Sunday, 20 July 2014

அசலும் நகலும்


1.
"ராகவி! விளக்கோடை விளையாடாமல் அண்ணாவுக்குப் பக்கத்திலை போய் இருந்து படி" வாசுகி குசினிக்குள் இருந்து சத்தம் போட்டாள்.
"அப்பா இருட்டுக்கை நிண்டு உடுப்பு மாத்துறார். அதுதான் விளக்கை எடுத்துக் கொண்டு போனனான்."
ஒரு குட்டி மேசை மீது புத்தகம் கொப்பிகளைப் பரப்பி வைத்துக் கொண்டு விளக்கின் வருகைக்காகக் காத்திருந்தான் ராகுலன். அவன் அடுத்த வருடம் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத இருக்கின்றான். ராகவி வகுப்பு ஆறு படிக்கின்றாள். இந்த ஒரு விளக்குத்தான் எல்லாத் தேவைகளுக்கும் இங்கு நகர்ந்து திரிகின்றது.
"அப்பா ஏனாம் பிந்தி வந்தவர்?" கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் படலை வரையும் சென்று படலைக் கொழுக்கியைப் பூட்டினாள் வாசுகி. மாரி காலம். நேரத்திற்கே இருட்டி விட்டது. ஊர் அவசர அவசரமாக அடங்கிக் கொண்டிருந்தது. தூரத்தே 'ஆமிக் காம்' ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
குளிர் நீரில் முகத்தைக் கழுவி விட்டு ஹோலிற்குள் இருந்த வாங்கில் வந்து இருந்தான் தேவன். அவன் நெஞ்சு இன்னமும் படபடத்த படியே இருந்தது. அவனுக்கு நேர் எதிராக 'அந்தப் படம்' சுவரில் தொங்கியது. மனம் கனத்தது.
வாசுகி இன்னமும் அவனுடன் முகம் குடுத்துக் கதைக்கவில்லை. "என்னையும் பிள்ளைகளையும் கனடாவுக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ!" என்று காலையும் சத்தம் போட்டிருந்தாள். "நான் என்ன செய்யிறது? அது அதுக்கும் ஒரு கொடுப்பனவு வேணும்." கடந்த பத்து வருடங்களாக இந்த உரையாடல் தொடர்கிறது.
வாசுகி சாப்பாட்டை தேவனுக்குப் பக்கத்தில் தொப்பென்று வைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள். வெள்ளித்தட்டு ஓசையெழுப்பியது. தேவன் பிள்ளைகளைப் பார்த்தான். அவர்கள் இருவரும் படித்துக் கொண்டு இருந்தார்கள்.
"ராகுலனும் ராகவியும் சாப்பிட்டிட்டினமா?"
"ஓம்."

"அப்ப நீரும் சாப்பாட்டைப் போட்டு எடுத்துக் கொண்டு வாரும். சேர்ந்து சாப்பிடுவம்."
"நீங்கள் சாப்பிடுங்கோ. நான் பிறகு சாப்பிடுறன்."
"மாதக் கடைசி எண்டபடியாலை 'பாங்'கிலை வேலை கூடிப் போச்சு. ஊரடங்குக்குள்ளை வந்திட வேணுமெண்ட அவசரத்திலை சைக்கிள் உழக்கினதிலை களைச்சுப் போனன்."
"கனடாவிலை இருந்து ரெலிபோன் வந்தது ...." வாசுகி பேச்சை ஆரம்பிக்க "வாசுகி! வாசுகி!!" என்றபடி நெஞ்சைப் பொத்தினான் தேவன்.

