Monday, 18 March 2024

குவிகம் குறும் புதினம் போட்டி முடிவுகள் (2024-25)

(குறும் புதினத்திற்கென்று தமிழில் வெளிவரும் ஒரே மாத இதழ்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

17.03.24  அன்று குவிகம் அளவளாவல் நிகழ்வில் திரு அரவிந்த் சுவாமிநாதன்  அறிவிப்பின் படி 

1. சங்கரி அப்பன்   – முதல் பரிசு  –    Rs.10000  – உறவின் மொழி

2.  மைதிலி நாராயணன் (ஷைலஜா )  – Rs. 6000 – இரண்டாம் பரிசு –                  கங்கை உள்ளம்.

3. அன்புக்கரசி ராஜ்குமார் – மூன்றாம் பரிசு  – Rs. 4000 – கொட்டு முரசே

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&குவிகம் குறும் புதினம் மாத இதழில் ஏப்ரல் 24 முதல் மார்ச் 25 வரை பிரசுரமாகும் கதைகளுக்கான போட்டி வழக்கம் போல் இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் துவங்கியது . டிசம்பர் 31 ஆம் தேதி போட்டிக்கான கதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 

இந்த ஆண்டு ,  மூன்று சிறந்த குறும் புதினங்களிற்கான பரிசுத் தொகை 10000 ,6000, 4000 ரூபாய் என்று அதிகரிக்கப்பட்டது. 

இந்த வருடம் 109 கதைகள் போட்டியில் பங்கேற்றன. 

முதல் சுற்று நடுவர்கள் , 

1. ராய செல்லப்பா 

2. சு வித்யா 

3. JC கல்லூரி மாணவர் குழு 

ஆகியோர் வந்திருந்த  கதைகளை அலசி ஆராய்ந்து அவற்றிற்கு மதிப்பெண் இட்டு அனுப்பி வைத்தனர். 

மூவருடைய மதிப்பெண்களையும் சராசரிப்படுத்தி 109 கதைகளில் முதல்  24 கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட   24 கதைகள்  மாதம் இரண்டு கதைகள் வீதம் நமது குறும் புதினம் மாத இதழில் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 25 வரை வெளிவரும். அதற்கான சன்மானம் 1000 ரூபாய் வழங்கப்படும். 

இவற்றுள்  மூன்று சிறந்த கதைகளுக்கு சன்மானத்திற்குப் பதிலாக சிறப்புப் பரிசுகள் 10000, 6000, 4000 ரூபாய்  வழங்கப்படும். 

அதைத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவில் வெளிவரும் ‘தென்றல்’ பத்திரிகையின் சென்னை ஆசிரியர்  அரவிந்த் சுவாமிநாதன் அவர்களை வேண்டிக் கொண்டோம். 

அவரது முடிவு 17 ஆம் தேதி நடைபெறும் குவிகம் அளவளாவல் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

பிரசுரிப்பதற்காகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கதைகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டுதல்கள்! 

போட்டியில் பரிசுகளை வெல்லப்போகும் 3 பேருக்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள் !

109 கதைகளில் 24 கதைகள் போக மீதமுள்ள 85 கதைகளை எழுதிய ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் கதை வெற்றி பெற்ற கதைகளைவிட எந்த விதத்திலும் குறைவானது அல்ல. வேறு பத்திரிகைக்கு அனுப்பினால் அவர்களுக்கு இதைவிட சிறந்த அங்கீகாரமும் பரிசுகளும் கிடைக்கலாம். அதனால் அவர்கள் தொடர்ந்து நம் குவிகம் அமைப்பிற்குத் தங்கள் ஆதரவைத் தர வேண்டுமென்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.  

 குவிகம் குறும் புதினம் 24-25 ஆண்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்

