Wednesday, 16 July 2014

வரலாற்றுத் தடங்கள்

நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து ஊரைச் சுற்றிப்பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த நண்பன் குகநேசனுடன் உரையாடியதன் மூலம் அந்தச் சம்பவம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.

அது நடந்து நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.


அன்று அலுமினியம் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போயிருந்த இராசன் அண்ணை மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அந்த அதிசயத் தகவலைச் சொன்னார். அலுமினியம் தொழிற்சாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருக்கும் பிரதேசத்தில் இருந்து கீரிமலைக்குப் போகும் பாதையில் அமைந்துள்ளது.

சீமெந்துத்தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கற்கள் அகழ்ந்தெடுக்கும்போது அந்த அதிசய சம்பவம் நடந்தது. குவாறியில் டைனமற் வெடிக்கும்போது சிதறியகற்களுடன் நீரும் சீறிப் பாய்ந்தது. சிலநிமிடங்கள் நீடித்த அந்தக்காட்சியில், வானோக்கிப் பாய்ந்த நீர் மாவிட்டபுரம் கோபுரமளவிற்கு உயர்ந்ததை தான் அலுமினியம் தொழிற்சாலையில் இருந்து பார்த்ததாக அண்ணா சொன்னார். வெடித்த இடத்தில் ஒரு பெரிய  குகை இருந்ததாகவும் அது முடிவில்லாமல் சுரங்கமாகப் போவதும் ஒரு வரலாற்றுப்புதுமை என்றும் சொன்னார். அண்ணை சொல்லிவிட்டு தன்பாட்டில் மீண்டும் வேலைக்குப் போய்விட்டார். அவர் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அவருக்கு இளையவரான எனது அடுத்த அண்ணன் ஆனந்தன்.

மறுநாள் காலை சைக்கிள் கீரிமலையை நோக்கி விரைந்தது. நான் கரியரில் குரங்குக்குட்டிபோல தொங்கிக் கொண்டேன்.
ஒரு ஆளளவு விட்டம் கொண்ட குகை. ஒரு நேரத்தில் இரண்டு மூன்றுபேர் போகக்கூடிய வாசல். தலையை சற்று குனிந்து கொண்டுதான் உள்ளே செல்லவேண்டும். இல்லாவிட்டால் கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் கூரிய ‘விபோன்ற கற்கள் தலையைப் பதம் பார்க்கக்கூடும். உள்ளே நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. சுரங்கத்துள் சென்று ஒரு கை பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்களின் கைகளில் தீப்பந்தங்கள், மெழுகுவர்த்திகள், டோர்ச்லைட்டுகள் இருந்தன. அவர்களின் முகங்கள் எதையோ பார்த்துப் பயந்தது போல இறுகி இருந்தன. அதிகாலை ஒட்சிசன் சிலிண்டர்களுடன் புறப்பட்டிருந்த நான்குபேர்கள் அடங்கிய குழு ஒன்று, மூன்று மணித்தியாலங்கள் கழிந்த நிலையில் இன்னமும் திரும்பவில்லை என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அருகே ஒரு ஆலமரத்து வேரில் இருந்த வயதான ஒருவரைச் சுற்றி சிலர் சூழ்ந்து நின்றிருந்தார்கள். அவரது தாடி ஆலம் விழுது போல தொங்கிக்கொண்டிருந்தது. தாடியின் சிக்கை நீவிவிட்டபடியே ‘மருதப்புரவீகவல்லி... மருதப்புரவீகவல்லி... ‘ என்று அவர் முணுமுணுத்தபடி இருந்தார். என்னை அறியாமல் நான் அவரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

யார் இந்த மருதப்புரவீகவல்லி?

