மிருகங்கள்
கூடார வாசலில்
நிற்கத் தெரிகிறது. உயர்ந்து வளர்ந்த வெள்ளைக்காரன் ஒருவனும்
தெரிகிறான். இரண்டு மூன்று புதிய வாகனங்கள் பாடசாலை
வாயிலில். பெரிய உத்தி யோகத்தர்கள் போலவிருக்கிறது. கொடுத்த
நன்கொடைக்கு வேலை நடக்குதோ
என்று கணக்குப் பார்க்க
வந்திருக்கிறார், கொழும்பு
ஜேர்மன் அரசதூதுவர்.
பாடசாலைக் கட்டிடச்
சுவர்கள் பூரணமாக எழுந்து நிற்கின்றன. டானா வடிவில். யன்னல் கதவு வைக்கும்
இடைவெளிகள் தெரிகின்றன. வகுப்பறைகள், அலுவலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், அதிபர் விடுதி. பொலிவாக அழகாக இருக்கப் போகிறது.
யுத்தம் நடந்த
புலங்களின் பாடசாலைச் சுண்ணாம்புக் கட்டிடங்கள் யுத்தத்தில்
இடிந்து போயின. உடைத்து அகற்றி, புதிய சீமெந்து மாடிக் கட்டிடங்கள் தினம் தினம் வளர்ந்து
வளர்ந்து வெளிநாட்டு நன் கொடையைப் பிரசாரம் செய்கின்றன.
மாறாக, அகதியாக விழுந்தடித்து ஓடியபின், அகதி முகாம்களில் இன்னலுற்று
மீள் குடியேறிய ஆயிலடி மக்கள் மட்டுமல்லாது முழு வன்னி
மக்களுமே தார்ப் பாய்க் கூடாரங்களுள்தான் ஜீவியம் பண்ணுகிறார்கள். அவர்களது ஆயிரம்
காலத்து மனைகள் கொடும் இராணுவ குண்டு-செல் வீச்சுக்கு
இலக்காகி பொசுங்கி தலைவிரித்த பேய்க் கோலத்தில் தரிசனம்
தருகின்றன. மனித நேய அமைப்புகள் வழங்கிய உடை, சமயல் பாத்திரங்கள், கூடாரம், படுக்கை விரிப்பு, கத்தி,
கோடரி, மண்வெட்டி, வாளியுந்தான் அவர்களின் இன்றைய உடைமைகள். செல்வச் செழிப்பாக, வீடு வாசல், மாடு கன்று வயல் என்று தலைநிமிர்ந்து வாழ்ந்தவர்கள்.
வந்தாரை வரவேற்று உணவளித்து வாழ்வளித்தவர்கள்.இன்று வீதியோரப் பிச்சைக்காரராக
வாழ்கின்றனர். வாழ்க்கை என்று விடியும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.
கூடாரத்தை விட்டு வெளியேறி எங்கும் சுதந்திரமாக நடமாட முடியாது.
நிலத்தில் புதைத்த கண்ணி வெடிகள் வருகை பார்த்துக்
கண்விழித்தபடி இருக்கின்றன. வீதியில் இறங்கி நடமாடும்
சுதந்திரத் தையும் யுத்தம்
பறித்துக்கொண்டு போய்விட்டது.
வன்னி மக்கள் நிலத்தைப் புடுங்கி எடுத்து எங்கும் கம்பி
வேலிகளுள் பத்திரப்படுத்திய பெரிய பெரிய இராணுவ முகாம்கள். வன்னி
மாந்தர் ஓவ்வொருவரதும் நிழலை இரவுபகலாக நோட்டம்
பண்ணுகின்றன. சந்திக்கு சந்தி 'புத்தம் சரணம் கச்சாமி" என்று ஓதுகின்றார்கள். வீதியில்
தடுக்கி விழுந்தால் இராணுவ சிங்கள வீரன்மீதுதான் மோதவேண்டும்.
வன்னி நிலம் மாற்றான் ஆதிக்கத்தின் கோரப் பிடியில்
திக்குமுக்காடுகிறது. யாரிடமும் முறையிட முடியாது. ஜனநாயகம் ஓடி
மறைந்து ஒட்டி நின்று எட்டிப் பார்க்கிறது.