எண் பெயர் புனைப்பெயர் குறும் புதினம்

1 எஸ்.கௌரிசங்கர் எதிர்பாராதது
2 இலக்குவனார் திருவள்ளுவன் இளவல், குவியாடி விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்
3 சுஜாதா நடராஜன் நயன்தூக்கின்!
4 கல்பனா சன்யாசி சூப்பர் மார்க்கெட்
5 ராஜேஷ் வைரபாண்டியன் ஓணான் குழி
6 ஆர்.பாலஜோதி பாலஜோதி ராமச்சந்திரன் தாழம்
7 மைதிலி நாராயணன் ஷைலஜா கங்கை உள்ளம்.
8 கொற்றவன் பொன்னியின் காவலன்
9 அன்புக்கரசி ராஜ்குமார் கொட்டு முரசே
10 இராஜலட்சுமி பூமரப்பாவை
11 வசந்தா கோவிந்தராஜன் வேர்களும் விழுதுகளும்
12 சு. இராஜமாணிக்கம் அண்டனூர் சுரா செம்புலம்
13 வா.மு.கோமு மாடு மேய்க்கும் கரடியார்
14 இ.மணி அபிமானி இரண்டாவது இடம்
15 ஈ. ரா.மணிகண்டன் ஈ ரா இறைவன் பப்புன் பேராசிரியர்
16 ரா.ராஜசேகர் பியானோ வாசிக்கும் பூனை
17 மஞ்சுளா சுவாமிநாதன் கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு கொஞ்சம் பட்ஜெட்
18 எச். நஸீர் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் மனச்சிடுக்கு…
19 புவனா சந்திரசேகரன் மூன்று புள்ளிகள்
20 சங்கரி அப்பன் உறவின் மொழி
21 துரை. அறிவழகன் காத்தப்ப பூலித்தேவன்
22 கே.எஸ்.சுதாகர் நன்றே செய்வாய், பிழை செய்வாய்!
23 ஜமுனா ஜகன் மியாமி மிதவை
24 அஷ்ரப் பேகம் பெஷாரா குழலினிது யாழினிது

Saturday, 16 March 2024

நான்கு நாட்கள் கொண்டாட்டம் – சிறுகதை

ஒலி வடிவில் கேட்க

“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார்.

அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில்,

பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கொண்டாட்டம் நாலுநாட்கள் நடைபெறும்.

தங்கள் நல்வரவை நாடும்,

அகத்தன் – பாய்க்கியம் குடும்பத்தினர்

“ஓ… சாமத்தியச் சடங்கு வைக்கப் போறாய் போல கிடக்கு?”

Monday, 11 March 2024

`பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதிக்கு சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் எழுதிய விமர்சனம்



பால்வண்ணம் - கே.எஸ்.சுதாகர்:


ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 1983ல் இருந்து எழுதி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் ஏற்கனவே வெளியான இவரது படைப்புகள். இது சிறுகதைத் தொகுப்பு.

தமிழில் நல்ல சிறுகதைகள் இருபது முதல் இருபத்தைந்து எழுத்தாளர்களாலேயே, இப்போது திரும்பத்திரும்ப எழுதப்படுகின்றது என்ற என் கருத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே எல்லாம் நடக்கிறது. ஒரு நாவல் வாசித்த போது அதே எழுத்தாளரால் இரண்டு வருடங்கள் முன்பு எழுதிய தொடர்புடைய சிறுகதையை என்னால் நினைவுகூர முடிந்தது. நல்ல சிறுகதைகளை எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் எழுதி முடித்ததும் சில நாட்கள் மறந்துவிட்டு இரண்டு மூன்று இடைவெளிகளில் மறுபடியும் வாசித்துப் பாருங்கள்.

கதைகளில் வேறு சாத்தியங்களையும் யோசித்துப் பாருங்கள்.

'ஏன்' என்ற கதையை எடுத்துக் கொள்வோம். அதன் மையஅச்சு, ஜனனிக்கு பிறந்த பெண்குழந்தையின் நிறம். அதைச்சுற்றியே கதை சுழன்றிருக்க வேண்டும். அக்குழந்தையைக் கொன்று, வேறெங்கோ திரிந்து கதை முடிகிறது.

தொகுப்பில் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள் ' பால்வண்ணம்", " யாரோ ஒளிந்திருக்கிறார்கள்". பால்வண்ணம் கதையில், அவள் இரவு வீட்டில் தங்கச் சொல்வதில் ஆரம்பித்து, இரவு, அவள் அறைக்குள் சென்றாலும் அவள் சாதாரணமாகப் பேசுவது, அவன் மனதில் அவள் உயரத்தில் இருப்பது என்று எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன. இரண்டாவது கதையில் மெய்நிகர் உலகம் எப்படி நிஜஉலகை ஆக்கிரமிக்கிறது என்பதில் இருந்து விலகாது செல்கிறது.

