Friday, 2 November 2018

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2018

2018 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.

நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது.

மொத்தம் போட்டிக்கு வந்த கதைகள் : 337

பரிசுபெற்ற சிறுகதைகள் விவரம்

முதல் பரிசு:

பாம்பும், ஏணியும் - கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா)

இரண்டாம் பரிசு:

குறத்திகள் ஆடும் மூன்றாம் ஜாமம் - சிவக்குமார் முத்தய்யா (சென்னை)

மூன்றாம் பரிசு :

சபீரின் உம்மா கதை சொல்வதில்லை - இடலாக்குடி அசன் (நாகர்கோவில்)

Tuesday, 23 October 2018

தெரிவு – குறும்கதை


இலக்கியவிழா. திரு. சின்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக ஈழத்திலிருந்து வருகை தந்திருந்தார். சின்ராஜ் பிரதேசச் செயலாளர், எழுத்தாளர், கல்விமான் என்ற மகுடங்கள் கொண்டவர். அவரது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் எங்கோ நிரம்பப் பழகியவர் போன்றிருந்தது.

ஆம்! சின்ராஜ் வேறு யாருமல்ல. என்னுடன் பதினொராம் வகுப்பு வரையும் ஒன்றாக விஞ்ஞானம் படித்த சின்னராசாதான்.

Monday, 15 October 2018

’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)

இது ஒரு சோசலிச இலக்கியம். கதை கிர்கீஸிய (Kyrgyzstan) என்னும் இடத்தில் நடைபெறுகின்றது. இதன் அயல் நாடுகளாக கஸ்கஸ்தான், சீனா இருக்கின்றன. இந்தக்கதையின் கதைசொல்லி---கிச்சினே பாலா---தன் பதின்ம வயதில் நடந்தவற்றைச் சொல்கின்றான். அப்போது அவனுக்கு வயது 15. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம். அவனது சொந்தபந்தங்கள் கூர்ஸ்க்கிலும் ஒர்யோலிலும் உள்ள போர்முனைகளில். பெண்களும் போர்முனைக்குச் செல்ல இயலாதவர்களும் சிறுவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள். வயலில் வேலை செய்வதும் தானியத்தை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்வதும் அவன் வேலை. அவனது இரண்டு சகோதர்களும் போர்முனையில். தாயாரும் தங்கையும் வீட்டில். முதிய தகப்பனார் தனது தச்சுக்கூடத்தில் வேலை செய்கின்றார்.

அவனது பக்கத்து வீட்டு (சிறியவீடு என்று அழைப்பார்கள்) நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட, அவரது விதவையை அவனின் தகப்பனார் மணந்து கொள்கின்றார். விதவையின் இரண்டு மகன்கள்கூடப் போர்முனையில். மூத்தவன் ஸாதிக் மணம் முடித்து சிறிது காலத்திற்குள்ளாகவே போர்முனைக்குச் சென்றுவிட்டான். ஸாதிக்கின் மனைவிதான் ஜமீலா. அவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள்.

Sunday, 9 September 2018

தகவல் பகிர்வு : இலங்கைத் தமிழ்க் குறும்படத் திரைக் கதைப் போட்டி 2019




காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்
நான்காவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)

குறும்படத் திரைக் கதைப் போட்டி : ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம் - இடப்பெயர்வு – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக « குறும்படத் திரைக் கதைப் போட்டி » நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக « இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை » எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்திருக்கிறது.