Wednesday, 18 October 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 13 - மாயா

ஆலின் தினமும் எழுதும் கொப்பியை டைரியை – யாரோ திருடி விட்டார்கள். ஹெவினும் அவளுமாக தொழிற்சாலைக் குப்பைக் கூடைகளைக் கிழறினார்கள். அவளது மூன்று வருடத் தேட்டம் தொலைந்து போயிற்று. அதை எடுத்த கடன்காரனை தனக்குத் தெரியுமென்று அன்று முழுவதும் திட்டியபடி இருந்தாள்.

அந்த டயரி – எத்தனை மனிதர்கள் அவளைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்கள் என்பதைக் கூறும்.
கிழவர் வலது புறமாகவும் ஆலின் இடது புறமாகவும் குப்பையை நோண்டினார்கள். கிழவருக்கு இருபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நடந்த விபத்தால் அங்கவீனமானவர். ஆலின் சமீபமாகத்தான் நொண்டுகின்றாள். சிலவேளைகளில் கழுத்து நோவும் அதனுடன் சேர்ந்து விடும். அழுது கொண்டே 'மெடிக்கல் சென்ரர்' போவாள். அங்கு அரை மணித்தியாலம் றிலக்ஸ் பண்ணிவிட்டு வரும் போது சிரித்தபடி வருவாள்.
"ஆலின் ஏன் இடுப்பை நொண்டி நொண்டி நடக்கின்றாய்?" என்று யாராவது கேட்டால் கூசாமல் பக்பக் ஷோ என்பாள்.

மக்காறியோ சிலவேளைகளில் வந்து, ஒரு ஓரமாக நின்று ஆலினைப் பார்ப்பான். அவள் இப்பொழுதெல்லாம் அவனைக் கணக்கில் எடுப்பதில்லை. அவளுடைய உடலும் உணர்வும் அவன்பால் மரத்துப் போய் விட்டன.

மெயின்ரனென்ஸில் வேலை செய்யும் ஒரு வயது முதிர்ந்த யூகோசிலேவியா நாட்டவன், போகும் வழியில் தனது பாதையின் திசையை மாற்றி இவளிடம் வந்து இறுகக் கட்டியணைத்து மை பேபி என்றுவிட்டுப் போவான்.

"பாவம் முதியவர், என்னுடைய அப்பாவின்ரை வயது இருக்கும்" என்பாள் ஆலின்.

பாட்னர் ஓடித் தப்பியதன் பின்னர் ஆலின் மனமுடைந்து போனாள். முன்பு போல தன்னை அலங்காரம் செய்வதில்லை. அளவுக்கு மீறிய ‘லிப்ஸ்டிக்அதுவும் கடும் சிகப்பு நிறத்தில் இந்தா விழுந்துவிடுவேன் போல உதட்டிலிருந்து வழிந்தபடி இருக்கும். அதுவும் ஒழுங்காகப் பூசப்பட்டு இருக்காது. அப்பிப் பூசி இருப்பாள். பணக்கஷ்டமும் ஏற்படத் தொடங்கியது.
இதுவரை காலமும் தனது மகளைப் பராமரிப்பதற்காக, தனது சம்பளத்தின் அரைவாசிப்பகுதியை தங்கையிடம் கொடுத்து வந்திருந்தாள். வருத்தத்தினால் மேலதிக வருமானமும் குறைந்து விட்டது. ஹெவின் ஒருவர்தான் அவளுக்கு இப்போது நிரந்தர வாடிக்கையாளன். கிழவருக்கு அவள் மீதான ஆசை வரவரப் பெருகிக் கொண்டே போனது. 'ஷோட் அண்ட் ஸ்சுவீற்' என்று அவளைப் பிதற்றுவார்.

ஆலின் வீட்டு வாடகையை ஒழுங்காகக் கொடுப்பதில்லை. வாடகை வீட்டிலிருந்து எழும்பச் சொல்லிவிட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள் ஓடித் திரிந்தாள். தங்கையுடன் நிற்பதற்குக் கேட்டுப் பார்த்தாள். அவள் மறுத்து விட்டாள். "எனது குடும்பத்திற்குள் புகுந்து எங்களைக் குழப்பி விடாதே" என்று சொல்லி விட்டாள். ஒரு நாள் இரவு தனது காரிற்குள் படுத்து உறங்கினாள். மூன்று நாட்கள் ஹோட்டலில் நிற்பதற்கு கிழவர் பணம் குடுத்தார். அந்த மூன்று நாட்களில் ஒருநாள் அவரும் அந்த அறையில் பங்கு போட்டுக் கொண்டார்.

