இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை (ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, மான்ஹோல், பொந்துப்பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!, சுமணதாஸ் பாஸ்….) ஏற்கனவே வாசித்துவிட்டேன். இருப்பினும் தொகுப்பாக ஒருங்கு சேர்ந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
`மனைவி’ , `கணவன்’, `யன்னல்’ போன்ற கதைகளின் ஆரம்பப்பகுதிகளின்
அழகிய வர்ணனைகளை மிகவும் இரசித்தேன். மனைவி சிறுகதை ஒரு தீர்க்கமான முடிவை எட்டாத போதிலும்,
கணவன் சிறுகதை மன நிறைவைத் தருகின்றது. மனைவி மீது சந்தேகம் கொள்ளும் கணவன், திடீரென்று
மனம் மாறுவது வியப்பைத் தருகின்றது. ஆனாலும் நல்லதொரு முடிவைச் சொல்லியிருக்கின்றார் ஆசிரியர் வ.ந.கிரிதரன்.
`மனித மூலம்’ சற்றே பொறுமையைச் சோதிக்க வைக்கின்றது. இந்தக்
கதை மூலம் என்னத்தைச் சொல்ல வருகின்றீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
`மான்ஹோல்’ அற்புதமான கதை. மூன்று அகதிகளின் சங்கமம் என்று சொல்லலாம். மான்ஹோலில் மீது
குடியிருக்கும் சாமியார் அனாதைப்பிண்மாக இறக்கும் தறுவாயில், `ஒன்றாரியோ பாராளுமன்றத்தில்
இருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கின்றார்கள்’ என அவர் சொன்ன வார்த்தைகள்
நினைவுக்கு வந்தது. `சுண்டெலி’ சற்றே நகைச்சுவைப் பாங்கானதாகவும், வலிந்து முடிவைத்
திணிக்காமல், கதையின் போக்கிலேயே முடிவை விட்டுவிடுவதும் சிறப்பு. `பொந்துப் பறவை’
சிறுகதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது. தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை எடை
போட முடியாது என்பதைச் சொல்கின்றது. அதுவும் அந்த `எடை போடுதல்’ தவறானது என்பதை சுயநலத்தின்பால்
கதையின் நாயகன் கண்டுகொள்ளும்போது வெட்கம் கொள்வதும் காட்டப்படுகின்றது.
புகலிட அனுபவச் சிறுகதைத் தொகுப்பான இத்தொகுதியில் அனேகமாகப்
பல நாட்டவர்களும்---அமெரிக்கர், ஆப்பிரிக்கர், சீனர், யமேக்கர்---என வந்து போகின்றார்கள்.
அவர்கள் தமது இயல்பான தோற்றத்தில், தத்தமக்குரிய குணாதிசயங்களுடன் வந்து போகின்றார்கள்.
அத்துடன் அவர்களின் கலாச்சார பண்புகளையும் வாழ்வியலையும் தரிசிக்கக்கூடியதாக இருக்கின்றது.
`கூட்டில் அடைத்து வைக்கப்பட்ட மிருகங்கள் எவ்விதம் இயற்கைக்கு
மாறாகத் தமது நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றனவோ, அவ்விதமே காங்கிரீட் கூடுகளிற்குள் அடைத்து
வைக்கப்பட்ட நகரத்து மனிதரும் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர்’ என்றொரு சொற்தொடர்
`கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ சிறுகதையில் வருகின்றது. அனேகமான கதைகளில் நகரப்புற மாந்தர்களின்
வாழ்வும் அவர்களின் நடத்தைகளும் சித்திரிக்கப்படுவதால், தொகுப்பிற்கு கதையில் வரும்
`கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ என்ற சிறுகதையின் தலைப்பையே வைத்திருப்பதாகத் தெரிகின்றது.
தாங்கள் எழுதிய குறுநாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது,
ஞானம் சஞ்சிகையில் வந்த `சுமணதாச பாஸ்!’. வன்னி மண்ணின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு
நாவல் முழுவதும் செறிந்து கிடக்கின்றது. நான் புலம்பெயர்வதற்கு முன்னர், இரண்டு மூன்று
வருடங்கள் வவனியாவின் அதே நிலத்தில் வாழ்ந்திருக்கின்றேன். இந்தக் காட்சிகளையெல்லாம்
தரிசித்திருக்கின்றேன். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துப் புனையப்பட்ட இக்குறுநாவல்,
இந்தப் பிரபஞ்சம் புதிர் நிறைந்தது என்பதை அழகாகச் சொல்கின்றது.
புகலிட அனுபவங்களைச் சிறுகதைகளாக வடித்து, எல்லோரினதும் சுவைப்பிற்காகவும் தந்திருக்கின்றார் ஆசிரியர் வ.ந.கிரிதரன்.
No comments:
Post a Comment