“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார்.
அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில்,
பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்
நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கொண்டாட்டம் நாலுநாட்கள் நடைபெறும்.
தங்கள் நல்வரவை நாடும்,
அகத்தன் – பாய்க்கியம் குடும்பத்தினர்
“ஓ… சாமத்தியச் சடங்கு வைக்கப் போறாய் போல கிடக்கு?”
“ஓம் ஐயா… வள்ளியம்மையும் பெரிசாகி இரண்டு வருஷமாப் போச்சு!”
“அது சரி…. இதை உனக்கு ஆர் எழுதித் தந்தது? அவரைக்கொண்டே மிச்சத்தையும் எழுதுவிக்கலாமே?”
“ஐயா… அது நம்ம ராசசிங்கம் மாஸ்டர்…. அவரை எப்படி முழுதையும் எழுதித் தாங்கோ எண்டு கேக்க முடியும்?”
“சரி… தந்திட்டுப் போ. பின்நேரம் மட்டிலை எழுதித் தாறன்”
•
உடையார் எழுதிக் கொடுத்த, அந்தக் கொண்டாட்டம் வந்துவிட்டது.
பட்டாசுகள் முழங்க, பனை வேலிக்கு மேலால் எகிறிப்பாயும் வாண வேடிக்கைகளுடன் வள்ளியம்மையின் ருதுவிழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. வேலியோரத்து ஒற்றைப்பனையில் லவுஸ் ஸ்பீக்கர் தொங்கிக்கொண்டிருந்தது. அதிலிருந்து பக்திப்பாடல்கள், சினிமாப்பாடல்கள் பனந்தோப்பிற்குள்ளால் புகுந்து ஊரெங்கும் வியாபித்தது.
சரசு உடையார்வீட்டு வேலைகள் முடித்து வீட்டுக்குப் போகத் தயாரானாள்.
“ஐயா…. நான் போகட்டுங்களா?”
சாய்வனைக்கட்டிலில் இருந்து பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த உடையார் நிமிர்ந்து சரசுவைப் பார்த்தார்.
“உனக்கும் வேலையள் கூடிப் போச்சு…. அகத்தன் ஐஞ்சு நாட்கள் வேலைக்கு வரமாட்டன் எண்டிட்டான். அது சரி அகத்தன் வீட்டுக்குப் போகேல்லையோ?” கொடுப்புக்குள் சிரித்தபடி கேட்டார் உடையார்.
“ஐயா… என்ன கேட்கிறியள்? அவை வேறை ஆக்கள் அல்லோ? சொல்லப் போனால் நான் உங்களுக்குத்தான் சொந்தமாக்கும்…”
“இல்லை… உன்ரை கூட்டாளிதானே! அதுதான் கேட்டன்.”
“ஐயா… வறுமை எணடபடியாலைதான் நானும் இஞ்சை வேலைக்கு வாறன். என்ரை மனிசன் சரியா நடந்துகொண்டா நான் ஏன் இப்பிடி எடுபிடி வேலைக்குப் போகவேணும்? இப்ப இந்த நேரம்கூட மனிசன் எங்கை குடிச்சுப்போட்டு விழுந்து கிடக்குதோ? பிள்ளையளும் அப்படி… மூத்தவன் ஏதோ இயக்கம் எண்டு திரியுறான்…” மூக்கால் சிணுங்கினாள் சரசு.
“உங்களுக்கு எப்பவும் சரசுவோடை ஒரு சேஷ்டை. நீ போ சரசு. இருட்டியும் போச்சு…” என்றார் உடையாரின் மனைவி கமலம். அவர் உடையாருக்கு முன்னால் ஒரு கதிரையையில் இருந்து, கிழிந்த உடுப்புகள் தைத்துக் கொண்டிருந்தார்.
`ஏழ்மை என்பது மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுவிடுகின்றது? உறவையும் ஊரவனையும் ஒரே தராசில் வைத்துவிட்டதே’ மனம் வருந்தினார் உடையார்.
