நீர் சேமிப்பு
மனிதர் வாழும்
கண்டங்களில் மிகவும் வரண்டது அவுஸ்திரேலியா. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்ப்
பற்றாக்குறை உள்ளது. அதனால் நீர்க்கட்டுப்பாடும் அமுலில் உள்ளது.
ஒருமுறை
வீட்டிலிருந்த ஒவ்வொரு தண்ணீர்ப் பைப்பிற்குக் கீழும் ஒவ்வொரு பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
பாடசாலையில் மகனுக்கு ஒரு புரயெக்ற் (project) கொடுத்திருந்தார்கள். வீணாகப் போகும் தண்ணீரின் அளவை
மில்லி லீற்றரில் அளவிடும் முறை அது.
மறுநாள் காலை
- ஒரு சொட்டுத்
தண்ணீரும் எங்கடை பைப்பிலை இருந்து வீணாகவில்லை என்று பெருமை பேசினான் மகன்.
- புது வீடு என்றால்
அப்பிடித்தான் இருக்கும். ஆறேழு வருஷங்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்று
நான் சொன்னேன்.
மாலை
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மகனின் முகம் வாட்டமடைந்திருந்தது.
- தண்ணீர் கொண்டு
வராவிடில் புரயெற்றுக்கு மார்க்ஸ் இல்லையாம். சேர் சொன்னவர்.
- நீ சொல்லலாம்தானே
வீட்டிலை பைப் லீக் இல்லையென்று.
- சொன்னனான் தான்.
அதை அவர் ஏற்றுக் கொள்கின்றார் இல்லை.
அடுத்த நாள்
பள்ளிக்கூடம் போகும்போது, ஒரு
போத்தலினுள் கொஞ்சம் நீர் கொண்டு சென்றான் மகன். அவன் பாடசாலை போன பிறபாடு எல்லா
நீர்க்குழாயையும் பரிசோதித்தேன். எல்லாமே கச்சிதமாக இருந்தன. மகன் புத்திசாலிதான்
என்று நினைத்தேன்.
அன்று பாடசாலை
முடிந்து திரும்பும் போது 'புரயெற்
சக்சஸ்' என்றான் மகன்.
- உண்மை சொல்ல
வேணும். எங்கேயிருந்து நீர் எடுத்தாய்?
- அடிக்க மாட்டியள்
தானே!
- அடிக்கமாட்டன்.
- தோட்டத்திலை
இருக்கிற பைப்பை நாற்பது ஐம்பது தரம் கரடுமுரடாகத் திருகினேன். தண்ணீர் ஒழுகத்
தொடங்கிவிட்டது.
தோட்டத்துக்குச்
சென்று பைப்பைப் பார்த்தேன். ஒழுகிய நீர் ஒரு ஓடை போலாகி, வாழைமரப் பாத்தியை நிறைத்திருந்தது. சாதாரணமாக ஒரு
பைப்பிலிருந்து வருஷம் 365 நாள்
தண்ணி ஒழுகி இருந்தாலும், அந்தத்
தண்ணியாலை அந்தளவிற்குச் செலவு வந்திருக்காது. பைப் திருத்த ஆகும் செலவை எண்ணிக்
கவலை கொண்டேன். வாழ்க பாடசாலை.
No comments:
Post a Comment