(சிறப்பிதழ்கள் ஊடான
ஒரு பார்வை)
அவுஸ்திரேலியா வாழ்
தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில
இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி,
மல்லிகை, ஞானம், ஜீவநதி
போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன்
செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா,
லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி
போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள
படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில்
எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில்
எழுதப்படுகிறது.
‘ஜீவநதி’ அவுஸ்திரேலியா சிறப்பிதழ்
(திரு செல்வ
பாண்டியன் அவர்களால் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் 12வது எழுத்தாளர்விழாவின்போது வாசிக்கப்பட்ட
கட்டுரையிலிருந்து சில பகுதிகள், அவரது
அனுமதியுடன் இங்கே தரப்படுகின்றது. நன்றி.)
---இச்சிறப்பிதழில்
உயிரோட்டமுள்ள சிறந்த பதினொரு
கட்டுரைகளும் ஆறு சிறுகதைகளும் மொழிபெயர்ப்புக்கவிதை உட்பட ஐந்து
கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
மேற்கு அவுஸ்திரேலியா
மாநில பொருளியல் விரிவுரையாளரான கலாநிதி அமிர் அலி31 ‘புகலிடத்தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையை “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வகைசெய்திடல்
வேண்டும்” என்ற பாரதியின் கவிதை வரிகளுடன்
ஆரம்பிக்கின்றார்.
பாரதியின் கனவு
நிறைவேற இரண்டு வழிகளே அன்றிருந்தன. ஒன்று - மற்ற இனத்தவர் நம்மொழி மீது மிகுந்த
பற்றுக்கொண்டு நம் மொழியையும் அதில் செரிந்துள்ள இலக்கியச்செல்வங்களையும் தாம்
வாழும் நாடுகளில் பரப்புவது. இவ்வாறு பரவும் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டவாறே
இருந்தன. இம்முறையில் தமிழ் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரைத்தாண்டிச்செல்வதில்லை.
அடுத்துவரும்
இரண்டாவது முறையில் தமிழரே உலகமெலாம் பரவிச்சென்று பாரதியின் கனவை
நனவாக்கச்செயற்படுவது. அந்தவகையில் இதற்கான பெருமை முழுவதும் ஈழத்தமிழரையே சாரும்.
புகலிடத்தில் தமிழின் எதிர்காலம் மலேசியாவைவிட சிங்கப்பூரிலேயே சிறப்பாக அமையும்
என கட்டுரை ஆசிரியர் அமீர் அலி கருதுகிறார். ஆதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று
அந்நாட்டு அரசின் கல்விக்கொள்கை. இரண்டு- எல்லா இனங்களையும் சமமாகப்பாராட்டும்
அந்நாட்டின் நிர்வாகக்கொள்கை.
எதிர்காலத்தில்
தமிழும் தமிழ் கலைகளும் மேல்நாடுகளில் சிறப்பாக மிளிரவேண்டுமெனில் இன்றுள்ள
முதலாம் தமிழ்த்தலைமுறை தூரநோக்குடன் தாபனரீதியாக செயல்படவேண்டும். அரசியல் சாயம்
பூசாமல் ஒன்றுகூடி திட்டங்களைத்தீட்டீ செயல்படவேண்டும் என்றும் அமீர்அலி
கூறுகின்றார்.
புலம்பெயர் வாழ்வில்
தமிழ் ஊடகங்கள் என்னும் கட்டுரையை எழுதியிருப்பவர் இங்கு ஒலிபரப்பாகும் வானமுதம்
வானொலி ஊடகவியலாளர் உரும்பையூர் நவரத்தினம் அல்லமதேவன்32. ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு ஊடகம் ஏன் உயிர்நாடியாக விளங்குகிறது என்பதை
வலியுறுத்தம் அவரது கட்டுரையில், புலம்பெயர்ந்த
தமிழர்களை ஒன்றிணைப்பதிலும் மொழி, கலை,பண்பாடு ஆகியனவற்றை வளம்படுத்துவதற்கும் வானொலி
ஊடகம் எவ்வாறு தொழிற்படுகிறது
என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன்
அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் வானொலிச்சேவைகளையும் பட்டியலிடுகிறார். இங்கு 24 மணி நேர ஒலிபரப்புக்காக முதல் முதலில் தோன்றிய
இன்பத்தமிழ் ஒலி மற்றும் ATBC தேசிய வானொலியான SBS சமூக வானொலிகளான வானமுதம், தமிழ்க்குரல், தமிழோசை, சங்கநாதம்,
வானிசை ஆகியனபற்றிய அறிமுகத்தையும்
தருகிறார். தமிழின விடுதலைவேட்கை, சமூகம்,
கலை, பண்பாடு முதலானவற்றை இந்த வானொலிகள் முடிந்தவரையில்
தமிழர்களிடையே பரப்புகின்றன எனவும், இங்குள்ள தொலைக்காட்சி நேயர்கள் தினமும் தரிசிக்கும் GTV, SUN TV,
JEYA TV பற்றியும் குறிப்பிடுகிறார்.
