Monday, 22 December 2014

வன்னி - (அதிகாரம் 9) - கதிர் பாலசுந்தரம்

நான் செத்துப் போவன்

எங்கள் குடும்ப மாடுகள் மேய்ச்சல் முடிந்து வீதி வழியே  தொழுவம் திரும்புகின்றன.

எண்பது மாடுகளில் கால்வாசியைக் காணவில்லை. ஐந்து மாடுகள் போரின் வேளை பட்ட காயங்கள், அவய இழப்பால் உபாதையோடு நகர்கின்றன. மூன்று காலில் இரண்டு வளர்ந்த நாம்பன் கன்றுகள். எரு(த்)து மாடுகள் ஒன்றையும் காணவில்லை. இறைச்சிக்கு முடித்து போட்டார்கள். வேறுயார் இங்கே மாட்டிறைச்சி சாப்பிடுகிற மனுசர்? வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போனதும் உண்டு. கொழும்புப் பக்கமிருந்து பழைய இரும்பு தேடி வருகிறவர்கள் அந்த வியாபாரத்தோடு பக்கத் தொழிலாக மாட்டு வியாபாரமும் செய்கிறார்கள். முதலில்லாத கொழுத்த வியாபாரம்.

'சிவகாமி எப்படிச் சுகம்?" வினாவியபடி சுசீலா அக்கா கூடாரத்துள் நுழைந்தார்.
'வாங்க சுசீலா அக்கா. உதிலே இருங்கள். நிரம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறியள்."
'நேரம் இல்லை. பின் வளவு துப்பரவாக்கிறன். வளவுக்கை தோட்டம் செய்யப் போகிறன். நீர் இறைக்க பம் தந்திருக்கினம். மிளகாய் நடலாம் என்று யோசிக்கிறன்."

'உனக்கென்ன அக்கா. மணி அண்ணை உதவி செய்கிறார். பாவம். மனுசியை ஆமி அடித்த எறிகணை முடிச்சுப் போட்டுது. கரையாமுள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வலையத்துள் நின்ற வேளை விழுந்த எறிகணை. மங்காவின் நெஞ்சிலே விழுந்ததாம். சிதறிப் போய்க் கிடந்த சதைகளை பொறுக்கி செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர் மணலுக்கை புதைச்சதாம். அதற்கு முந்தியே---இரண்டு சின்னப் பெடியன்கள்---அதுகளையும் புலிகள் கடைசி நேரத்திலே பிடித்துக்கொண்டு போய் ஒரு மாதப்  பயிற்சியோடை முள்ளிவாய்க்கால் போர்க் களத்துக்கு அனுப்பினதாம். பெடியளுக்கு என்ன நடந்தது? எங்கே போனார்கள் என்று தெரியாமல் நொந்து போயிருக்கிறார் மணியண்ணை."
'சிவகாமி, பெடியளை பூசா காம்பில் ஆமி வைத்திருப்பான்.திரும்பி வருவார்கள் என்று மணியண்ணை யோசிக்கிறார். தென்அந்தத்தில் அம்பாந்தோட்டையில். ஆரும் அங்கே போய் விசாரிக்க முடியாது. அதிருக்கட்டும் களுபண்டா இந்தப் பக்கம் வந்தவனே?"
எனக்கு உள்ளூரத் திக்கென்றது. ஏன் கேக்கிறா?

'ஓம் சுலீலா அக்கா. நேற்று வந்தவர். மாட்டுக் கொட்டில் வேலை செய்தவர். ஏன் கேட்டியள்?"
'ஆமிக் காம்பிற்கு பால் விற்க நீ ஒழுங்கு செய்து போட்டாய். நானும் ஒரு போத்தல் கொடுக்க யோசிக்கிறன். இரண்டு மாடுகள்தானே வைத்திருக்கிறன். ஒரு மாடுதான் கறவை மாடு. அதுவும் ஊர்மாடு."

பதில் சொல்லவில்லை. பொல்லை ஊன்றி ஊன்றி வாசலுக்குப் போனேன். கட்டிட வேலையை எட்டிப் பார்த்தேன். அங்கு வந்த சுசீலா அக்கா, 'சிவகாமி என்னுடைய வீட்டுக்கு கூரை வேலை நடக்குது. உனக்கு வளை வைக்கிற அளவுக்குக்கூடச் சுவர் எழும்பயில்லை."
'வேலை ஆள் ஒன்று சாரத்திலிருந்து விழுந்து வைத்தியசாலைக்குக் கொண்டு போனவை. நாலு நாளாய் வரயில்லை. அதுதான் சுணக்கம். பாரதூரமான காயம். உடனே ஆள் மயங்கிப் போச்சுது. ஏதன் நடந்துதோ என்று சந்தேகமாய் இருக்கிறது."
'சிவகாமி, குடிபுக முன்னர் வீடு பலி கேட்குது. நல்ல வேலை நடக்கிற சமயம் அபசகுனம் மாதிரி. நல்லாயில்லை என்று சொல்லுறவை. முருகப் பெருமானுக்கு நேர்ந்து வை. வீடு குடிபுகுந்து நீண்ட காலம் உந்த வீட்டிலே வாழ வேண்டுமென்று. வேறேதன் மனதில் இருந்தாலும் நேர்ந்து வை.
கோமதி வாறாள். மற்றப் பிள்ளையளும் இனி வரும். வாறன் சிவகாமி. மறந்து போகாதை பால் விசயத்தை களுபண்டாவிடம் சொல்லு. ஐந்து சதம்கூட வருமானம் இல்லை.

