Friday, 15 April 2022

உன் கடவுளிடம் போ

தெய்வீகன் எழுதிய `உன் கடவுளிடம் போ’ / தமிழினி பதிப்பகம் வாசிப்புக்குக் கிட்டியது. புத்தகத்தின் தலைப்பில் உள்ளே எந்தக் கதையும் இல்லை. புதிய களம் / தளத்தில் பயணிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. சில கதைகள் இதற்கு முன் அறிந்திராத பல சங்கதிகளைச் சொல்கின்றது.

தொகுப்பின் முதல் கதையான `அவனை எனக்குத் தெரியாது’ -, ஆயுதங்களிடமிருந்து விலகி ஓடுவதை விரும்பியிருந்தும், அதுவாகவே மீண்டும் ஒருவனிடம் சேருவதைச் சொல்கின்றது. ஒரு இடத்தில் ஆரம்பித்து, இன்னோர் இடத்தில் பயணித்து, இரண்டையும் இணைக்கும் கதை.

`இருள்களி’ கதை எமது போராட்ட நிகழ்வுகளை, முதலாம் உலகமகா யுத்தத்தின் போது துருக்கியின் கலிப்பொலியில் போரிட்ட அவுஸ்திரேலிய - நியூசிலாந்து வீரர்களின் நினைவுகளுடன் இணைகின்றது.

இலங்கையில் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று, எங்கெல்லாமோ சுற்றி, இந்தியா சென்று, அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதைச் சுவைபடச் சொல்லும் கதை `உறக்கமில்லாக் குருதி’.

`தராசு’ என்ற சிறுகதையை நான் ஒரு குறுநாவலாகவே பார்க்கின்றேன். மேலும் இந்தக் கதையைச் சொல்வதற்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்த நடை தோதாக அமையவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இறுதிக் கதைகளான `மார்ட்டினா’, `ஆழியாள்’ இரண்டும் அவுஸ்திரேலிய அபொறியினல்ஸ் மக்களுக்கு நேர்ந்த துயரங்களைச் சொல்லும் கதைகள். தெற்கு அவுஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் மாரலிங்கப் பகுதியில் பிரிட்டிஸ் படையினர் அணுகுண்டுப் பரிசோதனை நடத்தியபோது, அங்கு வசித்த ஆதிவாசி மக்களை உயிர்ப்பலி எடுத்த துயரக்கதை `மார்ட்டினா’. கூடவே அந்த நேரத்தில் குழந்தையாகவிருந்த மார்ட்டினாவின் தொடர் போராட்டம் பற்றிய கதை.

சற்றே பெரிய பத்துக் கதைகள் கொண்ட இத்தொகுதியில் - `அவனை எனக்குத் தெரியாது’, `புலரியில் மறைந்த மஞ்சள் கடல்’ எனக்கு மிகவும் பிடித்தவை. `மார்ட்டினா’, `ஆழியாள்’ இரண்டும் என்னைத் திடுக்கிட வைத்த கதைகள். கதைகளினூடாக வரும் ஊடும் பாவும் போன்ற வர்ணனைகள் வியப்பில் ஆழ்த்துபவை. சற்றே சிந்திக்க வைப்பவை. புத்தகத்தின் தலைப்பு - ஒவ்வொரு இன மக்களும் தத்தமக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு அவரவர் கடவுளிடம் போய் நியாயம் கேளுங்கள் என்கின்றதா? பாவம் கடவுள் என்ன செய்வார்!

பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் சிறுகதைப் போட்டி முடிவுகள்

 




Tuesday, 5 April 2022

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்

இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை (ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, மான்ஹோல், பொந்துப்பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!, சுமணதாஸ் பாஸ்….) ஏற்கனவே வாசித்துவிட்டேன். இருப்பினும் தொகுப்பாக ஒருங்கு சேர்ந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

`மனைவி’ , `கணவன்’, `யன்னல்’ போன்ற கதைகளின் ஆரம்பப்பகுதிகளின் அழகிய வர்ணனைகளை மிகவும் இரசித்தேன். மனைவி சிறுகதை ஒரு தீர்க்கமான முடிவை எட்டாத போதிலும், கணவன் சிறுகதை மன நிறைவைத் தருகின்றது. மனைவி மீது சந்தேகம் கொள்ளும் கணவன், திடீரென்று மனம் மாறுவது வியப்பைத் தருகின்றது. ஆனாலும் நல்லதொரு முடிவைச் சொல்லியிருக்கின்றார் ஆசிரியர் வ.ந.கிரிதரன்.