உடையார் என்ற பெயர் அவருக்கு வந்ததே விசித்திரமானது. `உடையார் வளவு’ என்று சொல்லப்படும் அந்த நிலம் – சாதாரணமாக `ஒரு யாழ்ப்பாணத்து வீடு வளவைப்’ போல எட்டுமடங்கு விஸ்தீரணம் கொண்டது. உடையார் என்று சொல்லப்படும் ஒருவர் எந்தோ காலத்துக்கு முன்னர் அந்த வீட்டில் வசித்து வந்ததால், அது உடையார்வளவு, உடையார்வீடு என்று நாமம் கொண்டுவிட்டது. இப்போது இருப்பவர் அவர்களின் வழித்தோன்றல்.
நிலத்திலிருந்து மூன்று அடிக்கு மேல் கொங்கிறீற் எழுப்பப்பட்டு, அதன் மேல் எட்டு அறைகள் கொண்ட நாற்சார் வீடு அது. வீட்டின் பின்புறம் ஒரு நீண்ட பத்தி எழுப்பப்பட்டு, தகரத்தால் வேயப்பட்டிருந்தது. அதற்குள்தான் அந்தக்காலத்தில் வேலைக்காரர்களின் இருப்பும் வைப்புச்செப்பும். வீதியிலிருந்து வீட்டிற்கு ஓடி, பின் வீட்டைச் சுற்றி மூன்றுதடவைகள் ஓடும்படி தன் இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் போட்டி வைப்பார் உடையார். அது பாடசாலைகளில் நடைபெறும் ஓட்டப்போட்டிக்கு ஈடானது. நாக்குத் தள்ளி நிற்கும் அவ்விரண்டு பிள்ளைகளில் இன்று - ஒருவர் அமெரிக்காவில், மற்றவர் இங்கிலாந்தில். வீட்டுக்கிணறு சாதாரணமான கிணற்றைவிட அகலத்திலும் ஆழத்திலும் ஒன்றரை மடங்கு பெரியது. துலாவுடன் கப்பியும் கொண்டது. தண்ணீர் பிடிக்கும் ராங் ஒன்று அருகே முகில் தொடும் உயரத்தில் இருந்தது. ஒரு காலத்தில் அந்த வளவு முழுவதும் தோட்டமும், வேலையாட்களின் கலகலப்புமாக இருந்தது. இன்று க.தே.க ஆகிவிட, அந்தக் கட்டெறும்பை மேய்க்க அகத்தனும் சரசுவும் தேவைப்பட்டார்கள்.
மக்கள் வீட்டிற்குள் ஒடுங்கிப் போக, பாட்டுச் சத்தம் வெகு ஒலிப்பாகக் கேட்கின்றது. உடையார் பேப்பரைக் கீழே போட்டுவிட்டு பாடல்களில் லயிக்கத் தொடங்கினார்.
“ஏதோ ஒரு நாட்டிலை பெம்பிளப்பிள்ளையள் வயசுக்கு வந்திட்டா, கொடிகட்டிப் பறக்கவிட்டு திருமணத்துக்கு ரெடி என்று அறிவிப்பாங்களாமே கேள்விப்பட்டிருக்கிறியளா?” உடையாரைச் சீண்டினாள் கமலம். உடையார் அதற்கு பதில் சொல்லாது,
“நாளைக்குப் பின்நேரம் ஒருக்கால் அகத்தன் வீட்டுப்பக்கம் போகவேணும்…” என்றார்.
“போய்… ? பாக்கியத்தைக் குறுக்குக்கட்டிலை பாக்கப் போறியளோ?” உடையாரை முழுசிப் பார்த்தாள் கமலம்.
“இல்லை… வீட்டுக்கு வெளியிலை நிண்டு பாக்கு வெத்திலைச் சுருளுக்கை கொஞ்சக் காசைக்குடுத்திட்டு வருவம் எண்டு சொல்ல வந்தன்…”
“அதொண்டும் போகத் தேவையில்லை. அகத்தன் இஞ்சை வருவன் தானே! அப்ப குடுக்கலாம்” தைத்த உடுப்புகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த கமலம், அதை அப்படியே எடுத்துக் குதப்பி, மீண்டும் கதிரைக்குள் போட்டுவிட்டு எழுந்துகொண்டார்.
”எத்தினை வருஷமா அவன் எங்களுக்கு உதவி செய்யுறான். உனக்கு ஞாபகம் இருக்கே! அவன் இஞ்சை வரேக்கை கலியாணமும் கட்டேல்லை…” உடையார் சொல்லிக்கொண்டே போனார். ஆனால் கேட்பதற்குத்தான் ஆள் இல்லை.