"நான் ஒன்றும் பதில் பேசவில்லை. சுசீலா அக்கா விறுவிறு என்று கேற்றைத் தாண்டிவீதியில் இறங்கி நடந்தார்.

'இன்றைக்கு எல்லோர் நெற்றியிலும் திருநீறு சந்தனம் துலங்குது. என்ன விசேசம்?"
'அன்ரி, முருகன் கோயிலுக்குப் போனனாங்கள். விசேச அபிஷேகம் நடந்தது." தங்கன்.
'பெரிய மாமாவின் மகன் சாந்தன் அண்ணையை புலிக்குச் சோற்றுப் பார்சல் கொடுத்தது என்று ஐந்து ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தவை. நேற்றைக்கு நீதிபதி அதற்கு எந்த ஆதாரமும் பொலிஸ் சமர்ப்பிக்க வில்லை. ஒப்புதல் வாக்கு மூலத்தை ஏற்க முடியாது. துன்புறுத்திப் பெற்றவை என்ற வாதத்தை ஏற்கிறேன் என்று கூறி விடுதலை செய்து போட்டார். அது தான் பெரிய மாமா அபிசேகம் செய்தவர்." சிந்துசா.

இன்றைக்கு நான் மூத்தண்ணர் வீரக்கோனின் கதை சொல்லப் போகிறேன்.

மூத்தண்ணன் வீரக்கோன் மளமளவென்று குறுக்கே வெட்டின வாழையின்; குருத்து மாதிரி வளர்ந்து, அப்பாவின் உயரத்துக்குக் கிட்ட வந்து விட்டார். கிட்டத்தட்ட ஆறடி. அதே நல்ல வெள்ளை நிறம். அதே கம்பீரம். அதே கூரிய கண்கள். தவணை விடுதலைக்கு ஆயிலடிக்கு வந்தால் வீடு ஒரே கலகலப்பு. இப்ப எல்லாம் அப்படி இல்லை. கறுப்பு ஆடிக் கலவரத்தில் சித்தப்பா குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை அவரை வேறு உலகிற்கு அழைத்துப் போயிற்று.

இனக் கலவர வேளை மூத்தண்ணன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி விடுதியில் தங்கி ஏ.எல். முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தார். உயிரியல் விஞ்ஞான வகுப்பில். தவணைப் பரீட்சையில் வழமையைப் போல முதல் மாணவனாக வந்ததோடு, பௌதிகம், ரசாயனவியல், விலங்கியல், தாவரவியல் நான்கு பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகள் பெற்றிருந்தார். சராசரி 91.2. உயிரியல் மாணவனுக்கு மாபெரும் சாதனை. டாக்டராக வரவேண்டும் என்று கோட்டை கட்டியவர், அதை மறந்து இப்போ இரசாயனவியல் பேராசிரியராக வர வேண்டும் என்ற தவிப்பு.

கலவர சமயத்தில் சித்தப்பா சிவனேசன், சித்தி கல்யாணி, சகோதரங்கள் இலக்கியா, சீராளனை வாகனத்தோடு துடிதுடித்துப் பதைபதைக்கத் தீ கொண்டு பொசுக்கிய கொடுஞ்செயல், மூத்தண்ணாவின் கனவுகள் கோட்டைகள் நம்பிக்கைள் எண்ணங்கள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது.
அப்பா, அம்மா, சகோதரங்களுக்கு உள்ள கவலை, அவர் அடி மனதில் என்ன பதுக்கி வைத்திருக்கிறார் என்பதே. சோழமன்னன் ராசேந்திரனாக எழுச்சி கண்டு பழிக்குப் பழிவாங்கத் துடிக்கிறரா?