புகலிடத்தமிழர்களின் இல்லங்களில் தமிழ் ஒலித்திட இந்த வானொலி ஊடகங்கள் சரியான
முறையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் பதிவுசெய்கிறார்.
அவுஸ்திரேலியாவில்
தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் குடியேழூத் தொடங்கிய பின்னர் வெளியான இதழ்கள்
பற்றிய விரிவான தனது கண்ணோட்டத்தை பதிவு செய்துள்ளார் எஸ்.கிருஷ்ணமூர்த்தி33. அறிமுகப்பாங்கில் எழுதப்பட்டுள்ள அவரது
கட்டுரையிலிருந்து இந்நாட்டில் இதுவரையில் வெளியான பத்திரிகைகள், இதழ்கள் பற்றிய பட்டியலையும் பிறநாட்டு
வாசகர்கள் தெரிந்துகொள்வார்கள்.
‘அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள்’ என்ற கட்டுரையை முருகபூபதி எழுதியுள்ளார்.
தமிழர்கள்
புலம்பெயரத்தொடங்கிய பின்னர்தான் அவர்தம் மத்தியிலிருந்த படைப்பாளிகள் தமது
படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட ஆர்வம் காட்டினார்கள் என்று கூறும்
முருகபூபதி, “ஈழத்தமிழர்கள்
புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அடுத்த தலைமுறையினர் தமிழை மறந்துவிடுவார்கள்
என்ற அச்சம் நீடிக்கிறது. அதனால் தங்கள் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
வெளியிடத்தலைப்பட்டனர்.” என்றும்,
மொழிபெயர்ப்பு வெற்றிபெற என்ன
செய்யவேண்டும் எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு தரப்பட்ட பதில்களையும் பதிவு
செய்கிறார்.
“தமிழ் வார்த்தை
அடுக்கு ஆங்கில வார்த்தை அடுக்குக்கு எதிரானது. வார்த்தைக்கு வார்த்தை
மொழிபெயர்ப்பதைத்தவிர்த்து, அர்த்தத்துக்கு
முக்கியத்துவம் தரவேண்டும். ஆங்கில மரபுத்தொடரில் நல்ல புலமை வேண்டும்.”
மற்றுமொரு
இலக்கியவாதியின் பதிலும் இங்கு சொல்லப்படுகிறது.
“ உண்மையான
மொழிபெயர்ப்பு என்பது கருத்தை மட்டும் கடத்துவது அல்ல. ஒரு மொழியின் அழகையும்
சேர்த்து கடத்தவேண்டும். மொழிபெயர்ப்பு உயிர்த்துடிப்புடன் அமையவேண்டும். என்றால்
ஆங்கிலத்தில் நல்ல புலமையும் கற்பனையும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.”
ஹென்றி லோசன் என்ற
புகழ்பெற்ற அவுஸ்திரேலிய அபோர்ஜனிஸ் இனத்து படைப்பாளியின் படைப்புகளை மூத்த
எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் மகன் நவீனன் ராஜதுரை தமிழில் மொழிபெயர்த்தார் என்ற
தகவலையும் கட்டுரை ஆசிரியர் பதிவுசெய்துள்ளார்.
கன்பராவில் வாழும்
ஆழியாள் மதுபாஷினி சில ஆதிவாசிகளின் கதை, கவிதைகளையும் கலாநிதி காசிநாதன் விஜய்தான் தேத்தாவின் ஒரு ஹிந்திக்கதையையும்
மொழிபெயர்த்தார் என்றும் இங்குவாழும் நல்லைக்குமரன் குமாரசாமி மூன்று நூல்களை
மொழிபெயர்த்திருக்கும் தகவலையும் அதில் ஒன்று பிரபல நாவல் Animal Farm எனவும் பல குறிப்பிடத்தக்க தகவல்களை
முருகபூபதியின் கட்டுரை பேசுகிறது.
வானொலி ஊடகவியலாளர்
இரா. சத்தியநாதனின்34,
மண்ணின் மைந்தர்கள் என்ற கட்டுரை
அவுஸ்திரேலியா வரலாற்றையும் இந்த மண்ணின் சொந்தக்காரர்களான ஆதிவாசி இனத்தவர்கள்
பற்றியும் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் அறிமுகப்படுத்துகிறது. பல தகவல்களை இக்கட்டுரை தருகின்றது.
