அதிகாரம் 11 - கிழவன் நடனம்
ஆலினும் நந்தனும் இப்பொழுது ’எண்ட் ஒஃப் லைன்’ பகுதியில் வேலை செய்தார்கள்.
ஹெவின்
குறூப் லீடர். நந்தனும் பெளசரும்
ரீம் லீடர்கள்.
இவர்களுக்குக் கீழே 18 பேர்கள் வேலை
செய்தார்கள்.
நந்தன் அங்கு ரீம் லீடராக வந்தபோது,
அவனது வருகையைக் கொண்டாடும் முகமாக பாம் ஒரு பாட்டுப் பாடினான். அந்தப்பாடலில்
புங்கை நந்தனுடன் இணைத்து தனது வியட்நாம் மொழியில் பாடியிருந்தான். வியட்நாம்
மொழி தெரிந்தவர்களுக்குத்தான் அதன் பூரண அர்த்தம் தெரியும். நந்தனுக்கும் ஓரளவு
தெரிந்தது. தெரியத்தானே வேண்டும்.
விதி மக்காறியோவின் வடிவில் நந்தனின் திசையை
மாற்றியது. அவன் இப்போது புங்கின் பக்கம் சாய்ந்துவிட்டான். புங் இப்பொழுதும் ரொப்
கோற்றில் வேலை செய்தாள். அவளின் பிரிவால் நந்தன் தவிப்பதாக அந்தப் பாடல்
அமைந்திருந்தது.
ஆலினிற்கு அந்தப்பாடலின் மீது கோபம்
இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. அவளின் உலகம் இப்பொழுது வேறு.
மிக்கெய்லும் ஆலினும் அந்த
குறூப்பிற்குப் போனபோது அவர்களுக்கும் இப்படிப் பாடியிருந்தான். பாட்டு முழுவதும்
ஆலினின் சரித்திரம் நிரம்பி வழிந்தது. மொழி புரிந்தவர்களின் சிரிப்பில் இருந்து
அந்தப் பாடலின் மூலம் பாம் தன்னை இழிவுபடுத்துகின்றான் என்பதை ஆலின் புரிந்து
கொண்டாள்.
பாமிற்குக் கிட்டச் சென்று,
“உன் மனைவி ஓடிப் போனதற்கும் ஒரு
பாட்டுப் பாட மாட்டாயா?” என்று அவனது காதிற்குள் கேட்டிருந்தாள்.
நந்தன் அங்கு வந்த நாளில் இருந்து
குட்டி போட்ட பூனை போல அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள் ஆலின்.
"உனக்கொரு
விசயம் சொல்ல வேணும். போன கிழமை ‘பொடி ஷொப்’ கன்ரீனிலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது என்னை ஒருத்தன் உற்றுப் பாத்துக்
கொண்டிருந்தான். அவன் ஒரு பிலிப்பினோ. பிறகு நான் இருந்த மேசைக்கு வந்து சிறிது
நேரம் என்னருகில் இருந்தான். பிறகு என்னை விரும்புவதாகச் சொன்னான். என்னைப் பற்றியெல்லாம்
நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றான்."
"அதுக்கு
நீ என்ன சொன்னாய்?"
"அதற்கென்ன
கலியாணம் செய்து கொள்ளலாம் என்றேன். இல்லாவிடில் திருமணம் செய்யாமல் லிவ்விங்
டுகெதரா இருப்போம். பிடிக்கும் வரையில் இணைந்து வாழ்வோம், பிடிக்காத பொழுது
பிரிந்து சென்றுவிடுவோம் என்றேன்."
ஆலின் சொல்வதை உற்றுக் கேட்டபடி அவளையே
பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன். அவன் உள்மனத்தில் முதற் சங்க காலந் தொட்டுப்
பேணப்படும் தமிழ் கலாச்சாரம் பெருமை பேசிக் கொண்டிருந்தது.
