`சின்னான்’ வாழ்வில் என்றும் `பெரியான்’
`சின்னான்’ குறுநாவலின் ஆசிரியரான சண்முகம்
சந்திரன் வாசகர்களுக்குப் புதியவரல்லர். ஏற்கனவே ஞானம் பதிப்பக வெளியீடான `ஆத்மாவைத்
தொலைத்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பின் மூலம் நன்கு அறியப்பட்டவர். அனுபவம் மிக்க இவரின்
எழுத்துகள் மனிதநேயம் கொண்டவை. நல்ல கவிஞரும் கூட. இவரது இந்த குறுநாவலில் கூட ஆத்மாவைத்
தொலைத்த பலரைத் தரிசிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள ஏழு
தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் கதை நிகழுகின்றது. நெடுந்தீவிற்கு வழங்கப்படும் பெயர்களில்
பசுத்தீவும் ஒன்று. அதன் வழியாக நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரன் தனது புனைபெயரை
`ஆவூரான்’ என வைத்துக் கொண்டார்.
விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் இக்குறுநாவல் ஏதோ ஒரு மர்மதேசத்திற்குள் நுழைவதைப் போன்ற பிரம்மையுடன் எம்மை அழைத்துச் செல்கின்றது. கதையின் பின்புலமாக ---மாவிலி துறைமுகம், சாறாப்பிட்டி, ஒல்லாந்த கோட்டை, வெடியரசன் கோட்டை, குவிந்தாக் கோபுரம், நெழுவினிப்பிள்ளையார், முருகன் கோவில், கடற்கரை--- என நெடுந்தீவின் அழகான காட்சிகளை ஆசிரியர் காட்சிப் படுத்தியிருக்கின்றார்.