"வாசுகி காலெல்லாம் குளிர்ந்து கொண்டு வாற மாதிரிக் கிடக்குது."
"நீங்கள் கெதி கெதியா சைக்கிள் ஓடி வந்திருக்கிறியள். ஆரேனும் உங்களைத் துரத்தினவங்களே? இதிலை மெதுவா சரிஞ்சு படுங்கோ. ராகுலனும் ராகவியும் இஞ்சை ஓடி வாங்கோ. அப்பாவுக்கு இந்த மட்டையாலை விசுக்குங்கோ."
வாசுகி படுக்கை அறைக்கு விரைந்தாள். மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் ஏழு மணியைத் தாண்டியிருந்தது. நெஞ்சு திக்கென்றது.
அப்பொழுது கனடாவில் நேரம் காலை எட்டு மணி. எங்குமே பனி - மலை போல் குவிந்திருந்தது. ரெலிபோன் அடிக்கிறது.
"அம்மா எடம்மா போனை" போர்வைக்குள் இருந்தபடி பூரணி முனகினாள். சாவித்திரி ரிசீவரைத் தூக்கினாள்.
"போச்சு. எல்லாம் போச்சு" என்றபடி ரெலிபோன் வயரையும் இழுத்துக் கொண்டு நிலத்திலே சரிந்தாள் சாவித்திரி.
"என்னம்மா? என்ன நடந்தது?" பதறியபடியே ரெலிபோனை வாங்கிய பூரணி நிலை குலைந்து நின்றாள்.
வாசுகியின் கணவன் தேவன் 'காட் அற்றாக்'கில் யாழ்ப்பாணத்தில் இறந்து போனான். செய்தியை தொலைபேசியில் கேட்டதும் எல்லாரும் திகைத்துப் போனார்கள். இத்தனைக்கும் அவனுக்கு வயது நாற்பத்தி மூன்று.
வாசுகி பூரணியின் இரண்டாவது தங்கை. அவள் மாத்திரம்தான் அவர்கள் குடும்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தாள். பூரணி வீட்டிற்கு மூத்தவள். அப்பா - மாணிக்கவாசகரும், அம்மா - சாவித்திரியும் அவர்களுடன்தான் இருக்கின்றார்கள். "அவளைக் கனடா கூப்பிடுங்கோ எண்டு எத்தினை தரம் சொல்லியிருப்பன். ஆராவது கேட்டனீங்களே!" சாவித்திரி கைக்கெட்டிய தூரத்திலிருந்த பொருட்களை எல்லாம் இழுத்து நிலத்திலே சரித்தாள். அறைக்குள்ளிருந்து பழைய சினிமாப் படங்களில் வந்த நகைச்சுவைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவருக்கு காது கொஞ்சம் மந்தம். காது கேட்கும் காலங்களிலிருந்தே அவர் இங்கு ஒரு செல்லாக்காசு.
செய்தி நாலாபுறமும் பறந்தது. பூரணியின் கடைசித் தங்கை மதிவதனியும், தம்பி ஜெகதீசனும் அவர்களுக்குக் கிட்டவாகவுள்ள ஒரு 'கொண்டமினி'யத்தில் இருந்தார்கள்.
அடுத்த அரை மணி நேரத்தில் -
மதிவதனியின் வீட்டில் செத்தவீடு தொடங்குகிறது. குடும்பத்தவர்கள் எல்லாரும் ஒருமுறை கூடி நின்று அழுதார்கள். பூரணியின் கணவன் எட்வேட்டும் மதிவதனியின் கணவன் தர்மாவும் சுறுசுறுப்பானார்கள். தம்பி ஜெகதீசனும் மனைவியும் இன்னமும் வந்து சேரவில்லை.
"தேவன்ர போட்டோ இருந்தா ஒண்டு தாரும்" தர்மா மதிவதனியிடம் கேட்டான். அவள் அல்பங்களைக் கிளறி வாசுகியின் கலியாணவீட்டுப் படம் ஒன்றை எடுத்தாள்.
"தனிப்படம்  இல்லையே?" அவளை முறைத்துவிட்டு அதனை வாங்கிக் கொண்டான் தர்மா.
'கொண்டமினி'யத்திற்குக் கீழே ஏராளமான கடைகள். பத்து நிமிடத்தில் போட்டோவிலிருந்து முகம் பிரித்தெடுக்கப்பட்டு, பெருப்பிக்கப்பட்டு ஃபிரேமிற்குள் பொருத்தப்பட்டது. தேவன் புகைப்படத்தில் புன்முறுவலுடன் இருந்தான். தர்மா மேசை மீது அதை வைத்தான். குத்துவிளக்கிற்கு எண்ணெய் விட்டு எரிய வைத்தான். மேசையைச் சுற்றி உறவுகள் சூழ இருந்தார்கள். படம் வந்ததும் பெண்கள் தலைகளில் அடித்துக் கொண்டு அழுதார்கள். கீச்சிட்ட குரலில் ஒன்று; கட்டைக்குரலில் இன்னொன்று. யார் யாரோ எல்லாம் ஏதேதோ சொல்லி அழுதார்கள். பார்க்க வேடிக்கையாக இருந்தது.
"பாக்கியக்கா நல்லா ஒப்பாரி வைச்சு அழுவாவல்லே. அவவை ஒருக்கால் கூட்டிக் கொண்டு வாங்கோ" மதிவதனி தர்மாவின் காதிற்குள் குசுகுசுத்தாள்.