`மனித மூலம்’ சற்றே பொறுமையைச் சோதிக்க வைக்கின்றது. இந்தக் கதை மூலம் என்னத்தைச் சொல்ல வருகின்றீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. `மான்ஹோல்’ அற்புதமான கதை. மூன்று அகதிகளின் சங்கமம் என்று சொல்லலாம். மான்ஹோலில் மீது குடியிருக்கும் சாமியார் அனாதைப்பிண்மாக இறக்கும் தறுவாயில், `ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் இருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கின்றார்கள்’ என அவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. `சுண்டெலி’ சற்றே நகைச்சுவைப் பாங்கானதாகவும், வலிந்து முடிவைத் திணிக்காமல், கதையின் போக்கிலேயே முடிவை விட்டுவிடுவதும் சிறப்பு. `பொந்துப் பறவை’ சிறுகதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது. தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை எடை போட முடியாது என்பதைச் சொல்கின்றது. அதுவும் அந்த `எடை போடுதல்’ தவறானது என்பதை சுயநலத்தின்பால் கதையின் நாயகன் கண்டுகொள்ளும்போது வெட்கம் கொள்வதும் காட்டப்படுகின்றது.

புகலிட அனுபவச் சிறுகதைத் தொகுப்பான இத்தொகுதியில் அனேகமாகப் பல நாட்டவர்களும்---அமெரிக்கர், ஆப்பிரிக்கர், சீனர், யமேக்கர்---என வந்து போகின்றார்கள். அவர்கள் தமது இயல்பான தோற்றத்தில், தத்தமக்குரிய குணாதிசயங்களுடன் வந்து போகின்றார்கள். அத்துடன் அவர்களின் கலாச்சார பண்புகளையும் வாழ்வியலையும் தரிசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

`கூட்டில் அடைத்து வைக்கப்பட்ட மிருகங்கள் எவ்விதம் இயற்கைக்கு மாறாகத் தமது நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றனவோ, அவ்விதமே காங்கிரீட் கூடுகளிற்குள் அடைத்து வைக்கப்பட்ட நகரத்து மனிதரும் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர்’ என்றொரு சொற்தொடர் `கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ சிறுகதையில் வருகின்றது. அனேகமான கதைகளில் நகரப்புற மாந்தர்களின் வாழ்வும் அவர்களின் நடத்தைகளும் சித்திரிக்கப்படுவதால், தொகுப்பிற்கு கதையில் வரும் `கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ என்ற சிறுகதையின் தலைப்பையே வைத்திருப்பதாகத் தெரிகின்றது.

தாங்கள் எழுதிய குறுநாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது, ஞானம் சஞ்சிகையில் வந்த `சுமணதாச பாஸ்!’. வன்னி மண்ணின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு நாவல் முழுவதும் செறிந்து கிடக்கின்றது. நான் புலம்பெயர்வதற்கு முன்னர், இரண்டு மூன்று வருடங்கள் வவனியாவின் அதே நிலத்தில் வாழ்ந்திருக்கின்றேன். இந்தக் காட்சிகளையெல்லாம் தரிசித்திருக்கின்றேன். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துப் புனையப்பட்ட இக்குறுநாவல், இந்தப் பிரபஞ்சம் புதிர் நிறைந்தது என்பதை அழகாகச் சொல்கின்றது.

புகலிட அனுபவங்களைச் சிறுகதைகளாக வடித்து, எல்லோரினதும் சுவைப்பிற்காகவும் தந்திருக்கின்றார் ஆசிரியர் வ.ந.கிரிதரன்.