சிறுகதைகளுக்கு முக்கியமாக வேண்டியது Focus. அது பல கதைகளிலில்லை. நம்மால் பயன் பெறுவோர், எதிர்காலப் பயனுக்கு வைத்துக் கொண்டோர், உற்றார், பெற்றோர், உறவினர், நண்பர் என்று எவர் சொல்வதையும் உங்கள் கதைகளைப் பொறுத்தமட்டில் காதுகொடுத்துக் கேட்காதீர்கள். அவர்கள் மனமறிந்து பொய் சொல்பவர்கள். பொது வாசிப்பில் சொல்லப்படும் குறைகளுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துங்கள். நிறைய வாசித்துக் குறைவாக எழுதுங்கள். Stock marketல் சம்பாதிப்பதை விட நல்ல சிறுகதை எழுதுவதென்பது கடினம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.


பிரதிக்கு:

Zero Degree 89250 61999

முதல்பதிப்பு செப்டம்பர் 2022

விலை ரூ. 190.


சரவணன் மாணிக்கவாசகம்

மாசி 09, 2024

Sunday, 10 March 2024

`பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதிக்கு சுதர்சன் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய விமர்சனம்

 


உங்கள் 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுதி கிடைக்கப் பெற்றது. படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி சுதாகர்.


முகப்புக் கதை 'பால்வண்ணம்' என்னை மிகவும் கவர்ந்து கொண்டது. யுகதருமத்தின் நூல்வேலியை தகர்க்காமல் நகர்கின்ற கதை மாந்தரை சித்தரிக்கின்ற பாங்கு மிகவும் அழகு. படித்து முடித்ததும், மனதினில் இயல்பாய் சில கேள்விகள். நூல்வேலிகளைத் தகர்த்து, கனவாய் போன அந்தக் காதலின் பாதையில் ஒரு முறை ஏன் அவர்களால் நிஜமாய் பயணிக்க முடியவில்லை? மனதில் வலிமை இல்லையா? அல்லது உடலையும், உள்ளத்தையும் உறுத்தி போலியாக வாழ்ந்தாலும் சமுதாய கட்டுப்பாடுகளை மீறாமல் இருத்தலே கௌரவமான வாழ்க்கை என்று யுகதருமம் செய்த சிந்தனை சிறையின் அப்பாவி ஆயுட்கைதிகளா இவர்கள்?

'கலைந்தது கனவு' என்னை கவர்ந்த மற்றுமொரு நல்ல கதை. யார் மீதும் குறை சுமத்தாமல் ஒரு யதார்த்தத்தை அழகாக தருகின்றது. காதல் ஒரு பருவ நாடகம் என சொல்லாமல் சொல்கின்றது. இறுதியில் 'வேலைக்குப் போவதற்கான ஆயத்தத்தை தொடங்கினாள்.' என கதை முடிகின்றபோது, அவள் செல்லரித்துப் போன சம்பிரதாயங்களின் சிக்காமல் ஒரு புதுவாழ்க்கைக்கு விரைவிலேயே தயாரகிவிடுவாள் என வாசகன் மனதினில் ஒர் அமைதியுண்டாகின்றது.

'ஏன்' என்ற கதை என் ஊகத்தோடு கதை நெடுகிலும் கண்ணாமூச்சி விளையாடியது எனறுதான் சொல்ல வேண்டும். நல்லதொரு கதைக்கரு.

'அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை' என்ற கதை தலைமுறை இடைவெளிகளின் சிந்தனை மாற்றங்களினால் அம்மாக்கள் எப்படி தம் பிள்ளைகளினாலேயே கிழவிகள் ஆக்கப்படக்கூடும் என்ற விழிப்புணர்வை சுவையான சம்பவக் கோர்வைகளினூடு பதிவு செய்கின்றது.

'அனுபவம் புதுமை' கதையில் வரும் பேராசிரியரின் மனசாட்சியுடனான போராட்டத்தை படிக்கின்ற போது, கடந்து வந்த பாதையில் எமது பிள்ளைகளுக்காக நாம் மனசாட்சியுடன் நடத்திய போராட்டங்களும், சரியோ தவறோ, எடுத்த முடிவுகளும் நினைவினில் வந்து மெல்ல நெருடுகின்றது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பு நல்லதோர் இனிமையான வாசிப்பு அனுபவத்தை தந்திருக்கின்றது.