அவுஸ்திரேலிய $50 டொலர்
நாணயத்தாளில் பதிவாகியிருக்கும் David Unai Pon (1872-1967) பழங்குடி மரபு வந்த முதல் எழுத்தாளர் என்ற தகவலை நாம்
அறிந்து கொள்கின்றோம். ஆதிவாசி இனத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், கொடுமைகளையும் இக்கட்டுரை சித்திரிக்கிறது.
தமிழ் வாசகர்களுக்கு சத்தியநாதனின் கட்டுரை அவுஸ்திரேலியா பற்றிய விரிவான பார்வையை
வழங்குகிறது எனலாம்.
குறிப்பிட்ட
இனத்தவர்களின் எழுச்சியும் அவர்களின் கலை,இலக்கியம், ஓவியம்,
இசை பற்றியெல்லாம் இக்கட்டுரை
அறிமுகப்படுத்தும் பாங்கில் பேசுகின்றது. மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட இனத்தின்
மனச்சாட்சியை இனம்காட்டும் இக்கட்டுரை இச்சிறப்பிதழில் மிகவும் சிறப்பானது.
மாத்தளை சோமு ‘ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அபோர்ஜனிகள், திராவிட இனத்தைச்சேர்ந்தவர்கள் என்பதற்கான
ஆதாரங்கள் இருப்பதாகவும், தமிழக
பழங்குடி மக்களின் மரபணு (DNA)வுடன்
அபோர்ஜனிஸ் மக்களின் மரபணு ஒத்துப்போவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் மாத்தளை சோமு
தனது கட்டுரையில் பதிவுசெய்கிறார்.
தமிழ்மொழியின் வேர்ச்சொற்கள், சில அபோர்ஜனிஸ் மொழியில் காணப்படுவதாகவும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது.
அப்பா- பாபன்,
அம்மா- மாம்,அமா, பாட்டி-
ஆதா, முன்பு- முனா, வா-வாபா, விண்மலை- விண்மலே, பூநங்கையே இங்கே வா- பூ நங்கா இங்க வா என்பன
உதாரணங்கள்.
அத்துடன் இந்த
இனத்தவர்களின் வழிபாடுகளும் தமிழர் வழிபாட்டுடன் ஒத்திருக்கின்றன. சூரியன்,
சந்திரன், பாம்பு, மலை
என்பனவற்றை மாபெரும் சக்தியாக நம்புகின்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற கதைகள்
இவர்களிடம் இருக்கின்றன. இவர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய பூமராங் ஆயுதம்
எறிந்தவர்களிடமே வந்து சேரும் ஒருவகை (வளைதடி) கருவி. இது பழந்தமிழரிடையே
புழக்கத்திலிருந்துவந்த வளரி என்ற எறிதடிக்கு ஒத்தது முதலான தகவல்களையும்
இக்கட்டுரை தெரிவிக்கிறது.
அவுஸ்திரேலியாவை
பற்றியல்லாமல் பொதுத்தலைப்பில் பேசும் இரண்டு கட்டுரைகளை இரண்டு பெண்கள்
எழுதியிருக்கிறார்கள். செளந்தரி கணேசனின்35 அஹிம்சையும்
அருண். விஜயராணியின் சுதந்தரத்திற்குப்பின் பெண்களும் விசேடமாக பெண்களைப்பற்றியே
பேசுகின்றன.
அஹிம்சை என்பது
பொறுத்துக்கொள்வதோ, (அ)
கையாலாகத்தனமோ இல்லை. அது எதிரியின் வன்முறையை விவேகத்துடன் எதிர்த்து
போராடுவதுதான். எதிரியின் பலம், பலவீனம்
ஆகியவற்றை எடைபோட்டு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி வன்முறையை தவிர்த்து எழுந்து
நிற்கக்கூடியதுதான் அஹிம்சை என்று செளந்தரி தனது கட்டுரையில் விளக்குகிறார்.
ஒரு பெண்குழந்தையை படிப்பித்தலே
ஒரு நாடு செய்யக்கூடிய சிறந்த மூலதனம் என்று சொல்லும் அருண்.விஜயராணியின் கட்டுரை
பெண்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார,
வாழ்வியல் நெருக்கடிகளையும் அதற்கான
தீர்வுகள் பற்றியும் பேசுகிறது. நாடுகள் சுதந்திரம் அடைந்துவிட்டதனால்
பெண்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது எனக்கருதிவிட முடியாது என்பதையும்
சுட்டிக்காட்டுகிறது அருண்.விஜயராணியின் கட்டுரை.
