பணம் படைத்த, செல்வாக்குள்ள இலக்கியவாதிகள் சிலர் காந்தம்
போன்றவர்கள். கடதாசிப் பேப்பரில் உள்ள இரும்புத்துகள்கள், அதன் பின்னால் உள்ள காந்தத்தின்
இழுவைக்கு அசையுமாப் போல் பத்திரிகைக்காரர்களும் சஞ்சிகைக்காரர்களும் அசைகின்றார்கள்.
நமக்கென்னவோ அற்பத்தனமான இரும்புத்துகள்களும் கடதாசிப் பேப்பருமே தெரிகின்றன. பின்னால்
உள்ள காந்தம் தெரிவதில்லை. காலமும் அதன் சுவடுகளில் போகும் இலக்கியங்களும், விளக்கில்
விழுந்த விட்டில்கள் போல் தத்தளிக்கின்றன.
°
நாம் யாருக்காக எழுதுகின்றோம். மக்களுக்குத் தானே!
இதில் நாம் ஏன் இன்னொரு எழுத்தாளரின் விமர்சனத்தைப் பெரிது
பண்ண வேண்டும்? எழுத்தாளர் என்பவர் மக்கள் கூட்டத்தினரின் ஒர் அங்கத்தவரே தவிர வாசகர்
கூட்டத்தைப் பிரதிபலிப்பவர் அல்லவே.
வாசகப் பரப்பிலிருந்து வரும் விமர்சனத்தையே நாம் பெரிதும்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுவும் ஒன்றிரண்டு விமர்சனங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு
எடை போடாமால், ஒட்டுமொத்த விமர்சனங்களையும் வாசித்து சமன்செய்து சீர் தூக்கிப் பாருங்கள்.
°
‘உந்தக் கதை கவிதை நாவல் எல்லாம் சுத்த வேஸ்ற். வாழ்க்கைக்கு
உதவாது. அபுனைவு நூல்கள்தான் வாழ்க்கைக்கு உதவும்.’ என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்கின்றார்,
அவர் புனைவு நூல்களைப் படிப்பது இல்லை. தூக்கி எறிந்துவிடுவார்.
வரலாற்று நூல்கள் மற்றும் அபுனைவுப் படைப்புகளையே அவர் விரும்பிப் படிக்கின்றார்.
அவருக்கு நான் எந்தவிதமான விளக்கம் கொடுக்கலாம்?
•
நவீன தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளைத் தவிர ஏனையன எல்லாம்
எப்போதோ எழுதப்பட்டுவிட்டன. அவற்றை காலத்துக்கு ஏற்ற விதத்தில் நவீனமயப்படுத்தி எழுதுவதுதான்
இன்றுள்ளவர்களின் வேலை.
•
No comments:
Post a Comment