Sunday, 19 October 2014

உயர உயரும் அன்ரனாக்கள் - கதிர் பாலசுந்தரம்

        
 

பிள்ளையார் கோவில் பின் வீதியில், குளத்தோரம் நின்ற மருதமர நிழலிலிருந்து தெறித்துப் பறந்த சொற்கள் வீமன்காமம் கிராமம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

மோகன்தான் மொட்டைக் கடிதம் எழுதினவனாம். அதனாலேதான் கிளிக்குஞ்சு கோமதியின்டை கலியாணம் குழம்பினதாம்.இவ்வாறு பொரிந்தபடி - கக்கத்துள் வெற்றுக் கடகத்தை அணைத்தபடி நின்ற, ஒல்லியான வலித்த விசாலாட்சி தனது வயதை ஒத்த குள்ளமான கருமையான கனகத்தைப் பார்த்தாள்.

மேலே மருதங் கொப்பொன்றில் ஒரு கிழிப்பொந்து. அதன் வாயிலோரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இரு மருதங் கிளிகளையும் பார்த்தபடி கனகம் ஈனக் குரலில்,

மோகன்தான் மொட்டைக் கடிதம் எழுதினவன். இப்படி நான்தான் கதைகட்டினதென்று கடைசியிலே கதை வரும். மோகன்டை அப்பன் மறியலிலேயிருந்து வந்த சண்டியன். என்னை வம்பிலை மாட்டாதை விசாலாட்சிஎன்று கூறிவிட்டு - கையை நீட்டி ஏதோ உளறியபடி - ஒழுங்கையில் குடுகுடு என்று வந்து கொண்டிருந்த, பச்சைச் சேலை அணிந்த கொஞ்சம் குண்டான சிவகாமியைப் பார்த்தாள்.

கோண்டாவில் டாக்டர் மாப்பிளை, டட்சன் கார் கேட்டவராம். அதாலே தான் கலியாணம் குழம்பினதாம்.என்று உரத்து இரைந்தபடி சிவகாமி அவ்விடம் வந்து சேர்ந்தாள்.
வீண் வம்பில் சிக்குப்பட விரும்பாத கனகம் அண்ணார்ந்து மீண்டும் அந்த மருதமரக் கொப்பைப் பார்த்தாள். இறகுகள் இன்னும் முளைக்காத இறைச்சி தெரியும் குஞ்சுகளின் கீச்சுக்கரைச்சல் தாங்க முடியாமல், முருகையரின் பயற்றங் கொல்லையை நோக்கி இரு மருதங்கிளிகளும் கீ கீஎன்று நெடில் சுரத்தில் ஓசை எழுப்பியபடி பறக்கத் தொடங்கின.

பறந்து சென்ற அந்த இரு மருதங்கிளிகளும், லட்சுமி வீட்டு அறுபதடி அன்ரனாவிலிருந்து, பயற்றங் கொல்லைப் பக்கம் அந்த ஆந்தை முழி முருகையர் நிற்கிறாரோ என்று நோட்டம் பார்த்தன.

அதே சமயம் அன்ரனாவிற்குக்கீழே லட்சுமியும், அவளது மகள் கிளிக்குஞ்சு கோமதியும், கோமதியின் தம்பி கோபாலனும் லிவிங் றூமில்செற்றிகளில் சொகுசாக இருந்தபடி, ‘வீடியோவில்’ ‘ஏமாறாதே தம்பி ஏமாறாதேசினிமாப்படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிளிக்குஞ்சு கோமதியின் முற்றாகிய சம்பந்தம், அன்று காலையில் மாப்பிள்ளை பெண் பார்க்க வந்து போன சற்று வேளையில் குழம்பியதைப் பற்றி, லட்சுமியோ கிளிக்குஞ்சு கோமதியோ அற்பமாவது குழம்பியதாகத் தெரியவில்லை. ஆனால் வீமன்காமம் வடலிகள், வான்பயிர்கள், புதிய சுற்றுமதில்கள், பழைய கிடுகுவேலிகள் அனைத்தும் கிளிக்குஞ்சு கோமதியின் கலியாணம் குழம்பிய புதினத்தை உற்சாகமாக எதிரொலித்துக் கொண்டிருந்தன.

