Thursday, 26 October 2017

கார் காலம் - நாவல்

கார் காலம் - தொடர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.


இது பற்றிய திரு குரு அரவிந்தன் அவர்களின் கருத்தை இங்கே தருகின்றேன்.இது 29.09.2017 கனடா உதயன் பத்திரிகையில் வெளியானது.

உங்கள் கருத்துகளையும் அறியத்தந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.கார்காலம் தொடர்கதை பற்றிய கண்ணோட்டம்

(குரு அரவிந்தன்)

கே.எஸ்.சுதாகரின் கார்காலம் என்ற தொடர்கதை உதயன் பத்திரிகையில் வெளிவந்த போது பலராலும் பாராட்டப்பட்ட தொடராக இருந்தது. இலக்கியத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, இந்தத் தொடரைப்பற்றி வாசகர்களின் கருத்து என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள சிலருடன் உரையாட நேர்ந்தது. ‘உதயன் பத்திரிகை வாசிப்பீர்களா?’ என்று நூல் வெளியீட்டுக்கு வந்த மொன்றியல் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘என்ன பயணக்கட்டுரை பற்றியா கேட்கிறீர்கள்?’ என்றார். ‘இல்லை கார்காலம் பற்றி’ என்றேன். ‘நல்லகதை, கெதியாக முடித்துவிட்டார்கள்’ என்றார். ‘தொடர்ந்து வாசிக்க முடியவில்லை, ஆனாலும் வாசித்த பகுதிகள் சிறப்பாக வாசகர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது’ என்று நண்பர் அகணி அவர்களைக் கேட்டபோது குறிப்பிட்டிருந்தார். நண்பர் அகணியும் ஏற்கனவே தொடர் நாவல் ஒன்று எழுதியிருந்தார். ‘பத்தொன்பது வாரங்களாக இரசித்து வாசித்தேன், அவுஸ்ரேலிய வாழ்க்கை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது’ என்றார் பீல் பிரதேசத்தில் வசிக்கும் மங்கை என்ற இலக்கிய ஆர்வலர். ‘ஏன் இவ்வளவு விரைவாகக் கதையை முடித்து விட்டார்’ என்று இன்னுமொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். கதாசிரியரிடம் பதிலை எதிர்பார்க்காவிட்டாலும், எனது அனுபவம் என்வென்றால், ‘எந்தத் தொடரை அலுப்பில்லாமல் வாசிக்கிறோமோ அது விரைவாக முடிந்து விட்டது போலத்தான் தெரியும். நல்ல திரைப்படங்களும் அப்படித்தான்.’
இந்தத் தொடர் அவுஸ்ரேலியாவில் உள்ள கதைக் களத்தையும், அங்கே உள்ள பாத்திரப் படைப்புக்களையும் கொண்டது. கனடாவில் இதை ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி ஆசிரியரால் முன் வைக்கப்பட்டபோது, சிறந்த படைப்புக்களுக்குக் கதைக்களம் ஒரு தடையல்ல, பாத்திரங்களும் இன்றைய யதார்த்தத்திற்கு ஏற்றவையாகவே இருக்கின்றன, நாவலின் ஓட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது, தமிழர்கள் உலகெல்லாம் பரந்து வாழ்வதால் வேறு ஒரு நாட்டில் நடக்கும் சம்பவங்களையும் அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள், எனவே இத் தொடரை வெளியிடுவதில் தயக்கம் தேவையில்லை என்பதை எடுத்துரைத்தேன். இந்தத் தொடர் உதயனில் வெளிவரும் போதே நல்ல வரவேற்புக் கிடைத்ததில் இருந்து அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

கார்காலம் தொடர் 19 அத்தியாயங்களாக உதயன் பத்திரிகையில் வாரந்தோறும் வெளிவந்தது. மெல்பேர்ன் நகரின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ஒரு கார் தொழிற்சாலையில் கதை ஆரம்பமாகிறது.

