Thursday, 18 April 2024

ஏன் போட்டிகளுக்கு எழுதவேண்டும்? - கங்காருப்பாய்ச்சல்கள் (42)

நாம் ஒரு படைப்பை எழுதி, பத்திரிகை/சஞ்சிகைகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ பிரசுரிக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள், அந்தப் படைப்புப் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை எப்படி அறிவது? படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே கடந்து சென்றுவிடுகின்றார்கள். இணையத்தளங்களில் முகத்துக்காக சில முகத்துதிக் குறிப்புக்கள், விருப்பக்குறீடுகளைப் போட்டுவிட்டுக் கடந்து விடுகின்றார்கள்.

போட்டிகளுக்கு அனுப்பும்போது அந்தப் படைப்புகளை நடுவர்கள் படிக்கின்றார்கள். போட்டியில் பரிசு கிடைத்துவிட்டதென்றால், போட்டியில் பங்குபற்றியவர்கள் படிக்கின்றார்கள். தங்கள் படைப்பைக் காட்டிலும், பரிசு பெற்றவர்களின் படைப்பில் அப்படி என்ன விசேசம் இருக்கின்றது என ஆராய்கின்றார்கள். வாசகர்கள் கூட பரிசு பெற்ற படைப்புகளை வாசிக்க விருப்பப்படுகின்றார்கள்.

போட்டியில் வென்ற படைப்புகளை நீங்கள் ஓகோ என்று பார்க்கத் தேவையில்லை. அந்த நேரத்தில் வந்த படைப்புகளில் சிறந்தவை அவை. ஆனால் அவை வாசிக்கத் தகுந்த படைப்புகள். ஒரு படைப்பை எழுதிவிட்டு, பிரசுரமாவதற்கு முன்னர் நண்பர்கள் வாசகர்களிடம் வாசிக்கக் குடுத்தது போல என எடுத்துக் கொள்ளுங்களேன்.

இன்று எழுத்தாளர்களைக் கவனிக்காது, தமது வட்டம் சார்ந்தவர்களை மாத்திரம் முதன்மைப்படுத்துபவர்களின் மத்தியில், போட்டிகளே எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருபவை.

அதை விடுத்து ஒரு படைப்பைப் பிரசுரித்துவிட்டு, அதை மின்னஞ்சல்கள் மூலம் பலருக்கும் அனுப்பிவிட்டோ அல்லது ரெலிபோனில் கதைத்தோ புகழ்ச்சிகளைப் பெற்றுக் கொள்வதில் என்ன இருக்கின்றது? வாசகர்களை வலிந்து பெற்றுக்கொள்ளக் கூடாது.

இளம் எழுத்தாளர்களே! உங்கள் படைப்புகளை பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்பி உங்களைப் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்புவதால், வித்தியாசம் வித்தியாசமான அமைப்புகள், நடுவர்கள் உங்கள் படைப்புகளைப் பார்வையிடுவார்கள். 

No comments:

Post a Comment