அதற்கு எதிர்மாறாக கனகத்தின் உள்மனம் மட்டும் முற்றிலும் முரணான குரலோசையை எழுப்பத் தொடங்கியது.

உயர உயரப் பறப்பவர்களைக் கண்டு, உலுத்தத்தனமாகப் பொறாமைக் காய்களை உலுப்பிக்கொட்டுகின்ற சனம், லட்சுமி விடயத்தில் தாராளமாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? கணவனும் மூத்த இரு ஆண்பிள்ளைகளும் டுபாய் சென்ற பின்னர், ஒரு காலம் மண் குடிசையில் வாழ்ந்த லட்சுமி, இன்று உயர உயரப் பறந்து கொண்டேயிருக்கிறாள்.

ஊர் வாயில் தன் பெயர் ஊத்தையாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாத கிளிக்குஞ்சு கோமதி, திரைப்படம் பார்த்து முடிந்ததும், மீண்டும் தன்னை அலங்கரித்துக்கொண்டாள். சிவப்புப் பாவாடை முழங்காலின் மேலே நின்றது. நடுத்தலையைச் சுற்றி ஒரு சிவப்பு றிபன்’. நீண்ட கூந்தல் பறந்து கொண்டிருந்தது. காலிலே மென்iமாயன சிவப்புக் காலணி. வழமையைப் போல மாலைத் தென்றலின் சுகத்தை அனுபவிக்கவும், தமது புதிய அந்தஸ்தை ஊரவைக்கு விளம்பரப்படுத்தவும், ஒரு இரும்புக் கதிரையை எடுத்துக்கொண்டு முற்றத்துக்குச் சென்றாள். அவளோடுசேர மூக்கைத் துழைக்கும் பாரிஸ் நறுமணம் நகர்ந்தது. முற்றத்தில் பச்சைப்பசேலெனக் காட்சியளித்த லோன்ஓரம் கதிரையைப்போட்டு அமர்ந்தாள். அவள் தம்பி கோபாலனும் இன்னொரு கதிரையை இழுத்துப்போட்டு ரூ இன் உவன்றேடியோவில் காதல் கீதம் கேட்கத்தொடங்கினான்.

முற்றத்தின் ஓரமாக வரிசையாக நின்ற இளம் உவீப்பிங் உவில்லோ’ - அசோகா மரங்களின் கீழ் நோக்கிய பச்சைக் கிளைகள், மாலைத் தென்றலின் வேகத்தில் அசைந்தாடியதுபோல கிளிக்குஞ்சு கோமதியின் உள்ளமும் ஊசலாடிக்கொண்டு இருந்தது.

கிளிக்குஞ்சு கோமதி காலையில் அரங்கேறி முடிந்த சம்பவங்களை இப்போதுதான் அசை போடத் தொடங்கினாள். லிவிங் றூமில்’ - மணப்பெண் கோலத்தில் நாணிக்கோணி, பெண் பார்க்க வந்த டாக்டர் ரவியின் முன் தானிருந்ததை எண்ணிய பொழுது, அவளுக்கு ஒருவித கிளுகிளுப்பாய் இருந்தது. டாக்டர் ரவி ஆங்கிலத்தில் ஏதோ கேட்கத் தான் தலைகுனிந்து இருந்ததையும், எந்த எழுத்தாளரைப் பிடிக்கும் என்று வினாவிய பொழுது, அருகேயிருந்த ரேபிள்விசிறியைப் பார்த்ததையும் அசை போட்டாள். பின்னர் கிளிக்குஞ்சு கோமதி தனக்குத்தானே கூறினாள்.

அவர் எவ்வளவு சந்தோசமாகக் கதைத்தவர். அவர் போனபின், சற்று நேரத்தால் திரும்பி வந்த புறோக்கன்தம்பிராசா ஏன் அப்படிச் சொன்னவன்? டட்சன் கார் கேட்டுத்தான் குழப்பினவரோ? மோகன் கேற்றடியிலே நிண்டவன். அவன்தான் ஏதன் கல்லுக்குத்தினானோ --- கல்லுக்குத்த நான் என்ன பெரிய தப்பாச் செய்திட்டன்? வல்லிபுரத்தாற்றை வடிவாம்பாள்கூடக் கடிதம் எழுதினவள்தானே? அவள் அந்த போய் ஃபிரண்டைவிட்டுப்போட்டு வேறு யாரையோ கலியாணம் செய்யேலையோ? இப்ப வடிவாம்பாளுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளையும் பிறந்திட்டுது. அவள் பத்தோ பன்னிரண்டு கடிதம் எழுதினவள். நான் அந்த போய்க்குஇரண்டு கடிதம் ..... அவ்வளவுதான் எழுதினனான்.

