன்ரை உண்டியலைக் கொண்டுவா...!'

ஸ்ரீ ஓடிப்போய் உண்டியலை எடுத்து வந்தான். அதை உடைத்து எண்ணிப் பார்த்தார்கள். ஒன்பது ரூபாய் இருபத்திரெண்டு சதம் இருந்தது.

ரதி அக்கா தந்த ஐந்து ரூபாயை எடுத்து, மது தயாவிடம் கொடுத்தான்.

தயா, தனது வைப்புச் செப்பிலிருந்து ஆறு ரூபாயைச் சேர்த்துக் கொண்டாள்.

மூவரும் முறைவைத்து அப்பணத்தை மாறி மாறி எண்ணிப் பார்த்துக் கொண்டார்கள்.

இருபது ரூபாய் இருபத்திரெண்டு சதம் இருந்தது.

மதுவுக்கு அலுப்பாக இருந்தது. கொட்டாவி விட்டுக் கொண்டான். அம்மாவின் நினைவும் கூடவே வந்தது.

தயாவிடமும், ஸ்ரீயிடமும் விடை பெற்றவன், வீடு நோக்கி நடந்தான்.

........................................

மகா வித்தியாலயத்தைக் கடந்து, கிழக்கே திரும்பியதும் அம்மன் கோயில் தெரிந்தது. சனசந்தடியுடன் கோயில் 'ஜே ஜே' என்று இருந்தது.

'என்ன அள்ளு கொள்ளையாய்ச் சனம்...!' மாமா முணுமுணுத்துக் கொண்டார்.

அம்மன் கோயிலுக்குச் சற்று முன்பாக, மேற்குச் சாய்வில் ஒரு சிறு கோயில்.

'என்ன கோயிலிது, சின்னதா... வடிவா...?'

 'சும்மா பேசாமை வாடா... நச்சு நச்செண்டு...' மாமா பதில் தராமல் அதட்டினார்.

 மாமாவின் அதட்டல் அவனது ஆர்வத்தையும், குதூகலத்தையும் குலைத்தது.

 வாயடைத்துப் போன மதுவைப் பார்த்துத் தயா கூறினாள்.

 'வைரவர் கோயில்.. ஞான வைரவர்.... இஞ்சைதான் அம்மன் வேட்டைத் திருவிழாவுக்கு வாறவ...'

கண்கலங்கிய மது, நன்றியுடன் தயாவைப் பார்த்தான். மனசு கொஞ்சம் லேசானது மாதிரி இருந்தது அவனுக்கு.

வைரவர் கோயிலுக்குப் பக்கத்தில் தீர்த்தக் கேணி.

மாமாவும் தயாவும் கேணியில் இறங்கிக் கால் அலம்பினார்கள். ஸ்ரீயையும் மதுவையும் இறங்கவேண்டாம் என்று மாமா கண்டிப்புடன் கூறிவிட்டார்.

தயா கேணித் தண்ணீரைக் கைகளில் ஏந்தி வந்து இவர்களது கால்களில் தெளித்துவிட்டாள்.

ஆரம்பமே மதுவுக்கு எரிச்சலூட்டுவதாயிருந்தது. அடி வயிற்றிலிருந்து திரண்டு வந்த கசப்பை மிகுந்த சிரமத்துடன் விழுங்கிக் கொண்டான்.

கோயில் வீதியில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்ற தேர் மதுவின் கவனத்தை ஈர்த்தது. தயாவை இழுத்தபடி, தேர்ப்பக்கமாக நகர்ந்தான்.

சிவப்பும் வெள்ளையுமாய் துணிகளாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேர். காற்றசைவில் குலுங்கிச் சிலிர்க்கும் தேர்ச் சிறு மணிகள். தேரின் முன்பாகப் பாயும் நிலையிலுள்ள குதிரைகளின் லாவகம். எல்லாமே மதுவைத் தன் சுயமிழக்கச் செய்தன.

தேர்வரை சென்று ஒரு சுற்றுச்சுற்றி, அதை நெருக்கத்தில் பார்க்க அவனுக்கு ஆசையாயிருந்தது.

'உதென்ன விடுப்பு...' தேரிலை சாமிகூட வரேல்லை..' மீண்டும் மாமாவின் கண்டிப்பும் அதட்டலும்.