புதிய வீதிகள். புதிய
புகையிரத நிலையங்கள், நவீன பாடசாலைகள், வைத்தியசாலைகள். கிளிநொச்சியில் ஆடம்பர வணிக நிலையங்கள். ஆனால் மக்கள் மனைகளுள் முடங்கிக் கிடக்கின்றனர். குமர்கள் இராணுவத்தில் சேர்ந்தால்தான் வாழ்க்கை மேன்படும் என்ற பரிதாபநிலை. கண்ணீர் சிந்தும் கொடிய வாழ்க்கை.
●
ஒரு இலட்சம் வீடு
கட்டித் தருவதாக இந்தியா பெரிதாக விளம்பரப்படுத்தியது.
ஆயிலடியில் அத்திபாரமே போடவில்லை.
லொறியில் மரம்
பறிக்கிறார்கள். ஒரு மாதத்தில் பாடசாலை வேலை முடிந்துவிடும் போலவிருக்கிறது.
தலைமை ஆசிரியர்
செல்லத்துரை கறுப்புத் துவரந்தடியோடு நிற்கிறார். அவரைக் கண்டால் மாணவர் பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சு போல் நடுங்குவர். கடமை கண்ணியம்
என்று என்னதான் வேசம் போட்டாலும் வெள்ளிக்கிமை பன்னிரண்டு மணிக்கே பாடசாலையை விட்டு, சைக்கிலைத் தள்ளிக் கொண்டு புறப்பட்டு விடுவார். புளியங்குளத்தில் ஒன்றரை மணி ‘குட்ஸ்’ புகையிரதம் பிடித்து யாழ்ப்பாணம் செல்ல. திரும்பத்
திங்கட்கிழமை பத்து மணிக்கு வந்து சேருவார். யாரும் ‘நியாயமா ஐயா?’ என்று பேசக்கூடாது. பொல்லாத
கோபம் வரும்.
'இந்த நுளம்புக்
கடிக்கை சேவை செய்யுறம். இரண்டொரு மணிநேரம் பிந்தினால் என்ன
குறைஞ்சுபோம்? குடியா மூழ்கிப்போம்?”
●
பகல் கொளுத்திய
வெயிலின் வெக்கை மறைந்து போயிற்று.பச்சைப் புறாச் சோடி பறந்து வந்து பாலை மரத்தில்
அமர்கிறது.
கோமதியோடு புதிய
அழகான பிள்ளை ஒன்றும் கதை
கேட்க வருகிறது.
'என்ன?ஒருபுதுப் பிள்ளையோடு வந்திருக்கிறீர்கள்."
'பெயர் சிந்துசா.
இலக்கியாவுக்கு என்ன நடந்தது என்று அறிய துடிக்கிறா."
கோமதி.
'நீங்கள் நான் சொன்ன
கதையை சிந்துசாவுக்கு சொல்லியிருக்கிறீர்கள். நல்லது. அழிந்துபோன ஆயிலடி ராச
நாச்சியார்வம்சக் கதையை தமிழ் மக்கள் எல்லாரும் கட்டாயம் தெரிந்திருக்கவேணும்.
துன்பியல் காவியத்தை ஆரம்பிக்கப் போகிறேன்."
ஆரியரத்தின
கொழும்பிலிருந்து, ஆயிலடிக்கு
வந்து சித்தப்பா குடும்பத்தினரின்அவலமரணம் பற்றிச்
சொன்னகதையை சுருக்கமாகச் சொல்லப்போகிறேன்.
●
சித்தப்பா சிவநேசன்
வழமையைப் போல காலையில் தனது பென்ஸ் காரில் வேலைக்குப்
புறப்பட்டார். செல்லும் பொழுது பிள்ளைகளை---இலக்கியா,
சீராளன்---அவரவர் பாடசாலையில் இறக்கிவிட்டுச் சென்றார்.
பிற்பகல் வேளை.
சித்தப்பா திறைச்சேரியில் தனது அறையில் வேலையில் மூழ்கி
இருந்தார். மேசையில் வீற்றிருந்த மின்விசிறி மெல்லிதாய்க்
கூவிக்கொண் டிருந்தது. வெளியே கலகம் நடப்பது தெரியாது.