“உனக்கு மருதப்புரவீகவல்லியைத்தானே பார்க்கவேண்டும்! ஏறு சைக்கிளிலைபின்னாலே வந்த அண்ணா என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். என்னை அங்கே போகவிடாமல் தடுத்து, சைக்கிளிலே இருத்தினார்.
“மாவிட்டபுரம் கோவில் மேற்குவீதியிலை கடலை விற்கின்றாளே ஒரு கிழவி... அவள்தான் இந்தக்கிழவரின் வில்லிஎன்றார் அண்ணா. என் மனதிலே அந்தக்கிழவி ஒரு பிம்பமாகப் படிந்து கொண்டாள். அவளாகத்தான் இருக்க வேண்டும். ஒருமுறை சப்பறத்திருவிழாவின் போது அப்பா என்னைத் தோளிலே தூக்கி வைத்திருந்தபடி அங்கே பார்! என்ன தெரிகின்றது? என்று கேட்டார். ஒரே சனக்கூட்டம். சப்பறம் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது. நான் கூர்ந்து பார்த்துவிட்டு அப்பா... கடலைக்காரி தெரிகின்றாள்என்றேன். அவர் சிரித்துவிட்டு “அட விசரா... சுவாமி தெரியுது!என்றார்.

அப்படியே கோவில் வீதியை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு சைக்கிள் வீடு நோக்கி விரைந்தது. தூரத்திலேயே வைத்து அவளைக் காட்டிவிட்டு ஒரு ‘இத்துனூண்டுகடலையும் வாங்கித் தராமல் அண்ணை என்னைக் கூட்டிக் கொண்டு போனது கவலையாக இருந்தது.

அடுத்தநாள் யூனியன் கல்லூரியில் என்னுடன் படிக்கும் சகநண்பன் குகநேசன், ‘கீரிமலையில் இருந்து புறப்படும் அந்தச் சுரங்கப்பாதை குரும்பசிட்டியில் உள்ள கிணறு ஒன்றில் முடிகின்றது என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

அடுத்து வந்த சனிக்கிழமை நான் அண்ணா குகநேசன் மூவருமாக குரும்பசிட்டி நோக்கிச் சென்றோம். நண்பன் குறிப்பிட்ட அந்த வளவைப் பார்க்கப் பயமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த வீட்டுக்காரர் அப்படி ஒரு கிணறு அங்கு இல்லை என்று சொல்லி எங்களை விரட்டிவிட்டார். ஒரு காலடி தன்னும் அந்த வளவிற்குள் எடுத்து வைக்காமல் வீடு திரும்பினோம். குரும்பசிட்டிப் பேய்க்கிணற்றைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலை கொஞ்ச நாட்களாக இருந்தது.

அவன்தான் இப்பொழுது நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர் யாழ்குடாநாட்டில் போய் நிற்கின்றான்.

யாழ்குடாநாட்டு நீர்நிலைகள், கிணறுகள், வாவிகள் விசித்திரம் நிறைந்தவை. இவை பற்றி அறிய ‘மயோசின்எனப்படும் சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்திற்குப் பயணிக்க வேண்டும்.

ஆதியில் இலங்கை இந்தியாவுடன் இணைந்திருந்தது. மயோசின் (Miocene) என்ற வரலாற்றுக்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் தமிழ்நாட்டுக்கும் யாழ்ப்பாணம் – புத்தளம் பிரதேசத்திற்கும் இடையில் அமைந்த நிலப்பரப்பு கடலினுள் மூழ்கியது. எல்லைப்பகுதிகளில் அமைந்த, கடலுள் மூழ்கிய நிலத்திணிவு காலகதியில் கடல் மட்டத்திற்கு மேல் எழுந்தது. அதன்காரணமாக கடல் ஓடுகள், கடற்தரை வாழ் உயிரினங்கள் நிலத்தின் மேற்பரப்பில் படிந்தன. சுண்ணப்பாறைகள் உருவாகின. இதனால்தான் கிணறு தோண்டும்போது சங்கு, சிப்பி போன்றவற்றை அங்கே காணக்கூடியதாக உள்ளது. இந்தச் சுண்ணக்கற்பாறைகள் வன்னியில் மிக ஆழத்திலும், யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் மேற்பரப்பிலும் உள்ளன.

