Friday 5 July 2019

வட இந்தியப் பயணம் (1)


1.

பாங்கொக் / சுவர்ணபூமி எயாப்போட்டின் ஊடாக, மெல்பேர்ணில் இருந்து புறப்பட்ட பயணம், பதின்மூன்றரை நேரப் பறப்பின் பின்னர் டெல்கியை அடைந்தது. டெல்கி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் திரு.பிரதாப் சிங் எமக்காகக் காத்து நின்றார். `தாய்’ விமானத்தில் பயணம் செய்த களைப்பே தெரியவில்லை. நேரம் அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30.

நியூ டெல்கியில், கரோல் பா நகரில் அமைந்துள்ள Wood Castle  Hotel இல் தங்குவதற்கான ஏர்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தோம். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து சுற்றிப் பார்ப்பது எனத் திட்டமிட்டிருந்தோம். எயாப்போட்டில் ரக்‌ஷி ஓட்டுனர்களின் கெடுபிடிகளை ஏற்கனவே அறிந்திருந்ததனால், ஹோட்டல் மூலமாகவே ஒரு சாரதியை ஒழுங்கு செய்திருந்தோம். அவர் தான் திரு பிரதாப் சிங். மூன்று பேர்களுக்கு என ஹோட்டல் பதிவு செய்திருந்ததால், அவர்கள் மூன்று பேர்களின் பொதிகளைச் சுமந்து வருவதற்காக பெரியதொரு வாகனத்தை ஒழுங்கு செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்கள். இருப்பினும் திரு பிரதாப் சிங்கின் காருக்குள் எல்லாப் பொதிகளையும் வைக்க முடியவில்லை. காரின் மேலே ஒரு பொதி உட்கார்ந்திருந்தது.
எயாப்போட்டில் எல்லாரும் வெள்ளைப் பேப்பர்களில் பெயரை எழுதித் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவேளை, எமது வாகனச் சாரதியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திண்டாடினோம். ஒருவர் மாத்திரம் ‘பிங்’ நிறப் பேப்பரில் பெயரை எழுதியபடி தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். 
அந்த நிறம் எமது கண்ணை உறுத்தியபடியால் அவரிடம் நேரே சென்றோம். அதில் எனது பெயர் எழுதி இருந்தது. அத்தனை பேர்களிலும் அவர் மிகுந்த புத்திசாலி என்பதை அறிந்து கொண்டோம். ஹோட்டலுக்குப் போய்ச் சேருவதற்கிடையில் நியூடெல்கியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை எமக்குச் சொல்லியிருந்தார் பிரதாப் சிங்.

ஹோட்டலை அண்மித்ததும், ’கேற்’ பூட்டியிருக்கின்றதெனச் சொல்லிவிட்டு அவர்களுக்கு ரெலிபோன் செய்தார். சற்று நேரத்தில் ஹோட்டலில் இருந்து ஒருவர் வந்து கேற்றைத் திறந்துவிட்டார். இருப்பினும் உள்ளே கார் போகமுடியாதபடி நிறைய வாகனங்கள் வீதியை நிறைத்து நின்றன. நாய்கள் சில சுற்றி வந்து முகர்ந்து பார்த்துவிட்டுப் போயின. கேற்றிலிருந்து எமது பொதிகளை இழுத்துச் சென்றோம். வீதியின் இருபுறமும் குடிமனைகள். அவற்றிடையே இடைக்கிடை கேற் போட்டிருந்தார்கள். இரவு வேளைகளில் அவற்றைப் பூட்டி வைப்பதாகச் சொன்னார் பிரதாப் சிங். அந்தக் குடிமனைகளிடையேதான் எமது ஹோட்டல் இருந்தது. ஹோட்டலில் இன்னொருவர் மேசை மீது முகத்தைக் குப்புறக் கவிழ்த்து உறக்கம் கொண்டிருந்தார், அவர்தான் இரவு நேரத்திற்குப் பொறுப்பானவர். மற்றவர் அவரின் உதவியாளர். ஆக மொத்தம் இரவு இரண்டு பேர்கள், பகலிற்கு இரண்டு பேர்கள் என அங்கே வேலை செய்கின்றார்கள். தவிர ஒரு சமையல்காரர். அவ்வப்போது சுத்தம் செய்ய ஒருவர் வந்துவிட்டுப் போவார். எமது பாஸ்போற்றைப் ஸ்கான் செய்தபின், மூன்றாவது மாடியில் எமது அறை இருக்கின்றது என்று சொன்னார் அவர். ஏற்கனவே ‘சிற்றி வியூ’ பார்க்கும் வண்ணம் நாம் அந்த அறையைத் தெரிவு செய்திருந்தோம். பிரதாப் சிங் எம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

 