கறுத்த கட்டைக்
காற்சட்டை, சிவப்பு ரி சேட்
அணிந்த நாலரை அடி உயர பீயோன் பண்டார, பெரிய மண்டையைச் சுமக்கும் கட்டைக் கழுத்தை நீட்டி அறைக்குள் எட்டிப் பார்த்தான். சித்தப்பா கவனிக்கவில்லை.
சித்தப்பாவின் நண்பர்
ஆரியரத்தின---அப்பாவைப் போல வெள்ளை. காதளவு உயரம்.
குளிர்மையான தேகம். பிரகாசமான முகம். அவரும் நிர்வாக
சேவை உத்தியோகத்தர்---அந்தப் பக்கத்தால் நடந்து
போவதைக் கண்டதும், மண்டையன்
பண்டார மெதுவாக நழுவிச் சென்றுவிட்டான்.
பண்டார அலுவலகத்தை
விட்டு அவசர அவசரமாக வெளியேறி வெள்ளவத்தை நோக்கி, நாக்கைத் தொங்கப் போட்டு ஓடும் நாயைப் போல, இளைக்க
இளைக்க ஓடினான்.
ஆரியரத்தின தனது
அறையில் இருந்தார். பொலிஸ்
தலைமைக் காரியாலயத்திலிருந்து,
அண்ணன் நாணயக்காரவின் தொலை பேசி அழைப்பு.
'ஹலோ."
'ஹலோ தம்பி
ஆரியரத்தின, கொழும்பு நகரில் இனக்கலவரம்
வெடித்திருக்குது. கலகம் கட்டுக் கடங்காமல் சூறைக்காற்றாய்ப்
பரவுது.உன்னுடையநண்பனுக்குச் சொல்லு."
அவருக்குச்
சித்தப்பாவும் ஆரியரத்தினவும் பல்கலைக்கழககாலம் முதல் நெருங்கிய நண்பர்கள் என்பது
நன்கு தெரியும். ஆரியரத்தின ஒருமுறை சித்தப்பாவுடன் ஆயிலடி
வந்து ஐந்து தினங்கள் தங்கினவர். சடகோபன் மாமாவுடன் போய்
மான்வேட்டை ஆடியவர். அதுவும் தெரியும்.
ஆரியரத்தின ஓடிச்
சென்றார். 'சிவா. அபாயம். தமிழர்களுக்கு.
இனக் கலவரம் தொடங்கியிருக்குது. படு மோசமாய்ப் பரவுகிறது. வீடுகளுக்கு தீ வைக்கிறார்கள். தமிழர்களைக் கொல்கிறார்கள்.
வெள்ளவத்தை பகுதியில்
பெருஞ் சேதம். எழும்பு. புறப்படு.நான் என்னுடைய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு
போகிறேன். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியை அகதி முகாமாக
மாற்றி உள்ளார்கள். இராணுவ பாதுகாப்புப் போட்டிருக்கிறார்கள். உன்னுடைய பிள்ளைகள், மனைவியை ஏற்றிக் கொண்டு போய் அங்கு விடுகிறேன். எதற்கும்
பயப்படாதே. உயிரை கொடுத்தும் உன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றுவேன்."
வாகனம் வெள்ளவத்தை
நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. சிங்களச் சனங்கள்,
தமிழர் வீடுகளில் கொள்ளை அடித்த தொலைக்காட்சிப்
பெட்டிகள், வானொலி பெட்டிகள்,
மின்சாரப் பொருட்கள், சூட்கேசுகள் முதலிய விலை உயர்ந்த பொருட்களை
தலையில் கஷ்டப்பட்டுச் சுமந்து கொண்டு வீதி வழியே ஓடிக்
கொண்டிருந்தனர். பெரும்பாலும் பெண்களே. அவர்களின் பிள்ளைகளும்---ஐந்து வயதுப் பாலகன் பாலகி உட்பட---தலைகளில் பெரிய பெரிய சுமைகளுடன்வியர்க்க வியர்க்க ஓடினர்.