ஆலின் என்ன நேர்ந்தாலும் எப்படியிருந்தாலும் ஒருநாளும் திருடுவது இல்லை; ஆனால் நல்லாகப் பொய் சொல்லுவாள்.

ஆலின் நெடுநாட்கள் வேலைக்கு வராமல் நின்றாள். பின்பு ஒருமாதம் ஒழுங்காக வேலைக்கு வந்துவிட்டு, அதன் பிறகு ஒருமாதம் 'நோ பே லீவில்' பிலிப்பைன்ஸ் போய் விட்டாள். அப்பொழுது அவளது அம்மாவும் அப்பாவும் பிலிப்பைன்ஸில் இருந்தார்கள். உண்மையில் அவள் பிலிப்பைன்ஸ்தான் சென்றாளா என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.

திரும்ப வேலைக்கு வந்த போது தனது பற்களில் மூன்றிலொரு பாகத்தை இழந்திருந்தாள். அவ்வளவு பற்களும் பழுதாகிவிட்டன என்றாள். அவள் பாவித்த போதை மருந்துகள் அவளின் நரம்பு மண்டலத்தைப் பாதித்துவிட்டன. ஞாபகசக்தி குறைந்து விட்டது; பசியில்லை; நித்திரையில்லை; உளச்சோர்வு; பாலுணர்ச்சி கூடக் குறைந்துபோய் விட்டது என்றாள். அடிக்கடி சொக்கிளேற் சாப்பிட்டு வந்தாள்.

அவளது மகள் மாயா பெரிதாகிவிட்டாள். இப்பொழுது ஒன்பதாவது வகுப்புப் படிக்கின்றாள். படிப்பிலே படு சுட்டி அவள். தன்னுடைய வளர்ப்பில் இல்லாததால் கொழுத்து விட்டாள் என்றாள். மாயா தன்னைவிட அழகு என்று சொல்லிக் கொள்வாள். அவளை எங்காவது அழைத்துச் செல்வதென்றால் பள்ளி விடுமுறை வரையும் காத்திருக்க வேண்டும். அதற்குத்தான் அனுமதியுண்டு. தன்னுடைய சொந்தப்பிள்ளையைப் பார்ப்பதற்கே அனுமதி பெற வேண்டியுள்ளதே எனக் கவலை கொள்வாள்.

மாயாவிற்கு தனது அப்பா யாரென்று இன்னமும் தெரியாது. ஒருபோதும் நேரில் பார்த்ததில்லை. ஆலின்கூட தனது முன்னாள் கணவனைக் கண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அவன் என்ன செய்கின்றான், எங்கு இருக்கின்றான் என்று ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அந்த வருடம் வந்த கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முதல் நாள்,  நந்தனுடன் வேலை செய்யும் ஹா என்பவன் நந்தனை இரகசியமாக அழைத்தான். நந்தன் ஆலினுடன் நெருக்கமாகப் பழகுவதை அவனும் அறிவான்.

"நீ ஆலினுடன் ஒரு இரவைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறாயா?" என்ற அவனது அந்தக் கேள்வி நந்தனுக்கு பெரும் திகைப்பைக் கொடுத்தது.

"கனக்கக் கொடுக்கத் தேவையில்லை, 80 டொலட்கள் கொடுத்தால் போதும். சும்மா ஒருக்கா ரேஸ்ற் பண்ணிப் பாரன்" என்றான் ஹா. நந்தன் நிலத்தைக் குனிந்து பார்த்தபடி நின்றான்.

"இதை ஆலின்தான் சொன்னாளா? அல்லது நீயாகக் கேட்கின்றாயா?" சற்றுத் தூரத்தே நின்று வேலை செய்து கொண்டிருந்த ஆலினைப் பார்த்த படியே நந்தன் கேட்டான்.

ஹா திடீரென்று ஆலினைக் கூப்பிட்டான்.

"ஆலீன்....! நந்தன் ஓம் என்கின்றான்."

நந்தனுக்குப் பெரும் அந்தரமாகிப் போனது.
"இல்லை... இல்லை... " என்று கத்தினான் நந்தன்.
"நந்தன் பயந்தவன். சரியாகப் பயந்தவன்" என்றான் ஹா.

ஆலினும் ஹாவும் கை கொட்டிச் சிரித்தார்கள். நந்தனுக்கு வெட்கமாகிப் போனது. அன்று முழுவதும் நந்தனுக்கு வேலை ஓடவில்லை. அதே சிந்தனையில் ஆழ்ந்தான்.
ஒரு மிருகத்திற்கும் மனிதனுக்குமிடையேயான போராட்டம் அன்று முழுவதும் அவனுள் நிகழ்ந்தது.

●●இன்னும் வரும் ...

No comments:

Post a Comment