4.
அடுத்தநாள் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில்
ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு, 9.30 மணியளவில் ஃபத்தேப்பூர் சிக்ரி (Fatehpur
Sikri) என்னுமிடத்தை அடைந்தோம். ஜெய்ப்பூரைச் சுற்றிக்காட்டிய சுற்றுலா வழிகாட்டி
அங்கேயே தங்கிவிட, புதியதொரு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இணைந்து கொண்டார். அவர்
முன்னையவரைவிட வயதில் மூத்தவரும், நகைச்சுவை மிக்கவருமாக இருந்தார்.
சுற்றிலும் எங்கும் சூனியமாக இருந்தது. அங்கிருந்து
ஏழேழு பேர்கள் போகக்கூடிய வாகனங்கள்
எங்களுக்காகக் காத்திருந்தன. அவற்றை `ஜீப்’ என்று அழைத்தார்கள். ஒவ்வொரு
ஜீப்பிற்கான கட்டணத்தையும் ஏழு பேர்களும் பங்கிட்டுக் கொண்டோம். ஜீப் வருடம்
பூராகப் பயணம் மேற்கொண்டு கிழண்டிப் போயிருந்தது. இருக்கையில் இருந்து சற்றே
எழும்பி, மேலே தொங்கும் கம்பி ஒன்றைப் பற்றிக் கொண்டோம். ஜீப் வளைவுகள், சந்து
பொந்துகளைத் தரிசித்தபடி மேல் நோக்கிக் கிழம்பியது. ஆக்ரா கோட்டையை அடைந்தோம். இடையில் மனிதக் குடியிருப்புகள், கடைகள்
எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவாறு இருந்தது. ஒரு ஜீப்பே போகமுடியாத பாதை
இடைவெளியில் எப்படிக் கல், மண்ணைக் கொண்டு சென்று அங்கே கோட்டையை அமைத்தார்கள்
என்பது வியப்புக்குரியதாக இருந்தது.
“மொகலாயப் பேரரசின் கடைசி மன்னன் யார்?” என்று
கேள்வியெழுப்பினார் சுற்றுலா வழிகாட்டி.