முன்னுரையில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் குறிப்பிடுகின்ற கீழ்க்கண்ட உங்கள் கருத்து மிகவும் அருமையானது. குறிப்பாக எழுத முயற்சிப்பவர்கள் கவனத்திற் கொள்ளவேண்டியது.

_"நான் போட்டிக்கென்று சிறுகதைகள் எழுதுவதில்லை. எழுதிய சிறுகதைகளை போட்டிக்கு அனுப்புகிறேன். எழுதும் கதைகளையும் உடனே பிரசுரிப்பதில்லை. என்னுடனே இருந்து கொள்ளும் அந்தக் கதைகளை ஒரு சிற்பி செதுக்குவது போல செதுக்குகின்றேன்."_

அன்புடன்
சுதர்சன் பாலசுப்பிரமணியம்
சிட்னி (அவுஸ்திரேலியா)

Friday, 8 March 2024

கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் வளவளா - கங்காருப்பாய்ச்சல்கள் (41)

 

இலங்கையில் போர்க்காலங்களில் நடந்த சம்பவங்களைப்பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்று சில எழுத்தாளர்களிடம் கேட்கும்போது, அவர்கள் அந்தக்காலங்களில் தாங்கள் இலங்கையில் இருக்கவில்லை என்று உதாசீனமாக அந்தக் கேள்வியைத் தட்டிக் கழிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பிறப்பதற்கு முன்னால் நடந்த சரித்திரச் சம்பவங்களைப் பற்றியெல்லாம் எழுதுகின்றார்கள், தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சங்ககால இலக்கியங்களிலெல்லாம் மேற்கோள் காட்டுகின்றார்கள். சங்ககாலப் பாத்திரங்களை மீளவும் கொண்டுவந்து படைப்புகளில் முன் வைக்கின்றார்கள். தாங்கள் காணாத சந்தித்திராத, புத்தகங்களில் மட்டும் படித்து அறிந்த அவற்றைப் பற்றியெல்லாம் எழுத முடிகின்றது என்றால், நம் கண்முன்னே நாளாந்தம் நடக்கும் இவற்றைப்பற்றி எழுத முடியாதா என்ன?



பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிற்றேடுகள் பணத்திற்குள் முடங்கிக் கிடத்தல் நல்லதல்ல.

பத்திரிகையை விடுங்கள். இலக்கியத்தை வளர்த்தெடுக்கப் புறப்பட்ட சஞ்சிகைகளிற்கு இவை ஆரோகியமானதல்ல. சஞ்சிகையின் வளர்ச்சிக்கு என்று பணத்தைக் கொடுத்துவிட்டு, தன்னுடைய படைப்புகளையே போடுங்கள் என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து படைப்புகளை அனுப்புதல் எழுத்தாளருக்கு அழகல்ல. அதைவிடுத்து ஒரு சிலரின் படைப்புகளைப் போட வேண்டாம் என்று சொல்பவர்களும் உண்டு.

எந்தப் பெரிய கொம்பனாகவிருந்தாலும் சரி, அவரின் படைப்புகளையே தொடர்ந்து பிரசுரிக்கும் இதழாசிரியருக்கும் அது அழகல்ல. இவை ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. எதிர்காலத்தில் சஞ்சிகை படுத்துவிடும்.



பத்திரிகைத்துறையில் இருந்து வந்து எழுதுபவர்களின் எழுத்து நடைக்கும், ஏனைய எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதாக நான் உணர்கின்றேன். எழுத்தை தமது தேவைக்காகப் பாவிப்பதற்கும், மக்களின் நல்வாழ்க்கைககாக எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? ஒன்று எழுத்தை விற்பது, மற்றயது எழுத்தை வளர்ப்பது.

இயல்பாக ஆர்வத்தில் எழுதப்படும் படைப்புகளுக்கும், ஒரு கொள்கைக்காக தாம் சார்ந்த அமைப்புக்காக எழுதியே ஆகவேண்டும் என வலிந்து எழுதப்படும் படைப்புகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. முதல்வகைப் படைப்புகள் இலக்கியப்படைப்புகள், இரண்டாமவை இளக்காரமானவை.

