Thursday, 28 May 2020

பாதுகை - எனக்குப் பிடித்த சிறுகதை


 டொமினிக் ஜீவா


உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்தபோது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடதுகால் பாதத்தைத் தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித்தான், முத்து முகம்மது.

வைரித்த கெட்டியான உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்பு வாதை கொண்ட நோயாளி யைப் போல, அவனைச் சுட்டிக்காட்டின.

சே! சே! காலிலே ஒரு செருப்புக் கிடந்தால்? திரும்பித் தார் ரோட்டைப் பார்த்தான். புகைத்த பின்பு குறையாக வீதியில் வீசி எறியப்பட்டிருந்த சிகரட் துண்டொன்று தரையோடு தரையாக நசுங்கிக் கிடந்தது. அவன் திரும்பிப் பார்க்கும்பொழுது நிலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் குறள் சிகரெட், தனது கடைசிப் புகையைக் கக்கிக்கொண்டிருந்தது.

உள்ளங்காலைப் பதம்பார்த்துச் சுட்ட உஷ்ணத் தகிப்பு இன்னும் முற்றக நீங்காத நிலை.மனம் எரிந்தது.

ஒருகாலத்தில் செம்மா தெரு ஒழுங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டு இன்று மாநகர சபையாரின் ஜனநாயகக் கண்களுக்குத் தவறாகத் தெரிந்த சாதிப்பெயர் அகற்றப்பட்டு, அந்த ஒழுங்கையின் மடக்கு முனையில் பெரிய பள்ளிவாசலின் பெயரைத் தாங்கி, அறிவிப்புப் பலகையுடன் பிரபலப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் ஜும்ஆ மொஸ்க் லேன் வழியாக நடந்து, கஸ்தூரியார் வீதியின் முகப்பிற்கு வந்து, திரும்பிக் கொண்டிருந்த சமயம்தான் முத்து முகம்மது இப்படி நடனம் ஆடிக் காலைத் தூக்கி நிற்கும் சம்பவம் நிகழ்ந்தது.

வடிகாலோரம் துணையாக நின்ற டெலிபோன் கம்பத்தைப் பற்றிப் பிடித்த வண்ணம் வலது காலைச் சிக்காராக ஊன்றி, இடதுகாலே மடக்கி, மடித்து, தலைகுனிந்து, பாதத்தை உற்றுப் பார்த்தான்.

சாம்பல், ஒரு சத நாணய அளவிற்குப் படிந்து, அப்பியிருந்தது.

வாயில் ஊறிய உமிழ்நீரைத் தொட்டு, வழித்து, இரண்டு மூன்று தடவை பூசிப் பார்த்தான்.

முதற் சிகிச்சை வெற்றியளிக்கவில்லை.
உள்ளங்கால் எரிந்தது.
பக்கத்து வடிகாலிலிருந்து வயிற்றைக் குமட்டி வாந்தி வருவது போன்ற துர்நாற்றம் வீசியது.

இடது பாதத்தைத் தரையில் நன்றக ஊன்றி, மண்ணும் எச்சிலும் ஒன்று கலக்க உள்ளங்காலே நிலத்தில் அழுத்தி அழுத்தி வைத்துப் பார்த்தான். சுடுபட்ட எரிவு ஓரளவு குறைந்து சுகம் கண்டது போன்ற பிரமை.

நண்பகல் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குப் போய்த் தொழுதுவிட்டு வந்துகொண்டிருந்தான் முத்து முகம்மது. மனச்சஞ்சலம் நிழலாடிய அவன் நெஞ்சில் நாளை வரப்போகும் பெருநாள் ஈதுல் அழ்கா? விஸ்வரூபம் எடுத்து, மனதைப் போட்டு உளைய வைத்தது. தொப்பி தரித்திருக்கவேண்டிய தலையில் கைக்குட்டையை இரண்டாக மடித்துக் கட்டி இருந்தான். அக் கைக்குட்டையைக்கூட இன்னமும் அவிழ்க்க வில்லை. கைக்குட்டையின் கூர்மூலை இரண்டும் காற்றில் இலேசாகப் படபடத்தன.

நினைவுக் குமிழில் சிறு வெடிப்பு. ‘இன்று வெள்ளிக் கிழமை. விடிஞ்சால் ஹஜ்ஜுப் பெருநாள்?

சூடுபட்ட உணர்விலிருந்து முற்றாக விடுபட்டு, நாளை வரப் போகும் புதுத்திருநாளைப்பற்றிய மன அவசத்தைச் சற்றே
மறந்து, நினைவைத் திசை திருப்பிய பார்வையை அர்த்தமற்றுத் திருப்பினான். வீதியைக் கடக்கலாம் என்று எண்ணி எத்தனித்தான்.

”ஏதாவது கார் கீர் குறுக்கே மறுக்கே வந்திட்டால்?”