மூன்று பரம்பரை
பூத்திருக்கும் புலம்பெயர் தமிழ்
இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கையும் எதிர்காலத்தையும் ஆய்வு செய்கிறது யசோதா
பத்மநாதனின், இலக்கும் போக்கும்
சில கேள்விகளும் ழுணு தமிழை முன்வைத்து’ என்னும் கட்டுரை.
‘புலம்பெயர்ந்து வந்த
இந்தப்பாதை எல்லோருக்கும் புதிது. எதிர்கொள்ளும் சவால்கள் நமக்கு அந்நியமானவை.
நாம் விரும்பியோ விரும்பாமலோ பல புதிய பிரச்சினைகளுக்கும் வாழ்வு முறைகளுக்கும்
முகம் கொடுக்கின்றோம்.’ என்று
தமது ஆய்வில் குறிப்பிடும் யசோதா, புகலிடத்தமிழர்களும்
புகலிட இலக்கியமும் எதிர்நோக்கும் சவால்களையும் விவரிக்கின்றார். ஒரு விரிவான
விவாதக்களத்தை இக்கட்டுரை வேண்டி நிற்கிறது.
கே.எஸ்.சுதாகர்36 எழுதியிருக்கும் உச்சம் மற்றும் நடேசனின் எல்லைகளுக்குள் வாழும் உறவு ஆகியன புனைவிலக்கிய
வகையில் அடங்கும் படைப்புகள். சமகாலத்தில் கட்டுரையாகவும் அல்லமால்
சிறுகதையாகவுமன்றி நடைச்சித்திரப்பாங்கிலுமற்ற புதிய வடிவம் இலக்கிய உலகில்
அறிமுகமாகியிருக்கிறது. அதற்கு புனைவிலக்கியக் கட்டுரை
எனப்பெயர்சூட்டியிருக்கிறார்கள். சிறுகதையும் கட்டுரையும் எழுதுவதில் தேர்;ந்தவர்களினால்தான் இந்த எழுத்துக்கலை
முதிர்ச்சிபெறும். சுதாகரன் அவுஸ்திரேலியா கங்காருவையும் நடேசன் இங்கு வீடுகளில்
செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனையையும் கதாபாத்திரங்களாகத்தேர்வு
செய்திருக்கிறார்கள். இரண்டும் வித்தியாசமான படைப்புகள்.
கோகிலா மகேந்திரன்37 (சுன்னாகம் < சிட்னி < சுன்னாகம்),
சிசு நாகேந்திரன்38 (பிள்ளைத்தாச்சி), ஆசி. கந்தராஜா (வேதியின் விளையாட்டு), ஜெயகுமாரன்39
(கனகரத்தினம்
மாஸ்டர்), ரதி40 (மறுமுகம்), ஆவூரான் சந்திரன்41
(பொய் ஒன்றுபோதும்) ஆகியோரின்
சிறுகதைகளும் ஜீவநதி அவுஸ்திரேலிய சிறப்பிதழை அலங்கரிக்கின்றன. புகலிட வாழ்வின்
அகத்தையும் புறத்தையும் இச்சிறுகதைகள் சித்திரிக்கின்றன.
செ. பாஸ்கரன்,
ஆவூரான், சசிதரன் தனபாலசிங்கம்42, மானுடன்43 ஆகியோரின்
கவிதைகளுடன் ஆழியாள் மொழிபெயர்த்த ஜோன் லூயிஸ் கிளாக்கின் கவிதையும் இடம்பெற்றுள்ளது.
சங்கத்தின்
நடப்பாண்டு தலைவர் ‘பாடும்மீன்’
சு.சிறிகந்தராசாவின்44 வாழ்த்துச்செய்தியும் இச்சிறப்பிதழில்
வெளியாகியுள்ளது---
இதனைப்பெற்றுக்கொள்ள
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரிகள்:-
ATLAS, P.O.Box- 620, Preston-Victoria- 3072. Australia.
மின்னஞ்சல்:- atlas2001@live.com
கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய்மேற்கு, அல்வாய், இலங்கை.
