Monday, 3 November 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 2)

அதிகாரம் 2
அம்மணி நல்ல அழகு

காட்டுச் சேவல் கூவுஞ் சத்தம் காதை எட்டியது. விடிந்து கண்விழித்து
எழுந்து கறுப்புப் போர்வைக்குள் குந்தினேன். எதிரே ஒரு கருமுண்ட
மேகம்சுருண்டுநிற்பது அப்போது புரியவில்லை.

தலையை நிமிர்த்தினேன். நீல வானம் காட்சி தந்தது. சூரியன்
நடுவான் நோக்கிப் பிரயாணித்துக் கொண்டிருந்தான்.

எனக்கு மட்டும் எதுவும் விடியவில்லை. சிறையில்கூட முகங்கழுவ,
குளிக்க நீர். அளந்த உணவு தவறாமல் தருவார்கள். மயக்கம்
போடாமல் சீவிக்கலாம்.

முகங்கழுவ வேண்டும். வீதியின் மறு பக்கத்தில் எங்கள் வளவு.
பெரிய கிணறு. எழுந்து நடந்து வீதியைக் கடந்து பற்றைக@டாகச்
சென்றேன்.

வாளி இல்லை. எங்காவது போய் வாளி கேட்க மனம் மறுத்தது.
எட்டிக் கிணற்றுள் கண்களை ஏவினேன். என்ன கொடுமை? வாளி
இருந்தாலும் நீர் அள்ள உதவாது. கிணறு நிறைந்த குப்பைகூளம்.
இராணுவம் கொட்டி நிரப்பி வைத்திருந்தது. காட்டுள் பதுங்கும் புலி;
நீர் அள்ளிப் பருகாமல்

நீல ஜீப் நோட்டம் பார்த்தவாறு வீதி நீளத்துக்கு நத்தையாக ஊர்ந்து
நகர்ந்தது.

பசி கூச்சல் போட்டது. முகம்கழுவாமலே இரண்டு பிஸ்கட்
சாப்பிட்டேன். நேரம் பகல் பத்து மணி. பையிலிருந்த கவுண் கையில்.
இடிந்த பாடசாலையை விட்டு நீங்கி செங்கிறவல் வீதியில்
இறங்கினேன். கோலை ஊன்றி ஒற்றைக்காலில் பாய்ந்து பாய்ந்து
கிழக்கே அமைந்த குளத்தை நோக்கி நடையைக் கட்டினேன்.

ஓசைஎழுப்பாது வந்த நீலஜீப்அருகேநின்றது.

'மேஜர் நோநா. எங்கே போறது?"
'குளத்துக்கு குளிக்க."
"மிச்சம் நல்லது. அழுக்குப் போனா ஆனந்தம் வரும்."

சிங்கள மனுசசாதிக்கு ஆற்றிலோ குளத்திலோ குளிக்காது போனால்
மனம் பத்தியப்படாது. காட்டு வெள்ளம் நிறைந்து நிற்கும் குட்டை
யி;லும் விழுந்து விழுந்து நீராடுவார்கள். இராணுவத்துக்கு ஆயிலடிக்
கரடியன்குளம் நீச்சல் குளம் மாதிரி.

நீலஜீப் போய்க் கொண்டிருந்தது. மூன்று நீண்ட ஆண்டுகளாய்ப்
பழக்கிப்போன சிங்கள இராணுவம். மேற் கொண்டு அஞ்சி நடுங்கிப்
பயப்படுவதற்கு என்னிடம் எதுவும் எச்ச சொச்சம் எஞ்சிஇருக்கவில்லை.

ஊன்று கோலையும், ஒற்றைக் காலையும் கொண்டு குளம் வரை
பயணிக்கஅரைமணிநேரம்.

கரடியன்குளம். பெரிய குளம். கால் மைல் நீள குளக்கட்டு.
அவசரத்துக்கு சின்ன சின்ன வாகனம் ஓடலாம். கோடை காலம்
குளம் வற்றியிருந்தது. தென் கரையில் எருமைகள் நீராடின. கறுப்பு
நீர்க்காகங்கள் நீரில் விழுந்து எழுந்து மீன்களுடன் பறந்தன.
தாமரை அல்லிப் பூக்கள் மனதைச் சுண்டி இழுத்தன. மூன்று பக்கம்
பெரும் பச்சை வனம். வடபகுதியில் மட்டும் ராச நாச்சியார் வம்சத்து
பரந்த வயல் பிரதேசம்.

