Friday, 10 October 2014

மசாஜ்

பொழுது போகாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த குகனிற்கு - இடையில் அகப்பட்டது 'தவம் மசாஜ் சென்ரர். அந்த போர்ட்டைச் சுற்றியிருந்த 'நேயன்' விளக்குகள் விட்டு விட்டு ஒளிர்ந்து கண் சிமிட்ட, குகனின் கால்கள் வலிப்பு நோய் கண்டது போல உள் நுழைந்தன. 

மசாஜ் மசாஜ் என்று சொல்கின்றார்களே அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று தோன்றியது அவனிற்கு. சாஜரில் பூட்டிய பட்டரி போல அவனது மசாஜ் சாஜ் ஏறியது. மேலும் மலேசியா வந்த மூன்று நாட்களும் உடல் அசதியாக இருந்தது.

கவுண்டரில் வயது போன பெண்ணொருத்தி காதும் ரெலிபோனுமாக நின்றாள். 
'கிழட்டுக் கூட்டங்கள்' பின்வாங்க எத்தனிக்கையில், பத்துப் பன்னிரண்டு பெண்கள் அடங்கிய 'மெனுக் கார்ட்' ஒன்றை நீட்டினாள் அந்தப் பெண். 'லமினேற்' செய்யப்பட்ட அந்த மெனுக் கார்ட்டில் இருந்த அனைவருக்குமே இருபது இருபத்தைந்திற்குள்தான் இருக்கும். அப்படி செகசோதியாக ஜொலித்தார்கள்.

'நான் என்ன குடும்பம் நடத்தவா இங்கு வந்திருக்கிறேன்?' மனம் ஒருதடவை அப்படி யோசித்தாலும் - 'மசாஜ்' அந்த அழகிகளின் காலடியில் சறண்டராகலாம் என்றே சொன்னது. ஒருவேளை அது அவர்களின் தொழில் தர்மமோ?

'காசிலை குறியா இரு. கவிட்டுப் போடுவார்கள்' என்று படித்துப் படித்து குகனிற்குச் சொல்லியிருந்தார்கள் நண்பர்கள்.

"எவ்வளவு?"
"அரை மணித்தியாலம் 80 றிங்கிற்றுகள். பிறகு முடியவிட்டுத் தரலாம்."

பன்னிரண்டில்  மூன்றைத் தெரிவு செய்து தொட்டுக் காட்டினான் குகன். "நீ சரியான குறும்பு. மூன்றும் வேண்டும் என்கிறாய்" அந்தப்பெண் குகனின் முதுகில் செல்லமாகச் சீண்டினாள்.

"இவர்கள் எந்த நாட்டவர்கள்?"
"சைனீஸ், வியட்நாம், பிலிப்பினோ"

அந்த மூன்று அழகிகளில் ஒருத்தி இதழ்க்கடையோரம் புன்னகை புரிந்தாள். குகனும் அந்த சைனீஸ் பெண்ணையே புன்னகைத்தான். அவளின் பெயர் லிண்டா என்றாள் அந்தப் பெண்.

குகனைக் கூட்டிச் சென்ற அந்தப் பெண் ஒரு அறையின் கதவைத் தட்டினாள். உள்ளே ஒரு வயது முதிர்ந்த ஒரு பெண் வாளியும் ரவலுமாக நின்றாள். அவள் மசாஜ் செய்யப்போகும் இளம் பெண்ணின் 'சிண்'. முகம் சுருங்கி, கண்களில் வளையங்கள் தோன்ற எலும்புருக்கி நோய் கண்டவர்களின் தோற்றத்தில் இருந்த அந்தப் பெண் குகனைக் கட்டிலில் ஏறிப் படுக்கும்படி சொன்னாள்.

'இந்த ஆசியா நாட்டிலை உள்ளவைக்கெல்லாம் ஒரு 'சிண்' தேவைப்படுகுது. பஸ்சிற்கு ஒரு கண்டக்டர். முதலாளிக்கு ஒரு பியோன். மசாஜ் செய்யேக்கை வாளியும் ரவலும் ஏந்த இன்னொரு சிண்' குப்புறக் கிடந்தபடி சிந்தித்தான் குகன். இருபது வயதில் ஒரு பெண் தனக்கு மசாஜ் செய்யப் போவதையிட்டு அவன் இதழ்க்கடையோரமும் ஒரு புன்னகை மலர்ந்தது.

அந்தப்பெண் அருகேயிருந்த ஒரு அலுமாரியைத் திறந்தாள். உள்ளேயிருந்து ஒரு எண்ணெய்ப்போத்தலை எடுத்தாள். உள்ளங்கையில் ஒரு சொட்டு எண்ணெயை பக்குவமாக ஊற்றினாள்.

திடீரெனக் கட்டிலில் இருந்து சீறிக்கொண்டு எழுந்தான் குகன்.

"எங்கே லிண்டா?"
"நான் தான் லிண்டா!"
"அந்தப் படத்தில் இருந்தது?"
"அதுவும் நான் தான்!"

திரும்பவும் அலுமாரியைத் திறந்து அந்தப் படங்களை எடுத்தாள். புன்னகை புரியும் அந்தப் பெண்ணைக் காட்டி "இவள்தானே உனக்கு வேண்டும்?" என்றாள். குகனும் தன் தலையை ஓணான் ஆட்டுவது போல ஆட்டினான்.

 "அந்தப் படத்தில் இருப்பது நான் தான். இருபது இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முதல் வேலைக்கு வரும்போது எடுத்த படம்"

சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து சென்று கதவைத் திறந்து வெளியே ஓடினான் குகன்.





No comments:

Post a Comment