கமலம் ஒரு நோய்க்காரி. அவளால் பெரிய வேலைகள் செய்ய முடிவதில்லை. சமைப்பது மாத்திரம் தான். அதற்கும் சரசு ஒத்தாசை புரிகின்றாள். குளிசைகளைப் போட்டுவிட்டு, நேரத்திற்குப் படுக்கப் போய்விடுவாள்.
அகத்தன் வராததால், சரசுவுடன் உடையாருக்கும் வேலை அதிகமாகிப் போய்விட்டது. வளவின் மூலையில் சிறிதளவு தோட்டம் செய்கின்றார் உடையார். அதன் முழு வேலைகளையும் அகத்தன்தான் செய்கின்றான். அத்துடன் வேலி அடைப்பது, விறகு கொத்துவது, பனையில் கள் இறக்குவது எனப் பல வேலைகள் அகத்தனுக்குக் காத்திருக்கும். பனையில் கள் இறக்கினாலும் அகத்தனுக்கு குடிப்பழக்கம் கிடையாது. வளவிலுள்ள புல் பூண்டுகளை ஒரு கரையாகச் செதுக்கிக்கொண்டு தொடங்கிய இடத்திற்கு வர, மீண்டும் அங்கே புல் பூண்டுகள் முழைத்துவிடும். வேலைகள் கூடும்போது அகத்தன் தனது மூத்த மகனையும் கூட்டி வருவான். குடுக்கும் காசை மறுபேச்சின்றி வாங்கிக் கொண்டு போய்விடுவான். வள்ளியம்மை அகத்தனுக்கு ஒரேயொரு பெம்பிளப்பிள்ளை. மிச்சம் ஏழும் ஆம்பிளப்பிள்ளைகள். இவ்வளவு பேரும் பாய்க்கியத்திற்குப் பிறந்தவர்கள். என்றாலும், அகத்தனுக்கு ஊரில் வேறும் தொடுப்புகள் இருந்ததாக கேள்வி. அதை உடையாரும் அறிவார். பாக்கியமும் அறிவாள். பல வருடங்களுக்கு முன்னர் ஒருநாள், வீட்டின் பின்புறம் பெண்ணின் கீச்சுக் குரல் கேட்டு எட்டிப் பார்த்தபோது, பத்திக்குள் இருந்து அகத்தன் வெளியேறிக் கொண்டிருந்ததை உடையார் கண்டார். சரசு கண்ணைக் கசக்கியபடி நின்றிருந்தும், பட்டும் படாதவாறு தோட்டப்பக்கமாக உடையார் நழுவிவிட்டார்.
சரசுவின் வேலை மேய்ப்பதும் தோய்ப்பதும். மாடு ஆடு கோழி தாரா வாத்துகள் எனப் பலவற்றைப் பராமரிக்கின்றாள். அத்தோடு உடுப்புகள் தோய்க்கின்றாள். சிலவேளைகளில் தோட்டத்திற்குள் களையும் புடுங்குவாள். இவையெல்லாவற்றையும் விட, கமலத்தின் முழுத்தொட்டாட்டு வேலைகளையும் அவளே செய்வாள். அவளுக்கென்றொரு குடும்பம் குடிகாரக் கணவனுடனும் மூன்று பிள்ளைகளுடனும் கழிகின்றது.
கிராமத்தில் தச்சுவேலை செய்பவர்கள், ஒரு கூட்டமாக புறம்பாகக் குடியிருந்தார்கள். அகத்தன் மாத்திரம், கிராமத்தின் எல்லையில், புகையிரதப் பாதைக்கு ஒருபுறமாகவிருந்த பனங்கூடலிற்குள் ஒரு கொட்டிலைப் போட்டுக்கொண்டு இருக்கின்றான். ஒரு சோலிக்கும் போகமாட்டான். ஊரவர்களுக்கு உதவி செய்தபடி சீவியத்தைக் கொண்டு நடத்தினான். அவர்களுக்கிடையே நடைபெறும் சண்டை சச்சரவுகள் புகையிரதச் சத்தத்துடன் கலந்துவிடும். பிள்ளைகள் அனைவரும் மழைக்குக்கூட பள்ளிக்கூட வாசல் பக்கம் ஒதுங்கவில்லை.
