Monday, 18 July 2022

அவள் ஒரு பூங்கொத்து


தேவகி கருணாகரனின் சிறுகதைகளை முன்பு வாசித்திருந்தாலும், `அவள் ஒரு பூங்கொத்து’ என்ற தொகுப்பாக வந்தபோது மீண்டும் ஒரு தடவை வாசித்தேன். இங்கே இவர் பெண்களைப் பூவுக்கு ஒப்பிடாமல், பூங்கொத்திற்கு உயர்த்தி வைக்கின்றார். கதைகள் முழுவதும்  பெண்மையைப் போற்றுகின்றார். அதற்காக இவர் ஆண்களைக் குறைத்து மதிப்பிடுகின்றார் என்று அர்த்தமல்ல. `என்றும் என்னவள்’ கதையைப் படித்துப் பார்த்தால் அதுவும் புரிந்துவிடும். தன்னிடம் விவாகரத்து எடுத்த மனைவிக்காக, இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்து திரும்பவும் ஒன்றுசேரும் ஒரு ஆணின் கதை `என்றும் என்னவள்’. இந்தக் கதையில் சோமசுந்தரம் என்ற பாத்திரத்தை எட்டாத உயரத்தில் வைத்து அழகு பார்க்கின்றார் கதாசிரியர்.

ஆண் பெண் உறவுகள் மகத்தானவை எனக் கூறும் இவர் கதைகள், வாழ்வின் படிநிலைகளுக்கு மிகவும் அணுக்கமாகவே இருப்பதைக் காணலாம்.

இவரது கதைகளில் வரும் சில வார்த்தைப் பிரயோகங்கள் முழுக்கதையின் வீச்சையும் ஒருங்கே சுட்டி நிற்பதைக் காணலாம். `மன்னிப்பு’ என்ற சிறுகதையில் வரும் - `எமிலி தன் பொன்னிறமான முடித்தலையை, நேத்தனின் கறுத்த முடித்தலையோடு சாய்த்து அவனை அணைத்தபடி…’ போன்றவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும். தொகுப்பின் முதல் கதையும் இதுவே!. அவுஸ்திரேலிய வெள்ளையினத் தம்பதிகளால் எடுத்து வளர்க்கப்படும் நேத்தன் என்பவன் தனது பூர்வீகத்தைத் தேடும் கதை இது. `தோலின் நிறத்தில் அவன் சிறீலங்கன், ஆனால் சிந்தனை பண்பாடு எல்லாமே அவுஸ்திரேலியன்’ – ஒரு இனத்தைச் சேர்ந்த ஒருவர் இன்னொரு இனத்தவரால் வளர்க்கப்படும்போது எல்லாமே மாறிவிடும்போதும், மனிதம் இங்கே மாறவில்லை என்பதைக் கதை சிறப்பாகச் சொல்கின்றது. கதையில் சிறீலங்கா இராணுவத்தினரின் அட்டூழியங்கள், வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள் தொட்டுக் காட்டப்பட்டுள்ளமை சிறப்பு. பாத்திர வார்ப்பு, களம் என்பவை சிறப்புற வந்திருக்கும் இந்தக்கதையின் இறுதிப்பகுதி மிகவும் விறுவிறுப்பாகச் செல்கின்றது. வாசித்து முடித்த பின்னரும் மனதில் ஒரு நெகிழ்ச்சியைத் தருகின்றது.

சிட்னியில் தன்னுடன் ஒன்றாகப் படிக்கும் மெடிக்கா என்ற பெண்ணை, இலங்கையைச் சேர்ந்த மாதவன் விரும்புகின்றான். `மெடிக்கா’ என்றால் அவளது மொழியில் பூங்கொத்து. அந்தப் பூங்கொத்தின் பெற்றோரைச் சந்தித்து, சம்மதம் பெற `பேர்த்’ என்ற நகரம் நோக்கி இருவரும் செல்கின்றார்கள். போகும் வழியில் மெடிக்கா கலப்பின ஆதிவாசிப்பெண் என்று தெரிந்து கொள்கின்றான் மாதவன். மெடிக்காவின் பெற்றோரிடம் சம்மதத்தைப் பெற்றுக்கொண்ட மாதவன், தன்னுடைய பெற்றோரிடம் சம்மதம் பெற முடியாமல் தவிக்கின்றான். சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் `அவள் ஒரு பூங்கொத்து’ என்ற கதை முடிகின்றது. கதையில் வரும் இன்னொரு முக்கிய பாத்திரம் மெடிக்காவின் கிரான்பா. பேர்த்தில் சந்திக்கும் கிரான்பாவின் மூலம் ஆதிவாசிகளுக்கு நேர்ந்த கொடுமைகள் கதையில் சொல்லப்படுகின்றது.

