Friday, 3 October 2014

கங்காருப் பாய்ச்சல் (-5)

'உம்மை நீர் விற்க வேண்டும்!'

அவுஸ்திரேலியாவில் ஆரம்ப வகுப்பிலிருந்து, இடைத்தரத்திற்கோ அல்லது உயர்தரத்திற்கோ மாணவர்கள் மாறும்போது (Primary school இல் இருந்து Intermediate school அல்லது High school) நல்ல பள்ளிக்கூடத்திற்கு (Selective school) போக வேண்டும் என்றால் அவர்கள் வைக்கும் போட்டிப் பரீட்சையில் தேற வேண்டும். கணிதம் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் பரீட்சை வைப்பார்கள். திறமையான மாணவர்களுக்கே (gifted students) அந்தப் பரீட்சை சிம்மசொப்பனமாக இருக்கும். அதற்காக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு, மூன்று இடங்களில் ரியூசனுக்கு விட்டு பரீட்டைக்குத் தயார் செய்வார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது 50 டொலரிலிருந்து கட்டணம் ஆரம்பிக்கும்.
அனேகமாக கூடுதலான இடங்களிற்கு ரியூசனுக்குச் செல்லும் மாணவர்கள் இந்தப் பரீட்சையில் தேறிவிடுவார்கள். போட்டி பொறாமை ஒளிப்பு மறைப்பு எல்லாம் இதில் உண்டு. படிக்கும் திறமை இருந்தால் மட்டும் மாணவர்களுக்குப் போதாது, கொஞ்சம் பணமும் வேண்டும். ஒன்றிரண்டு புள்ளிகள் வித்தியாசத்திலேயே பலர் தட்டுப்பட்டு விடுவார்கள். 350 பேரை எடுப்பதற்கு 4000 மாணவர்கள் மட்டில் பரீட்சை எழுதுவார்கள்.

இது தவிர, ஒவ்வொரு பாடசாலைக்கும் 'வெட்டுப்புள்ளியை'விட சற்றுக் குறைவான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் 100 பேரை நேர்முகம் (interview) செய்து அவர்களில் 25 மாணவர்களை 'அதிபர் தெரிவு' (Principal's Discretionary category) என்ற வகைக்குள் தெரிந்தெடுப்பார்கள். அந்த நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் - தாம் அந்தப் பாடசாலையை ஏன் விரும்புவதாக ஒரு கடிதம் எழுதி அனுப்ப வேண்டும். இந்தக் கடிதத்தை எழுதுவதற்காக எமது நண்பர் தனது மகளைக் கூட்டிக் கொண்டு மெல்பேர்ணிலுள்ள Henderson என்ற Private Institute இற்குச் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

நிறுவனத்தில் உள்ள எல்லா மின்விசிறிகளும் குளிரூட்டிகளும் (Air condition) வேலை செய்து கொண்டிருந்தன. எல்லா மின்குமிழ்களும் ஒளிர்ந்தன. 'பெரியதொரு' பெண்மணி வாயிற்குள் lico rice ஐ அசை போட்டபடி தனது உடலை அசைத்து வந்தார். கூடவே இரண்டொருவர் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர்.

அந்தப்பெண்மணி பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. வரும்போதே 'எல்லாவற்றையும்' எழுதிக் கொண்டு வரும்படி கடிதம் போட்டிருந்தார். ஒன்றிரண்டு திருத்தங்கள் செய்து கடிதத்தை மெருகூட்டியதுதான் அவர் செய்த வேலை. அதற்கு அவருக்கு 40 நிமிடங்களுக்கு 50 டொலர்கள் என்ற வீதத்தில் கொடுக்க வேண்டும். அந்தப்பெண்மணி நண்பரின் மகளைக் கண்டதும் முதல் கூறிய வசனம்தான் மேலே தலைப்பாக உள்ளது; வியப்பாகவும் உள்ளது.

உம்மை நீர் விற்க வேண்டும். You have to sell yourself.

இது வேலைக்கு மனுப்போடுபவர்களுக்கும் பொருந்தும். சில எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

பாருங்கள் blog ஒன்றை வைத்திருப்பவரின் அறிவிப்பு ஒன்றை!
'இங்கே நீங்கள் பதியும் கருத்துரைகள் பிற்காலத்தில் பதிபவரின் பெயரோடு புத்தகத்தில் சேர்க்கப்படலாம். நன்றி'

இன்னொரு எழுத்தாளர் சமீபத்தில் தனது நூல்களை வெளியீடு செய்வதற்காக கண்டம் தாண்டி வந்திருந்தார். பொதுவாக இங்கு நடைபெறும் இலக்கியவிழாக்களில், வாசலில் நிறைகுடம் குத்துவிளக்கு இருக்கின்றதோ இல்லையோ ஒரு மேசை இருக்கும். அதில் விழாவிற்கு வருபவர்களின் வருகையை பதிவு செய்ய ஒரு கொப்பி இருக்கும். நூல்கள் விற்பனைக்காக காத்திருக்கும். 'எவர்கள் புத்தகம் வாங்குகின்றார்கள்? சும்மா புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டுப் போகின்றார்கள்' என்கின்றீர்களா? அதுவும் சரிதான். மற்றும் இனி நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் சம்பந்தமான அறிவித்தல்கள், விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்களும் வீற்றிருக்கும். கடல் கடந்து வந்தவர், தனது நூல் வெளியீடு நடப்பதற்கு முதல்கிழமை நடந்த நிகழ்ச்சிகளுக்கு சமூகமளித்தார். தனது நூல்வெளியீடு சம்பந்தமான பிரசுரத்தை ஒவ்வொரு இருக்கையின் மேலும் வைத்துவிட்டு ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார். இருக்கையில் அமரவேண்டியவர்கள் கட்டாயம் அந்தப் பிரசுரத்தைப் பார்த்தேயாக வேண்டும். விழாவை நடத்தியவருக்கோ சங்கடமாகிவிட்டது. 'இது எனது விழாவா? உமது விழாவா?' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டார்.

இதுபோக, இப்போதெல்லாம் புற்றீசல்கள் போல புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே வணிகமயமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தரமான இலக்கியத்தை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? இதோ பாருங்கள் ஒரு எழுத்தாளரை!  அவர் மின்னஞ்சல்கள் மூலம் - தனது படைப்புகளை, தனது மனைவி பிள்ளைகளின் படைப்புகளை, அவற்றின்மீதான விமர்சனங்களை, தான் வெளியிடும் புத்தகங்கள் பற்றிய கருத்துகளை அனுப்பி வைக்கின்றார். அத்தோடு இந்த மின்னஞ்சல் 3331 பேருக்கு அனுப்பப்படுகின்றது. இந்த மின்னஞ்சல் 4022 பேருக்கு அனுப்பப்படுகின்றது என்று ஒரு பொன்னான வாசகம். அதாவது இந்தப் பொன்னான படைப்புகளை வாசிக்கும் அத்தனை ரசிகர்களின் மத்தியில் நீங்களும் ஒருவர் என்று எங்களைப் புளகாங்கிதமடைய வைக்கின்றார்.

இப்போது சொல்லுங்கள் 'உம்மை நீர் விற்றாக வேண்டும்' என்பது எத்தகைய சத்தியமான வாக்கு என்பதை.


No comments:

Post a Comment