நான்காம் நாள் காலை உடையாரை எட்டிப் பார்க்கவென அகத்தன் வந்தான். வீட்டு நடப்புகளைச் சொல்லவே அவன் வந்திருந்தான் என்பது உடையாருக்குத் தெரியும்.
“அகத்தன்…. ஒரே சோகப்பாட்டுகளையும் பக்திப்பாட்டுகளையும் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு. கொஞ்சம் காதல் பாட்டுக்களாகப் பாத்துப் போடன்.”
“நானும் சொல்லிக் களைச்சுப் போனன் ஐயா. ஏழாலையிலை ஆரோ பாட்டுகள் வைச்சிருக்கிறான்கள் எண்டு சொல்லுறான்களேயொழிய, போய் வாங்கிவாறான்கள் இல்லை.”
“அதுக்கு நீ இன்னும் கொஞ்சம் காசு குடுக்கவேணும் கண்டியோ?”
“நானும் இத்தனை வரிசமாக குடுத்ததை வாங்கிப் போடவேணும் எண்டுதான் இந்தப் பணச்சடங்கை வைச்சன். ஆனால் மொய் எழுதுறவன்கள் எல்லாம் கஞ்சத்தனம் காட்டுறான்கள் ஐயா… ஒவ்வொரு நாளும் பலகாரச்சூடு வேறை வீட்டிலை நடக்குது….”
அகத்தன் வந்ததன் நோக்கம் பிறிதெனப் புரிந்து கொண்டார் உடையார். தான் இன்னமும் வள்ளியம்மைக்கு ஒன்றும் குடுக்கவில்லையே என்பது மனதினுள் சுள்ளிட்டது.
“சரி அகத்தன்… நீ போய் வளவுக்குள்ளை உள்ள தேங்காயள் விழாம்பழங்கள் எல்லாத்தையும் பொறுக்கிக் கொண்டு வா… வள்ளியம்மைக்குச் சேரவேண்டியதை நான் தாறன்.”
அகத்தன் வளவு முழுவதும் அலைந்தான். மூன்றுநாட்களின் தேட்டம் நிறைந்தது. ஏராளமான தேங்காய்கள் விழாம்பழங்கள் எல்லாவற்றையும் மூட்டையாகக் கட்டினான். வந்து நிற்கின்ற சிறுசுகளைப் பேய்க்காட்டலாம் என்ற நினைப்பில், வேலிக்கரையோரமாக நின்ற இலந்தைமரத்தை உலுப்பி மடியிற்குள் பொதியாக்கினான்.
“ஐயா… பிறிம்பு பிறிம்பா சாக்குக்கட்டி பத்திக்குள்ளை வைச்சிருக்கிறன். தேங்காய் ஒரு சாக்கு. விழாம்பழங்கள் ஒரு சாக்கு.”
கமலம் என்வலப் ஒன்றினுள் காசை வைத்து, வெற்றிலை பாக்குடன் அகத்தனிடம் நீட்டினாள்.
“அகத்தன்…. பத்திக்குள்ளை கட்டிவைச்ச இரண்டு சாக்குமூட்டைகளும் உனக்குத்தான். ஆனல் பாட்டை மாத்திரம் மாத்திப்போட்டிடு…”
அகத்தன் வீட்டின் பின்புறம் போக, அவனின் பின்னால் உடையாரும் நகர்ந்தார். பத்திக்குள் வைத்து உடையாரும் ஒரு என்வலப்பை அகத்தனிடம் நீட்டினார். அகத்தனின் கண்கள் கலங்கிப் போயின.
“கமலத்துக்குச் சொல்லிப் போடாதை….” கண் சிமிட்டினார் உடையார்.
உடையார் குடுத்த காசு வேலை செய்தது. கிழக்கே போகும் ரயில், பதினாறு வயதினிலே, புதிய வார்ப்புகள் என வானலையில் எழுந்துவந்த பாடல்கள் உடையாரை ஒரு உசுப்பு உசிப்பிவிட்டது. கமலத்திடம் சில்மிஷம் புரிய வெளிக்கிட்டு, பேச்சு வாங்கிக் கொண்டு படுக்கையில் கிடந்து புரண்டார். அவர் கனவில் கமலத்தையும் விட வேறு சிலரும் ஆட்டிப் படைத்தனர்.
நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்டிருக்காவிட்டால், அவர்
கனவு கந்தர்வலோகம் வரை களைகட்டியிருக்கும்.
அரிக்கன்விளக்கை எடுத்துக் கொண்டு, மெதுவாக ஜன்னலைத் திறந்து பார்த்தார். வீட்டு கேற்றடியில் ஒரு பெட்டையும் பெடியனும் சைக்கிள் ஒன்றை வைத்துக்கொண்டு மசுந்துவது தெரிகின்றது. ஜன்னலை மூடிவிட்டு மணிக்கூட்டைப் பார்த்தார். நேரம் அதிகாலை மூன்று இருபது. முன்கதவை பாதி திறந்து, அரை உடம்பை உள்நுழைத்து “யாரடா கேற்றடியிலை நிக்கிறது?” என்று கொஞ்சம் பலமாகச் சத்தமிட்டார். உடையாரின் குரல் கேட்டதும், சைக்கிளைப் பெண்ணிடம் குடுத்துவிட்டு, கேற் கொழுக்கியைக் கழற்றினான் அந்த இளைஞன். பின் இருவருமாக உள் நுழைந்ததும் மீண்டும் கொழுக்கியை கேற்றின் மேலே போட்டான் அவன். இருவருமாகப் பதுங்கிப் பதுங்கி உடையாரை நோக்கிச் சென்றார்கள். பெண் மணவறைக் கோலத்திலும், பையன் வேட்டி சட்டையிலும் நின்றான். உடையார் பதறிப் போனார்.
“ஆர் நீங்கள்?”
”ஐயா, நான் வள்ளியம்மை… அகத்தன்ரை மகள்” கிளிப்பேச்சில் தயங்கினாள் அவள்.
“ஆரடா நீ?”
”ஐயா, நான் சரசுவின் மகன் மோகன்.”
உடையாருக்கு தான் பிடித்திருந்த கதவு நிலை ஆடியது போல் இருந்தது. நடந்ததைப் புரிந்துகொண்டார்.
வீதியிலே தீப்பந்தங்களுடன் மனிதரின் ஆரவாரம் கேட்கின்றது. வருவது யாராக இருந்தாலும் பிரச்சினை வெடிக்கப்போகின்றது என்பதை உணர்ந்தார் உடையார்.
“என்னோடு வாருங்கள். சைக்கிளையும் கொண்டு வா” அவர்களைப் பின்புறம் பத்திக்குக் கூட்டிச் சென்றார்.
“இந்தப் பத்திக்கை வந்து இரண்டுபேரும் ஒளிந்து கொள்ளுங்கள். சைக்கிளையும் உள்ளுக்கை கொண்டு வா தம்பி. நான் வந்து கூப்பிட்டால் ஒழிய வெளியே வரவேண்டாம். கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்ப்பம்.” சொல்லிவிட்டு உடையார் அவர்கள் இருவரையும் பார்த்தார்.
வள்ளியம்மையை சின்ன வயதிலை பார்த்தது. இப்ப அவள் கிடுகிடுவென வளர்ந்து மதாளிச்சு ஒரு குமரி போல ஆகிவிட்டாள். பாக்கியத்தை உரிச்சுவைச்ச மாதிரி… சீ இவள் இன்னும் கொஞ்சம் கூட வடிவு. பயத்திலை முகமெல்லாம் வேர்த்து மினுப்புக்காட்டி நிற்கின்றாள். பையனை அவர் ஒருபோதும் பார்த்ததில்லை. என்றாலும் வாட்டசாட்டமான ஆம்பிளைதான். மீசை இப்பொழுதுதான் கொஞ்சம் அரும்பி எட்டிப் பார்த்தது.
”சாமத்தியவீடு முடியமுதலே கிழம்பிவிட்டாய் என்ன?” வள்ளியம்மையைப் பார்த்துக் கேலி செய்தார் உடையார். அவள் தலையைத் தொங்கப்போட்டபடி மோகனை இன்னும் நெருக்கி நின்றுகொண்டாள்.
விறுவிறெண்டு வீட்டிற்குள் புகுந்து, கதவை மூடிவிட்டு,
விளக்கொளியைத் தணித்தார்.
