Monday, 23 December 2024

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி - 2025

 



அதிஷ்டம் காத்திருக்கிறது வெல்லுங்கள் 1,50,000 ரூபாய்கள்

தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.

15 பரிசுகள், மொத்தம் 1,50,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.

முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000.

இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.

மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 20,000.

நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000.

ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 10,000.

10 பாராட்டுப்பரிசுகள் இலங்கை ரூபா தலா – 5000.

குரு அரவிந்தனின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1600 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவர்களாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாகவெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.

மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும். உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025

போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.

மின்னஞ்சல்: : kurufanclub@gmail.com

இணையம்: : https://kurunovelstory.blogspot.com/, http://tamilaram.blogspot.com/

https://canadiantamilsliterature.blogspot.com/

இந்த அறிவிப்பினை நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். kurufanclub@gmail.com

Friday, 13 December 2024

அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதை போட்டி -2024 முடிவுகள்

இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச் சிறுகதைப் போட்டி அறிவித்தேன். முடிவுத் தேதி 3-011-2024.

வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச் சிறுகதைப் போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எழுத்தாளர்களும் இந்தப் போட்டிக்கு மனம் உவந்து எழுதி எங்களைக் கௌரவித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டி நடைபெறும் தகவலைப் பல்வேறு இலக்கியக் குழுக்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் முழுமனதோடு பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியமாகும். அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. இந்தப் போட்டிக்கு மொத்தம் 355 கதைகள் வந்து சேர்ந்ததை பெருமகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன்.

Sunday, 17 November 2024

குவிகம் குறும் புதினங்கள் - அறிமுகம்



குவிகம் குறுநாவல் ஆகஸ்ட் 2024

காந்திமதியின் காதலன் – கல்கி

`காந்திமதியின் காதலன்’ ஒரு குறுநாவல் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்குச் சான்றாகின்றது. அதனால்தான் காலம் கடந்தும் இன்றும் வாழ்கின்றது. இரண்டு ஸ்வாமிமார்களை எப்படி முடிச்சுப் போட வைக்கின்றார் என்பது நாவலின் உச்சம்.

இரண்டாம் இடம் – அபிமானி

சீரான எழுத்து நடை. வித்தியாசமான உவமைகள். ஏழை மாணவன் மலையரசனுக்கும், நேர்மையான ஆசிரியருக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் கதை. அதிகாரம் மேலிடத்தில் இருக்கும்போது, ஆசிரியரினால் என்ன செய்ய முடியும்? இங்கே இரண்டாம் இடம் எதுவென்பது தெட்டத் தெளிவாகவே தெரிகின்றது. சிறுவன் எடுக்கும் முடிவு எதிர்பாராத திருப்பம்.

குவிகம் குறுநாவல் செப்டெம்பர் 2024

மியாமி மிதவை – ஜமுனா ஜெகன்

ஃபெர்மூடா முக்கோணத்தையும், அதனூடாகப் பயணம் செய்யும் பாண்டியநாட்டு சரக்குக் கப்பலையும் இணைக்கும் கற்பனை செறிந்த மாயாஜாலக் கதை. திகிலும் மர்மங்களும் நிறைந்த ஃபெர்மூடா முக்கோணத்தை நேரில் எதிர்கொண்ட அனுபவம் இங்கே கிடைக்கிறது. இடையிடையே வாழ்க்கையின் தத்துவங்கள், காட்சிகளின் வர்ணனைகள் போனஸ்.

குழலினது யாழினிது - பெஷாரா

குழந்தைகள் உலகம் அழகானது. எத்தனை குழந்தைகள்! எத்தனை கேள்விகள்!! எல்லாரிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து அறிவுரைகள் சொல்கின்றாள் `அவள்’. அவள் யார்? அதுதான் கதை. கதை குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் தான்.


குவிகம் குறுநாவல் ஒக்டோபர் 2024

உயிர்மேல் ஆசை – வ.ச.நாகராஜன்

வஞ்சனையின்றி உறவுகளுக்கு உதவும் சுந்தரிக்கு, சுகவனேசுவரர் தரிசனம் சொர்க்கம். இன்று அவள் எல்லாவற்றையும் இழந்து முதுமையின் விளிம்பில். அவளைப் போலவே சுகவனேசுவரர் ஆலயமும் கவனிப்பாரற்ற நிலையில். திடீரென்று கிடைத்த புதையலை கோவிலுக்கே குடுத்துவிட்டு, சுகவனேசுவரர் தரிசனத்தைக் காண்பதற்காக அவளுக்கு உயிர்மேல் ஆசை வந்துவிடுகின்றது. சிறப்பான கதை.

ஓணான்குழி – ராஜேஷ் வைரபாண்டியன்

மூக்கையா, மொச்சை, குன்னிமுத்து, வீரச்சங்கிலி, கோட்டையன், வண்ணக்கிளி, தேன்சிட்டு என்று பாத்திரங்களை கதைக்குள் அறிமுகம் செய்யும் உத்தி சிறப்பு. கொள்ளை காதல் அமானுஷ்யம் மாந்திரிகம் நரபலி எனச் சம்பவங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, ஒரு சீரான நதியோட்டம் போல சொல்லிச் செல்கின்றார் ஆசிரியர்.

வேர்களும் விழுதுகளும் – வசந்தா கோவிந்தராஜன்

முதல் திருமணம் திருநெல்வேலியில் ஊர் உறவுகள் என்று ஏகத்துக்கும் தடல்புடல். அடுத்த தலைமுறை சென்னையில் சாதி மாறிக் காதல் கலியாணம். அப்புறம் மூன்றாவது தலைமுறை அமெரிக்காவில். அவசரக் காதல். திருமணம் ஆகாமலே கர்ப்பம். காதலனின் கொரோனா மரணம். வேர்களும் விழுதுகளும் அந்நியமாகிப் போகின்றன.