"அவன்
பொடி ஷொப்பில் வேலை செய்கின்றான். ஆறு மாதங்கள் கொன்றாக்ரில். ஏற்கனெவே இரண்டு மாதங்கள்
முடிந்து விட்டன. என்ன நினைக்கின்றாய் இதைப் பற்றி" நந்தனிடம் ஆலோசனை கேட்டாள்
ஆலின்.
"உன்
விருப்பம். யோசித்துச் செய்" என்றான் நந்தன்.
அடுத்தவாரம் அந்தப் பிலிப்பினோவின்
பெயரை தன் மார்பில் பச்சை குத்தியிருந்தாள் ஆலின். கேட்டதற்கு அது அழிகின்ற மை
என்றாள்.
முன்பெல்லாம் வேலைக்கு ஆட்களை
எடுத்தால் ஒரு வருடத்தின் பின்னர் நிரந்தரமாக்கி விடுவார்கள். இப்பொழுதெல்லாம்
ஆறுமாதம் கொன்றாக்ற். அதன்பிறகு ஆறு ஆறு மாதமாக மூன்று வருடங்கள்
இழுத்தடிக்கின்றார்கள். இடையிலே கனபேர் கலைபட்டுப் போவார்கள். ஒன்றிரண்டு பேர்தான்
நிரந்தரமாகத் தேறுவார்கள்.
இதற்கிடையில் ‘ஃபோர்ட்’ கார்க் கொம்பனியை மூடப்போவதாக அறிவித்திருந்தார்கள்.
●
ஆலின் இப்பொழுதெல்லாம் நாகரீகமான ஆடைகள்
அணியத் தொடங்கி விட்டாள். நடையில் பழைய துள்ளலும் கம்பீரமும் உயிர்தெழுந்துவிட்டன.
அந்தப் பிலிப்பினோவுடன் குடித்தனம் நடத்தும்
போதே பல பேருடன் பழகத் தொடங்கினாள். கவலையை மறக்கவும், இன்பங்களைப் பெறவும் மீண்டும் போதைப்பொருளை நாடத் தொடங்கினாள். பணம் புழங்கத்
தொடங்கியது. போதைப்பொருள் விற்பனை செய்யும் குழுக்களுடனும் தொடர்புகளை
ஏற்படுத்திக் கொண்டாள். விதவிதமான கிவ்ற், ஐ போன், கமரா, செயின், சென்ற் போத்தல்கள் சகிதம் வேலைக்கு வந்தாள்.
வேலைக்கு வருவதில் ஒழுங்கீனங்கள். சிலவேளைகளில்
பிந்தி வருவாள். சொல்லிக்கொள்லாமலே நின்று கொள்வாள். திரும்பி வரும்போது ஏதாவது சாட்டொன்றைச்
சொல்லுவாள். 'சைற் பிஸ்னஸ்' ஆரம்பித்த பின்னர் கையிலே காசு புழங்கியது.
அந்தப் பகுதியின் கிழட்டு மனேஜர் ஹெவின் அவளுக்கு நல்ல ஒத்தாசை. ஹெவின் ஒரு ஜேர்மனியன்.
இருபத்தைந்து வருடங்களிற்கும் மேலாக அங்கே வேலை செய்கின்றார்.
ஹெவின் சற்றே கூனல் விழுந்தவர். படு
சோம்பேறி. வேலை நேரத்திலே உறக்கம் கொள்வார். சில நேரங்களில் உறங்கும்போது அவரை
‘மொபைல் போன்’ மூலம் சிலர் படம் எடுத்துச்
செல்வார்கள்.
ஒருநாள் நந்தனுக்கும் ஆலினுக்குமிடையே வாக்குவாதம்
வந்தது.
"இப்படியெல்லாம்
ஏன் செய்கின்றாய்?"
"என்
புருஷன் எனக்கு எல்லாவற்றையும் காட்டித் தந்துவிட்டுப் போய் விட்டானே! நான் என்ன செய்வது?"
அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது, கிழட்டு மனேஜர் வந்து அட்டை போல அவளின்
பின்னால் ஒட்டிக் கொண்டு நின்றார். அவள் கதைப்பதை நிறுத்திக் கொண்டாள்.
கிழவனின் அட்டை போன்ற ஒட்டுதல் தினமும்
தொடர்ந்தது. ஆலினும் அவருக்கு இசைந்து கொடுத்தாள். ஹெவின் என்றால் அவளுக்கு
இப்பொழுது சொர்க்கம். ஹெவின் கொம்பியூட்டரின் முன்னால் பிசின் பூசி
ஒட்டிவிட்டாற்போல் இருப்பார். ஹெவின் உணவருந்தி ஒருவரும் கண்டதில்லை. அபூர்வமாகவே
அது நடக்கும். ஆனால் ஆலின் சாப்பிடும்போது ஸ்பூன், கப் என்று ஒவ்வொன்றாக எடுத்துக்
கொடுப்பார். ஒருமுறை ஆலினுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தார். கெந்திக் கெந்தி
அவளின் பின்னாலே போய் நீட்டினார். அவள் வாங்க மறுத்து அறைக்குள் ஓடினாள். இவர்
பின்னாலே ‘ஏய்... ஏய்...’ என்று கலைத்துக் கொண்டு போனார்.
இருவரும் கொஞ்ச நேரம் அறைக்குள் ஓடிப் பிடித்து விளையாடினார்கள்.
எந்த நேரமும் ஹெவினின் கொம்பியூட்டரில்
இருந்து பழைய பாடல்கள் ஒலித்தபடி இருக்கும். ஒவ்வொருநாளும் Elvis Presley பாடிய
Maybe I didn't treat you
Quite as good as I should have
Maybe I didn't love you
Quite as often as I could have - என்ற பாடலை கேட்கத் தவறமாட்டார்.
Quite as good as I should have
Maybe I didn't love you
Quite as often as I could have - என்ற பாடலை கேட்கத் தவறமாட்டார்.
அவளது ஒழுங்கீனத்தினால் அவளுக்கு நிர்வாகத்திடம் இருந்து நெருக்குதல் வரத் தொடங்கியது. கிழவனார் மேலிடத்திற்கு ஏதாவது சாக்குப் போக்குகள் சொல்லி அவளைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார்.
ஒருநாள் 'ரொப் கோற்'றில்
வேலை செய்யும் ஸ்ரிபன் என்பவன் வந்து கிழட்டு மனேஜரிடம் சண்டையிட்டான். ஹெவினும் ஸ்ரிபனும்
நீண்டகால நண்பர்கள். பகிடியாகத்தான் என்றாலும் அதில் விசயமிருந்தது.
"தினமும்
நீயே கூட்டிக் கொண்டு போகின்றாயே! அது எப்படி நியாயமாகும். எல்லாருக்கும் சம உரிமை வேண்டும் அல்லவா" என்றான் ஸ்ரிபன்.
"ஆர்
உன்னைக் கூட்டிக்கொண்டு போக வேண்டாமென்றது? வந்தால் நீயும்தான் கூட்டிக் கொண்டு போயேன்" என்றார் கிழவர். ஆலின்
ஒன்றும் தெரியாத பாப்பா போல உதட்டுக்குள் புன்முறுவல் பூத்தபடி நின்றாள். அவர்கள் இருவரும்
தங்களுக்குள் இரகசியம் பேசினார்கள்.
அடுத்த நாள் ஸ்ரிபனைப் பார்த்து 'பிஷா மான்' (pizza
man) என்று கத்தினாள் ஆலின்.
அவன் ஆலினுக்கு பிஷாவும் நூறு டொலரும் முதல்நாள்
இரவு குடுத்திருந்தான். அதுதான் அந்தக் கத்தல்.
●●
இன்னும் வரும்...
No comments:
Post a Comment