குளத்தின் பரந்த தென்பகுதி வெளியில் ஒரு மயில் கூட்டம். மத்தியில்
ஒன்று தோகை விரித்து ஆடியது.

குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தேன்.

சற்று அப்பால் இராணுவ வீரன் ஒருவன். இரு கைகளையும்
பக்கவாட்டில் அகல நீட்டி, உள்ளங் கைகள் இரண்டையும் உள்ளே
நகர்த்தி, நீரில் டும் டும்என்று அடித்து மூழ்கி மேலெழுந்து
நீராடினான். சமயற்கார களுபண்டா என்பது எனக்கு அப்போது தெரி
யாது.

மெய் மறந்து நீராடியவன் என்னை உற்றுப் பார்த்தான். அதன்
பின்னர் அவன் செயல்கள் மாற்றம் பெற்றன.

நீராடிய நேரத்திலும் என்னை நோட்டம் பார்த்த நேரம் அதிகம். நீரின்
மேலே கண்களை மட்டும் வைத்துக்கொண்டு வில் வளைத்து
நிற்கும் வேடனைப் போலக் குறிபார்த்தான்.

குளித்து முடிந்து குளக்கட்டு வழியே திரும்பினேன். வழியில்
திரும்பிப் பார்த்தேன். கட்டைக் காற்சட்டை மட்டும அணிந்த
கருமுண்ட சமையற்காரன் என்னைத் தொடர்ந்து வந்து
கொண்டிருந்தான். தோளில் துவைத்த உடைகள். கையில் சவுக்காh
கேஸ். நான் திரும்பியதும் அவன் நிலத்தைப் பார்த்தபடி நடந்தான்.
நான் மெதுவாகத் தலையை திருப்புவதும் அவன் அப்பாவி போலத்
தரையைப் பார்ப்பதும் தெடர்ந்தது.

பாடசாலையை அடைந்த வேளை உச்சியில் நின்று சூரியபகவான்
என்னை நோக்கினான். கறுத்த பொலித்தீன் பையைத் திறந்தேன்.
தகரக் கோப்பை கையில் அமர்ந்து சிரித்தது. ராச நாச்சியார் வம்ச ராச
பாரம்பரியத்தை எண்ணிச் சிரித்ததோ?

கிறவல் வீதியில் இறங்கி தென்-கிழக்கு பக்கமாக சுமார் அரை மணி
நேரம் நடந்திருப்பேன். என்றும் பச்சையான பெரும் வனத்தை
வெட்டி அண்மையில் உருவாக்கிய நயினாமடு இராணுவ முகாம்
வாயில். கோப்பையை நீட்டியபடி, ஊன்றுகோல் தயவில் ஒற்றைக்
காலில் நின்றேன். பரந்த பாரிய முகாம். ஆங்காங்கு ஓரிரு காட்டு
விருட்சங்கள் எஞ்சி நின்றன.உணவு மண்டபத்தின் உள்ளே
அமர்ந்து சாப்பிட்டவர்கள் கண்களில் பட்டிருக்கவேண்டும்.சாப்பிட்டுக்
கொண்டிருந்த ஒருவன், அழகான உயரமான பொதுநிற வாலிபன்,
இராணுவ உடையில். எழுந்து வந்து தனது பீங்கான் கோப்பையில்
எஞ்சியிருந்த சொற்ப உணவை எனது தகரக் கோப்பையில் போட்டு
விட்டு ஏறவிறங்கப் பார்த்தான்.

'போஹம ஸ்துதி" (மிக்க நன்றி) என்றேன்.
'நோநாபோஹமலட்சணாய் (அம்மணி நல்ல அழகு.)"

பையன் சிங்கள சினிமாப் பாடலை விசிலடித்தபடி போய்க்
கொண்டிருந்தான்.

அந்த இடத்தைவிட்டு அசையவில்லை. தகரக் கோப்பையை
நீட்டியபடி நின்றேன். பசி வந்தால் பத்தும் பறந்து போயிடும்.
மூதாதையர் சரியாய்த்தான் சொல்லியிருக்கிறார்கள். என்
மனம் கூறியது.

