Tuesday 1 November 2016

சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும் (1) - கட்டுரை

பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் - கட்டுரை


சமீப காலங்களாக எனது சீனநண்பர் ஒருவரை சிலர் ‘பென்டிக்கொ பென்டிக்கோ’ என்று பரிகாசம் செய்வதைக் கண்டிருக்கின்றேன். அவரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்தேன்.

“எனது மகள் primary school இல் இருந்து secondary school இற்கு படிக்கப் போக இருக்கின்றார். மெல்பேர்ண் நகரத்தில் உள்ள பிரபலமான பெண்கள் கல்லூரியான Mac.Robertson Girls' High School இற்குப் போவதற்காக அவர் முயற்சி எடுத்து வருகின்றார். BENDIGO இல் ‘JOSS HOUSE’ என்ற எங்கள் கோவில் உள்ளது. அங்கே போய் வந்தால் நினைத்த காரியம் பலிக்கும் என்பார்கள். மகளின் பரீட்சைக்கு முன்பதாக நாங்கள் அங்கே போய் வந்தோம்” அவர் சொன்னார்.

அதற்கடுத்த வார இறுதி நாட்களில் நான் பென்டிக்கோ சென்றிருந்தேன். வெள்ளை இனத்து தன்னார்வத் தொண்டர் ஒருவர் அங்கே வேலை செய்கின்றார். அவர் ‘ஜொஸ் இல்லம்’ பற்றித் தரும் விளக்கம் அற்புதமானது. அவர் தனக்குத் தெரிந்த விபரங்களை மிகவும் ஆர்வத்துடன் தெரியப்படுத்தினார்.

1850 ஆம் ஆண்டுக்காலப் பகுதிகளில் முதன்முதலாக விக்டோரியாவில் பென்டிக்கோவில் தங்கம் அகழ்ந்தெடுக்கப்பட்டது. மெல்பேர்ன் நகரில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட நகரம் ’பென்டிக்கோ’. கிட்டத்தட்ட காரில் போவதானால் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் எடுக்கும்.

பென்டிக்கோவின் வரலாறு தங்கத்துடன் ஆரம்பிக்கின்றது. அந்தக் காலப்பகுதிகளில் தங்கம் அகழ்ந்தெடுக்கும் இடங்கள் எல்லாம் சீனர்களின் குடியிருப்புகள் ஆயின. சீனாவின் CANTON மாகாணத்தில் நிலவிய அரசியல் பொருளாதார நெருக்கடிகளினால் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், கலிபோர்ணியாவில் உள்ள தங்கவயல் போன்ற இடங்களிற்குச் சென்றார்கள். அந்தக் காலப்பகுதியில் ‘பென்டிக்கோ தங்கவயல்’ பற்றிய செய்தி கடல் வணிகர்களாலும், ஏற்கனவே அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த சீனர்களாலும் CANTON வாழ் மக்களுக்குப் பரப்பப்பட்டது. இதனால் ஏராளமான சீனர்கள் பென்டிக்கோ வந்தடைந்தார்கள்.

இவர்களில் பெரும்பான்மையோர் GUILDFORD என்ற இடத்தில் குடியிருந்தார்கள். இது பலறாற்றிற்கும் பென்டிக்கோவிற்கும் நடுவில், CASTLEMAINE என்ற இடத்திற்கு அண்மையாக இருந்தது. GUILDFORD இற்கும் பென்டிக்கோவிற்கும் இடையில் புகையிரதம் ஓடியது. 1857 காலப்பகுதியில் 35,000 சினர்கள் அங்கிருந்ததாகக் கணிப்பிடப்படுகின்றது.

இவர்களின் வருகைக்கு இங்கிருந்த ஐரோப்பியர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இதனால் 1855 இல் இவர்களின் வருகையை மட்டுப்படுத்தினார்கள்.

1871 காலப்பகுதிகளில் பெண்டிக்கொ (BENDIGO), பலறாற் (BALLARAT), காசில்மைன் (CASTLAMAINE) என்ற இடங்கள் தங்கவியாபாரத்தில் சுறுசுறுப்பாக இருந்தன.

1876 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயினால் GUILDFORD கிராமத்தின் பெரும்பகுதி அழிவுக்குட்பட்டது.

பென்டிக்கோவில் தங்க உற்பத்தி படிப்படியாகக் குறைய, சீனர்களில் பெரும்பான்மையோர் தங்கம், பணம் என்பவற்றுடன் தாய்நாடு சென்றுவிட, ஒரு சிறுதொகையினர் விக்டோரியாவில் தங்கிக் கொண்டனர். 1865 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கு முன்னர் ஏறக்குறைய 23,000 சீனர்கள் தாய்நாடு சென்றதாகவும் 2000 பேர்கள் வரையில் பென்டிக்கோவில் தங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அப்பொழுது சீனப்பெண்கள் மிகக்குறைந்தளவில் இங்கு இருந்தபடியால், சீனர்களில் சிலர் ஐரோப்பியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் தங்கவேட்டை அங்கே கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் தொடர்ந்தது.


தொடரும்...

1 comment:

  1. சிறந்த பதிவு தொடருங்கள்

    ReplyDelete