மதுவுக்கும் தயாவுக்கும் அது பிடிக்கவில்லை. அவர்களுக்கு கோபுர வாசலில் படியைத் தொட்டுக் கண்களிலொற்றி, நாலு தெரிந்த முகத்தைப் பார்த்துச் சிரித்து, அவர்களுடன் கொஞ்சலாய் ஒரு செல்லப் பேச்சுப் பேசி, சந்தோஷமாய் கோயில் உள்ளே போக வேண்டும் போலிருந்தது.

தெற்கு வீதிக்கு வந்தபோது ஸ்ரீ நட்ட கட்டையாய்க் கால் பாவி நின்றான். நின்றவன், தயாவை கைகளால் நிமிண்டி, மிட்டாய்க்கடைகளைக் கண்களால் சாடை காண்பித்தான்.

'எல்லாம் போகேக்கை பார்க்கலாம்... இப்ப பேசாமை வா...' விழிகளால் அதட்டிய தயா, இருவரையும் இழுத்தபடி அப்பாவின் பின்னால் போனாள்.

தெற்கு வாசலால் கோயிலினுள் நுழைந்த மாமா, முதல் வேலையாக, மூவரையும் தென்மேல் மூலையில் - பிள்ளையார் சந்நிதிக்கு இடப்பக்கமாக இருந்த வாகனசாலைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். வைத்தவர் 'அர்ச்சனை செய்திட்டு வாறன், பத்திரமாய் இருங்க பிள்ளையள்' என்று நகர்ந்தார்.

'இங்க வாகனங்களோடை வாகனமாய் நாம இருக்க வேண்டியதுதானா..?'

ஏக்கம் தயாவை அழுத்தியது.

மது கண்கலங்கி விம்மினான். அவனுக்குத் தொண்டை அடைத்திருக்க வேண்டும். பேச்சுத் தடைப்பட்டுத் தடுமாற, 'கெதியா வாருங்க மாமா...' சிணுங்கினான்.

மாமா எதிலுமே பட்டுக் கொள்ளாமல் வேகமாக நடந்து போனார்.

ஸ்ரீ மட்டும் எதுவித பாதிப்புக்கும் உட்படாதவனாய் எழுந்துபோய், வாகனங்களைத் தொட்டுத் தடவி, தப்பும் தவறுமாய் எண்ணி வந்து, 'எட்டு வாகனங்கள் அக்கா!' என்று தயாவுக்குக் கணக்குச் சொன்னான்.

மது, காராம் பசு வாகனத்தையே சிறிதுநேரம் வைத்த கண் வாங்காது வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.

பசுவின் உடல், தலை மட்டும் அழகான பெண் உருவம். முகத்தில் - நெற்றி நிறைந்த சிவந்த செந்தூரம். தடித்த சிவந்த உதடுகள், காலில் கழுத்தில், மூக்கில் எல்லாம் ஆபரணங்கள்.

மதுவுக்கு அப்பொழுது ஏனோ யோகு அன்ரியின் ஞாபகம் வந்தது. 'அன்ரி மாதிரி.... இந்தப் பசுவும் நல்ல வடிவு...'

அலையும் மனது நிதானமடைந்ததும் மீளவும் அவனுக்கு மாமாவின் நினைவுகள்.

'பெரியவனாய் வந்து இவரை... இந்த மாமாவை... நெஞ்சிலை ஏறியிருந்து... கழுத்தை நெரித்து... மூச்சுத் திணற...'

 குரூரமாய் அவனது காயப்பட்ட மனசு வன்மம் கொண்டது. மாமாவை ஏதோ ஒரு வகையில் தண்டிக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. எழுந்து, வாகனசாலையில் காராம்பசுவின் பக்கமாகப் போனவன், கழிசான் ஸிப்பை நீக்கிப் பசுவின் மேல் படும்படி 'ஒண்டுக்கு' இருந்தான்.

 தனது எதிர்ப்பை அவனால் இவ்வாறுதான் காண்பிக்க முடிந்தது. 'என்னடா இது... சரியான பாவம் கிடைக்கும்...' தயா சொன்னாள். 'ஒண்டுக்கு வந்தா என்ன செய்யேலும்...'

 மதுவின் பேச்சு தயாவை அதிர்ச்சியடைய வைத்தது. அவள் விக்கித்துப் போய் எதுவும் பேசாமலிருந்தாள்.

 ......................................

 மாமா அங்கு வந்தபொழுது தயாவின் மடியில் ஸ்ரீ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

மது விறைப்புடன் எழுந்து நின்று மாமாவைப் பார்த்துக்கேட்டான்.