ஆக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இருப்பதற்கு இடம் போதவில்லை. கொண்டமினியத்திற்குக் கீழே இருந்த ஹோலை தர்மா வாடகைக்கு எடுத்துக் கொண்டான். ஆண்களும் சிறுவர்களும் அங்கே அமர வைக்கப்பட்டார்கள்.
எட்வேட் அந்த வாரம் வர இருக்கும் பேப்பர்களுக்கும் வானொலிக்கும் மரண அறிவித்தல் கொடுத்துவிட்டு வந்தான். பூரணி வருபவர்களைக் கவனித்துக் கொண்டாள். ஜெகதீசன், மனைவி பிள்ளைகளை இறக்கி விட்டு ஃ·ளைட் ரிக்கெற்' எடுப்பதில் மும்மரமானான். தான் போனாலாவது வாசுகிக்குக் கொஞ்சம் ஆறுதல் என்பது அவன் எண்ணம்.
பாக்கியக்கா வந்ததும் கூட்டத்தில் சலசலப்பு. மார்பை அடித்தபடி படத்திற்கு முன்பாக குத்திட்டு விழுந்தாள். எங்கேயோ இருந்த பெண்ணொருத்தி பறந்தோடி வந்து அவளைக் கட்டிப் பிடித்து விழுத்தி அழுதாள். வருவோர் போவோருக்கெல்லாம் மூக்கால் முகத்தைத் தேய்த்தாள். சமயங்களில் மூக்கைச் சீறி கூட்டத்தினுள்ளே விட்டெறிந்தாள். செத்தவீடு களை கட்டத் தொடங்கியது.
மேசைக்குக் கீழே இருந்த சாவித்திரி வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். "நாப்பது வயது, மூண்டு பிள்ளைகள்" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டாள். அருகேயிருந்த மாணிக்கவாசகரும் இன்னும் சில வயதில் முதிர்ந்தவர்களும் தேவாரம் புராணம் என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.
பாக்கு வெற்றிலைத் தட்டம் ஹோலிற்கும் வீட்டுக்குமிடையே 'லிஃப்ற்'றினூடாக ஊடாடியது. தர்மா, எட்வேட்டை ஜாடை செய்து கூப்பிட்டான். இளைஞர் கூட்டமொன்று எட்வேட்டின் காரினுள் பாய்ந்து ஏறியது. எங்கேயோ ஒரு றெஸ்ற்ரோரண்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார்கள். போத்தல்களும் சிகரெட் பைக்கெற்றுகளும் கூட வந்தன..
ஒப்பாரியின் உரப்புக் கூட பாக்கியக்கா மயங்கி விழுந்தாள்.
2
எங்கோ தூரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. முழங்கால்களிற்குள் தலையைப் புதைத்து வைத்திருந்த வாசுகி திடீரென ஏதோ நினைத்தவள் போல விக்கி விக்கி அழுதாள். அவளோடு சேர்ந்து துயரத்தில் பங்கு கொள்ள அங்கு ஒருவருமில்லை. அருகில் ராகவி வெறுந்தரையில் உறங்கிப் போயிருந்தாள். தாயுடன் உறங்கப் பழக்கப்பட்டிருந்த அவள் தனியாகப் பிரிந்து அலங்கோலமாகிக் கிடந்தாள்.

