Tuesday, 14 February 2017

கார் காலம் – நாவல்


(புலம்பெயர்வாழ்வு என்பது எமக்கு மட்டும் உரித்தானது அன்று. அது பல்லின மக்களும் சார்ந்தது. இந்த நாவல் அவர்களின் கலாச்சார ஒழுக்க பிறழ்வுகளை முன் வைக்கின்றது.)


அதிகாரம் ஒன்று : அவள் பெயர் ஆலின் 

நந்தன் அவுஸ்திரேலிய தென்னந்தத்தில், மெல்பேர்ண் நகரின் எல்லைப்புறத்தில் அமைந்த கார் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து எட்டு மாதங்கள் கழிந்த நிலையில், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அன்றுதான் முதன் முதலாக நந்தன் அவளைச் சந்தித்தான்.

வாழ்க்கை எல்லா நாட்களையும் போல சாதாரணமாக அமைந்து விடுவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான்.

இளவேனிற்காலம். குளிர்ந்த ஒரு மாலைப் பொழுது. இரண்டாவது 'ஷிவ்ற்'. வேலை ஆரம்பிக்கும் கலவரத்தில் தூரத்தே போன அந்தக் கும்பலை நந்தன் காணவில்லை. நண்பன் சப்பை மூக்கு ஒக்காராதான் அவர்களைச் சுட்டிக் காண்பித்தான். கம்பனி நிர்வாகம் புதிதாக வேலைக்கு எடுப்பவர்களை தொழிற்சாலையை சுற்றிக் காட்டுவதுண்டு. வெள்ளை நிற 'ஓவரோலில்' (overall) ஒன்றன்பின் ஒன்றாக -  ஆண்களும் பெண்களும் அடுத்த 'செக்‌ஷனிற்குள்' போய்க் கொண்டிருந்தார்கள். வெள்ளை மஞ்சள் மண்ணிறம் கறுப்பு என பல்லினமக்கள். நிறத்தில் மாத்திரமல்ல, உருவ அமைப்பிலும் வேறுபாடுகள்.

அவர்களுள் தன்னந்தனியனாக துருவ நட்சத்திரம் போல அவள் தோன்றினாள். நந்தனின் மனம் திடுக்குற்றது. மாதவியா?
மாதவி - ஒரு ‘மூடுபல்லக்கு.  அன்றொருகால் அவன் வாழ்வில் மின்னல் போலத் தோன்றி மாயாஜாலங்கள் காட்டிவிட்டு மறைந்தவள். அழகானவள். அறிவானவள். மூடிய பல்லக்கிற்குள் இருக்கும் ஒல்லியான அவளை அறிதல் கடினம்.

நந்தன் இலங்கையில் தனது பேராதனைப் பல்கலைக்கழகப் படிப்பைப் பூர்த்தி செய்து வெளியேறும் போது, மாதவி பல்கலைக்கழகத்தினுள் அடியெடுத்து வைத்தாள். நந்தன் அப்போது அங்கு தற்காலிக விரிவுரையாளராக இருந்தான். சினிமா நடிகன் போல வசீகரமான உயர்ந்து வளர்ந்த நந்தனைப் பார்க்கும் வேளை மாதவியின் மார்பகம் துடித்தது. மற்றவர்கள் குசுகுசுக்குமளவிற்கு இன்னும் லீலைகள் ஆரம்பிக்கவில்லை. அவன் மாதவி மீது கொண்ட எண்ணத்தை வெளியிட்டபோது, தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தற்போது இல்லை, தான் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று சொல்லி அந்த எண்ணத்தைத் திசை திருப்பி விட்டாள் அவள்.

அதனால் ஒன்றும் நந்தன் இடிந்து போய் விடவில்லை. அவள் மீது கோபம் கொள்ளவில்லை. பொறுமையுடன் காத்திருக்க நந்தன் தயாரில்லை. அதனால் - அவர்களின் இளமைக் காதல் நிறைவேறவில்லை.

மீண்டும் பதற்றத்துடன் பார்த்தான். தூரத்தில் பழுத்த கப்பல் வாழைப்பழம் போன்ற மாதவி நின்றிருந்தாள். நந்தனுக்கு வேர்த்துக் கொட்டியது. எப்படியாவது அந்த இடத்தைவிட்டு விலகிவிட வேண்டும் என துடிதுடித்தான். அந்தக் கும்பல் அடுத்ததாக இவன் வேலை செய்யும் 'ரொப்கோற்' (Top coat)  இற்கு வரக்கூடும். ரீம் லீடரிடம் ரொயிலற் போய் வருவதாகச் சொல்லிவிட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தான். கண்ணுக்குத் தெரிந்த ஒரு எக்சிற்றின் வழியே வெளியேறினான்.

மாதவி திரும்பவும் தனது வாழ்க்கைச் சக்கரத்தினுள் வந்துவிட்டாளோ என பயந்தான் நந்தன். பன்னிரண்டு வருடங்களின் பின்பு மீண்டும் அவளை சந்திக்க நேரிடும் என நந்தன் நினைக்கவில்லை.

வெளியே புகைப்பதற்கு என ஒதுக்கப்பட்டிருந்த விசேட அறையினுள்ளிருந்து புகை விட்டுக் கொண்டிருந்தான் அல்பேற்றோ. பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரனான அவன் 'பிறைமர்’  பகுதியில் ' ரீம் லீடராக வேலை செய்கின்றான். நந்தனுடன் மிகவும் நெருங்கிப் பழகுபவர்களில் அவனும் ஒருவன். அறையைவிட்டு இருவரும் உரையாடியபடி வெளியேறினர். இயந்திர இரைச்சலுள்ளும் நந்தனின் குரலில் அவனின் பதட்டம் தெரிந்தது. இன்னொரு முறை அவளை உற்றுப் பார்த்துவிட்டு வினாவினான்.

"சகோதரா, இன்று கொஞ்சப்பேர் புதிதாக வேலைக்கு வந்திருக்கின்றார்கள் அல்லவா? அதிலே இருக்கின்ற 'அந்த ஒல்லியான  மஞ்சள்குட்டி' எந்த நாட்டைச் சேர்ந்தவள்?" என்றான் நந்தன்.

புன்னகைத்தபடியே, "வந்தவுடனேயே கண் போட்டுவிட்டாயா? அவள் எனது நாட்டுப்பெண்தான். பெயர் ஆலின். வயது 24" என்றான் அல்பேற்றோ. அவனது பதிலின் பின்னர்தான் நந்தனுக்கு மூச்சு சீராக வந்தது.
அசப்பில் அவள் 'மாதவி'யைப் போல இருக்கின்றாளே! நந்தனின் உள்ளம் அங்கலாய்த்தது.





தொடரும்....

No comments:

Post a Comment