அதிகாரம் 10 - வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்
ஆலின் மீண்டும் வேலைக்குத் திரும்பி வந்தாள்.
ஆலினைப் பற்றிய சங்கதிகள் ’பெயின்ற் ஷொப்’ முழுவதும் பரவியிருந்தது. அவளையும் மிக்கெய்லையும் ‘பிறைமரில்’ இருந்து ’எண்ட் ஒஃப் லைன்’ என்ற பகுதிக்கு தந்திரமாக நிர்வாகம் மாற்றியிருந்தது.
அவர்களை 'என்ட் ஒஃப் லைனிற்கு மாற்றியதில் மக்காறியோ
பெரும்பங்கு வகித்தான். மிக்கெய்ல்தான் அவளுக்கு மத நம்பிக்கையை ஊட்டி விசயத்தை விவகாரமாக்கி
இருக்கவேண்டும் என நினைத்து அவனையும் சேர்த்து மாற்றியிருந்தார்கள்.
'அபோர்ஷன்' முடிந்து வந்த ஆலின், வேலைக்கு வந்த முதல்நாளே மக்காறியோவைத் தேடிப் போய்விட்டாள்.
”சுகம்
தேடி வந்து விட்டாள். அவளால் இப்பொழுது அவனை விட்டு ஒரு கணமேனும் விலகி இருக்க முடியாது” என்று சொன்னார்கள்.
மக்காறியோவின் அறையை விட்டுத் திரும்பிப்
போகும்போது நந்தன் அவளைக் கண்டுகொண்டான். மக்காறியோ இருக்கும் அறையைச் சுட்டிக் காட்டி,
இடுப்பை நெளித்துவிட்டுப் போனாள் ஆலின்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மக்காறியோவைத்
தேடி அடிக்கடி வரத் தொடங்கினாள் ஆலின். அறைக்குள் சூடாக வாக்குவாதங்கள் நிகழும். கடைசியில்
கண்கள் கலங்கியபடியே அறையைவிட்டு வெளியேறுவாள் ஆலின். காரியம் முடிந்ததும் கழற்றிவிடுவதில்
வல்லவனான மக்காறியோ இப்போது அவளை 'வெட்டத்' தொடங்கினான்.
முன்பும் ஒரு தடவை மக்காறியோ புங்குடன்
பிரச்சினையொன்றில் மாட்டுப்பட்டிருந்தான். அவனது அறைக்குள் இருந்து புங் ரெலிபோன்
கதைத்துக் கொண்டிருக்கும்போது, அருகே இருந்த மக்காறியோ வேண்டுமென்றே அவளது மார்பு
மீது கைகளைப் படரவிட்டிருந்தான்.
“என்ன சின்னனாக் கிடக்கு?” என்று சிரித்து மழுப்பப் பார்த்த அவன்
மீது ஆத்திரம் கொண்டாள் புங். தொழிற்சாலை யூனியனிடம் முறையிட்டாள். ஆனால்
எந்தவிதமான ஆதாரமும் இல்லாத படியாலும், அதுவே முதல் தடவை என்பதாலும் அந்தப்
பிரச்சனையில் இருந்து மக்காறியோ தப்பித்துக் கொண்டான். ஆனால் இந்தத் தடவை
யூனியனிடமோ நிர்வாகத்திடமோ எவருமே முறையிடவில்லை.
ஆனால் ஆலினின் கதை அப்படியல்ல. ஆலினின்
விருப்பப்படியே மக்காறியோ அவளுடன் உறவு கொண்டிருந்தான்,
"ஒருமுறை
பட்ட அனுபவம் போதாதா? பிறகும்
ஏன் அவனைத் தேடிப் போகின்றாய்?"
"இன்னும்
அவன் என்னுடைய காசைத் தரேல்லை. உவனை நம்பி என்ரை குழந்தையையும் அழிச்சுப் போட்டன்.
எனக்கு குழந்தை எண்டால் நல்ல விருப்பம். எல்லாருமாகச் சேர்ந்து அழிக்கச் சொன்னியள்.
இப்ப எனக்குத் தர வேண்டியதையும் தரேல்லை."
