Monday 1 May 2023

வாட்சப் நண்பர்

 
`முதுமை எய்துவது குற்றமா?’ என்ற புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழ்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முதியோர் தொடர்பான புத்தகம் என்பதால், தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்திலிருந்து முதியவர்கள் பலர் வர விரும்புவதாக அறிவித்திருந்தார்கள்.

“உங்கள் வாட்சப் நண்பருக்குச் சொல்லிவிட்டீர்களா?” மனைவி ஞாபகப்படுத்தினார்.

“இந்தத் தடவை அவருக்குத்தான் முதல் அழைப்பிதழ் அனுப்பியிருக்கின்றேன். ஆவலோடு விழாவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொன்னார்.” என்றேன் நான்.

கதிர்காமநாதன் எனது சமீபத்திய வாட்சப் நண்பர். மாலை வேளைகளில் எனது பாதி நேரத்தை அவர் விழுங்கிவிடுவதாக மனைவி முறைப்பாடும் செய்வார்.

தினமும் மாலை வேளைகளில் குறைந்தது ஒரு தடவையாவது கதைத்து விடுவார். பெரும்பாலும் எமது உரையாடல் இலக்கியம் சம்பந்தமாகவே இருக்கும். இவ்வளவு விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றாரே என வியக்க வைக்கும் கணீரென்ற காந்தக்குரல். தொடர்ந்து எவ்வளவு நேரமும் பேசிக் கொண்டே இருக்கலாம்.

ஸ்ரைல் கண்ணாடி அணிந்து, கன்னக்கிராதி குறுந்தாடியுடன் புன்னகை தரும் வாட்சப் ப்ரொபைல் படம், குறைந்தது என்னைவிட பத்து வயதுகளாவது குறைவாகவே இருப்பார் என்று சொல்கின்றது. அடிக்கடி ப்ரொபைல் படத்தை மாற்றிக் கொள்வார். எல்லாமே இளமை ததும்பும் படங்கள். இருவருமே விரைவில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளப்போகின்றோம்.

புத்தக வெளியீட்டுவிழா பெருந்திரளான பார்வையாளர்கள் மத்தியில் இனிதாக நடந்து முடிந்தது. மூத்த பிரசைகள் அமைப்பிலிருந்து, வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்து முப்பது பேர்கள் மட்டில் வந்திருந்தார்கள். அவர்களது அமைப்பில் சில தடவைகள் நான் பேசி இருக்கின்றேன். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் காணப்பட்டார்கள். ஒவ்வொருத்தருக்கும் புத்தகத்தில் கையொப்பமிட்டுக் குடுத்தேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.

“எப்படி இருக்கின்றீர்கள்?”

“நாங்கள் நல்ல சுகமாக இருக்கின்றோம்.” தள்ளாத வயதிலும் நேர்மறையாகப் பதில் சொன்னார்கள்.

“உங்கள் வாட்ஸ் அப் நண்பர் வரவில்லையே!” என விழா முடிந்த நேரத்திலிருந்து மனைவி சீண்டியபடி இருந்தார்.

“நேற்றுக்கூட உங்கள் நண்பர் வாட்ஸ் அப் செய்யவில்லையே!”

“ஏதாவது சுகமில்லாமல் இருக்கலாம்.” சமாதானம் சொன்னேன்.

“விட்டுக் குடுக்க மாட்டீர்களே!”

மூன்றாம் நாள் - விழாவிற்கு வந்தவர்களிடமும் வராதவர்களிடமும் தொலைபேசி மூலம் உரையாட நினைத்தேன். `வாட்சப் நண்பருடன் ஆரம்பிக்கலாம்’ என நினைத்து கதிர்காமநாதனுடன் தொடர்பு கொண்டேன்.

“எப்படி இருக்கின்றீர்கள் கதிர்காமநாதன்?”

“நன்றாக இருக்கின்றேன். நேற்றே உங்களுடன் பேசலாம் என்றிருந்தேன். ஆனால் நீங்கள் மிகவும் களைத்துப் போய் இருப்பீர்கள் என நினைத்து இரண்டு நாட்கள் கழித்து எடுக்கலாம் என்று இருந்தேன்.”

“ஏன் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு வரவில்லை? உங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தேன்.”

மறுமுனையில் சிறிது நேரம் சத்தமில்லை. பேசுவதற்கு தயங்குவது போல் இருந்தது.

“வந்திருந்தேனே! புத்தகத்தில் கையொப்பமும் வாங்கி, உங்களுடன் புகைப்படமும் எடுத்தேனே!”

இந்தத்தடவை எனது பக்கத்தில் மெளனம். நிலைமையைச் சுமுகமாக்கி உண்மையை அறிய உரையாடலைத் திசை திருப்பினேன்.

“உங்கள் அலுமாரியில் நிறையப் புத்தகங்கள் வைத்திருப்பதாக முன்பொருநாள் சொன்னீர்கள் அல்லவா? அதை ஒருதடவை பார்க்கலாமா?”

“பொறுங்கள் ரெலிபோனில் உள்ள கமராவை ஆன் செய்து கொண்டு வீடியோக் கோலில் வருகின்றேன்.”

நண்பர் எனது மனநிலையைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டார். இருவரும் ரெலிபோனில் உள்ள கமராக்களை முடுக்கிவிட்டோம்.

கன்னக்கிராதி குறுந்தாடி இருந்த இடங்களிலெல்லாம் சுருக்கங்கள் கூடுகட்டி, உட்குழிந்த கண்களுடன் நரை கூடிக் கிழப்பருவமெய்தும் தோற்றத்தில் கதிர்காமநாதன் இருந்தார். சிரித்தபோது பல பற்கள் ஓடி ஒளித்துக்கொண்டன. ஆச்சரியம் என் உச்சந்தலையில் அடிக்க, அடித்த இடத்தில் ஒரு சுற்றுச் சுற்றியது.

“தயவு செய்து குறை நினைக்காதீர்கள். உங்கள் வாட்சப் ப்ரொபைலில் இருப்பது யார்?”

“அதுவும் நான் தான். ஆனா இருபத்தைஞ்சு வருஷங்களுக்கு முன்னால் எடுத்த புகைப்படங்கள் அவை.”

“அப்படியென்றால் முதுமை எய்துவது குற்றமா?”

மறுமுனையில் பலத்த சிரிப்பொலி விட்டு விட்டுக் கேட்டது. சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று.

“உடல் முதுமையாக இருந்தாலும், மனம் இளமையாக இருக்க வேண்டுமல்லவா! அதுதான்.”

அவரது கருத்தை நான் ஆமோதித்தேன். கதிர்காமநாதன் முதியவர்களுடன் ஒருவராக புத்தக வெளியீட்டுவிழாவிற்கு வந்து போயிருக்கின்றார்.

அன்று இரவு முழுவதும் என்னால் உறங்க முடியவில்லை. விழாவில் நான் எல்லோரிடமும் கேட்ட, `எப்படி இருக்கின்றீர்கள்?’ என்ற அந்த ஒற்றைக்கேள்வி எனது வாட்சப் நண்பரின் மனத்தை என்ன பாடுபடுத்தியிருக்கும். அவர் எப்படிச் சங்கடப்பட்டிருப்பார். ஒவ்வொரு நாளும் நெடுநேரம் உரையாடும் அவர், அன்று என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்.

“ஏன் அவர் கூட தன்னை அறிமுகப்படுத்தியிருக்கலாம் அல்லவா?” என்னுடைய மனவாட்டத்தைப் போக்க, மனைவி எனக்கு ஆறுதல் சொன்னார்.

No comments:

Post a Comment