புருசன்மார்
கொள்ளையடித்தனர். பின்னர் அக்கட்டிடங்களுக்குத் தீமூட்டினர். ஆங்காங்கு சூறையாடி
முடிந்த கடைகள் அப்பொழுதுதான் எரியத் தொடங்கியிருந்தன.
பாதையில் ஒரு லொறி.
அப்பொழுதான் எரியத் தொடங்கியது. லொறியின் பெயர் ‘முருகா துணை.’ நிர்வாண கோலத்தில்
லொறிச் சாரதியும் உதவியாளனும்.
சூழ்ந்து ஒரு கலகக் கும்பல் பெற்றோல் கான், கிறிஸ், வாள்,
கோடரி சகிதம். 'கொளுத்தெடா!" அந்தக்குரல் உரத்துக் கேட்கிறது.
ஆரியரத்தினவின்
வாகனம் கிட்டத்தட்ட வீட்டின் முன்னூறு யாருக்குள் போய்விட்டது.
கலகக்கூட்டம். ஆயுதங்கள் சகிதம் காரை நிறுத்தி வளைத்து நின்று
கேள்விக்கணைகள் ஏவியது.
சாரதி ஆசனத்தில்
அமர்ந்திருந்த ஆரியரத்தின தலையை நீட்டி பதில் சொன்னார்.
சித்தப்பாவையும் சிங்களவர் என்றே கலகக்கூட்டம் நம்பியது. 'மாத்தையா போகலாம்" என்று தடையை நீக்கினார்கள்.
கார் வீட்டை
அடைந்தது. நல்ல வேளையாக அந்த ஒழுங்கையில்---நெல்சன்
பிளேசில்---இன்னும் தீவைக்கும் கொடுமை தொடங்கவில்லை.
விலைமிக்க பொருட்களோடு பலர் ஒழுங்கை வழியே களைக்க
களைக்க ஓட்டமும் நடையுமாகச் சென்றனர். ஒருசிலர்
தள்ளுவண்டிகளில் பொருட்களை ஏற்றிச் சென்றனர். ஓரிடத்தில்
பொருட்களை பிள்ளைகுட்டி யெல்லாம் சேர்ந்து ஓடிஓடி லொறியில்
ஏற்றினர்.
வீட்டுள் ஆரியரத்தின
புகுந்ததும் திடுக்கிட்டு நின்றார். வெறும் வீடாக இருந்தது.
தளபாடங்கள் இல்லை. வேறு எந்தப்பொருட்களும் இல்லை. மனிதர் எவரையும் காணவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடினார்.
சித்தப்பா மலசலகூட
கதவைத் திறந்து, அதன் வழியாக ஒரு கதைவைத் திறந்து 'இலக்கியா" என்று குரல் கொடுத்தார். நிலவறையில் ஒளித்திருந்தமூவரும்ஓடிவந்தனர்.
மூவரையும்
ஏற்றிக்கொண்டு கார் புறப்பட்டது. சித்தி கல்யாணியும் இலக்கியாவும்
முஸ்லிம் பெண்கள் போல முக்காடு போட்டிருந்தனர்.
பக்கத்து முஸ்லிம்
வீட்டுள் ஆரியரத்தின சென்றார்.வெள்ளிக்கிழமைகளில் கொத்துபா வேளை அணியும் இரண்டு
சிவப்பு துருக்கித் தொப்பிகளுடன் வந்தார். கார்
புறப்பட்டது.
புதிய கலகக்கூட்டம் காலி
வீதியில் நின்று காரை மறித்தது. எல்லோர் கைகளிலும்
ஆயுதங்கள். கார் நிறுத்தியதும் ஒருவன் காருக்கு உதைந்தான்.
ஆரியரத்தின காருக்கு வெளியே தலையை நீட்டி ஏதோ கதை சொன்னார். கூட்டம் வழி
விட்டது.
கார்
ஓடிக்கொண்டிருந்தது.
இந்துக் கல்லூரிக்கு
இன்னும் சுமார் கால் மைல் தூரமே இருந்தது. கலகக்கூட்டம்,
சாரங்கட்டியவர்கள். காற்சட்டை அணிந்தவர்கள்.
முதியவர் இளைஞர்வீதியின் குறுக்கே நின்றனர்.
