3.
ஆம்பேர் கோட்டை - ராஜா
மான் சிங், மிர்ஷா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200
ஆண்டுகளில் கட்டப்பட்டது. மூத்தா என்னும்
ஏரிக்கரையின் மீது அமைந்திருக்கும் இந்தக் கோட்டை இந்து – மொகலாயர்
பாரம்பரியங்களைப் பறைசாற்றுகின்றது. ஜெய்ப்பூர் நகரம் உருவாகுவதற்கு முன்பே இது
கட்டப்பட்டுவிட்டது. இங்கே பல அரண்மனைகள், மண்டபங்கள், கோயில் என்பன உண்டு. இக்
கோட்டையில் ஷீல் மகால், ஜெய்கர் கோட்டை, கணேஸ் போல் என்பவற்றைப் பார்த்தோம்.
கணேஸ் போல், அம்பேர் கோட்டையின் ஏழு பிரதான வாயில்களில் ஒன்று. இது மன்னருக்கும் குடும்பத்தினருக்குமான பிரத்தியேக வாயில்.
ஷீல் மகால் எனப்படும்
ராஜா ஜெய் சிங் அவர்களால் 1623 இல் கட்டப்பட்ட கண்ணாடிக்கூடம் அமைந்துள்ளது. கூரை
, சுவர்களில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள் மூலம் இக் கட்டடம் ஜொலிக்கின்றது.
ஜெய்கர் கோட்டை
(வெற்றிக் கோட்டை) ஆம்பேர் கோட்டையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. 3 கி.மீ
தூரமுடைய கோட்டைச் சுவரைக்கொண்ட இது முன்பு ஒரு முக்கியமான படைக்கேந்திரமாக
இருந்திருக்கின்றது. ஜெய்கர் கோட்டையின் கீழ் ஒரு பூங்காவனம் இருக்கின்றது.
பூங்காவனத்தில் நீர் வானோக்கிச் சீறும் வண்ணம் ஒரு sprinkler systems
இருக்கின்றது. ”அந்தக் காலத்தில் இது எப்படி வேலை செய்திருக்கும்?” எனப் பீடிகை
போட்டார் சுற்றுலா வழிகாட்டி. “சிறைப்பிடிக்கப்பட்ட தண்டனைக் கைதிகள்,
கீழேயிருந்து நீரை மொண்டு கொண்டு மேலேயுள்ள கோபுரத்திற்குச் சென்று அங்கேயுள்ள ஒரு
அறையில் தொடர்ச்சியாக ஊற்றுவார்கள். அதுவே அவர்களுக்கான தண்டனை.” என்றார் அவர்.
அன்று கடைசியாக பிர்லா
மந்திர் (Birla mandir) எனப்படும் லஷ்மி நாராயண் கோவிலுக்குப் போனோம். இங்கே
இருக்கும் விஷ்னு சிலை ஒரே பளிங்குக் கல்லில் உருவாக்கப்பட்டது என்று சொன்னார்கள்.
நாங்கள் அங்கு போகும்போது இருட்டிவிட்டது. கோயிலிற்குள் நுழைந்த போது,
கோயிலுக்குப் பொறுப்பாக இருந்த ஒருவர்
இளைஞன் ஒருவனுடன் வாக்குவாதப் பட்டுக்கொண்டிருந்தார். இளைஞன் தனது மொபைல்
போனால் கோயிலிற்குள் படம் எடுத்துவிட்டான். அதற்குத்தான் அந்த சரமாரியான ஏச்சு.
`சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது போல இப்பொழுது கையில்
மொபைல்போன் இருந்தால் எதையும் செய்யத் துடிக்கின்றது. இளைஞனில் குற்றமில்லை. ஷெல்பி எடுப்பது முதற்கொண்டு இப்போது அது
பழக்கமாகிவிட்டது. இளைஞன் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போதும், அந்த
மனிதர் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார்.
அன்று இரவு, பயண முகவரினால் ஒழுங்கு செய்யப்பட்ட Red
Fox’ ஹோட்டலில் தங்கினோம். எமக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்ததும் ஒரே
சிகரெட் புகை நாற்றமாக இருந்தது. நிர்வாகத்தினரிடம் முறையிட்டதும் உடனடியாக எமது
அறையை மாற்றித் தந்தார்கள். இந்தியாவில் பெரும்பாலான ஹோட்டல்களில் சிகரெட்
புகைப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றார்கள். இதை ஏற்கனவே நான் ஹோட்டல் புக்
பண்ணும்போது அவதானித்திருந்தேன். ஹோட்டலை முன்
பதிவு செய்யும்போது எந்தவிதமான அறை வேண்டும் என்று கேட்கின்றார்கள். அதில் நாம்
‘non smoking room’ என்பதைத் தெரிவு செய்யலாம்.
உறங்கும் போது `செயற்கைக் கால்கள்’ பற்றியதொரு நினைப்பு
வந்தது. சிறுவயதில் ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள்’ பற்றி அறிந்திருக்கின்றேன்.
அந்தத் தொழிற்சாலையைப் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போயிற்று.
தமிழ்ச் சினிமாவில் அடிமைப்பெண் (எம்.ஜி.ஆர்),
காதல்கோட்டை (அஜித்), ஆரம்பம் (அஜித்), அடுத்தவாரிசு (ரஜனி), என்னை அறிந்தால் போன்ற படங்களின்
காட்சிகள் ராஜஸ்தானில் படமாக்கியிருந்தார்கள். அடிமைப்பெண்ணில் வரும் `ஆயிரம்
நிலவே வா’ பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தமிழ் திரையுலகிலற்கு முதன்முதலில்
அறிமுகம் செய்தது.
பயணம் தொடரும்…….
(இங்கே
குறிப்பிடப்படும் தகவல்கள் – சுற்றுலா வழிகாட்டி மற்றும் இணையத்திலிருந்து
பெறப்பட்டவை)
No comments:
Post a Comment