"அம்மா நான் ரொயிலற்றுக்குப் போட்டு வாறன்" அம்மாவைப் பார்த்தபடி இருந்த ராகுலன் இருக்கையை விட்டு எழுந்தான்.
"வெளியே போகாதை. உள்ளேயே இரு" என்றாள் வாசுகி.
இருளினுள் வெளியே போவதற்குப் பயம். நாய்கள் குரைத்தால் அந்தத் திசை நோக்கி துப்பாக்கிச் சன்னங்கள் பறந்து வருகின்றன. அதனால் இங்கே வீட்டிற்குள்ளே பாத்திரம் வைத்து இரவினில் சிறுநீர் கழிக்கின்றார்கள்.
ராகுலன் வீட்டின் பின் கதவை நீக்கி படிக்கட்டில் அமர்ந்தான். வெளியே பயங்கரமான இருட்டு. தூக்கம் வருவது போல் இருந்தது. ஆனால் தூங்கவில்லை. நீண்ட நேர காத்திருந்த பின் பக்கத்து வீட்டுக் கதவு திறக்கும் ஓசை மெதுவாகக் கேட்டது. மார்க்கண்டுத் தாத்தாவாகத்தான் இருக்க வேண்டும். அவர் சாரத்தைத் தூக்கிக் கொண்டு வேலியோரம் ஒதுங்கினார். ராகுலன் அவரைக் கூப்பிட்டான். வேலிக்கருகில் அவனைக் கண்டதும் அவர் திகைத்துப் போனார்.
சிறிது நேரத்தில் அவரும் மனைவியும் வேலிப் பொட்டிற்குள்ளால் புகுந்து இவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.
"பிள்ளை! வெள்ளைத்துணியைப் பிடிச்சுக் கொண்டு ஆமிக் காம்பிற்குப் போவோமா?" என்றார் மார்க்கண்டு. வாசுகி வேண்டாமென்று தலையாட்டினாள்.
"தேவன்ர அப்பா அம்மாவைக்கும் தங்கைச்சிக்கும் சொல்ல வேணும். ஒரு வெள்ளைத்துணியைக் கொடி போல பிடிச்சுக் கொண்டு போவம்"
"நீங்கள் என்ன சூடு வாங்கப் போறியளா?" கோபத்துடன் வாசுகி கேட்டாள். மார்க்கண்டு அத்துடன் அந்த நோக்கத்தை விட்டார்.
தேவனின் தலைமாட்டில் குத்துவிளக்கு மங்கலான வெளிச்சத்துடன் எரிந்தது. மார்க்கண்டு தனது வீட்டிற்குப் போய் அதை எடுத்து வந்திருந்தார். அவரது மனைவி தேநீர் தயாரித்து வாசுகிக்கும் ராகுலனுக்கும் கொடுத்தாள். தேவனின் முகத்தில் கொசுக்கள் மொய்க்கத் தொடங்கின. ஒரு மட்டையினால்  விசுக்கிக் கொண்டு தேவாரங்களை மெதுவாகப் பாடத் தொடங்கினார் மார்க்கண்டு. அவரின் மனைவி வாசுகிக்குப் பக்கத்திலே இருந்து கொண்டாள். வாகனம் ஒன்று மர்மமாக இவர்களின் வீட்டைக் கடக்கிறது.
கனடாவில் செத்தவீட்டு ஆரவாரங்கள் படிப்படியாக குறையத் தொடங்கின. பாக்கியம் மயக்கம் தெளிந்து சாவதானமாக சாவித்திரியுடன் கதைத்துக் கொண்டிருந்தாள்.