அருகே செல்வந்தர்
ஒருவரின் வீடு. வீட்டுச் சொந்தக்காரர்கள் வாயிலில் நின்று மௌனமாகப் பார்த்தனர்.
கார் நின்றது.
ஆரியரத்தின
முந்திக்கொண்டு தலையை வெளியே நீட்டி'காரில் இருப்பது முஸ்லிம்கள். அந்த அம்மாவின் தாயார் காலமாகிவிட்டார். ஜனசா
அடக்கம் செய்ய முன்னர் போகவேணும். நான் அவர்களின் நண்பர்,"
என்று சாதுரியமாய்ப் பேசினார். 'சரி போகலாம்" கார் நகர
ஆயத்தம்.
சற்றுத் தள்ளி நின்ற
பீயோன் பண்டார ஆரியரத்தினவின் கார் என்பதைக் கண்டான்.
ஓடிப் போய்
காருக்குள்தலையைநீட்டிப் பார்த்தான்.
சித்தப்பா கூர்ந்து
பார்த்தார். அவரது அலுவலகப் பீயோன் பண்டார. பணிவான நல்ல
மனிதன். மெல்லி தாய்ப் பயம் நீங்கியது. 'பண்டார, பாடசாலை அகதி முகாமுக்கு போகிறோம். ஒருக்கா அங்கே வந்து என்னைச் சந்தி," என்றார்.
பண்டார தலையை வெளியே
இழுத்து எடுத்து மேலே நிமிர்த்திக் கத்தினான். 'தெமில மினிய. மகே லொக்கா---தமிழ் மனிதன். என்னுடைய அதிகாரி---சிவநேசன். தெமில வேசிக்கே புத்தா---தமிழ் வேசை மகன்" கலகக் கூட்டம் கொய்யோ
என்று கூச்சல் போட்டது.
ஆரியரத்தின காரை
நகர்த்த முற்பட்டார்.
கலகக் கும்பல்
குறுக்கே பாய்ந்து நின்றது. பொல்லால் பொனற்றில்
படபடவெனஅடித்தனர். உதைந்தனர்.
'நானும் சிங்களவன்.
திறைச்சேரிப் பெரிய அதிகாரி. கத்துகிற பண்டார அங்கு
பீயோன். அவனுக்குத் தெரியும். தயவு செய்து போக விடுங்கள்."
'நீ காரைவிட்டு
இறங்கு." ஒருவன் கத்தினான்.
'நான் இறங்க
மாட்டேன். வழிவிடுங்கள். கடவுள் உங்களுக்கு நல்வாழ்வு
தருவார். எமது புத்த மதம் கருணை போதிக்கிறது.தயவுசெய்து
போகவிடுங்கள்."
'அடோ இறங்கடா."
'நான் ஆரிய
சிங்களவன். என்னிலே கை வைத்தால் பொலிஸ் வந்து உங்களை
உதைக்கும். பொலிஸ் எஸ்.பி. நாணயக்கார என்னுடைய அண்ணன்.இறங்க முடியாது."
‘பெற்றோல் ஊற்றிக்
கொளுத்திக் கொல்லப் போகிறோம். நீ சீக்கிரம் வெளியே
வா."
'வர முடியாது.
என்னையும் சேர்த்துக் கொளுத்துங்கள். சண்டியர்களின்
வெருட்டலுக்கு நான் அஞ்சப் போவதில்லை."
'தெமல ரஜ கலிங்க
மாகன்---தமிழ் மன்னன் கலிங்கமாகன் செய்த மோசமானவேலைதெரியாதோ?"
'தெமில மன்னன்
ராசேந்திரன் செய்த கொடுமை தெரியுமெல்லே?" எவனோ ஓலமிட்டான்.
'எல்லாள தமிழ் மன்னனை
துட்டகாமினி; பெரிதாக மதித்தவன்.அது தெரியு மெல்லே?" ஆரியரத்தின.
'அடோ. இறங்கடா."
'இறங்கமாட்டேன்.
பெற்றோலை ஊற்றுங்கள். கொளுத்துங்கள்."
ஒருவன் காருக்கு
உதைந்தான். வேறு ஒருவன் கையில் இருந்த பொல்லால் கார்
கூட்டில் படார் படார் என்று அடித்தான். நாலாபக்கமும் படார் படார் ஓசை விடாது கேட்டது.