புத்தம் புதிய நீலநிறக் கார் ஒன்று காலோரம் ஊர்ந்து போய், ஒழுங்கை முகப்பைத் தாண்டி, சற்று அப்பால் தள்ளி நின்றது. இரண்டு நாகரிக நவயுக நாரிமணிகள் காரிலிருந்து ’பொத்’, ’பொத்’தென்று, தார் ரோட்டின் முதுகு நெளியும் படியாகக் குதித்தனர். பராக்குப் பார்த்தவாறே, சிரிப்புச் சிதறிய வாயைத் திறந்து தமக்குள் தாமே குசுகுசுத்தனர்.

உதட்டுச் சாயப் பகைப்புலத்தில் பற்கள் பொய்ப் பற்களைப்போல மின்னின. ஒருத்தி பக்கத்திலுள்ள ’ஷு பாலஸ்’ ற்குள் பரபரவென்று நுழைந்தாள். மற்றொருத்தி சாவகாசமாக ஆடி அசைந்து நடந்து, அக்கடையின் முதற் படிக்கட்டில் ஏறினாள். ஏறி இரண்டாம் படிக்கட்டில் கால் வைக்கும் போது ’ஷோகே’ஸில் இருந்த நவீன காலணி ஒன்று அவளது கண்களையும் கருத்தையும் தன்பால் கவர்ந்து இழுத்துக் கொண்டது. ஆவல் ததும்பும் கண்கள் ’ஷோகே’ஸின் கண்ணாடிச் சட்டத்திற்குள் புதைந்து, அமிழ்ந்து கொண்டன.

மேற்படிக்கட்டில் ஒருகாலும் கீழே மறுகாலுமாக நின்றவாறே தேகாப்பியாசம் செய்யும் பாணியில் தவளை நடை பயின்றாள் அந்த யுவதி. கண்களுக்கு விருந்தளிக்கும் உடை நாகரீகத்திலிருந்து, முடிமயிர்க் கொண்டை மோஸ்தர் வரைக்கும் உற்றுப் பார்த்துக் கடைச்சரக்கின் மகிமையை ரசித்து வியந்து பார்த்துக்கொண்டே நின்ற முத்து முகம்மதுவின் பார்வை, கீழிறங்கி ’கியூடெக்ஸ்’ பூசி அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது மென் பாதங்களில் போய்த் தைத்தது.

அப் பூம்பாதங்களில் கண்கள் நிலைகுத்தி நின்றன.

அவள் காலில் அணிந்திருந்த புத்தம் புதுக் காலணியில் அவனுடைய எண்ணங்கள் எல்லாம் ஒருமுகப்பட்டுக் குவிந்தன.

மனம் விழித்துக்கொண்டது.

இதைப்போலத்தானே அதுவும்?. அந்த லேடிஸ் ’ஷூஷும்? மண வண்டு, திரும்பத் திரும்ப அவளுடைய காலடியையே மொய்க்கின்றது.

கனவு காண்பவனைப் போன்று, ஒரு கணம் கண்களை மூடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த முத்து முகம்மது, வீதியின் ஒருவழிப் பாதையால் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸின் கடகடத்த இரைச்சல் சப்தத்தைக் கேட்டு, சுயப் பிரக்ஞை பெற்று, வீதி ஓரத்துக்கு ஒதுங்கிக்கொண்டான்.

அந்த ஆரவாரத்தில் - அந்தப் பட்டணத்துப் பரபரப்பில், அனைத்துமே அதிதுரித வேகமாக இயங்கும் மும்முரத்தில் - முக்கி மூழ்கி இருந்தது, நகரத்தின் இதய இரத்தக் குழாயான கஸ்தூரியார் வீதி.

தெரு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

காலணியின் நினைவு பார்வையைத் திருப்பியது. முத்து முகம்மது மனதை மீண்டும் அலைய விட்டான்.

செருப்புக்கடையின் ஷோகேஸில் பறிகொடுத்து நின்றவள், பாதத்தை இடம் மாற்றி வைத்து மேலேறி, நடந்து விட்டாள்.

….பார்க்கப்போனால் காலில் அணியும் செருப்பு!

இதைப்போன்ற லேடி பலரினா ஷூஸினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகக் காலையிலிருந்து அவன் பட்டு வரும் நெஞ்சத் தவிப்பு இருக்கின்றதே, அது அவன் வாழ்க்கையில் என்றுமே அனுபவிக்காதது; என்றுமே அறிந்திராதது.

நெஞ்சுக் கவலையை மேலுக்கிழுத்து நெடுமூச்சாக்கி, ’ஹ"ம்!’ என்று பெருமூச்சு விடுவதின்மூலம் போக்கடித்து விடலாம் என்ற தோரணையில் பெருமூச்சொன்று அவனிடமிருந்து விடைபெறுகின்றது.

…ஆனால், நெஞ்சுப் பாரம் இன்னமும் குறையவில்லையே!

முத்து முகம்மது, தான் தொழில் பார்க்கும் கடையை நோக்கித் திரும்பினான்.

நெஞ்சை அழுத்தும் நினைவின் சுமை.

