இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள்.
ஈசனும் சண்முகமும் ஆத்மநண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக - ஒரே அறையில் இருந்தவர்கள்.
"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.
"உங்களுக்கென்ன விசரா… இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை ஈசனின்ரை மகளின்ரை திருமணத்தைப் பாப்பம்."
"ஓம். ஓம். நீர் சொல்லுறதும் சரிதான். இப்ப மங்காவுக்கு ரெலிபோன் செய்தால், அவள் எங்களை விடமாட்டாள். வந்து தன்னோடை நிக்கச் சொல்லி நாண்டு கொண்டு நிப்பாள்."
வசந்தி சிங்கம் போல கர்ச்சித்தாலும், சமயங்களில் அவள் சொல்வதில் ஒரு நியாயத்தன்மை இருப்பதை உணர்ந்தார் சண்முகம்.
பிரயாணக் களைப்பு. நேர வித்தியாசம். வசந்தி படுத்ததும் உறங்கிவிட்டாள். சண்முகத்திற்கு உறக்கம் வரவில்லை. அருகே இருந்த நிலாமுற்றத்தில் நடை போட்டார். வெப்பம் கலந்த காற்று உடலை வருடிச் சென்றது.
திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்த 'சிட்னம்' கிராமம் கண் முன் விரிகிறது. அனேகமாக எல்லா
வீடுகளுமே காணியின் அகலப்பாட்டைத் தொட்டு நின்றன. வீதியில் இருந்து காணிகள் சற்றே
உயர்ந்திருந்தன. தூரத்தே 'சைலோ' போன்ற மூன்று உருளைகள் பழுப்பு நிறத்தில்
குத்திட்டு நின்றன. அருகே விமானநிலையம் இருந்தபடியால் அடிக்கடி விமானங்கள் எழுந்து
மிதந்தன.
முன் வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி குப்பை வண்டிலை வளவிற்குள்ளிருந்து வீதிக்கு இழுத்து வந்து கொண்டிருந்தாள். வண்டில் அவளைத் துரத்திக் கொண்டு சரிவு வழியே வந்தது. அந்தப் பெண் வீதியின் இருமருங்கையும் மிரண்டு பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் புகுந்தாள். அவளின் தோற்றமும் மிரட்சியும் அச்சொட்டாக மங்காவைப் போலவே இருந்தது. சண்முகம் ஆடிப் போய்விட்டார். கால ஓட்டத்தில் முதுமையடைந்து அல்லல்பட்டு களைத்துவிட்ட அவர், அருகேயிருந்த தூணைப் பிடித்துக் கொண்டார்.