கோபாலனின் குரல் அவன் அக்காவின் ஏகாந்த சுயவிமர்சனத்தைக் குழப்பியது.

கிளிக்குஞ்சக்கா, பாலச்சந்தரின் சிந்து பைரவிக் கொப்பிவந்திருக்காம். நான் தெல்லிப்பழைக்குப் போய் அக்காய் றெகோடிங் சென்ரரில்ஒரு வீடியோ கசற்வாங்கிவாறன். இரவைக்குப் பார்க்கலாம்.

கோபாலன் ஓ. எல். மாணவன். உச்சி வெய்யிலில் புளியங்கொப்பை உலுப்பும் பொழுது, பழம் பொலபொலவெனக் கொட்டுப்படுவதுபோல டுபாய்ப் பணம் அவர்கள் வீட்டில் கொட்டுப்படுகிறது. பணம் இருந்தால் படிப்பு எதற்கு? பணத்தால் வாங்க முடியாதது ஏதும் இல்லைஎன்பதுதான் கோபாலனின் அம்மாவின் தத்துவம். அம்மாவின் பிள்ளை அவன். அவனுக்குப் பாடசாலை ஒரு பூசாக் காம்ப்’. அவன் சாம்பல் நிற புது 125CC ஹோண்டா மோட்டார் சைக்கிலை எடுத்துக்கொண்டு பறந்தான். அவனது தலைமயிர் காற்றோடு அள்ளுப்பட்டுக் கொண்டிருந்தது.

பாதையிலே தான் படிக்கும் யூனியன் கல்லூரி வாசலில் தனது வகுப்பு ஆசிரியர், பழைய றலி பைசிக்கிலில் தத்தித் தத்தி ஏறுவதைக் கண்டு, ஒரு டுபாய்ச் சிரிப்பைத் தூக்கி வீசிவிட்டு, கிறிக்கட் மட்டை விளிம்பிலே பட்ட பந்து சிலிப்பிலேபுட்டுப் பாய்வதுபோல மாயமாக மறைந்தான்.

மங்கு பொழுதாகிவிட்டது. முற்றத்தைவிட்டுக் கிளிக்குஞ்சு கோமதி வீட்டுக்குள் புகுந்தபோது, அவள் தாய் லட்சுமி தனது கணவனுக்குத் தான் எழுதிய கடிதத்தை எழுத்துக்கூட்டி இராகமிழுத்துப் படிப்பதைக் கண்டாள்.

பட்சமுள்ள கணவருக்கு,

நல்ல சுகம். கிளிக்குஞ்சு கோமதியின்டை, முற்றுக்கட்டின சம்பந்தம் குழம்பியிட்டு. டாக்குத்தர் மாப்பிளை டட்சன் கார் கேட்டு குழப்பியிட்டார்.

நாங்க மாப்பிளை வூட்டை போனனாங்க. தூ! சின்னோட்டி வீடு. சீலிங்கூட அடிக்கல. டி.வி. இல்லை. பிரிஜ் இல்லை. செற்றி இல்லை. சோகேசு இல்லை.  கள்ளக் கரண்ட் எடுத்து இரண்டு பல்ப் போட்டிருக்கினம்.

மாப்பிளையின்ட தாய் மூண்டு தடவ எங்கட வூட்ட வந்தவ. கிரைன்டரைப் பார்த்து உது என்ன உறுமுதுஎண்டு கேட்டவ. அவ பொம்பிளை வாத்தி.

டட்சன் கார் வாங்க காசு அனுப்புங்கோ. கெதியா அனுப்புங்கோ.