வீட்டுவளவிற்குள் மனிதர்களின் ஆரவாரம் கேட்டது. நடந்ததை அறிந்திருப்பார்களோ? ஐயுற்றார் உடையார். கதவு தட்டும் சத்தம் கேட்டது. உடனே திறக்கக்கூடாது. இன்னும் கொஞ்சம் கூடத் தட்டட்டும் என்று விட்டு வைத்தார். பின் கண்களைக் கசக்கிக்கொண்டே கதவை மெல்ல நீக்கினார். வெளியே சிலர் தீப்பந்தங்களுடன் நின்றனர்.
“ஐயா… காப்பாத்தவேணும் ஐயா…. தப்பு நடந்து போச்சையா…” அகத்தன் மன்றாடினான்.
“காப்பாத்துறதுக்கு நானென்ன கடவுளே! விஷயத்தை சொல்லு அகத்தன்… என்ன நடந்தது?”
“வள்ளியம்மையை ஆரோ தூக்கிக்கொண்டு ஓடிட்டான் ஐயா…” பாக்கியம் கீரிட்டாள்.
“ஆரெண்டு தெரியுமோ?”
“சரசுவின்ரை மகன் தான் கொஞ்ச நாளா வள்ளியம்மைக்குப் பின்னாலை திரிஞ்சவன் எண்டு சிலபேர் சொல்லினம். அவன் தான் எண்டா இக்கணம் பிரச்சினை பெருக்கப் போகுது ஐயா… வள்ளியம்மையின்ரை கழுத்தை வெட்டிப் போடுவான்கள் ஐயா…” பாக்கியம் அவிழ்ந்து விழுந்த கூந்தலை அள்ளி முடிந்தபடி நடுங்கினாள். இந்த அரவம் கேட்டு கமலம் கண் விழித்தாள். வெளியே வந்தாள்.
“ஏதோ என்ரை மகன் தான், உன்ரை பிள்ளையைத் தூக்கிக் கொண்டு ஓடினமாதிரியல்லே கிடக்கு. இஞ்சை என்னத்துக்கு வந்தனியள்” கமலம் சத்தம் போட்டாள்.
“மூடு வாயை… நீ உள்ளுக்கை போ கமலம்” கூட்டத்தின் முன்னே கமலத்தின் கை ஓங்குவதை விரும்பாத உடையார் கொக்கரித்தார்.
“ஐயா… உங்கடை சொல்லை ஊர் கேட்கும் எண்டபடியாலைதான் வந்தனாங்கள். வள்ளியம்மையை பெடியனோடை சேரவிடாமல் வெட்டிப் போடவேணும் ஐயா…. பிரிச்சு விடுங்கோ ஐயா… இல்லாட்டி இந்த ஊரிலையே நாங்கள் இருக்கேலாது” பாக்கியம் தொடர்ந்து அழுது குழறினாள். அகத்தன் அவளுக்குப் பின்னாலே கையைக் கட்டியபடி நின்றான்.
“எல்லாரும் நான் சொல்லுறதைக் கவனமா கேட்டுக்கொள்ளுங்கோ… சரசுவின்ரை மகன் இயக்கத்துக்குப் போட்டான். அவன் தான் வள்ளியம்மையைக் கூட்டிக்கொண்டு போனதெண்டு நீங்கள் சொல்லுறியள். இரண்டுபேரையும் தேடிப்பிடிச்சு இஞ்சை கூட்டிக்கொண்டு வந்தால் ஏதாவது செய்யலாம்.
இப்ப இரவு நேரம் எண்டபடியாலை ஒண்டும் செய்ய முடியாது. நாளைக்குக் காலமை சரசுவையும் புருஷனையும் ஆள் விட்டுக் கூப்பிடுறன். அவை என்ன சொல்லினம் எண்டதைப் பாப்பம். இப்ப நீங்கள் எல்லாரும் வீட்டை போங்கோ” உடையார் அதற்கொரு முற்றுப்புள்ளியை தற்காலிகமாக போட்டார்.
அவர்கள் கலைந்து போனதும், படுக்கை அறைக்குள் நுழைந்து கமலத்திற்கு சமாதானம் சொல்ல எண்ணினார். கமலத்தின் குறட்டை ஒலி மருந்து மாத்திரைகளுக்கும் கட்டுப்படாது சீறி எழுந்தது.
ஒஃபிஸ் றூமிற்குள் சென்று ருது விழா அழைப்பிதழை எடுத்தார். அதன் பின் அட்டையில் ஏதோ கிறுக்கினார்.