ஒரே இனம் மொழியைக் கொண்டவர்கள் கூட, வெவ்வேறு இடம் சூழ்நிலைகளில் வளரும்போது ஒவ்வாதவர்களாக ஆகிவிடுகின்றார்கள். அதே நேரம் வெவ்வேறு இனம் மொழியைக் கொண்டவர்கள் சந்தர்ப்பவசத்தால் இணைந்துவிடுவதும் உண்டு. `காலத்தால் கரையாத நினைவுகள்’ சிறுகதையில் வரும் நிவேதாவுக்கும் கார்த்திக்குக்கும் இடையே நடப்பதும் ; நிவேதாவுக்கும் கிரனுக்கும் இடையே நடப்பதும் இதுதான்.

`திண்டாடும் பண்பாடு’ சிறுகதையில் முதியோர் பிரச்சினை அலசப்படுகின்றது. வேலை, பிள்ளைகளின் படிப்பு என்பவற்றுடன் முதியவர்களான பெற்றோரை வீட்டில் வைத்து பராமரிக்கமுடியாத சூழ்நிலை. முதியோர் இல்லத்திற்கு பெற்றோரை அனுப்புவது பற்றி – புலம்பெயர் நாடுகளில் சாதக பாதகமான கருத்துகள் நிலவுகின்றன. எந்தவொரு பெற்றோரும் விருப்பப்பட்டு முதியோர் இல்லம் செல்வதில்லை என்ற கருத்துத்தான் பரவலாக இருந்து வருகின்றது. இந்தக் கதையில் பூரணம் என்பவர் தனது சுய விருப்பின் பேரில் முதியோர் இல்லம் வந்திருக்கின்றார். அவருக்கும் பலவந்தமாக முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்ட வினோதினி என்பவருக்குமிடையேயான உரையாடல் தான் கதையின் பெரும்பகுதியாகச் சொல்லப்படுகின்றது.

`இருதலைக் கொள்ளி எறும்பு’, `நாடோடிகள்’ கதைகள் நைஜீரிய நாட்டின் அரசியல், அங்குள்ள மக்களின் கலாசாரம் பண்பாடு, வாழ்வு அனுபவங்கள் பிரதிபலிக்கின்றன. `சிந்தாமணியின் நினைவுகள்’ என்ற கதை, சிறுகதை வடிவத்தைத் தாண்டி விவரணப்பாங்கில் சென்றாலும் எம்மை பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்கின்றது. அறிவியல் புனைகதைப் பிரியர்களுக்கு `வானமே எல்லை’ காத்துக் கிடக்கின்றது.

பல அறிவியல் விடயங்கள்  பொதிந்து கிடக்கும் இவரின் கதைகளை வெறுமனே வாசித்துவிட்டுக் கடந்து போய்விட முடியாது. செயற்கைத் தன்மையற்ற, என்றும் மனதில் நிழலாடும் பாத்திரங்களைக் கொண்ட படைப்புகள் அவை. வலிந்து புரட்சிகரக் கருத்துக்களைத் திணிக்காமல், ஆற்றொழுக்கு நடையில் வாழ்க்கையின் இயல்பு நிலையைப் படம் பிடிப்பவை.

`சிந்தன் புக்ஸ்’ பதிப்பகமாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம், வழமையான தமிழ்ப்புத்தகங்களின் அட்டைப்படங்களிலிருந்தும் விலகி, ஆங்கிலப்புத்தகத்திற்கு நிகராக இருப்பதைக் காணலாம்.

தாயகத்தில் நீண்டகாலப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகள், முதியோர் பிரச்சினை, அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் வரலாறு, போதைப்பொருள் பாவனை, அறிவியல் எனப் பல விடயங்களை இவரது சிறுகதைகள் பேசுகின்றன. ஒரு பூங்கொத்தில் பலவிதமான மலர்கள் அழகழகாக இருந்துகொண்டு வாசனை பரப்புவது போல, தேவகி கருணாகரனின் `இந்தப் பூங்கொத்து’ம் வாசகர் உள்ளங்களில் மணம் பரப்பும், மனங்களைக் குணப்படுத்தும். மென்மேலும் படைப்புகள் தந்திட தேவகி கருணாகரனுக்கு எமது வாழ்த்துகள்.

No comments:

Post a Comment