இப்படிக்கு

லட்சுமி

கடிதத்துக்கு முகவரி எழுத அதைக் காவிக்கொண்டு லட்சுமி அடுத்த வீட்டுத் தகரப் படலையைத் திறந்தாள்.

                      x            x            x

மருதமரத்துக் கிளிக்குஞ்சுகளின் இறக்கைகள் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தன. அவை மருட்சி யடையாமல், கீழே உம்என்ற மூஞ்சியோடு மூக்கைச் சுழித்துக்கொண்டு நின்ற விசாலாட்சியைப் பார்த்தன.

குளத்தையே பார்த்துக் கொண்டிருந்த விசாலாட்சிக்கு, அக்குளத்தில் கெண்டை மீனுக்காக ஒற்றைக் காலில் தவஞ்செய்து கொண்டிருந்த, வெள்ளைக் கொக்குத் தெரியவில்லை. லட்சுமி வீட்டுப் போட்டிக்கோவும் அதன் கீழே கம்பீரமாக நின்ற வெள்ளை டட்சன் காருமே தெரிந்தன.

லட்சுமி டட்சன் கார் வாங்கிப் போட்டாள். புறோக்கன்தம்பிராசன் அடுத்தநாள் லட்சுமி வீட்டை வரப்போகிறான் என்பதுதான் விசாலாட்சியின் ஒரே கவலை. தன்னைப் போல ஒரு ஏழைத் தொழிலாளியின் மனைவியாக இருந்த லட்சுமி, திடீரென அந்தஸ்தில் உயர்ந்து, உயர உயரப் பறப்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் ஒரு டாக்டர் மாப்பிள்ளைக்கு லட்சுமி மாமியாகப் போகிறாள் என்பதே அவளது உள்ளக் குமுறலாக இருந்தது.

லட்சுமியை விழுத்துவதற்கு ஏற்ற வலிமையான றொகட் லோஞ்சர்அவளிடம் இல்லை. ஒரே ஒரு ஆயுதமே அவளிடம் இருந்தது. மலிவான ஆயுதம். மோகனையும் கிளிக்குஞ்சு கோமதியையும் முடிச்சுப்போட்டு ஒரு மொட்டைக் கடிதம்.

கிராமத்து ஒழங்கை முச்சந்தியில், கனகத்தின் வீட்டுப் படலையை ஒட்டியிருந்த ஒரு சிவப்பு லெற்றர் பொக்ஸ்’, விசாலாட்சியின் அழுக்கு மூட்டையை லபக்கென விழுங்கிவிட்டுக் கப்சிப்பெனவிருந்தது.

யன்னலூடாக விசாலாட்சியை அவதானித்த கனகத்துக்கு விடயம் புரிந்துவிட்டது. விசாலாட்சி மறைந்ததும் கனகம் மெதுவாக அச்சிவப்புத் தபாற் பெட்டியை நோக்கி அலவாங்கோடு திடத்தோடு நடந்தாள்.

பலே மனிதா! மேலே மேலே பறப்பவனின் கால்களைப் பிடித்து இழுத்து விழுத்துகிறாய். பரவாயில்லை. கீழே கிடப்பவனையாவது விட்டு வைக்கிறியா? அவன்மீது ஏறிக் குடல்மீதல்லவா உழக்குகிறாய்என்று அந்தச் சிவப்புத் தபாற்பெட்டி கூற அதற்கென்ன பையித்தியமா? வள்ளுவனும் ஒளவையும் சொன்னவற்றையே விழுங்விட்டு, பொய்யையும் பொறாமையையும் வாந்தி யெடுக்கிற இரண்டு கால் விலங்கு, ஒரு தபால் பெட்டியின் உபதேசத்தை விழுங்கிவிட்டுச் ஜீரணிக்குமா?

                        x        x          x

கலியாணம் குழம்பி இரண்டு மாதத்திற்குப் பிறகு மீண்டும் புறேக்கர்தம்பிராசா - தோளில் ஒரு மஞ்சள் துணியில் தைத்த உமல் போன்ற பை தொங்க - லட்சுமி வீட்டுக் கோலிங் பெல்லைஅழுத்திப் பிடித்தபடி நின்றார். அது விடாமல் சிணுங்கத் தொடங்கியது. டிரையரில்தனது நீண்ட கூந்தலை உலர்த்திக்கொண்டிருந்த கிளிக்குஞ்சு கோமதிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

கண்ணாடிபோலப் பளபளத்துக் கொண்டிருந்த மஹோகனிக் கதவு திறந்தது.

