தொகுப்பின் முதல் கதை `சதிவிரதன்’. அறிவியல் சார்ந்த வித்தியாசமான படைப்பு. பல காரணங்களை முன்னிட்டு, உறைபனிக்காலங்களில் மனிதர்களை தொடர்ச்சியாக நான்குமாதங்கள் தூங்க வைக்கும் `உறங்குநிலைத்திட்டம்’ ஒன்றை பேராசிரியர் ராம், தன் உதவியாளர்களான மைக்கல், யூலி என்பவர்களுடன் சேர்ந்து முன்வைக்கின்றார். கதையின் முன்பகுதி அறிவியல் சார்ந்து பல விடயங்களை அலசி ஆராய்கின்றது. அறிவியலின் தாக்கம் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளைப் பின்பகுதி சொல்கின்றது. அல்லது கதையின் தலைப்பான `சதிவிரதனு’க்கானது. பேராசிரியர் கண்டுபிடித்த அறிவியல் அவருக்கே வினையாகின்றது. விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக, தன் உதவியாளர் யூலியின் மீது விழுந்துவிடுகின்றார். குரு அரவிந்தனின் கற்பனைக்கு ஒரு சபாஷ்.
இயற்கையோடு மழை குளிருக்கு
இணைந்து பழக்கப்பட்ட விலங்கினங்கள், பறவையினங்கள் உறங்குநிலைக்குப் (Hibernating) போவதற்கும்
– மனிதர்களுக்கு ஊசியைப் போட்டு செயற்கையாக உறங்குநிலைக்குப் போக வைப்பதற்கும் நிறையவே
வேறுபாடுகள் உண்டு. மனிதர்களை தொடர்ச்சியாக தூங்க வைப்பதன் மூலம் எதனைச் சாதிக்கலாம்?
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! உறங்குவதற்கு அல்லவே! பேராசிரியர் உறங்குநிலைத்திட்டத்தை
விடுத்து குளிரிலும் உறைபனியிலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவாக ஏதாவது மருந்தைக் கண்டுபிடிக்க
முயற்சித்திருக்கலாம் என்பது எனது கருத்து.
தொகுப்பின் அடுத்த சிறுகதை
`புல்லுக்கு இறைத்த நீர்’. ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்கள் எல்லோரையும் ஞாபகத்தில்
வைத்திருப்பதில்லை. இங்கே ஆசிரியர், மாணவன் ஒருவரை அடையாளம் கண்டுகொள்கின்றார். படிக்கும்
காலத்தில் அவன் `அப்பிடி’ இருந்திருக்கின்றான். அவனுக்குப் படிப்பும் ஏறவில்லை, வாழ்க்கையும்
சரிவர அமையவில்லை. ஆனால் மாணவனுக்கோ ஆசிரியரை நினைவில் இல்லை. இருவருக்குமிடையே சுவாரஸ்யமாகச்
செல்லும் உரையாடலின் முடிவில் ஒரு திருப்பம். கதையின் முடிவு இப்படி அமையும் என நான்
நினைத்துப் பார்க்கவில்லை. விழலுக்கு இறைத்த நீர் தான்.
நடேசு என்பவன் சிறைச்சாலையில்
இருந்து விடுதலையாகின்றான். 22 வருடங்களுக்கு முன்னர், ஊரடங்கு நேரத்தில் குழந்தைக்குப்
பால்மா வாங்கச் சென்றவிடத்தில் இராணுவத்திடம் பிடிபட்டுக்கொள்கின்றான். செய்யாத குற்றத்திற்காக
நரகவேதனைப்பட்டு வெளியே வந்தபோது எல்லாமே மாறியிருந்தன. மனைவி இறந்துவிட்டாள். குழந்தை
பெரியவளாகி, திருமணம் செய்து ஒரு பையனுக்கும் தாயாகிவிட்டாள். அவளின் கணவன் தொலைந்து
போய்விட்டான். தனது கையறு நிலையில் சுமையாகத் தெரியும் தந்தையை ஏற்றுக்கொள்ள அவள் மனம்
மறுக்கிறது. இது `சுமை’ சிறுகதை.
ஹரம்பி – மிருகக்காட்சிச்சாலையில்
தவறி விழுந்த சிறுவன் ஒருவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் `ஹரம்பி’ என்ற கொரில்லாவைப்
பற்றிய கதை. மனிதரின் பார்வையிலிருந்து விடுபட்டு, கொரில்லாவின் சிந்தனையில் விரிகின்றது
இச்சிறுகதை.