நிலத்தினுள் ஊடுருவிச் செல்லும் மழைநீர், இந்தக் கடினமான சுண்ணக்கற்பாறைகள் மீது தேங்கிக் கிடக்கின்றது. கிணறு தோண்டும்போது இந்தத் தரைக்கீழ் நீர் ஊற்றுக்கள் கிணற்றினுள் வந்துவிடுகின்றது. இத்தகைய ஊற்றுக்கண்களில் நீண்டகாலமாக நடக்கும் இரசாயன மாற்றங்கள் காரணமாக தரைக்கீழ் நீரோடும் குகைகள் தோன்றின. சிறியதிலிருந்து பலகிலோமீற்றர்கள் தொடராக விரிந்து செல்லும் பெரிய குகைகள் என இத்தகைய பலகுகைகள் யாழ்குடாநாட்டில் உள்ளன. புத்தூர் நிலாவரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, மானிப்பாயில் இடிகுண்டுக்கிணறு என்பவை பிரசித்தம். நிலாவரைக்கிணற்றில் பந்தைப் போட்டால் கீரிமலைக் கேணியில் மிதக்கும் எண்டு சொல்லுவார்கள். கீரிமலைக்கேணியின் தென்கீழ்மூலையில் ஒரு பெரிய குகை ஒன்று காணப்படுவதை இன்றும் காணலாம். இதன் மூலமே கேணிக்கு நல்லதண்ணீர் வருகின்றது என்று சொல்லுவார்கள். இருநூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த கீரிமலைக்கும் மாவிட்டபுரத்திற்குமிடையே தொடர்புபட்ட ஒருவர்தான் இந்த மாருதப்புரவல்லி.


கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே மதுரையை ஆட்சிபுரிந்த உக்கிரப்பெருவழுதி (திசையுக்கிரசோழன்) மன்னனின் மகள் மாருதப்புரவல்லி. இவள் சாபம் ஒன்றின் காரணமாக குதிரைமுகத்துடன் காணப்பட்டதுடன் குன்ம நோயினாலும் வருந்தினார். சாந்தலிங்க முனிவர் என்பவரின் அறிவுறுத்தலினால் தென்னிந்தியாவிலிருந்து கீரிமலை வந்து, நகுலமுனிவரை கண்டு வணங்கி, அங்கேயுள்ள நன்நீரூற்றில் நீராடி வந்தார். அங்கே இவருடைய நோய் நீங்கியது. நோய் நீங்கிய அவர் அங்கே ஒரு கோவில் அமைக்க தான் விரும்புவதாக நகுலமுனிவரிடம் சொன்னார். அவர் அங்கேயுள்ள காசிலிங்கப்பெருமானுக்கு கோயில் வேண்டாம் என்றும், கோயிற்கடவை என்னும் இடத்தில் சடையர் என்னும் முதியவர் ஒருமாமரத்தின் கீழே வேல் ஒன்றை வைத்து வழிபடுவதாகவும் அங்கே ஒரு கோவிலை அமைக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு மதுரையில் இருந்து சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து கோயிற்கடவையிலே ஒரு கோயிலை நிர்மாணித்தார்கள். மாருதப்புரவல்லியின் குதிரை முகம் நீங்கியதை நினைவில் கொண்டு அதற்கு மா விட்ட புரம் எனப் பெயரும் சூட்டினார்கள்.


பண்டைக்காலத்தில் வட இலங்கை நாகசாதியினரின் குடியிருப்பாக இருந்தது. கந்தரோடை அதன் தலைநகராக இருந்தது.

சிங்கைபுரம் அல்லது சிங்கைநகர் (உத்த்ரப்பிரதேசம், பூநகரி) எனப்படும் இடத்தில் தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய பல தமிழ்க்குடும்பங்களும், கலிங்கதேசத்திலிருந்து வந்து குடியேறிய சில குடும்பங்களும் இருந்தன. கலிங்கதேசத்தில் இருந்து வந்த மக்களுக்கு உக்கிரசிங்கன் த்லைவனாக இருந்தான்.