பாட்டாச் செருப்பைக் கழற்றிவிட்டு, சறுக்காமல் இருப்பதற்காக அடிமேலடி வைத்துச் சென்று, ‘லிவிங் றூமில்உள்ள சொகுசான செற்றியில் இருந்த குசியில் புறோக்கர்ஒரு வரட்டுச் சிரிப்பை உதிர்த்தார்.

நெற்றியில் இரண்டு குங்குமப் பொட்டுக்கள். கொண்டையின் ஓரமாக வீட்டில் பறித்த ஒரு றோசாப் பூ. மடிப்புக் குலையாத ஊதாநிறக் காஞ்சிபுரப் பட்டுச்சேலை. கால்மேல் கால்போட்டபடி கைகளை இருபக்கமும் நீட்டிச் செற்றியில் பதித்தபடி இலாவகமாகச் சாய்ந்திருந்த லட்சுமி சரி சொல்லும் தரகர்என்றாள்.

நான் இப்ப வேறு ஒரு புதுப் பெடியன்ரை குறிப்போடை வந்திருக்கிறன். பிள்ளைக்கு நல்ல பொருத்தம். சாதகப் பொருத்தம் மட்டுமல்ல, சோடிப் பொருத்தமும் மன்மதனும் ரதியும் மாதிரி. ஊர் கோப்பாய். நல்ல இடம்.

வேலை என்ன? டாக்குத்தரோ? எஞ்சினியரோ?”
       
தரகன் தலையைத் தடவிவிட்டு வாய் திறந்தான்.

சும்மா சொல்லக்கூடாது. பெடியன் சிகரட்கூடப் பத்துறதில்லை. கிட்டடியிலைதான் வேலை.
நல்லதாய்ப் போச்சுது. எங்கே? தெல்லிப்பழை ஆஸ்பத்திரியிலையோ?”
இல்லை. சீமெந்துப் பக்டரியிலை’. அம்மா, ஃபோமன் வேலை. ஃபோமன் வேலை எண்டால், கொஞ்சக் காலத்திலை எஞ்சினியர்தானே?”

தரகர், கோபிக்கிறன் எண்டு நினையாதையுங்கோ. உங்கடை தலைக்கை என்ன பினாட்டே அடைஞ்சிருக்கு? எங்கடை அந்தஸ்து என்ன? நிலபரம் என்ன? வீடுவாசல் என்ன? போயும் போயும் ஒரு ஃபோமனுக்கோஇந்த லட்சுமி மாமியாயிருக்கிறது?”

தரகர் தம்பிராசா தனது மஞ்சள் துணிப் பைக்குள் கையைவிட்டுத் துழாவியபடி, கிளிக்குஞ்சு கோமதியைப் கடைக்கண்ணால் நோக்கினார். அவள் கையிலிருந்த வெள்ளி றேயைநீட்டினாள். பிரிட்ஜில்இருந்து எடுத்து வந்த றெடிமேட் கூல்றிங்ஸ்’. அது தரகரின் கையில் ஜில்லெனக் குளிர்ந்தது.

அழகு போதாது என்று முழங்காலுக்கு மேலே பாவாடை ஏறியிருக்குது. கூந்தலைப் பறக்கவிட்டிருக்கிறாள். பத்துப் பேருக்கு இரவல் கொடுக்கக்கூடிய கொள்ளை அழகு, உவளிடம்  மண்டிக்கிடக்குது. அதுதான் கிளிக்குஞ்சு என்று யாரோ சரியாகத்தான் பட்டஞ் ....என்று தொடர்ந்த தரகனின் சிந்தனை, லட்சுமியின் செயற்கை இருமலால் அறுந்தது.

தரகர், அந்தக் கோண்டாவில் டாக்குத்தர் மாப்பிளை, டட்சன் கார் கேட்டுத்தானே குழப்பினவர். வெள்ளைக் கார் போட்டிக்கோவிலை நிற்குது. பார்த்தனீங்கள் எல்லே? அதைத்தான் ஒழுங்குபடுத்துங்கோ. வேண்டும் என்றால் இன்னும் ஒரு லட்சம் மேலதிகமாய்த் தாறன்.