"யாழ்ப்பாணத்திலை என்னமாதிரி? செத்தவீடு நடந்திட்டுதோ?"
"ஒண்டுமாத் தெரியேல்லை பாக்கியம். இப்ப அங்கை இரவுதானே! ஊரடங்கு அமுலிலை இருக்கிறதாலை ஒண்டுமே செய்யேலாதாம்."
"மகளுக்கு இரண்டு பிள்ளையள்தானே!"
"நீ என்ன பாக்கியம் கதைக்கிறாய்? மூண்டெல்லே! மூத்தவன்தானே போராடப் போய் இறந்து போனான்."
"அட...ட...ட! நான் மறந்தல்லே போனன். என்னமாதிரி மருமகன்ர ஆக்கள் அங்கை நிறையப் பேர் இருக்கினமோ?"
"முழுப்பேருமே அங்கைதான். ஒருதரும் வெளிநாட்டிலை இல்லை. குடும்பத்திலை மூண்டு பேர். மூத்தது தமையன். அவையோடைதான் தாய் தகப்பனும் இருக்கினம். கடைசி ஒரு பெம்பிளைப்பிள்ளை. அவைக்கொண்டும் பிரச்சினையில்லை. இவள் வாசுகிதான் தனிச்சுப் போனாள்."
வீடு அமைதியாக இருந்தது. இறந்தவருக்காக அழுத குரல்கள் இப்பொழுது அடங்கிப் போயிருந்தன. வந்தவர்கள் எல்லாம் போய் விட்டார்கள். தேவாரம் இப்பொழுது 'கசெற் பிளேயரில்' போய்க் கொண்டிருந்தது. குத்துவிளக்கு எண்ணெய் இல்லாமல் திரி கருகி புகை வந்து கொண்டிருந்தது. கீழே ஹோலைக் கூட்டி துப்பரவு செய்து கொண்டிருந்தார்கள்.
ஜெகதீசன் குடும்பத்தினருக்கு இன்னும் மூன்று மணித்தியாலங்களில் 'ளைட்'. தர்மா தன்னுடைய நண்பனொருவனைக் கொண்டு செத்தவீட்டை வீடியோ படம் பிடித்திருந்தான். அதை ஜெகதீசனிடம் குடுத்து விடுவதற்காக 'எடிட்' செய்து கொண்டிருந்தான்.
3
இப்படியாக கனடாவில் ஒரு பகற்பொழுது முடிந்து கொண்டிருக்கையில் - யாழ்ப்பாணத்து இரவு விடிவை நோக்கி விரைகின்றது.
திகைத்துப் போன முகத்துடன் ஒரு  சடப்பொருள் போல வாசுகி இன்னமும் இருந்தாள். அருகே மார்க்கண்டுவின் மனைவி. சற்றுத் தள்ளி மார்க்கண்டுவும் ராகுலனும். ராகவி இன்னமும் எழும்பவில்லை.
காலை ஆறு மணி. ஊரடங்கு நீங்குகின்றது. வெறும் மேலுடன் படலையை நோக்கி விரைகிறார் மார்க்கண்டு. அங்கும் இங்கும் பார்த்துவிட்டு வலது புறமாக தெருவிலே கால் பதிக்கின்றார். ஊரடங்கு தளர்ந்த பின்தெருவில் கால் பதிக்கும் முதல் ஆள் அவராகத்தானிருக்கும். நான்கு வீடுகள் கடந்தால் தேவனின் பெற்றோரின் வீடு. அதே ஒழுங்கையில் மேலும் மூன்று வீடுகள் தாண்டினால் தங்கையின் வீடு.
கூப்பிடு தூரத்தில் இருக்கும் ஒரு உறவின் மரணத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் தமிழச்சாதியின் ஈன நிலை கண்டு அவர் மனம் குமுறுகின்றது. இரவெல்லாம் அழுது வற்றிய முகத்துடன் அழவும் முடியாமல் அந்தத் துயரச் செய்தியைச் சொல்லவும் முடியாமல் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கின்றார் மார்க்கண்டு.
ஒரு உண்மையான - யாழ்ப்பாணத்துச் செத்தவீடு - ஆரம்பமாகிறது.
 யுகமாயினி, தை 2010
புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி(2008), ஞானம் சஞ்சிகை





No comments:

Post a Comment