பீயோன் பண்டார கதவைப்
படாரெனத் திறந்தான். வேறு
இருவர் அடி போட்டு ஆரியரத்தினவைப்
பலாத்காரமாக இறக்கினர். ஒருவன் கன்னத்தில் அறைந்தான். ஒருவன் எட்டி
உதைத்தான்.ஆரியரத்தின நிலத்தில் சரிந்தார். தடியன் ஒருவன் கால்களில் பிடிக்க வேறொருவன் கைகளில் பிடித்துத் தூக்கிச் சென்று
சாக்கடைக்குள் போட்டனர்.
ஆரியரத்தின வலியால் துடித்தார்.
எழும்ப முயன்றார். முடியவில்லை.
நடப்பதை அருகே அமைந்த
வீட்டுக்காரனும் குடும்பமும்
மௌனமாய்ப்
பார்த்துக்கொண்டு நின்றனர். வாய் திறக்க வில்லை. பீயோன் பண்டார ஓடியோடிக் காரின் மேல் பெற்றோல் ஊற்றினான். படாரெனக் கதவைத் திறந்தான். இலக்கியாவும் தாயும் அணிந்திருந்த நகைகளை பிடுங்கி எடுத்தான்.
இலக்கியா மீதும்,
தாய் மீதும் பெற்றோல் ஊற்றினான்.தலை சிலுப்பிய சிவப்புச் சாரம் கட்டிய கிழவன் ஒருவன்
தீப்பெட்டியைத் தட்டிக் குச்சியை காரின் உள்ளே வீசி எறிந்தான்.
பின்னர் 'பறை தெமிளோ" என்று ஏசினான்.
கலகக்கூட்டம் “ஜயவேவ! ஜயவேவ---வெற்றி, வெற்றி!" என்று கைகளை மேலே உயர்த்தி வெற்றிக்
கோசம் போட்டது.
காருக்குள் இலக்கியா,
சித்தப்பா, சித்தி, தம்பி
சீராளன். ஓவென்று ஓலமிட்டனர். இலக்கியா தாயைக்
கட்டிப்பிடித்து ஓ வென்று
குழறினாள். துடித்தாள் உடைகள்
தீப்பந்தங்களாயின.
கொடுந்தீயின் ஊழிகால
அழிவுக்குள் அவர்கள் புதைந்து எரிந்து கொண்டிருந்தனர்.
●
கதை கூறுவதை
நிறுத்திவிட்டு கோமதியை அவதானித்தேன். பிள்ளைகளைப் பார்த்தேன். கண்கள் நீரைத்
தாரைதாரையாகக் கொட்டின. நெஞ்சங்கள் ஊதி உலர்ந்து கொண்டிருந்தன. வதனங்கள் கறுத்து மரத்துத் தெரிந்தன. கண்களில் மரண
அச்சம் கோர தாண்டவமாடியது.
எழுந்து வெளியே
சென்றேன். வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். பச்சை வனத்தை நோக்கிக் கீழிறங்கும் கதிரவன் செவ்விரத்தத்தை அள்ளிச் சொரிந்து கொண்டிருந்தான்.
அரை மணிநேரத்தின்
பின்னர் திரும்பி வந்து விட்ட இடத்தில் கதையை தொடர்ந்தேன்.
●
ஆரியரத்தின
சாக்கடைக்குள் எழுந்து நின்று கைகளை தலைக்கு மேலே உயர்த்தி 'ஐயோ முறையோ புத்த தேவனே! உன்பாதம் பட்ட புனித
பூமியை கேவலப் படுத்துகிறார்கள்." என்று கத்தினார்.
கார் ஓவென்று
கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
வெக்கையின் அகோரத்தில்
கலகக் கும்பல் ஓலமிட்டு துடிதுடித்து உயிர்விடும் ஜீவன்களை எட்ட நின்று
கூர்ந்து பார்த்து கைதட்டி ஆனந்தக் கூத்தாடியது. அக்காட்சி
மனிதனின் குரூர பக்கத்தை வெளிச்சமிட்டது.