பாலாலி இராணுவ முகாமிலிருந்து புறுபுறுத்துக்கொண்டு வந்த ஹெலிகொப்டரின் ஓசைக்குப் பயந்து, லட்சுமி வீட்டு அன்ரனாவில் இருந்த நான்கு பச்சைக்கிளிகளும் கீகீஎன்று நீட்டி ஒலிபரப்பியபடி பிள்ளையார் கோவிலடி மருதமரத்தை நோக்கிப் பறந்தன. அவை தமது பொந்து வாசலோரம் இருந்து கீழே குளத்தோர ஒழுங்கையைப் பார்த்தன. விசாலாட்சி, லட்சுமி வீட்டுப்பக்கமாக வீரென்றுபோய்க்கொண் டிருந்தாள்.

அதே வேளை கலியாணம் குழம்பியதற்கு உரிய உண்மைக் காரணத்தை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தரகர் தம்பிராசா திக்குமுக்காடினார்.

லட்சுமி அம்மா, உங்களுக்கு ஞாபகம் இருக்கும் எண்டு நினைக்கிறன். பெம்பிளை பார்க்க வந்தவன்று டாக்டர் ரவி உந்தச்  செற்றியிலிருந்து, உங்க தம்பி குமாருவுக்கு என்ன சொன்னவர்? அவர் ஒளிப்பு மறைப்பு இல்லாமல்தானே சொன்னவர்.

வந்து தரகர். ஓ! தனக்குப் பெம்பிளையை நல்லாய்ப் பிடிச்சிருக்கு எண்டவர். பிறகு கிளிக்குஞ்சோடை மனம்விட்டுக் கதைச்சுக் கொண்டிருந்தவர்.”  லட்சுமி.

தரகர் அடுத்து எப்படிக் கதையை வளர்ப்பது என்று யோசித்தபடி மஞ்சள் பையை மடியில் தூக்கிப் போட்டுப் பினைந்து கொண்டிருந்தார்.

லட்சுமி அம்மா, அந்த டாக்டர் பெடியன் .. வந்து ஒரு அற்ப விடயத்தைத்தான் தூக்கிப் பிடிக்கிறார்.

லட்சுமிக்கு அடிவயிறு பற்றியது. எவளோ எழியவள் கல்லுக்குத்திப் போட்டாள்என்று மனதுக்குள்ளே கறுவினாள்.

தரகர் தம்பிராசா கதையைத் தொடர்ந்தார்.

மனுசரிலே எத்தனை ரகம்? நானும் முப்பது வருசமாகத் தரகுவேலை பார்க்கிறன். இப்படி ஒரு புதுமையான மாப்பிளையைக் காணவில்லை. உண்மையைச் சொன்னால் அந்த டாக்குத்தருக்குப் பையித்தியம் என்பீர்கள். தெல்லிப்பழை ஆறாம் வாட்டுக்கு அனுப்பச் சொல்லுவீங்கள்.

லட்சுமிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளால் புரிந்து கொள்ள முடியாத தத்துவத்தை அவள் தெரிந்துகொள்ள அவசரப்பட்டாள். டாக்டர் ரவி பெண் பார்க்க வந்த சமயம் நோயாளியைத் துழாவித்துழாவி விசாரித்து நோயை அறிவதுபோல கிளிக்குஞ்சு கோமதியின் வாயாலேயே அவர் உண்மையைக் கறந்து எடுத்துக்கொண்டார். அதன் விளைவுதான் அவர் சம்பந்தத்தைக் குழப்பக் காரணம். டாக்டர் தனது முடிவை முகத்திலே அறைந்ததுபோலக் கூறமுடியாமலே டட்சன் கார்ச் சாட்டில் சம்பந்தத்தைக் குழப்பினார். அதன் உண்மையை உணர முடியாத லட்சுமி, தரகர் தம்பிராசாவின் வாயை ஆவென்று பார்த்தாள்.

பெரிதாக ஒண்டுமில்லை. உங்கள் மகளின் படிப்பைப் பற்றிக் கோமதியிடமே விசாரித்தாரே. உங்கள் மூத்த மகன், இளைய மகன், நடுவில் மகன் ஆகியோரின் படிப்புப் பற்றி எல்லாம் விசாரித்தது ஞாபகமிருக்கிறதோ?”