நாகசாதியினர் காலத்துக்குக் காலம் தமிழரோடு கலந்தனர். காலப்போக்கில் தமிழகத்திலிருந்து பல குடிகள் வந்திறங்க வடபகுதி தமிழ்க்குடியிருப்பாக மாறியது. அப்போது சிங்கள அரசர்கள் அனுரதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையின் பல பகுதிகளை ஆண்டனர். அன்றியும் தமிழ் அரசரும் காலத்துக்குக்காலம் அங்கு ஆண்டு வந்தனர். யாழ்ப்பாணகுடாநாட்டில் பெளத்தமும் சிங்களவரும் ஆதிக்கம் பெற்றதால் உக்கிரசிங்கமன்னன் தனது இருப்பிடத்தை பூநகரிக்கு மாற்றிக் கொண்டான்.

உத்தரப்பிரதேசத்தில் அடிக்கடி கலகங்கள் மூண்டன. அக்காலத்தில் அனுரதபுரத்தை ஆண்டுவந்த மகிந்தன் என்ற சிங்கள அரசன், மாதோட்டத்தில் எழுந்த புரட்சியை அடக்கி, உத்தரப்பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

பின்னர் தப்புளன் என்பான் அவ்வரசுக்கு உரிமைகோரி, மகிந்தனுடன் போர் புரிந்து கலகம் செய்து வந்தான். நாட்டில் அமைதி குன்றிய நிலையைப் பயன்படுத்தி, அப்போது வலிமையோடு விளங்கிய உக்கிரசிங்கன் வடபகுதியிலுள்ள தலைவர்களையேல்லாம் அடக்கி போரிற்கு தலைமை தாங்கினான். போரில் நாகதீபத்தை வென்றான். கடற்கரைப்பிரதேசமான சிங்கைநகர் பாதுகாப்பற்று இருந்ததால், அங்கிருந்து வெளியேறி பகைவருக்கு எளிதில் அகப்படாத பழைய நாகர் தலைநகராகவிருந்த கந்தரோடையை (கதிரமலை) தலைநகராக்கிக் கொண்டான்.

அரசுகெட்டிலேறிய உக்கிரசிங்கன் மாவிட்டபுரத்தில் இருந்துவந்த மருதப்புரவீகவல்லி என்ற அரசகன்னிகையைக் கண்டு அவளைத் தன் வாழ்க்கைத்துணைவி ஆக்கிக் கொண்டான்.


நண்பனுடைய பதற்றத்துக்குக் காரணம் இதுதான் – போர் முடிவுக்கு வந்த சமயம், யாரோ சிலர் அந்தக் கிணறுகளில் ஒன்றுக்குள், மாலைகள் சகிதம் விழுந்தெழும்பி தப்பி ஓடியிருக்கின்றார்கள். கிணற்றுக்கட்டில் இரத்தக்கறைகளும் திருநீறும் சந்தணப்பொட்டும் இருப்பதையும் கண்டிருக்கின்றான்.

எந்த இடத்திலை உந்தக்காட்சியைப் கண்டாய் எண்டு முதலிலை சொல்லு? என்று நான் கேட்டேன்.

“நான் சொல்லமாட்டன். கடைசி வந்தும் சொல்லமாட்டன் என்று அடம் பிடித்தான் அவன்.

“முந்தி உப்பிடித்தான்.... மருதப்புரவீகவல்லியும் உக்கிரசிங்கனும் ஒளிச்சிருந்த இடத்தைக் காட்டிறேன் எண்டு சொல்லி, குரும்பசிட்டிக்கை கூட்டிக்கொண்டு போய்ப் புருடா விட்டனி. அப்ப செமத்தியாப் போட்டிருந்தாங்கள் எண்டால் இப்ப போயிருக்கமாட்டாய். நான் நினைக்கிறன்... ஆராவது மீளக்குடியிருக்க வந்த சனங்கள், இனியாவது நல்லபடியா இருக்கவேணுமெண்டு கடவுளுக்கு நேர்ந்து ஆட்டை வெட்டி சுவாமிக்கு பலி குடுத்திருக்குங்கள்.

“அதுக்கு கிணறுதான் கிடைச்ச இடமோ?  நீ நம்பினா நம்பு, நம்பாட்டி விடு.

ஊருக்குப் போனா ஊரைப் பாத்திட்டு வந்திடவேணும். சும்மா உங்கை நிண்டு பினாத்தப்படாது.


No comments:

Post a Comment