ரியாட்டில் அன்னியப் பெண்களைக்
காரில் ஏற்றிச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். கதைசொல்பவர் ஒருநாள் காரில் சென்று
கொண்டிருக்கும்போது ஒரு நிறைமாதக் கர்ப்பிணி காரை மறிக்கின்றாள். மனிதாபிமானம் விடவில்லை.
அவளைக் காரில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கூட்டிச் செல்கின்றார். வைத்தியசாலையில் அவளுக்குக்
குழந்தை பிறக்கின்றது. ஆனால் தாய் இறந்து விடுகின்றாள். பிரச்சினை உருவாகின்றது. குழந்தைக்குத்
தகப்பன் யார்? தன்னைக் காரில் கூட்டிவந்தவரே கணவன் என இறக்கும் தறுவாயில் அந்தப் பெண்
சொன்னதாக தாதி சொல்கின்றாள். கோர்ட்டில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம்---டி.என்.ஏ பரிசோதனை---கதைசொல்லி
தந்தை இல்லை என உறுதியாகின்றது. கூடவே புதிய தலையிடி. கதைசொல்லியினால் தன் வாழ்நாளில்
தந்தையாவற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவப் பரிசோதனை அறிக்கை சொல்வதாக நீதிபதி
சொல்கின்றார். அப்படியானால் கதைசொல்லி பெற்றெடுத்த பெண்குழந்தை பிரியாவிற்கு தந்தை
யார்? அதிர்ச்சி அவருக்கு மாத்திரம் இல்லை, எங்களுக்கும் தான். `ஓ.ஹென்றி’ பாணியில்
அமைந்துள்ள கதை `யார் குழந்தை?’ சிறுகதை.
`அட மானிடா நலமா?’ வித்தியாசமான
கற்பனை. நாம் வளர்ப்பு மிருகங்களை நடத்தும் விதத்திற்கு எதிர்மாறான கருவைக் கொண்டது.
மிருகங்கள் கையில் அகப்பட்டுக் கொள்ளும் மனிதர்களைப் பற்றிய கதை. ஆனால் நமது பூமியில்
இது நடப்பதற்கு அவ்வளவு சாத்தியமில்லை எனலாம். `சிந்து மனவெளி’ சிறுகதை `சந்து சமவெளி’
சினிமாவின் தாக்கத்தில் எழுந்த கதை. மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அவை களைந்து
எறியப்படவேண்டும் என்பதைச் சொல்லும் கதை`செளப்படி’. பெண்களைப்பற்றி பெண்களே சொல்லத்
தயங்கும் கதை இது.
மணிமேகலைப் பிரசுரமாக 2019 ஆம் ஆண்டில் வந்திருக்கும் குரு
அரவிந்தனின் `சதிவிரதன்’ சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் 17 கதைகள் இருக்கின்றன. தொகுப்பின்
பெயர் உருவான விதம் பற்றி, குரு அரவிந்தன் தனதுரையில்: `பாவனையில் இல்லாத இந்தச் சொல்லை
நானே கண்டுபிடித்தேன். `பதிவிரதையின்’ ஆண்பால்சொல் என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது
`சதிவிரதனை’ உருவாக்கிக் கொண்டேன்’ என்கின்றார். குரு அரவிந்தனின் பெரும்பாலான கதைகளில்
அறிவியலும் உளவியலும் கலந்து இருப்பதைக் காணலாம். தமிழில் தற்போது பாவனையில் இல்லாத
`செளப்படி’, `வித்தாரம்’ போன்ற சொற்களைக் கதைத் தலைப்புகளாக்கி மீண்டும் உலவ விட்டிருக்கின்றார்.
இத்தொகுப்பில் உள்ள அனேக கதைகளின் முடிவுகள் வாசகரைக் கவரும் `ஓ.ஹென்றி’ பாணியில் அமைந்தவை.
கணக்காளர், ரொறன்ரோ கல்விச்சபை
ஆசிரியர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் எனப் பன்முகங்கள் கொண்ட குரு.அரவிந்தனின்
இந்தக் கதைகள் - ஆனந்தவிகடன், கணையாழி, இனிய நந்தவனம், உதயன், தாய்வீடு, உயிர்நிழல்,
கூர்கனடா என்பவற்றில் ஏற்கனவே வெளியானவை.
சமுதாயத்திற்கு ஒரு சிறுகதை
என்னத்தைச் சொல்ல வருகின்றது என்பதிலேதான் ஒரு சிறுகதையின் வெற்றி அடங்கியிருக்கின்றது.
நல்ல செய்திகளைச் சொல்வதிலும், சிந்தனையை வளர்ப்பதிலும் குரு.அரவிந்தனின் சிறுகதைகள்
முன் நிற்கின்றன.
No comments:
Post a Comment