"ஒண்டுமே
தரவில்லையா?"
"பிலிப்பைன்ஸ்
போக வர மாத்திரம் ரிக்கெற் எடுத்துத் தந்தான். பத்தாயிரம் டொலரையும் ஏமாற்றி விட்டான்."
கையைக் காட்டிக் கத்திக் கதைத்தாள் ஆலின்.
அறைக்குள் இருந்தபடியே அவர்கள் கதைப்பதை மக்காறியோ பார்த்துக் கொண்டிருந்தான். நந்தனும்
ஆலினும் ஆரம்பகாலம் முதல் நண்பர்கள் என்பதை அவன் அறிவான்.
ஞாயிற்றுக்கிழமை முகத்தை அழகு செய்து -
திங்கட்கிழமை வரும்போது ஜொலிக்கும் ஆலினது ஒப்பனை, ஒவ்வொருநாளாக வீழ்ச்சி கண்டு வெள்ளிக்கிழமைகளில் சரிந்து விடும்.
அவளது மார்பகங்கள் இரண்டும் சரிந்து தொங்கி
இருப்பதாகச் சொல்லி, ஒளிந்து நின்று பார்ப்பான் ரிம்ராம் என்னும் வியட்நாமியன். பின்னர்
தனது கைகளை மார்பிற்குள் நுழைத்து, தனது
மார்பைச் சரி செய்து அவளைப் பரிகாசம் செய்வான். அவனது செய்கைகளையிட்டு அவள் பெரிதாக
ஒன்றும் அலட்டிக் கொள்வதில்லை.
ரிம்ராம் திருமணம் செய்யாதவன்.
”ஏன்
நீ இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்று ரிம்ராமைக் கேட்டால், அவன் கூறும் பதில் இதுதான் :
”விதம்
விதமான கார்கள் ஓட ஆசைப் படுகின்றேன். விதம் விதமான சாப்பாடுகள் சாப்பிட ஆசைப்படுகின்றேன்.
தினமும் ஒரே சாப்பாடு எனக்குப் பிடிப்பதில்லை.”
எப்படி இருக்கின்றது அவனது பதில்?
அதன்பிறகு மக்காறியோவிடம் இருந்து அவளால்
அந்தக் காசை வாங்க முடிந்ததில்லை. அந்தப் பணத்தை நம்பி தனது வாடகை வீட்டுக்குத் தேவையான
தளபாடங்களை வாங்கியிருந்ததாக எல்லாரிடமும் சொல்லிக் கொள்வாள் ஆலின்.
ஒருநாள் ஆலினை கார்த் தரிப்பிடத்தில் சந்தித்தான்
நந்தன். காரை 'றிவேர்ஸ்' செய்து இரண்டு கார்களை அடித்துவிட்டு நின்றாள்
அவள். கொம்பனியில் லீசுக்கு எடுத்திருந்த அவளது காரின் பின்புறம் தொங்கிக் கொண்டிருந்தது.
ஒரு பிறாடோவின் ’பம்பர்பார்’ கழன்று நிலத்துடன் இழுபட்டிருந்தது. மற்றது யாறிஸ் பொனற் பொசுங்கிப்
போயிருந்தது. எதுவுமே கவலையற்று ஒன்றுமே நடவாததைப் போல நின்று கொண்டிருந்தாள்
ஆலின். குறூப் லீடரிடம் காசு வாங்கும் எண்ணத்தைக்
கை விட்டு விட்டதாகச் சொன்னாள்.
உவளால் எப்படி காயங்களையும் அவமானங்களையும்
தாங்கிக் கொள்ள முடிகின்றது என நந்தன் வியப்படைந்தான். எதுவுமே அவளுக்கு
உறைப்பதில்லை. அவளின் மனம் மரத்துப் போய்விட்டது.
அவளைப் பார்க்க இப்பொழுது நந்தனுக்கு அருவருப்பாக
இருந்தது. அவளிடம் அன்பு பாசம் கருணை என்பதை துளியும் எதிர்பார்க்க முடியாது. அவள்
இப்போது ஒரு இயந்திரம்.