குலம், நந்தன், ஆலின், புங், மாயா, ஒகாரா, அல்பேற்றோ, ஆச்சிமா, மக்காறியோ போன்ற பாத்திரங்கள் மட்டுமல்ல நீங்காத நினைவில் நிற்கும் மாதவி போன்றவர்களின் பாத்திரங்களும் இந்த நாவலுக்கு உயிர்த் துடிப்பைக் கொடுத்திருந்தன. மாதவியின் சாயலில் ஆலின் என்ற பெண் இருந்ததும், ஆலின் நந்தனைக் கவர்ந்ததற்கும் அது ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவர் மீது ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று தப்புக் கணக்குப் போடுவதால் ஏற்படும் சங்கடங்கள் சொல்லிப் புரியாது. புரியாத புதிர் என்ற அத்தியாயத்தில் ‘அவுஸ்திரேலியாவில் இலங்கை இந்திய நாட்டுக்காரர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களை திருமணம் புரிந்துள்ளார்கள். அதுவும் கூடுதலாக ஆண்கள்தான் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் வியட்நாமியர்களையோ சீனர்களையோ கலப்புத்திருமணம் செய்வது ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே இருக்கிறது.’ என்றதொரு தகவலையும் ஆசிரியர் வாசகர்களுக்காகத் தருகின்றார்.

‘காலையில் செத்தவீடு, மாலையில் கிறிஸ்மஸ் பண்டிகைப் பார்ட்டி, இதுதான் வாழ்க்கை’ என்று புலம் பெயர்ந்த மண்ணின் வாழ்க்கை எப்படி நகருகின்றது என்பதை ஆசிரியர் ஓரிடத்தில் சுட்டிக் காட்டுகின்றார். பிறிதொரு இடத்தில் ‘வாழ்க்ககை கனவுகளாலும் நிஜங்களினாலுமான கலவை’ என்று நந்தன் என்ற பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றார். ஆக மொத்தமாகப் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை வெளியே பார்ப்பதற்குக் கலகலப்பாகத் தெரிந்தாலும் பல சிக்கல்களுக்கும், வலிகளுக்கும் மத்தியில்தான் வாழவேண்டி இருக்கிறது என்பதை இந்தத் தொடர் மூலம் எடுத்துக் காட்டுகின்றார்.

கற்பனையில் மட்டும் வாழப்பழகிக் கொண்டவர்களுக்கு நிஜவாழ்க்கையை அவுஸ்ரேலியாவில் புலம் பெயர்ந்தவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் அற்புதமான தொடர் கதை இதுவாகும். இந்தக் கதை அவுஸ்ரேலியாவிற்கு மட்டுமல்ல, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் மாறுபட்ட அனுபவமாகவும் இருக்கிறது.

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை, காரணம் தமிழ் இலக்கிய உலகில் பலராலும் அறியப்பட்டவராக, தற்சமயம் அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்பேர்ன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஈழமண்ணில் தெல்லிப்பழையில் உள்ள யூனியன் கல்லூரியில் கல்வி கற்றவர். பழகுவதற்கு இனிமையானவர். 1983 ஆம் ஆண்டில் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வரும் இவரது முதல் சிறுகதை ஈழநாடு வாரமலரில் ’இனி ஒரு விதி செய்வோம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான இவர் சுருதி, கதிரொளியான் என்ற புனைபெயர்களிலும் எழுதுகின்றார்.


இவர் ஏற்கனவே ‘எங்கே போகிறோம்,’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2007 ஆம் ஆண்டும், ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2014 ஆம் ஆண்டும் வெளியிட்டிருந்தார். பதிவுகள் இணையத் தளத்தில் இவரது சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஈழத்து இதழ்கள், பத்திரிகைகள், யுகமாயினி, ஞானம், தென்றல், வல்லமை, தாய்த்தமிழ் பள்ளி சிறுகதைப் போட்டி, கந்தர்வன் சிறுகதைப் போட்டி போன்ற பல போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசுகளைப் பெற்றிருக்கின்றர். வளர்ந்து வரும் திறமை மிக்க எழுத்தாளர், இனிய நண்பர் சுதாகர் அவர்களைக் கனடிய தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் சார்பில் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டி, தங்கள் இலக்கியப் பணி மேலும் சிறப்படைய வாழ்த்துகின்றேன்.

No comments:

Post a Comment