புகை தள்ளும் சமையல் கட்டிலிருந்து வேறு ஒருவன், கையில்
கோப்பையுடன், வேகமாக நடந்து வந்தான். கறுப்புக் கட்டைக்
காற்சட்டை. வெள்ளை பனியன். கட்டுமஸ்தான தேகம். குளத்தில்
குளித்த சமையற்காரன் களுபண்டா. சிங்களத்தில் ஏதோ புறுபுறுத்த
படி, கோப்பையைப் பறித்து எச்சில் உணவை வீசிவிட்டு, கொண்டு
வந்தஉணவைப்பக்குவமாய்க் கோப்பையில் போட்டான்.
போஹம ஸ்துதி மாத்தையா---ஐயா."
'நோநாபோஹமலக்சணாய்."

எல்லாச் சிங்களவனும் வாய் நிறைய சொல்கிற புகழாரம். அதுதான்
எனக்கு எமன். புகழாரம் சூட்டுகிறவனே எமனாகிறான். எமன்தான்
புகழாரம் சூட்டுகிறான். இரண்டும் ஐந்தும் ஏழு சமன் ஐந்தும்
இரண்டும் ஏழுபோல. நான் சிங்களவனுக்கு சமன் கணித
வாய்ப்பாடு. எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அதே காவியந்தான்.
அவனுக்கு மட்டுமல்ல. எங்கள் ஆட்கள் குறைந்தவர்கள் அல்ல.
விண்ணர்கள்.

ஆயிலடிக்கு வந்து மூன்றாம் நாள் காலை---எழுபத்திரண்டு
மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை முகாமிற்குப் போய்
கையெழுத்து வைக்க வேண்டும். வழமையைப் போல குளத்தில்
குளித்துவிட்டு முகாமிற்குப் போனேன். கோப்பை ஏந்த முன்னர்
கையெழுத் திட்டேன்.

இப்போஇருகிழமைகளாக கையெழுத்து வைத்து விட்டேன்.

கிரமமாக நண்பகலில் கோப்பையுடன் முகாம் வாயிலில் தவஞ்
செய்வேன். களுபண்டா உணவு போடுவான். நாட்கள் நகர நகர
போடும் உணவும் அதிகரித்து அதிகரித்து வந்தது. சோற்றுக்குள்
அவித்த முட்டை. பெரிய மீன் முறி. தேவையில்லாமல் வாய்
திறப்பதில்லை. ஆசையோடு பார்ப்பான். அவ்வளவுதான். அது
எனக்குப் பழகிப்போன சங்கதிதான். இயற்கையின் சின்ன அங்கம்.

'போஹம ஸ்துதி" என்பேன்.

நாட்செல்லச் செல்ல பார்வை அச்சுறுத்தியது. என்மீது அளவுகடந்த
அன்பு செலுத்துகிறான் என்பது புரிந்தது.

அந்த அன்பு ஒருதலைக் காதல் என்பது பின்னர்தான் புரிந்தது.

சில நாட்களில் பாடசாலைக்கு வந்து என்னோடு உரையாடத்
தொடங்கியிருந்தான். துண்டிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில் நான்
இல்லை. இன்னொரு புறத்தில் பாதுகாப்பு அளித்தது. வீதியிலே
போகிற விடலை நாய்கள் வீணீர் வடிக்காமல் செய்தது. வாழ்க்கை
சிக்கலில் சிக்கிக்கொண்டது.

முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் பின்னர் எத்தனையோ
எத்தனையோ சிங்களவனைச் சந்தித்து விட்டேன். யாவருக்கும்
எனது ராச நாச்சியார் வம்சத்து அடையாளமான வெள்ளைத் தோல்.
நீண்டு அரையைத் தொடும் அடர்ந்த கருங்கேசம். மெலிந்த உயர்ந்த
கயிறு போன்ற உடல்வாகு. சினிமா நட்சத்திரம் போன்ற அழகிய
கவர்ச்சியான முகம்---புறத்தோற்றமே கண்களில் பட்டன. புகழ்பூத்த
சிங்கள சினிமா நடிகை நிறோசி பெரேரா போலிருப்பதாக அங்க
லாய்ப்பார்கள். எல்லோரும் ஒரே தோணியில் பயணித்தனர்.
களுபண்டா முற்றிலும் வித்தியாசமான மனிதன். குணச்சித்திரம்
தனித்துவங்கள் பல நிறைந்தது. ஒரு தினம் பகல். களுபண்டா வந்த
வேளை படுக்கும் அறை மூலையில் மரக் குத்தியின் கீழ் பாம்பு
ஒன்று சுருண்டு படுத்திருந்தது. முற்றி விளைந்த நாக பாம்பு.
ஆரவாரத்தில் வெருண்டு உயர்ந்து எழுந்து படம் விரித்துப் பார்த்தது.
சங்குசக்கரங்கள் மின்சாரம் போலப் பாய்ந்து நெஞ்சை உறைய
வைத்தன. அஞ்சி நடுங்கிப் பயந்து போனேன்.