'எனக்கு அம்மனைப் பார்க்க வேணும்... வசந்த மண்டபம், கொடிமரம்.... வீதி உலா வாறசாமி... எல்லாம் பார்க்கவேணும்...'

மதுவின் துணிவு மாமாவுக்கு அசாத்தியமாய்ப் பட்டிருக்க வேண்டும்.

அவனது தலையில் நறுக்கென ஒரு குட்டு வைத்தார்.

'உவர் பெரிய மீசை முளைச்ச கொம்பர். சனத்துக்கை போய் நெரியப் போறாராம்... வடுவா பேசாமல் வா... தேரிலை சாமி வந்திடும்... பாத்திட்டு வீட்டை போவம்...'

 தயாவுக்கு வாய் துருதுருத்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

 வீதிக்கு வந்ததும், ஒவ்வொருவர் கையிலும் ஒரு கடலைப் பொட்டலத்தை மாமா வாங்கி வைத்தார்.

 மாமாவின் பார்வை படாத வேளை பார்த்து பொட்டலத்தை மது தூர வீசி எறிந்தான்.

 இதனைக் கண்ட தயா திடுக்குற்றுப் பதட்டப்பட்டாள்.

 'மதுவுக்கு இண்டைக்கு என்ன வந்திட்டுது...? இது சரியான சின்ன ரௌடி... சின்ன ரௌடி'. என்று அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.

 அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு எதுவுமே வாங்கவில்லை. 'வாங்க முடியாமலே போய்விடுமோ...?' மூவரையும் ஏக்கம் வாட்டியது.

 மாமாவைக் கேட்பதற்கும் அவர்களுக்கு மனம் துணியவில்லை.

 கோபுர வாசலில் ஆரவார ஓசை, நாதஸ்வரத்திலிருந்து மல்லாரியின் தாழிதம்: காற்றுடன் கலந்து பரவிப் பரவசமூட்டியது.

 'சாமி வெளியாலை வருகுது போலை. கெதியா வாருங்க...' குழந்தைகளை மாமா துரிதப்படுத்தினார்.

 கோபுரவாசலுக்கு அருகாக அழைத்துச் செல்லாமல், தூரத்தில் வைத்தே அவர்களுக்கு மாமா சாமி காட்டினார்.

 தயா கை உயர்த்திக் கும்பிட்டாள். 'சாமி வடிவா இருக்கடா மது...' என்று குதூகலித்தாள்.

 மது எம்பி எம்பிப் பார்த்தான். சாமி தெரியவில்லை. மனித முதுகுகளும், தலைகளும்தான் அவனுக்குத் தெரிந்தன.

 ஸ்ரீயை மட்டும் மாமா தூக்கிக் காண்பித்தார்.

 மதுவுக்குத் துக்கமாக இருந்தது. வெடித்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டான்.

 'அதோ... அதுதான் தேர். அதிலை ஏறி இந்தச் சாமி இந்த வீதியாலை உலா வருவார். சாமியும் பாத்தாச்சு, தேரும் பாத்தாச்சு.... நாம இனி வீட்டை போவம்...'

 மாமாவின் சொல்லைத் தட்ட வலு இல்லாமல், அவரின் பின்னால் மூவரும் போனார்கள்.

 ரபர் வளையல், காற் சங்கிலி, ஒட்டுப்பொட்டு, துவக்கு, விசில், கலர் கலரா இனிப்பு, பஞ்சு மிட்டாய் எல்லாமே கனவுபோல அவர்களுக்கு ஆகிவிட்டது.

'அடுத்த வருஷம் அம்மாவோடைதான் வரவேணும்' என மது நினைத்துக்கொண்டான்.

தயா மச்சாளைப் பார்த்தான் மது. அவள் தலையில் காலையில் சூடிய பிச்சிப்பூ மாலை வாடியிருந்தது. கண்களில் நீர் முட்டி மோதிக்கொண்டிருந்தது.

ஸ்ரீ அக்காவின் கண்களைத் துடைத்து விட்டான். மது தயா மச்சாளின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.

மாமா தனது நீண்ட கால்களை எட்ட எட்ட வைத்து, அவர்களுக்கு முன்னால் வேகமாக நடந்து போனார். அவர் பின்னால், அவரது நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அந்தப் பிஞ்சுக் குழந்தைகளும் தளர்ந்து தடுமாறியபடி நடந்து போனார்கள்.

(1989)

 

No comments:

Post a Comment