ஈழத் தமிழர் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற வகையில், மூத்தண்ணர் வீரக்கோன், தமிழினத்தின் உரிமைக்காகப் போராடுவது புனித கடமை. ராசவம்ச வழியில் வந்த எங்கள் குடும்பத்துக்கு அது பற்றி ஆசிரியர் வைத்துப் பாடம் சொல்லித் தரத்தேவையில்லை. யார் யார் எங்கள் குடும்பத்தில் போராடுவது? ராசநாச்சியார் குடும்பம் ஒன்றாயிருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் போராடுவது யார் என்று தீர்மானிப்பது சரியாக அமையும். ஆனால் அதனைக் கடந்து ஒவ்வொருவரும் செயல் படுகிறார்கள். எங்கே ராசநாச்சியார் குடும்பம் அடையாளம் இல்லாமல் அழிந்து மறைந்து போகுமோ என்ற அச்சம் அப்பாவை அம்மாவை ஆட்டுகிறது. பிள்ளைகள் எல்லோரும் வெளியில் ஒன்றையும் மனதுள் வேறொன்றையும் மறைத்து வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்.

முல்லை வயது பத்து. மறைவாக வைத்து விடுதலைப் புலிகளின் பிரசுரங்களை எழுத்துவிடாமல் பாடமாக்குகிறாள். யார் கொடுக்கிறார்கள்? யாருக்கும் தெரியாது. அவள் என்ன சொல்கிறாள்? 'வாசித்தால் மொழி அறிவு வளரும்."

உரிமைக்காகப் போர் புரியவேண்டும், உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதற்கு எங்களுக்கு மட்டுமல்ல தமிழனுக்கே வரலாறு உண்டு. கணவன் போர்க் களத்தில் மடிந்து போக, அன்னை சிறு மகனை உடுத்தி கையில் வேல் கொடுத்து போர்க்களத்துக்கு அனுப்புகிற வரலாறு பேசுகிறது. அதற்காக ராச நாச்சியார் ஒட்டு மொத்தக் குடும்பமுமா? அதுதான் அப்பாவின் ஒரே கவலை. ஆறு பிள்ளைகள். ஒவ்வொருவரையும் தனித் தனி கேட்கிறார். யார் உண்மை பேசுகிறார், யார் பொய் பேசுகிறார் என்பது அவருக்குப் புரிய வில்லை.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் படிக்கும் மூத்தண்ணன் வீரக்கோன், தம்பி அண்ணன் இயக்கத்துக்குப் போனதை அறிந்து, அவசரமாக ஆயிலடிக்கு வந்தார். அம்மாவைத் தேற்றுவதே தொழிலாக இருந்தார். எப்பொழுதும் சமயலறைக்குள் காணப்பட்டார்.
அம்மாவின் கவலை அவருக்குப் பெரிதும் சஞ்சலத்தைக் கொடுத்தது. அம்மாவுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு சென்ற அப்பா விசாரித்தார்.
'வீரக்கோன். உனக்கும் இயக்கத்துக்குப் போற நோக்கம் ஏதன் இருக்கோ?"
'இல்லை அப்பா. படியாத மொக்குகள்தான் போகும்."
'நீபோனால் நான் செத்துப் போவன்." அம்மா.
'அம்மா செத்தால் பிறகு எனக்கு என்ன வேலை ஆயிலடியில். நானும் செத்துப் போவன்." மூத்தண்ணன்.

'நீ இயக்கத்துக்குப் போறதெண்டால் போ. எனக்கு சொல்லிப் போட்டுப் போ. யோகன் சொல்லிப்போட்டுப் போயிருந்தால் கொஞ்சம் பாரம் குறைந்திருக்கும். நான் ஆடிப்போனன். பதினான்கு ஆண்டுகள் தாலாட்டி சீராட்டி பாராட்டி வளர்த்தனான். அப்பா உடைந்து நொருங்கிப் போவார் என்று தெரியு மெல்லே. சொல்லியிருக்கலாமெல்லே?"
'எனக்கு நஞ்சு தந்து என்னைக் கொன்று போட்டுப் போ." அம்மா மகனை பரிதாபமாய்ப் பார்த்தார்.
'அம்மா, சஞ்சலப்படாதீங்கள். நான் உங்களை விட்டுப் போட்டுப் போக மாட்டேன். ஹாட்லிக் கல்லூரி விடுதியில் தானே இப்ப இருக்கிறன். உங்களைப் பிரிந்து தானே."
'அப்ப நீயும் இயக்கத்துக்குப் போக ஆயத்தமோ?"
'இயக்கத்துக்குப் போகப்போறன் என்று யார் சொன்னது?"
'இன்றைக்கு ஹொஸ்டலுக்கு போகப் போறியோ?"
'ஓம் அம்மா. நாளைக்கு சோதனை இருக்கு."
'தவணை முடிய இன்னும் காலமிருக்கு. இப்ப புதிசா என்ன சோதனை?"
'இடைத்தவணைப்பரீட்சை."

'நீ சுத்திச் சுத்தி என்னவோ பேசுறாய். சரி போ. அம்மாவை ஏமாத்திப் போடாதை. அம்மா தாங்க மாட்டா. தெரியுமெல்லே?"

*** தொடரும் ... ***

No comments:

Post a Comment