"ஒரு
குட் நியூஸ். வாற கிழமை மட்டில் உன்னுடைய செக்ஷனிற்கு வருவேன். வேலை மாற்றம்"
என்றான் நந்தன். அந்தச் செய்தியைக் கேட்டதும் ஆலினின் முகம் பிரகாசம் அடைந்தது.
”எண்ட்
ஒஃப் லைனிற்கா?” என்றாள் வியப்புடன்.
"மிக்கெய்லுடன்
உனக்குப் பிரச்சினை என்று அறிந்தேன். என்ன நடந்தது?"
"அவன்
கிடந்தான் நெட்டையன்! தன்னுடன் படுக்கைக்கு வரும்படி கூப்பிடுகின்றான். அவன் இப்ப பைபிளைத்
தூக்கி எறிஞ்சுவிட்டான் போலை கிடக்கு" சொல்லிக் கொண்டே நந்தனின் முகத்தை உற்று
நோக்கினாள்.
"உனக்கு
இப்ப என்ன வயதாகின்றது? என்ன
மிஞ்சி மிஞ்சிப்போனா 40 இருக்கும் என்ன?" என்று திடீரென்று நந்தனைப் பார்த்துக் கேட்டாள்.
"46" என்றான்
நந்தன்.
"நொற்
பாட். ஸ்ரில் யங்" என்றாள் கண்ணைச் சிமிட்டியவாறே ஆலின்.
“என்ன இவள்! ஒரு விலைமாதுவைபோல
கதைக்கின்றாளே!” என்று முணுமுணுத்த நந்தன் எண்ணத்தில் மெல்பேர்ண் லீலைகள் எழுந்து
நின்று நடனம் புரிந்தன.
விலைமாதர்களிடம் செல்பவர்களுக்கு
வெள்ளிக்கிழமை விசேச தினமாகும். அன்று முழுவதும் அவர்கள் உற்சாகமாகக்
காணப்படுவார்கள். தங்களுக்கிடையே குறியீட்டுப் பாஷையில் சிரித்து பேசி
மகிழ்வார்கள். வேலை முடிந்ததும் சவரம் செய்து பல் மினுக்கி குளித்து விசில்
அடித்துக் கொண்டு சிலர் திரிவார்கள். இன்னும் சிலர் வேலை முடிந்த மறுகணம் வில்லில்
இருந்து கிழம்பும் அம்பாக பாய்ந்து சென்று அங்கேயே காரியத்தை முடிப்பார்கள்.
குறைந்தது நூறில் இருந்து இருநூறு வரை அரை மணி நேரத்திற்குக் கறந்துவிடுவார்கள்.
மெல்பேர்ணில் ’சென்ற்
கில்டா’
இதற்கு புகழ் பூத்த இடம். சிற்றிக்குக் கிட்ட. சில குட்டிக் குட்டி இடங்களான
புஸ்கிறே, சென்ற் அல்பன்ஸ் போன்ற இடங்களிலும் உண்டு.
இங்கு தொழிற்சாலையில்கூட கற்புக்கான
விவாதம் பொருளாகின்றது. ஆண்கள் எங்கும் போகலாம். எதுவும் செய்யலாம். பெண்களில்
யாராவது ஒருத்தி ஏதாவது செய்துவிட்டால் போதும். கதை கதையாகக் கதைப்பார்கள். கண்
காது மூக்கு வைத்து எல்லாம் கதை பரப்பி விடுவார்கள்.
கார்ப் பாக்கிலிலிருந்து
தொழிற்சாலைக்கு வரும் பாதையின் இடையில் இரண்டு புல்வெளிகள் இருந்தன. அங்கே சில
முயல்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு கரையில் ஒதுக்குப்புறமாக இரண்டு
முயல்குட்டிகள் துள்ளித் துள்ளி நின்றன.
அவற்றைக் காட்டி “இவை நானும் நீயும்” என்றாள் ஆலின். நந்தனுக்கு என்ன
சொல்வதென்று தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் அவள் அருகே வந்து கொண்டிருந்தான்.
“இவளை இனி வெட்டிவிட வேண்டும்!” நந்தனின் மனம் சொல்லியது.
●
இன்னும் வரும் ...
No comments:
Post a Comment