ஆரியரத்தினவை நன்கு
தெரிந்தவர் அருகே உள்ள வீட்டுக்காரர். கலகக்கூட்டம் கலைந்து விட்டது.
ஆரியரத்தின சாக்கடையால் வெளியே வரக்கைகொடுத்து உதவினார்.
வெள்ளை காற்சட்டையும்,
கோட்டும், நீல ரையும் அழுக்கால் அலங்கோலமாக காட்சி கொடுத்தன.
கறுத்த அடர்ந்த கேசம் சிலும்பிக் கிடந்தது. கால்களில் சப்பாத்துகள்
இல்லை.
விடியும் வேளை. கார்
எரிந்து முடிந்து புகைப்பதும் ஓய்ந்து விட்டது.
வீதியோரத்தில்
சம்மாணமிட்டு அழுது ஓய்ந்த ஆரியரத்தின எழுந்தார்.
சாக்கடையிலிருந்து வெளியே வர உதவியவர் வீட்டு வாசலுக்குப் போனார். நன்றாக விடிந்துவிட்டது. கதவு மணி‘சுவிச்சை’அமுக்கினார்.
வண்ணச் சாரம்,
வெள்ளை பனியன் அணிந்த வீட்டு எசமான் கண்களைத் துடைத்தபடி கதவைத் திறந்தார். ஒரே திகைப்பு. 'மோனிங், ஆரியரத்தின
மாத்தையா."
ஆரியரத்தின
ஆங்கிலத்தில் கேட்டார். 'திரு.
கன்னங்கரா. எனக்கு ஒரு பாத்திரம் தருவீர்களா?"
சிறு சட்டி போன்ற
அலுமினியப் பாத்திரம் கொடுத்தார்.'பெரியது
வேண்டும்." பின்னர் பெரிய பாத்திரம் கொடுத்தார்.'இதிலும் பெரியது வேண்டும்." மேலும் பெரிய
மட்பாத்திரம் கொடுத்தார்.
அவருடைய மனைவி 'ஆரிய மாத்தையா" என்றபடி தேநீர்க் கோப்பையை நீட்டினாள். தலையை பக்கவாட்டில் ஆட்டிவிட்டு காரடிக்குச் சென்றார்.
கன்னங்கரா
ஆரியரத்தினவின் அலுவலகத்தில், ஆரியரத்தினவின்
பிரதான எழுதுவினைஞர். வாய் திறக்காது ஆரியரத்தினவைப் பார்த்தபடி நின்றார்.
ஆரியரத்தின
காருக்குளிருந்து ஏதோ எடுத்து அந்தப் பாத்திரத்துள் போடுவது
தெரிந்தது.
இத்தோடு இன்றைய கதை நிறைவடைகிறது.
●
விறகு பொறுக்கிப்
புகைப்போட மாட்டுத் தொழுவத்துக்குப் போய்கொண்டிருந்த நான்
திரும்பிப் பார்த்தேன். கதை கேட்டு முடிந்து வீடு திரும்பிய
பிள்ளைகள் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
என்னிடம் எதுவும்
போசாது ஓடிஓடி விறகு பொறுக்கி வந்து தொழுவ ஓரத்தில் குவித்தனர்.
'அன்ரி, இந்த குவியல் இரண்டு கிழமைகளுக்குப் புகை போட்டு நுளம்பை விரட்டப் போதும்," என்று கோமதி சொன்னாள்.
நான் வாய் திறக்க
முதல் அவர்கள் கேற்றை நோக்கி கெக்கட்டம் போட்டுச்
சிரித்தபடி ஓடத் தொடங்கினார்கள். மனிதர்கள் அனைவரும் குழந்தைகளாக
இருந்தால் இனக்கலவரங்கள் எங்கும் வெடிக்காது. இலக்கியா ...... என் மனம் எண்ணியது.
அவ்வேளை என் கண்களை
எதிரே வீதி ஓரத்தில் பாலைமரத்தின் கீழ் நின்ற ஜீப் கவர்ந்தது. கேணல்ரணவீரவின்
ஜீப். எனது குருதி கொதித்தது. கிளைமோர் குண்டு வைத்து அவனை
கொல்லத் துடித்தேன்.
*** தொடரும் ***
No comments:
Post a Comment