அதிகாரம் இரண்டு : கார் தொழிற்சாலை
நந்தன் இலங்கையில் படித்தது ஒன்று.
அவுஸ்திரேலியாவில் இன்று வேலை செய்வது இன்னொன்று. அவன் ஒரு குறிக்கோளை வைத்துக்
கொண்டுதான் அங்கு வேலைக்குச் சேர்ந்தான். ஆரம்பத் தொழிலாளிக்கே அங்கு மணித்தியாலம்
25 டொலர்கள் கொடுத்தார்கள்.
மனித சஞ்சாரமற்ற வனாந்தரங்களாலும்
புல்வெளிகளாலும் பரவிக் கிடக்கும் அவுஸ்திரேலியப் கண்டத்தில் - அமைதியான ஒரு
கிராமத்தின் பெருநிலப்பரப்பை தனதாக்கிக் கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது
அந்தத் தொழிற்சாலை. தொழிற்சாலையின் ஒரு புறத்தே இருபத்துநான்கு மணி நேரமும்
கடகடத்து ஓடும் வாகனங்கள் நிரம்பிய வீதியும் வானளாவிய கட்டடங்களும், ஏனைய மூன்று
பக்கங்களும் புல்வெளியும் புதரும் ஓடையுமாகக் கொண்டுள்ளது.
தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய
முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. ஆரம்பத்தில் தொழிற்சாலையில் வேலை செய்வதற்கு ஆள்
பற்றாக்குறை இருந்ததாகச் சொல்லுவார்கள். அப்பொழுது வேலைக்கு ஒருவரைச் சேர்த்துக்
கொடுத்தால் சேர்த்துக் கொடுப்பவருக்கு ஐம்பது டொலர்கள் கொடுத்தார்களாம். முப்பது
வருடங்களுக்கு முன்னர் அதன் பெறுமதியை யோசித்துப் பார்க்க வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் ரொயோட்டா, ஹோல்டன்,
ஃபோர்ட், மிற்சுபிஷி என்று ஏகப்பட்ட கார்த் தொழிற்சாலைகள் இருக்கின்றன.
இப்போதெல்லாம் தொழிற்சாலையில் சுலபமாக வேலைக்குச் சேர்ந்துவிட முடியாது. இணைவதற்கு
பல படிமுறைகள் இருக்கின்றன. முதலில் ஏஜென்சிக்கு விண்ணப்பித்து, அவர்களின்
எழுத்துமூல பரீட்சையில் சித்தியெய்த வேண்டும். அவர்களால் தெரிவு செய்யப்படுபவர்கள்
தொழிற்சாலைக்கு அனுப்பப்படுவார்கள். அங்கு செயன்முறைப் பரீட்சை, நேர்முகப்பரீட்சை
வைத்து சிலரை மாத்திரமே வடிகட்டி எடுப்பார்கள். அதன் பின்னர் வைத்திய பரிசோதனை.
கண், காது பரிசோதனை, பின்னர் ஜட்டியுடன் நிற்க வைத்து முழங்காலில் சுத்தியலால் தட்டுவார்கள், கைகளில்
சுண்டிப் பார்த்து கிளுகிளுப்பூட்டுவார்கள்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு
நந்தன் தொழிற்சாலைக்கு வந்தபோது மனேஜர் ஒரு கொம்பனி சம்பந்தமான புத்தகத்தைக்
கொடுத்து ”இதை
வாசிச்சுக் கொண்டிரும். சிறிது நேரத்தில் வந்து விடுகின்றேன்” என்றார். வந்தவுடன் ”புத்தகத்தை பார்த்தீரா? என்ன
சொல்கின்றீர்?” எனறார்.
“கொம்பனி நட்டத்தில் போகின்றது” என்றான் நந்தன்.
பின்னர் ஒரு ஓவரோலைக் கொடுத்து ”இதைப் போட்டுக் கொண்டு வாரும். வேலை
செய்யும் இடத்தைச் சுற்றிப் பார்ப்போம்” என்றார். நந்தன் ஓவரோலைப் போடும்போது அருகே நின்று ஓவரோலை அவன்
எப்படிப் போடுகின்றான் என்பதை அவதானித்தார். நந்தன் முன்பு இலங்கையில் ஜப்பான்
கொம்பனி ஒன்றில் வேலை பார்த்திருந்தான். அங்கு ஓவரோல் போட்ட அனுபவம் அவனுக்குக் கை
கொடுத்தது. நந்தனை அவருக்குப் பிடித்துக் கொண்டது.
இவை எல்லாவற்றையும்
முடித்துக்கொண்டுதான் ஆலினும் அங்கு வந்திருந்தாள்.