மின்னஞ்சல்:- jeevanathy@yahoo.com
31. கலாநிதி அமிர்
அலி
32. உரும்பையூர்
நவரத்தினம் அல்லமதேவன்
33. எஸ்.கிருஷ்ணமூர்த்தி
( ‘ம்றுவளம்’ கட்டுரைத் தொகுப்பு, கறுப்புப்பிரதிகள்)
34. இரா. சத்தியநாதன்
35. செளந்தரி கணேசன்
36. கே.எஸ்.சுதாகர் -
'எங்கே போகிறோம்' சிறுகதைத்தொகுப்பு (அவுஸ்திரேலியா தமிழ்
இலக்கிய கலைச்சங்க வெளியீடு, குமரன்
பதிப்பகம், 2007) ; ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுப்பு
(அக்கினிக்குஞ்சு வெளியீடு, மித்ர பதிப்பகம்)
மின்னஞ்சல் : kssutha@hotmail.com
37. கோகிலா
மகேந்திரன் - 'உள்ளக்கமலம்'
(2006), 'பாவலர் துரையப்பாபிள்ளை (2002)
கல்வியியல் சார்ந்த நூல்கள் ; 'எங்கே நிம்மதி' (2000), 'சின்னச் சின்னப் பிள்ளைகள் (2005), 'சிறுவர் உளநலம்' (2002). 'மகிழ்வுடன் வாழ்தல்' (2003), 'மனக்குறை மாற வழி' , 'மனச்சோர்வு' (2006), 'மனமெனும் தோணி (2008), 'முற்றத்தில் சிந்திய முத்துக்கள்' (2006),
'Child Mental Health' உளவியல் நூல்கள் ;
'கலைப்பேரரசு ஏ.ரி.பி அரங்கக் கலையின்
ஐம்பதாண்டு (2003), 'குயில்கள்'
(2001), 'கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு'
(1997) நாடக நூல்கள் ; 'தங்கத் தலைவி' (2000) சமய நூல் ; 'பிரசவங்கள்' (1986), 'முகங்களும்
மூடிகளும்' (2003), 'வாழ்வு ஒரு
வலைப்பந்தாட்டம்' (1997) சிறுகதைத்தொகுப்புகள்
; 'விஞ்ஞானக் கதைகள்'
(2000) அறிவியல் புனைகதை நூல் ; 'மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும்'
(2001) வரலாற்று நூல் ; 'துயிலும் ஒருநாள் கலையும்' (1986), 'தூவானம் கவனம்' (1988) நாவல்கள்
38. சிசு நாகேந்திரன்
- 'அந்தக்காலத்து யாழ்ப்பாணம்'
(கலப்பை பதிப்பகம், PO Box 40,
Homebush South, NSW 2140 ) , 'பிறந்த
மண்ணும் புகலிடமும்' (அவுஸ்திரேலியா
தமிழ் இலக்கிய கலைச்சங்க வெளியீடு) கட்டுரைத் தொகுப்புகள். மின்னஞ்சல் : nagendran.sisu@gmail.com
39. ஜெயகுமாரன்
சந்திரசேகரம் ( ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ கட்டுரைத்தொகுப்பு , வண்ணம்)
40. ரதி (உஷா
சிவநாதன்)
41. ஆவூரான் சந்திரன்
- 'ஆத்மாவைத் தொலைத்தவர்கள்'
சிறுகதைத்தொகுப்புகுப்பு (அவுஸ்திரேலியா
தமிழ் இலக்கிய கலைச்சங்க வெளியீடு, ஞானம்
பதிப்பகம், 2008)
மின்னஞ்சல் : aavuraan@yahoo.com.au
42. சசிதரன்
தனபாலசிங்கம்
43. மானுடன் (கேதார
சர்மா)
44. ‘பாடும்மீன்’
சு.சிறிகந்தராசா - 'சந்ததிச் சுவடுகள்' (1988, நாடகங்களின் தொகுப்பு), மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்,
'தமிழினமே தாயகமே' கவிதைத்தொகுப்பு, 'தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும்' ஆய்வுரைகள், ஓர் அவுஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப்பயணம், 'சங்ககாலமும், சங்க இலக்கியங்களும்' அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Sangam Period and
Sankam Literature', 'நெஞ்சை அள்ளும்
சிலப்பதிகாரம்' உரைச்சித்திர
இறுவெட்டு
வெளியிட்ட நூல்கள் -
களுவாஞ்சிக்குடி சைவமகாசபையின் ஆதரவில் 'கண்ணகியம்மன் ஊர்சுற்றுக்காவியம்', விக்ரோறியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 'புலம்பெயர்ந்த பூக்கள்' சிறுகதைத்தொகுதி.
மின்னஞ்சல் : srisuppiah@hotmail.com
(இவர்கள் தவிர்ந்த
இன்னும் பல தமிழ் எழுத்தாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதிக்
கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பற்றிய தகவல்களை பிறிதொரு கட்டுரையில்
குறிப்பிடுவேன்.)
கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை வரவேற்கின்றேன்.
ReplyDelete