எல்லாம் உந்தக் கண்டறியாத படிப்பைப் பற்றித்தான் விசாரித்தவர். விடுத்துவிடுத்துப் படிப்பைப் பற்றித்தான் கேட்டவர். அவருக்குப் படிப்பைத் தவிர வேறு ஒண்டுமே தெரியாது போலஎன்று டாக்டரை விமர்சித்துவிட்டு, பளபளத்த யன்னல் வெள்ளிக் கிறிலூடாகலட்சுமி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தாள். இந்திய சிந்தி இனப் பாற்பசு கொழுகொழுவெனக் காட்சியளித்தது.

நல்ல இனப் பசுக்களின் கன்றுகளும் நல்ல பால் தரும். இன்னும் ஒரு இந்தியக் கள்ளிக்கார் இனப்பசு வாங்க வேண்டும”; என்று லட்சுமி மனதில் எண்ணிக்கொண்டாள்.

லட்சுமி திரும்பிப் பார்த்தபோது புறோக்கர்தம்பிராசா மேலே சீலிங்கில் உள்ள விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உந்த விசிறி ரண்டாயிரம். டியூற்றி ஃபிறீ சொப்பில்வாங்கினது. அதுசரி தரகர், டாக்டர் ஏன் குழப்பினவர் என்று சொல்லுங்கோவன்,” என்று கேட்டுவிட்டு, அவரது வாயை ஆவலோடு நோக்கினாள்.

டாக்டர் ரவி ஜெனட்டிக்ஸ் ... கூர்ப்பு .... பாரம்பரியம் என்று ஏதேதோவெல்லாம் சொன்னார். நான் ஒன்றுமே புரியவில்லை என்றேன். பின்னர் பாகல் விதை நட்டால் சுரைக் கொடி முளைக்குமா என்று என்னைக் கேட்டார்.

லட்சுமிக்குத் தரகர் கூறியது ஒன்றுமே விளங்கவில்லை. சீதனத்தைக் கூடக் கேட்கத்தான் சுத்துமாத்துப் பண்ணுகினம் என்று மனதுள் குமைந்தபடி, தரகர் தம்பிராசாவைப் பார்த்தாள்.

உங்கள் குடும்பத்திலே ஒருத்தர்கூட ஓ. எல். பரீட்சையும் முற்றாகப் பாஸ்பண்ணவில்லையாம். ஓ. எல். பரீட்சையிலே மூன்று முறை முட்டை வாங்கின கிளிக்குஞ்சு பொரிக்கிற குஞ்சுகளும், பரீட்சைகளிலே முட்டை போடுகிற குஞ்சுகளாகத்தான் இருக்குமாம். அதுதான் நல்லினவிருத்திக் கிளிக்குஞ்சாக நல்ல சீதனத்தோடு தேடுகிறார், டாக்டர் ரவி.தரகர்.

என்ன அலம்புகிறீர், தரகர்.

தரகன் தம்பிராசா வாடிய முகத்தோடு எழுந்து நின்று, தோளில் தொங்கிய மஞ்சள் பைக்குள் ஃபோமன்மாப்பிள்ளையின் படத்தைத் தள்ளியபடி சொன்னான்:

படியாத கிளிக்குஞ்சைக் கலியாணம்பண்ணி மொக்குப் பிள்ளைகளுக்கு அப்பாவாகத் தான் இருக்க விரும்பவில்லையாம்.

தரகன் தம்பிராசாவின் சொற்கள் லட்சுமிக்கு விளங்யிருக்குமோ என்னவோ?



செம்பியன் செல்வனை (இராசகோபால்) ஆசிரியராகக்கொண்ட
அமிர்தகங்கை’  சஞ்சிகையில் 1986 தை மாதம் வெளியாகிய சிறுகதை.

செங்கையாழியான் தனது சிறுகதை வரலாறு’ நூலில் அவ்வாண்டின்
அதிசிறந்த கதைகளில் ஒன்று எனப் பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணச் சமூகத்தின் அபிலாசைகள் திரைப்படமாகக் காட்சி தருகின்றன.

                                              கே.எஸ்.சுதாகர்


No comments:

Post a Comment