நந்தனுக்கு ஆலின் மீது ஒரு ஈர்ப்பு
உண்டானது. அதற்கு அவள் மாதவியின் சாயலில் இருந்ததுதான் காரணம்.
காரின் பிரதான உடலைத் தயாரிக்கும் பகுதி
BODY SHOP. இங்கே Press
இல் தயாரிக்கப்படும் முதுகெலும்பான பனல்கள்,
கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம்
இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல் கொன்வேயர் (conveyor) மூலம்
PAINT SHOP இற்கு
இழுத்து வரப்படுகின்றது. வர்ணம் அடிக்கப்பட்டபின், ASSEMBLY இல் இயந்திரங்கள்,
உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டு, ஓடும் திறன் பரிசீலிக்கப்பட்டு ஒரு முழுமையான
காராக வெளியேறுகின்றது.
தொழிற்சாலையில் பொடி ஷொப், பெயின்ற்
ஷொப், அசெம்பிளி என்ற மூன்று பிரதான
பகுதிகளுடன் ENGINE,
PRESS, நிர்வாகம், ஸ்ரோர்,
மெடிக்கல் சென்ரர் போன்ற பல பகுதிகள் உண்டு. மூன்று பிரதான
பகுதிகளிலும் கன்ரீன் உண்டு. யாரும் எங்கு வேண்டுமானாலும் போய்ச் சாப்பிட்டுக்
கொள்ளலாம். தவிர ஒவ்வொரு பகுதிக்கும் ஏதாவது தொழிற்சாலையில் ஆபத்து நிகழ்ந்தால்
ஒன்றுகூடுவதற்கென்று பிரத்தியேக வெளியேறும் இடங்களும் உண்டு.
இந்தக்கதையின் பெரும்பாலான பகுதிகள்
பெயின்ற் ஷொப்பில் நடக்கின்றன. இந்தப் பெயின்ற் ஷொப்பில் ஆறு குழுக்கள் உள்ளன.
ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குறூப் லீடர், இரண்டு ரீம் லீடர்கள், இருபது பேர்
மட்டில் தொழிலாளர்கள் இருப்பார்கள். இதைப்போலவே மற்றப் பகுதிகளிலும் உண்டு.
ஆலின் பெயின்ற் ஷொப்பிலுள்ள பிறைமரில்
(Primer) முதன் முதலாகத் தனது வேலையை ஆரம்பித்தாள். 'ரொப் கோற்' இலிருந்து ஆலினைப் பார்த்து ரசிப்பது நந்தனுக்கு
வழமையாகி விட்டது. நண்பன் அல்பேற்றோவைப் பார்க்கும் சாட்டில் அடிக்கடி பிறைமருக்குப்
போய் வரத் தொடங்கினான் நந்தன். தூரத்தில் பார்க்கும்போது மாதவியைப் போல
தோற்றமளித்தவள், மிக அண்மையாக நெருங்கிப் பார்த்தபோது இன்னொருவிதத்தில் அழகானாள்.
உருக்கி வார்த்த தங்கம் போன்ற பளபளப்பான மஞ்சள் தோல், வெளிச்சத்தில் சலசலத்து மின்னும் காதோர பூனை மயிர்க்கற்றைகள், வேலைக் களைப்பில் அவள் முகத்தில் துளிர்த்திருக்கும்
துளிகள், கிறங்கிப் போவான் நந்தன். பம்பரம் போல வேலை
செய்யும் துடியாட்டமான அவளை அங்கிருந்தபடியே விழுங்கினான்.
நந்தன் தன்னைப் பார்ப்பதை அவள் அறிந்திருந்தாள்.
சில நேரங்களில் இருவரது பார்வைகளும் ஒரே நேர் கோட்டில் சந்திப்பதுண்டு. அந்தத் தருணங்கள்
பொன்னானவை. யாராவது ஒருவர் புன்னகைத்துக் கொள்வார்கள்.
ஒருமுறை ஆலின் 'ரொப் கோற்'றிற்கு வந்து, நந்தன்
இல்லாத சமயம் அவனைத் தேடினாள். அங்கே வேலை செய்யும் 'ஒகாரா' வேண்டுமென்றே அவளது பெயரைக் கேட்டான்.
ஒகாராவிற்கு நந்தன் அவளைப் பார்ப்பது முதல் கொண்டு சகலதும் அறிவான்.
அவனுக்கு ஆலின் சொன்னது 'அலிபாபா' என்று காதிற்குள் விழுந்தது. அன்றிலிருந்து அவளின் பெயர் 'அலிபாபா'வாக மாறியது.
”நந்தன்
திருமணமானவனா?”
அலிபாபா ஒகாராவிடம் கேட்ட ஒரே கேள்வி இதுதான்.
”நந்தன்
திருமணமானவனா?”
●
தொடரும்...
No comments:
Post a Comment