2.
மறுநாள் புதன்கிழமை. ஜெய்ப்பூர், அக்ரா, மதுரா
போவதற்காகப் புறப்பட்டோம். பனிக்கர்ஸ் ரவல்ஸ் அமைந்திருக்கும் இடத்திற்கு முன்பாக
காலை ஆறு மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். JAIPUR – FATEHPUR SIKIRI – AGRA-
MATHURA இவை அமைந்திருக்கும் பிரதேசத்தை
தங்க முக்கோணம் (GOLDEN TRIANGLE) என அவர்கள் அழைக்கின்றார்கள். காலை 5.30
மணியளவில் ஹோட்டலில் இருந்து பொடி நடையாகப் புறப்பட்டோம். இரண்டொரு நாய்கள்
படுத்திருந்தபடியே சோம்பலை முறித்துப் பார்த்தன. குரல் எழுப்புவதற்கான வலு இல்லை.
ஒருவித மயக்க நிலையில் அவை இருந்தன. சில கேற்றுகள் இன்னமும் மூடப்பட்டிருந்தன.
ஒருவாறு 15 நிமிடத்தில் பஸ் புறப்படுவதற்கான இடத்தை அடைந்துவிட்டோம்.
“Good morning everybody” என ஒருவித தனக்கேயுரித்தான பாணியில் இராகமிழுத்தவாறே சுற்றுலா வழி நடத்துபவர் (Tourist guide) பஸ்சிற்குள் ஏறினார். பயண ஒழுங்குகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் புறப்பட்டுவிட்டது. இன்னொருவர் எல்லோருக்கும் தண்ணீர்ப்போத்தல்கள் வழங்கிக் கொண்டு வந்தார். ஆக மொத்தம் சாரதி, பயண வழி நடத்துனர், உதவியாளர் என மூவர் பனிக்கேர்ஸிருந்து வந்திருந்தார்கள்.
டெல்கியிலிருந்து 266 கி.மீ தூரத்திலிருக்கும்
ஜெய்ப்பூர் நோக்கி பஸ் விரைந்தது. காலை 10.30 மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தோம்.
ஜெய்ப்பூரில் இன்னொரு சுற்றுலா வழிகாட்டி இணைந்து கொண்டார். அவர் ஜெய்ப்பூரைப்
பற்றி அறிந்து வைத்திருக்கும் ‘எக்ஸ்பேர்ட்’. ஜெய்ப்பூரை ‘பிங் சிற்றி’ (Pink City) – இளஞ்சிவப்பு நகரம் என்று
அழைக்கின்றார்கள். ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இரண்டாம்
ஜெய்சிங் என்று அழைக்கப்படும் ஆம்பேர் வம்ச மன்னர், வித்யாதர் பட்டாச்சார்யா
என்னும் வங்காள தேசத்தைச் சேர்ந்த சிற்பியின் உதவியுடன் இந்த நகரத்தை
நிர்மாணித்துள்ளார்.
இங்கு நாங்கள் மகாராஜா அரண்மனை (City Palace), ஜந்தர்
மந்தர் (Jantar Mantar), ஹவா மகால் (Hawa Mahal), ஜல் மஹால், ஆம்பேர் கோட்டை
(Amber Fort), ஜெய்கர் கோட்டை போன்றவற்றைப்
பார்த்தோம்.
மகாராஜா அரண்மனை(1729/1732) ஜெய்ப்பூர் நகரின் ஸ்தாபகரான மகாராஜா இரண்டாம் ஜெய் சிங்கினால் கட்டப்பட்டது. தற்போது அருங்காட்சியமாக இருக்கும் இங்கே மன்னர்கள் அணிந்திருந்த உடைகளையும் அணிகலன்களையும் காணலாம். இதைப் பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணம் அறவிடுகின்றார்கள். இந்தியப்பயணிகளுக்கும் பிறநாட்டவர்களுக்கும் வெவ்வேறான நுழைவுக் கட்டணங்கள். இங்கே அமைந்திருக்கும் சந்திர மஹால், ஏழு தளங்களைக் கொண்டது. இங்கே ராஜவம்சத்தினர் தற்போதும் வசித்து வருவதால், தரைத்தளத்தை மட்டுமே பொதுமக்களால் பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஜந்தர் மந்தர் (வானியல்
நோக்குகூடம்) மகாராஜா 2ஆம் சவாய் ஜெய் சிங் அவர்களால் அமைக்கப்பட்ட வானியல்
ஆராய்ச்சிக்கூடம். கோள்கள், வானசாஸ்திர அறிவைக் கொண்டு அக்காலத்தில் கணிப்பீடுகள்
நடந்தமையை இது காட்டுகின்றது.
ஹவா மகால்,
சவாய் பிரதாப்சிங் மகாராஜாவால் 1799 இல் கட்டப்பட்டது. இவர் ஒரு கவிஞராகவும் விளங்கினார்.
5 அடுக்குகளைக் கொண்ட இது சிகப்பு மற்றும் இளம்சிகப்பு நிறக் கற்களினால்
கட்டப்பட்டது. லால் சந் உஸ்தா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டடத்தில் 953
ஜன்னல்கள் இருப்பதைக் காணலாம். இந்த ஜன்னல் வழியாக அரண்மையில் வசிக்கும் பெண்கள்
வெளியே நடக்கும் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகளைப் பாதுகாப்பாக இருந்து பார்த்து
இரசித்தார்களாம்.
மதியம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆம்பேர் கோட்டையைப்
பார்ப்பதற்காகக் புறப்பட்டோம். வழியில் கை அச்சு முறையில் செய்யப்படும் அனோகி
மியூசியத்தைப் பார்வையிட்டோம். கைவண்ணக் கலவைகளிலானான வாழ்த்து அட்டைகள், நகைகள்,
ஆடைகளை இங்கே விற்கின்றார்கள். மேலும் ஜெய்ப்பூரில் நெய்யப்படும் ஆடைகள் தரத்தில்
மிக உயர்வானவை எனச் சுற்றுலா வழிகாட்டி சொன்னார். ஆனால் அங்கே ஆடைகளின் விலை
மிகவும் உயர்வாக இருப்பதைக் கண்டேன். தரம் உயரும் போது விலையும் உயரும் தானே.
போகும் வழியில் ஜெய் மஹாலைப் பார்ப்பதற்காக பேரூந்து
போகும் வழியில் நிறுத்தப்பட்டது. உள்ளே இருந்தபடி பார்த்துக் கொண்டோம். புகைப்படம்
எடுத்துக் கொண்டோம்.
ஜல் மஹால் (water
Palace) மான்சாகர் (Man Sagar Lake) ஏரியின் நடுவே 2ஆம் ஜெய்சிங்கினால் கட்டப்பட்டது.
ஜெய்ப்பூர் மன்னர்கள் வேட்டைக்குச் செல்லும்போது தங்கும் வசிப்பிடமாகப்
பாவிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் நான்கு தளங்களும் நீரிற்குள்ளும், மேல்
தளம் நீருக்கு வெளியேயும் இருக்கின்றது.
பயணம் தொடரும்…….
(இங்கே
குறிப்பிடப்படும் தகவல்கள் – சுற்றுலா வழிகாட்டி மற்றும் இணையத்திலிருந்து
பெறப்பட்டவை)
1.
No comments:
Post a Comment