குப்பிழான் ஐ.சண்முகன்
கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக்கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப் பகுதிகளைத் துழாவின. ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளில் மனது தங்காமலும் ஓடாத காட்சிகளில் மனது தங்கியும் கோலம் போட்டது.
கரையில் போடப்பட்டிருந்த கருங்கல் அணைகளில், மனிதர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து ஏதேதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். காற்சட்டை போட்ட உத்தியோகம் பார்க்கும் மனிதர்களும், சாரம் அணிந்த சாதாரண தொழிலாளர்களும், கோவணம் தரித்த மீனவரும், பெண்களும், கிழவர்களும், இளைஞரும், குமரிகளும், கிழவிகளும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக, திட்டுத்திட்டாக அமர்ந்திருந்து ஏதேதோ அளவளாவினார்கள். மனிதர்கள் பிறந்த நாள் தொடக்கமே கதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்; ஆதாமும், ஏவாளும் கூடக் கதைத்திருப்பார்கள். இவர்கள்ளுக்கு எப்போதுதான் இக்கதை முடியுமோவென நான் எண்ணினேன்.