Tuesday, 5 March 2024

அவசர உலகம், அவசர இலக்கியம் - கங்காருப்பாய்ச்சல்கள் (40)

 

இந்த அவசர உலகில் கதையோ நாவலோ வேகமாக நகருவதையே எல்லோரும் விரும்புகின்றார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் நாவலோ சிறுகதையோ அதன் போக்கில் விறுவிறுப்புக் காணப்பட வேண்டும். கதைப் போக்கில் இறுக்கம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். வளவளா வாய்க்கியங்கள் வெட்டி எறியப்படல் வேண்டும்.

நாவலோ சிறுகதையோ பக்க எண்ணிக்கையால் தீர்மானம் செய்யப்படுவதில்லை. ஒரு நாவலை எழுதுபவர், எங்கே இதை யாரேனும் ஒருவர் குறுநாவல் என்று கூறிவிடுவாரோ எனப் பயந்து, தேவையில்லாமல் பக்க எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக எப்போதோ யாரோ எழுதிய கவிதைகள், சில ஆவணங்களை இட்டு நிரப்புவது சரியாகப்படவில்லை.

இரசனையுள்ள ஒருவரால் ஒன்றோ இரண்டோ நல்ல சிறுகதைகளை/நாவல்களைப் படைத்துவிட முடியும். ஆனால் தொடர்ந்தும் அவரால் எழுத முடியாது. அதற்கு வாசிப்பும் பயிற்சியும் வேண்டும்.

 

Friday, 1 March 2024

வாசிப்பு - - கங்காருப் பாய்ச்சல்கள் (39)

 

வாசிப்பில் பலவிதமான சுவைகள் இருக்கின்றன.

சில புத்தகங்களை ஒன்றிரண்டு பக்கங்களுக்கு அப்பால் நகர்த்தவே முடியாமல் இருக்கும்.

சில புத்தகங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால் நேரத்துடன் ஒப்பிடும்போது, இப்போது இந்தப் புத்தகங்களின் தேவை என்ன? ஆறுதலாக வாசிக்கலாம்தானே என்ற நோக்கில் மனம் வைத்துவிடும். பின்னர் நேரம் இருந்தால், புத்தகத்திற்கு யோகம் இருந்தால் மீளவும் வாசிக்கப்படும்.

இன்னும் சில புத்தகங்கள் – விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும். வாசிக்கத் தூண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி இழுத்துப் பிடித்து வைத்திருக்கும். வாசித்து முடித்துவிட்டு, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணை மூடி ஆழ்ந்து ஜோசித்தால் மனதில் ஒன்றும் இருக்காது. அதன்பின்னர் மறுபடியும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் வராது.

இவையெல்லாவற்றையும் தாண்டி, விறுவிறுப்பாக எம்மை எங்கோ அழைத்துச் சென்று, வாசித்து முடித்தபின்னரும் மனதில் சலனத்தை ஏற்படுத்தி நீங்காத தடயமாக மனதில் வீற்றிருக்கும் புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றை மறுபடியும் மறுபடியும் வாசிக்க வேண்டும், இன்னமும் அதன் தேவை இருக்கின்றது என்ற நினைப்பில் பத்திரப்படுத்தி வைக்கத் தோன்றும்.

சில புத்தகங்களை, எழுதியவர்களுக்காகவே வாசிக்க வேண்டும் போல் இருப்பதில்லை. நம் கண் முன்னாலே அநியாயங்கள் பல செய்து, காறித்துப்ப வேண்டும் போல இருப்பவர்களின் – புத்தகங்கள் என்ன கனதியாக இருப்பினும் வாசிக்க வேண்டும் போல இருப்பதில்லை. சமீபத்தில் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்காக எடுத்தபோது – புத்தகத்தின் பின் அட்டையில் எழுதியிருந்த ஒரேயொரு பொன் வாய்க்கியத்திற்காக அந்தப் புத்தகத்தைத் திறக்காமல் இருந்தேன். அந்த வாய்க்கியம் அவருக்கே அச்சொட்டாகப் பொருந்தியிருந்ததுதான் அதற்குக் காரணம். தான் ஏதோ பெரிய கனவான் போலவும், மற்றவர்களை அவதூறு செய்வது போலவும் அந்த வாய்க்கிய அமைப்பு இருந்தது.

புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர், அதிலிருந்து புதிதாக பலவற்றை அறிந்துகொள்ள முடியுமென்றால் அதுவே சிறப்பு.