‘லிவ்ற்’ எந்தப்பக்கம் என்று கேட்டபோது, அவர்கள் இருவரும் ஆளை ஆள் பார்த்துச் சிரித்தார்கள். அதன் அர்த்தம் அங்கே ‘லிவ்ற்’ கிடையாது என்பதுதான். எங்களின் ஏமாற்றத்தைத் தவிர்க்க, உதவியாளர் எமது பொதிகளைக் கேட்டுக் கேள்வியின்றித் தன் தலையிலே சுமந்து கொண்டு விறுவிறெண்டு படிகளின் வழியே ஏறினார். நாமும் ஆளுக்கொரு பொதியுடன் அவரைப் பின் தொடர்ந்தோம். அறை ஓரளவிற்குப் பரவாயில்லாமல் இருந்தது. அவர் மீண்டும் கீழிறங்கி எஞ்சிய பொதிகளைச் சுமந்துவந்து தந்துவிட்டு, “காலை சந்திப்போம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

காலை பத்து மணியளவில் தான் எழும்பக் கூடியதாக இருந்தது. எழுந்ததும் ‘சிற்றி வியூ’வைப் பார்ப்பதற்காக ஜன்னல் சீலையை நீக்கினேன். சிற்றியைக் காணவில்லை. இது `கிணத்தைக் காணவில்லை’ என்ற கதைதான். கீழே இருமருங்கிலுமுள்ள கட்டடத்தொகுதிகளும் அதனூடாக நாம் நேற்றிரவு வந்த பாதையும் தான் தெரிந்தது. ஒரு சிலர் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

காலை உணவு ஹோட்டலில் இலவசம் என்பதால் கீழே இறங்கினோம். இரவு வேலையில் இருந்தவர்கள் போய், இரண்டு புதியவர்கள் வந்திருந்தார்கள். காலை உணவாக சப்பாத்தியும் கறியும் அல்லது ஆலுபராந்தா என்று சொன்னார்கள். அத்துடன் தேநீர், கோப்பி இலவசம். ஒரு கிழமை அங்கே தங்குவதற்குத் திட்டமிட்டிருந்தபடியால் அன்று சப்பாத்தியும் கறியும் உண்டோம். சொல்லி வேலையில்லை. அந்தளவு பிரமாதமாக அசத்தியிருந்தார்கள். மிகவும் பிடித்துப் போய்விட்டது. அத்துடன் தேநீர், கோப்பி வேண்டும்போது எவ்வளவும் பருகலாம் என்றார்கள். இந்த ஆலுபராந்தா என்ற சொல் தான் எமக்குப் புதிதாக இருந்தது. அதன் சுவையை மறுநாள் பார்க்கலாம் என்று விட்டு வைத்தோம்.

காசு மாற்றுவதற்காக கரோல் பாவின் (karol bagh) நகரப்பகுதிக்குள் நுழைந்தோம். மறுநாள் பயணம் செய்வதற்கான பயணமுகவர் நிலையமான பனிக்கேர்ஸ் ரவல்ஸ் இருக்குமிடத்தையும் பார்த்து வரலாம் என்ற நோக்கில் நடக்கத் தொடங்கினோம். ஒரே புழுதிப்படலம் தெருவெங்கும் நிறைத்திருந்தது. சன நெரிசல் வேறு. தெருவைக் குறுக்காகக் கடப்பது அங்கே தனிப் பெருங்கலை. அதைப் பயில்வதற்கு சிறிது நேரம் பிடித்தது. ஒரு இடத்தில் காசை மாற்றிவிட்டுக் கீழ் இறங்கும்போது ஒரு ரக்‌ஷி சாரதி எம்மைக் கூப்பிட்டார். “எங்கு போக வேண்டும்?” என்று கேட்டார். “ஒரு இடமும் நாங்கள் போகவில்லை” என்று சொல்லிவிட்டு பனிக்கேர்ஸ் ரவல்ஸ் இருக்குமிடம் நோக்கிச் சென்றோம். அவர் ரக்‌ஷியை விட்டுவிட்டு எம்மைத் துரத்தி வந்தார். “நீங்கள் போகும் பாதை மூடப்பட்டுள்ளது. எங்கே போகவேண்டும் என்று சொல்லுங்கள். நான் கூட்டிச் செல்கின்றேன்” என்று சொன்னார். நாங்கள் அவர் சொல்வதைச் செவிமடுக்காமல் நடக்கத் தொடங்கினோம். பாதை ஒன்றும் மூடப்பட்டிருக்கவில்லை. அப்போதுதான் ஒன்றைப் புரிந்து கொண்டோம். காசு மாற்றும் இடங்கள் (Money exchange) எல்லாம் கொள்ளையர்கள் முகாமிட்டிருகின்றார்கள் என்பதுதான். வெவ்வேறு போர்வைகளில் அவர்கள் அங்கே நடமாடுகின்றார்கள் என்பதை அறிந்தோம். பயண முகவரிடம் போய்விட்டு மீண்டும் திரும்பும் வழியில், முன்னர் கண்ட அதே இடத்தில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர் எங்களைப் பார்த்து முழுசிக் கொண்டிருந்தார்.

 


அதன்பின்னர் முகத்திற்குப் போடும் மாஸ்க் (mask) மூன்று வாங்கிக் கொண்டோம். அது தூசியில் இருந்தும் கொள்ளையர்களிடமிருந்தும் எம்மைக் காப்பாற்றும் என நினைத்தோம்.

பயணம் தொடரும்…….

No comments:

Post a Comment