களுபண்டா பாடசாலையின் பின்புறம் அமைந்த வனம் வரைக்கும்
துரத்திக்கொண்டு போனான். அடித்துக் கொல்லாமல் விட்டமை
ஆச்சரியம் தந்தது. திரும்பி வந்தவன், 'நோநா, நாக பாம்பு அடிக்கக்
கூடாது. பாவம் வம்சத்தையே துரத்தித் துரத்தி வரும்" என்றான்.

மிகப் பயந்திருந்தேன். என் பயந்த மனோநிலையைப் பார்த்த
அவனுக்கு அன்றிரவு முகாமுக்குப் போக மனம் வரவில்லை. வேறு
ஓரிடத்தில் படுத்திருந்தான். விடிய முன்னர், நித்திரையில் இருக்கும்
பொழுதே, எழுந்து போய்விட்டான்.

வாய்த்தால் பைத்தியகார ஓநாய் போலக் குதறும் சிங்கள இராணுவத்
தினர் மத்தியில் இவன் வித்தியாசமானவன். மிக மிக வித்தியாச
மானவன்.

ஆயிலடிக்கு மக்கள் வந்து நான்கு மாதங்கள். அபிவிருத்தி ஆனா
வரியும் நடைபெறவில்லை. மனித நேய நிறுவனங்கள் வழங்கிய
சமையல் பாத்திரங்கள், மண்வெட்டி கத்தி, கோடரி, வாளி. நுளம்பு
கடிக்கிறது என்று வலையும் குழந்தைகள்உள்ள குடும்பங்களுக்குக்
கொடுக்கிறார்கள். நிரம்பத் தருவதாக இனிக்க இனிக்கச் சொல்கிறார்
கள். வீடு கட்டித் தரப்போகிறது இந்தியா. அந்த நாடு நீர் இறைக்கிற
எந்திரம் தரப்போகிறது. உழவு எந்திரம் தருவோம். எனக்கு தையல்
மெசின் தருவதாகச் சொன்னார்கள். எதுவும் இதுவரை நடக்க
வில்லை.

அரசு குடும்ப அட்டை தந்துள்ளது. அதைக் கொடுத்தால் உலர்
உணவுகிடைக்கிறது. உயிரை பிடிக்கப் போதும்.
எனக்குஇன்னும் தரவில்லை. தருவார்கள். எப்ப?’ தெரியாது.

மீள் குடியேறியவர் சுகநலங் காண வருகிறார்கள். புதிய புதிய
வாகனங்கள், புதிய புதிய வெளிநாட்டு வெள்ளைத் தோல்
மனிதர்கள். நிரம்பத் தருவதாக நிரம்பப் பேசுகிறார்கள். புகைப் படம்
எடுக்கிறார்கள். உலகத்திற்குப் பிரசாரம் செய்ய---ஆயிலடி மனிதர்
நலமே வாழ்கிறார்கள். நாமெல்லாம் உதவுகிறோம். எதுவும்
நடப்பதாய் இல்லை. தார்ப்பாய்க் கூடாரந்தான் தஞ்சம்.

எல்லாம் போலி விளையாட்டு. எனக்குப் புனர் வாழ்வு முகாமில்
தையல் கலையும் பயின்று தந்தார்கள்.; சோறு போடும் என்றார்கள்.
ஜீவியத்துக்குச் சஞ்சலம் இராது என்று உரத்துப் பேசினார்கள்.
அகதிகள் எவரிடம் பணம் இருக்கிறது, புடவை வாங்க? வாங்கிய
புடவையை தைப்பிக்க?

உடுத்திருக்கிற உடுப்புகள் பார்வையானவை. மனித நேய
அமைப்புகள் அள்ளி அள்ளி வழங்கியவை. அகதிகளுக்கு உடை
பிரச்சினையாக இல்லை.

அது ஒரு சுப தினம். புதிய அத்தியாயம் என் முன் எழுந்து திறந்து
நின்று உற்று நோக்கியது. முகாமில் கையெழுத்துப் போட்டுவிட்டு
பாடசாலைக்குத் திரும்பும் வேளை, கருணை உள்ளம் களுபண்டா
கூடவேநடந்து வந்தான்.

