உயிர்ப்பு
அவுஸ்திரேலியா பல்லின
மக்கள் வாழும் நாடு. அவரவர் கலாசாரம், பண்பாடுகளை மதிக்கும் நாடு.
அவுஸ்திரேலியாவில்
மெல்பேர்ண் நகரில் 'டியர் பார்க்,
ஓக்லி' நூல் நிலையங்களில் (Deer Park, Okleigh) தமிழ்ப்புத்தகங்களை வைத்திருக்கின்றார்கள்.
ஒருநாள் எங்கள் வீட்டிற்கு சமீபமாக இருக்கும் பெண் ஒருவர், சுமக்க முடியாமல் நிறையத் தமிழ்ப்புத்தகங்களை நூல்
நிலையத்திலிருந்து எடுத்துச் செல்வதைக் கண்டேன்.
"என்ன நிறைய
தமிழ்ப்புத்தகங்கள் படிக்கின்றீர்கள் போல?"
"அப்பிடியென்றில்லை!
அம்மா அப்பாவை இலங்கையிலிருந்து வந்திருக்கினம். அவைக்கு தமிழ்ப்புத்தகங்கள்
என்றால் சரியான விருப்பம்" என்றார் அவர்.
அவுஸ்திரேலியாவில்
வதியும் இருபது எழுத்தாளர்களின்
சிறுகதைகள் கொண்ட தொகுப்பு 'உயிர்ப்பு.'
இதை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக்
கலைச்சங்கம் வெளியிட்டிருந்தது. என்னிடம் சில பிரதிகள் விற்பனைக்காக இருந்தன.அதை
எடுத்துக் கொண்டு எனக்குச் சமீபமாக இருக்கும் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச்
சென்றேன். அவர்களது பெற்றாரையும் பார்த்ததாக இருக்கும். உயிர்ப்பு பிரதி ஒன்றின்
விலை 10 அவுஸ்திரேலியா டொலர்கள்.
அரை மில்லியியன்
பெறுமதி கொண்ட அந்த வீட்டிற்குள், அந்தப்
புத்தகத்தை எடுத்துக் கொண்டு போவதில் எனக்கு சிறிது தயக்கம்.
"இந்தப்
புத்தகத்தில் ஒன்றை எடுத்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்களால் உதவ முடியுமா?"
என்று அவர்களிடம் கேட்டு வாய் மூடவில்லை.
"எப்படியும் 'டியர் பார்க்' லைபிரறிக்கு இந்தப் புத்தகம் வரும்தானே! அப்ப வாசிப்பம்"
என்றார்கள் அவர்கள். அவர்கள் இலவசமாக புத்தகங்கள் படிப்பவர்கள் என்பதை அறிந்தேன்.
எனக்கு இலவசமாக புத்தகத்தைக் கொடுப்பதில் உடன்பாடில்லை. அவர்களை வற்புறுத்தவில்லை.
திரும்பி விட்டேன்.
இது நடந்து ஏறக்குறைய
நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. நேற்று நான் 'டியர் பார்க்' நூல்நிலையத்திற்குச்
சென்ற போது 'உயிர்ப்பு' சிறுகதைத் தொகுதியை அங்கே தமிழ்ப்பிரிவில்
காணக்கூடியதாக இருந்தது. புத்தகம் வந்த செய்தியை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
அப்படியாதல் வாசிக்கட்டும்.
No comments:
Post a Comment