உங்கள் 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுதி கிடைக்கப் பெற்றது. படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி சுதாகர்.
முகப்புக் கதை 'பால்வண்ணம்' என்னை மிகவும் கவர்ந்து கொண்டது. யுகதருமத்தின் நூல்வேலியை தகர்க்காமல் நகர்கின்ற கதை மாந்தரை சித்தரிக்கின்ற பாங்கு மிகவும் அழகு. படித்து முடித்ததும், மனதினில் இயல்பாய் சில கேள்விகள். நூல்வேலிகளைத் தகர்த்து, கனவாய் போன அந்தக் காதலின் பாதையில் ஒரு முறை ஏன் அவர்களால் நிஜமாய் பயணிக்க முடியவில்லை? மனதில் வலிமை இல்லையா? அல்லது உடலையும், உள்ளத்தையும் உறுத்தி போலியாக வாழ்ந்தாலும் சமுதாய கட்டுப்பாடுகளை மீறாமல் இருத்தலே கௌரவமான வாழ்க்கை என்று யுகதருமம் செய்த சிந்தனை சிறையின் அப்பாவி ஆயுட்கைதிகளா இவர்கள்?
'கலைந்தது கனவு' என்னை கவர்ந்த மற்றுமொரு நல்ல கதை. யார் மீதும் குறை சுமத்தாமல் ஒரு யதார்த்தத்தை அழகாக தருகின்றது. காதல் ஒரு பருவ நாடகம் என சொல்லாமல் சொல்கின்றது. இறுதியில் 'வேலைக்குப் போவதற்கான ஆயத்தத்தை தொடங்கினாள்.' என கதை முடிகின்றபோது, அவள் செல்லரித்துப் போன சம்பிரதாயங்களின் சிக்காமல் ஒரு புதுவாழ்க்கைக்கு விரைவிலேயே தயாரகிவிடுவாள் என வாசகன் மனதினில் ஒர் அமைதியுண்டாகின்றது.
'ஏன்' என்ற கதை என் ஊகத்தோடு கதை நெடுகிலும் கண்ணாமூச்சி விளையாடியது எனறுதான் சொல்ல வேண்டும். நல்லதொரு கதைக்கரு.
'அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை' என்ற கதை தலைமுறை இடைவெளிகளின் சிந்தனை மாற்றங்களினால் அம்மாக்கள் எப்படி தம் பிள்ளைகளினாலேயே கிழவிகள் ஆக்கப்படக்கூடும் என்ற விழிப்புணர்வை சுவையான சம்பவக் கோர்வைகளினூடு பதிவு செய்கின்றது.
'அனுபவம் புதுமை' கதையில் வரும் பேராசிரியரின் மனசாட்சியுடனான போராட்டத்தை படிக்கின்ற போது, கடந்து வந்த பாதையில் எமது பிள்ளைகளுக்காக நாம் மனசாட்சியுடன் நடத்திய போராட்டங்களும், சரியோ தவறோ, எடுத்த முடிவுகளும் நினைவினில் வந்து மெல்ல நெருடுகின்றது.
இந்தச் சிறுகதைத் தொகுப்பு நல்லதோர் இனிமையான வாசிப்பு அனுபவத்தை தந்திருக்கின்றது.
முன்னுரையில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் குறிப்பிடுகின்ற கீழ்க்கண்ட உங்கள் கருத்து மிகவும் அருமையானது. குறிப்பாக எழுத முயற்சிப்பவர்கள் கவனத்திற் கொள்ளவேண்டியது.
_"நான் போட்டிக்கென்று சிறுகதைகள் எழுதுவதில்லை. எழுதிய சிறுகதைகளை போட்டிக்கு அனுப்புகிறேன். எழுதும் கதைகளையும் உடனே பிரசுரிப்பதில்லை. என்னுடனே இருந்து கொள்ளும் அந்தக் கதைகளை ஒரு சிற்பி செதுக்குவது போல செதுக்குகின்றேன்."_
அன்புடன்
சுதர்சன் பாலசுப்பிரமணியம்
சிட்னி (அவுஸ்திரேலியா)
No comments:
Post a Comment