புத்தம் புதிய கறுப்பு நீளக் காற்சட்டை. விலை உயர்ந்த வெள்ளை
சேட். வழமையில் குப்பையாகத் தோன்றும் தலைமுடி. எண்ணெய்
வைத்து அழகாக கன்னஉச்சி பிரித்துச் சீவியிருந்தான். முகச்சவரம்
வேறு. மீசை வைத்த சிங்களவனை அருமையாகக் காண்பேன்.
அதில் இவனும் ஒருவன். எங்கள் பரம்பரை மீசையை ஞாபக
மூட்டியது. காலில் விலை உயர்ந்த நிக்கி கறுப்புச் சப்பாத்து.

மௌனமாக நடந்து வந்தான். அடிக்கடி வானத்தைப் பார்த்து
யோசித்தான். ஏதோ பெரிய திட்டத்தைச் சுமந்து வருவது போலப்
பட்டது.சுமையைஇறக்கத் தயங்கினான். என்ன சுமை? உள் மனம்
விசாரணை செய்தது.

எதிர்த் திசையிலிருந்து தேவி தம்பன் வந்தாள். பச்சைச் சேலை.
கட்டைக் கால்களை விறு விறென்று தூக்கி வைத்து நடந்து வந்தாள்.
கொட்டைப் பாக்குக் குடுமி குலைந்து வெருண்டு ஆடியது. என்னை
முறைத்துப் பார்த்துக்கொண்டு போகும் போது வீதியில் காறித்
துப்பினாள்.

பாடசாலை கட்டிடம். வழமையான அறையில் தரையில் அமர்ந்
தேன். களுபண்டா எதிரே அடுக்கி வைத்த செங்கற்களின் மேல்
அமர்ந்தான். வானம் கண்மடல்களை விரித்து எங்களைப் பார்த்து
வேதனைப் பட்டது. கருமுகில்கள் கருக்கட்டத் தொடங்கின.

களுபண்டா எறிகுண்டைவீசி மௌனத்தைக் கலைத்தான்.

'மேஜர் நோநா. ஓயாட்ட மங் போஹம ஆதரய--- (உங்க
ளுக்கு நான் மிகவும் ஆதரவு). நான் ஒங்கள மிச்சம் நேசிக்கிறான்.
'நீஎனக்குத் தினமும் சோறு போடுகிறாய். அதற்கு நன்றி.
'நான் ஒங்களிடம் முக்கியமான ஒன்று கேட்க வேணும்.
கோபம் இல்லை."
'இல்லை. கேள் பண்டா."
'ஒங்களை கல்யாணம்பண்ணஆசைப்படுறான்."

நேரிடையாகக் கேட்டான். இத்தனை நாள் மனதில் இரகசியமாய்ச்
சுமந்த கல்யாண ஆசை. இறக்கி என் தலையில் ஏற்றிவிட்டுப்
பரிதாபமாய்ப் பார்த்தான்.
எல்லாம் புரிந்தது.
எதிர்பார்த்ததுதான். எனினும் உலகம் புரண்டு உருளுவது போல்
மனம் கலங்கியது. கூர்ந்து பார்த்தேன். சுமாரான உயரம். நீள்சதுர
முகம். வயது சுமார் முப்பது. பதினொரு வயது குறைவாய்
இருக்கலாம்.
'எனக்குவயதுநாற்பத்தொன்று."
'நோநா பொய் சொல்லுறான். முப்பதுமில்லை."
'இல்லை. ஐ.டி. காட்டவா?"
'வயசை கல்யாணம் பண்ணலே."
'பார்க்க நல்லாயிருக்காது."
'பார்க்கிறது நான்தானே. மேஜர் நோநா என்ன சொல்லுறான்?"
'நான் ஒரு முடம். என்னை வைத்து என்ன பண்ணப்
போறாய்?"
'நேரத்துக்குச் சோறு போடுவன்."

களுபண்டாவின் கணிப்பில் எனது வாழ்வு சோறு மட்டுமாக
இருந்தது. சிறிது நேரம் உற்றுப் பார்த்தேன். அப்பாவித்தனமாய்ச்
சிரித்தான். வெளியே சிறிது தள்ளிய பற்கள் காட்சி தந்தன. அதுகூட
எனக்குப் பிரச்சினை அல்ல. பிடுங்கி வீசிப் புதிய பல் கட்டிவிட்டால்
போச்சுது. அவனது மேலான மனிதத் தன்மை என்னை
ஆட்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
'நோநாவுக்கு பரிசு."
கையில் சிறு பொதியைத் தந்துவிட்டு, செங்கற் குவியலை
விட்டு எழுந்து நடந்தான்.