தம்பதிகள் தங்கியிருந்த பத்திக்குச் சென்றார். இரண்டுபேரும் நிலத்திலே குந்திக்கொண்டிருந்தார்கள்.
“நான் தாற இந்த விலாசத்துக்குப் போங்கோ. கிளிநொச்சிக்கு பஸ் பிடிச்சுப் போய், பிறகு உள்ளுக்கையும் போகவேண்டி வரும். விடியக்காலமை ஐஞ்சு நாப்பத்தைஞ்சுக்கு தெல்லிப்பழைச் சந்திக்கு பஸ் வரும். சைக்கிளையும் ஏத்திக் கொண்டு போங்கோ. பிறகு எல்லாத்தையும் பாப்பம்.
இப்ப போகேக்கை டச்சு றோட் பக்கமாப் போங்கோ. கவனம்.”
அவர்கள் இரண்டுபேரும் கும்பிட்டபடியே, அந்தக்
கடிதத்தையும் வாங்கிக் கொண்டு தலை தெறிக்க ஓடினார்கள்.
•
விடிய ஆள் விட்டுக் கூப்பிட்டபோது சரசு மாத்திரம் ஓடோடி வந்தாள்.
“ஐயா… விடிய ஐஞ்சு மணிபோல என்ரை வீட்டுக்கும் கொஞ்சப் பேர் வந்தவை.
மோகன் வீட்டிலை நிண்டால்தானே…. அவன் வீட்டுக்கு வந்து மாசக்கணக்காகுது…” ஓடி வந்ததால் சரசுவின் மூச்சு பதறியது.
“அது இருக்கட்டும் சரசு…. உன்ரை மகன் அகத்தன்ரை பெட்டையைக் கிழப்பிக்கொண்டு போட்டான் எண்டு கதையடிபடுது… நீ என்ன சொல்லுறாய்?”
“உதென்ன கதை ஐயா கதைக்கிறியள்? அவங்கள் சொல்லுறான்கள் எண்டு நீங்களும் நம்புறியளே! அகத்தன்ரை பெட்டைக்கு பதினைஞ்சு வயதும் இருக்காது….. என்ரை மகன் இப்ப இயக்கம் ஐயா!”
“இல்லை… ஒரு பேச்சுக்குக் கேக்கிறன். அப்பிடி நடந்திட்டுது எண்டா என்ன செய்யப் போறாய்? நீ எங்கடை ஆக்கள். அகத்தன் வேறை பகுதி…”
“சாதி என்னய்யா சாதி… மனிசர் கிடக்கிற கிடைக்கை சாதியும் மண்ணாங்கட்டியும்…. ஆனாலும் இது நடக்கக் கூடாது ஐயா…”
“பிறகும் பார்… விசர்க்கதை கதைக்கிறாய்…!”
“இல்லை ஐயா… நான் சொல்லவாறது என்னண்டா…”
“எனக்கு விசரைக் கிழப்பாதை சரசு…. சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு சொல்லுறாய், பிறகு நடக்கக் கூடாது எண்டு சொல்லுறாய். சொல்லுறை விளக்கமா சொல்லு. சுருக்கமாச் சொல்லு..”
“அண்ணா தங்கைச்சியைக் கலியாணம் செய்யலாமோ ஐயா?”
உடையாருக்குக் கோபம் வந்தது. சரசுவை மேலும் கீழும் பார்த்தார்.
“நீயும் இப்ப குடிக்கிறாயா? உன்ரை புருஷன் இப்ப உனக்கும் குடிக்கப் பழக்கிப் போட்டானா?”
“இல்லை ஐயா… நான் என்ன…”
“நீ என்ன சொல்லவாறது… பொறு… இதுக்கு மறுமொழி சொல்லு முதலிலை” கோபம் கொப்பளிக்க அருகேயிருந்த விளக்குமாற்றுக் கட்டை எடுத்தார் உடையார்.
“இரண்டு பேருக்கும் அப்பன் ஒருத்தன் தானே!” சொல்லிவிட்டு, அடி விழுவதற்குள் ஓட்டம் பிடித்தாள் சரசு.
உடையார் திகைத்தார். எடுத்த விளக்குமாற்றுக்கட்டால் தனக்குத்தானே அடித்துக் கொண்டார்.
•
No comments:
Post a Comment