வீதியைப் பார்த்தேன். வேகமாக நடந்து கொண் டிருந்தான்.
வேகத்தின் பின்னே பயங்கர நெடுங்கதை ஒன்று தொடர்ந்தது.
ஊனத்தைக் காவ எவன் முன்வருவான்? எனது அந்தரங்க
ஊனம் களுபண்டாவுக்குத் தெரியும் என்று சொல்ல முடியாது.
தோளில் காவுவதற்குச் சித்தமாய் உறுதியாய் இருக்கிறான்.
ஊர் என்ன பேசும்? ஊரை விடுங்கள். எனது ராசவம்ச
செங்குருதி ஒருப்படுமா? உள்ளத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள்
எழுந்து நின்று எச்சரிக்கின்றன. அதனிடையே பல் டாக்டர்
கண்களில் அவசர அவசர மாய்க் காட்சி தந்து மறைகிறார்.
போரின் முன்னரும், போரின் போதும், போரின் பின்னரும்
ஏற்பட்ட மனிதவிரோத அனுபவங்கள், சூது வாதுகள் சூழ்ச்சிகள்
ஏமாற்றங்கள் தோல்விகள் என்னை முற்றாக மாற்றியுள்ளதை
உணரத் தொடங்கினேன்.

பெண் மௌனமாகச் சுமக்கின்ற இரகசியங்கள் வெளி
வருவதில்லை. புதைகுழிக்குள் அமிழ்ந்து மறைந்து அழிந்து
போகும். களுபண்டாவுக்குத் தெரிய நியாய மில்லை.
தினமும் இந்தக் கல்யாண நாடகம்---'நோநா நோநா"
என்று களுபண்டா இரந்து நிற்பது---வாடிக்கையாய் வலம் வந்தது.

நயினாமடு முகாம் இராணுவ சிப்பாய்கள் மத்தியில்
சமையல்காரன் களுபண்டா லட்சணமேஜர் சிவகாமியை அப்பப்
போகிறான் என்ற பொறாமைத் தீப்பற்றி எரிந்தது.

திருமணஞ் செய்யாத சிங்கள சிப்பாய்கள் பலரின் கனவு.
தமிழ் இளம் மங்கையர்களை மணம்புரிய வேண்டும் என்பது.
தமிழ் நிலப் பகுதிகளுக்கு வரும் பொழுதே அந்தக் கனவைச்
சுமந்துகொண்டுதான் வருகிறார்கள். வீதியில் செல்கின்ற கொஞ்சம்
அழகான தமிழ் மங்கையரை மனதில் இருத்திக் கொண்டு, வாய்த்
தால் தள்ளிக்கொண்டு போகப் பைத்தியமாய் அலைகிறார்கள். சிலர்
சாதித்தும் உள்ளார்கள்
அரசும் அவர்களுக்கு நல்ல ஆதரவு. புலிபற்றிய நித்திய
பயத்தில் விழிபிதுங்கும் சிங்கள உளவியல், அதற்கு மாற்றுமருந்தாக
புலிக் குமரிகளை சிங்கள விடலைச் சிங்கங்கள் திருமணஞ்
செய்வதை நிலபுலம் வழங்கி ஊக்கு விக்கிறது. தமிழர்கள் புலியின்
வாலைப் பிடிக்கிறார்களா என்பதை உளவுபார்க்க இது மிகவும்
இலகுவானபொறி---இராசதந்திரம்.

களுபண்டா பரிசளித்த பார்சலைஉடைத்துப் பார்த்தேன்.
பட்டுச் சேலை. பச்சை வண்ணம்.

வெளியே கூச்சல் கேட்டது. எட்டி வீதியைப் பார்த்தேன்.
திருமதி தேவி தம்பன். அவளின் பின்னே மாசிலாமணி அண்ணை,
சுசீலா அக்கா, சோதி மாமி, சுமதி, இன்னும் பலர். தேவி தம்பன்
'கலாசாரச் சீரழிவு" என்று திட்ட, யாவரும் எனது இருப்பிடத்தை
நோக்கி வாய்க்கு வந்தபடி புறுபுறுத்த வண்ணம் வந்து
கொண்டிருந்தனர்.    *** தொடரும் ***



No comments:

Post a Comment