எட்டி முப்பது கவடு தெற்குப் பக்கமாக வைத்து நடந்தால் அவன் தொழில் பார்க்கும் கடையை அடைந்துவிடலாம். அதைக் கடையென்று பென்னம்பெரிய பெயரில் அழைப்பதைவிட, புறாக்கூடு என்றே சுருக்கமாகச் சொல்லி வைக்கலாம். வளர்ந்துவரும் காலமாற்றத்துடன் குச்சுக் கடைகளெல்லாம் கோபுர மாடங்களாக மாறி, நவயுக நாகரிகத்தை விற்பனைப் பண்டமாக வியாபாரம் செய்யும் அந்த வீதியில், இன்னமும் தனது பத்தாம் பசலி நிலையுடன் காட்சியளிக்கிறது, அந்தப் பழைய சப்பாத்துக் கடை. கிழிந்து, அறுந்து, துவைந்துபோன செருப்புச் சப்பாத்துகளுக்குப் புனர் வாழ்வளித்து, தெருக்களில் உலாவரக் காரணமாக விளங்கும் தொழிற்சாலை அது. இத்தனைக்கும் வாடகை முப்பது ரூபாய். அதன் ஏகபோக உரிமையாளன் சாகூடிாத் முத்துமுகம்மதுவே! அவன் திறமையான தொழிலாளி. பெரியகடை வட்டாரத்தில் அவனுக்கு மவுஸ் அதிகம். இளம் வயதானவனக இருந்தாலும் தொழில் நுணுக்கங்கள் அத்தனையும் கைவரப்பெற்றவன். கை உதவிக்குச் சிறுவன் ஒருவன்.

போதும்.

காலை எட்டு மணிக்கு வந்து பட்டறையில் குந்தினால் மத்தியானம் ஒருதடவை எழும்புவான், சாப்பிட, தொழுகைக்குப் போகவென்று. மற்றப்படி இருந்தது இருந்ததுதான். கடையின் முன்பக்கத்துப் பட்டறையில் இருந்த வண்ணம், சுவருக்கு முதுகை முட்டுக் கொடுத்தவாறு போவோர் வருவோரினது முகங்களையும் பாதங்களையும் பார்த்துப் பார்த்துச் சலிப்பதுதான் அவனுடைய தினசரி வேலை.

இப்படித் தினமும் புதுப்புது முகங்களைப் பார்த்துப் பார்த்து, தொழில் நிமித்தம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த போதுதான் அந்த மலாயாப் பென்சன்காரர் வாடிக்கையாளராக வந்து சேர்ந்தார்.

”சிங்கப்பூரிலை நான் இருக்கேக்கை?” என்று அவர் தனது பிரதாபத்தை முதன்முதலில் தானே ஆரம்பித்தபோதே, அவர் ஒரு மலாயாப் பென்சன்காரர் என்று அனுமானித்துக் கொண்டான், முத்து முகம்மது.

பதினைந்து நாட்களுக்கு முன் -

ஒரு மாட்டுக் கடதாசியில் ஒரு சோடி இங்கிலீஸ் பலரினா லேடி ஷு ஸ்களைப் பத்திரமாக மடித்து மடித்துச் சுற்றி வைத்திருந்தவர், வெகு கவனமாகவும் சாவதானமாகவும் கடதாசியைப் பிரித்து அந்த லேடி ஷூஸ்களைப் பட்டறைப் பலகை மீது வைத்தார்.

”இது சிங்கப்பூரிலே எடுத்தது, மோனை. இதைப் பார். இதுகின்ரை வார் ஒண்டு விட்டுப்போச்சு. மற்றதுக்கு ரெண்டு ஆணி வைச்சுத் தரவேணும். அவ்வளவுதான். என்ன, முடிச்சுத் தாறியா?”
அவற்றைத் திருப்பியும், புரட்டியும், வார்ப்பட்டைகளை இழுத்தும், அசைத்தும் பரிசோதனைகள் நடைபெற்றன.

*ஓம், இருங்களேன். முடிச்சுத் தந்திடுறன். ஒண்டுக்குத் தோல் கொஞ்சம் வைச்சுத் தைக்கவேணும். மற்றதின் ரைக்கு குறிக்கு ஆணி அடிச்சு இறுக்கவேணும். இந்தா செஞ்சி தந் திடுவன். ரூபா ஒண்ணு குடுத்திடுங்கோ.?

*ஏதோ நீதியாக் கேள். எழுவத்தைஞ்சு சதம் தந்திடுறன். ஆனா, வேலை திறமாய் இருக்கட்டும். என்ன, விளங்குதோ?”

பேரம் முடிவடைகின்றது.

”சரி, இப்படிக் குந்துங்களேன். ஒரு நிமிட்டிலை தந்திடுறேன், ஒரு நிமிட்டிலை!”

“எனக்கு இருக்க நேரமெங்கே கிடக்கு? உதாலை சுத்திக் கொண்டு வாறன், கெதியாய்ப் பாத்து முடிச்சுவையன்.”

”சரி… ஜல்தியா சட்டென்று வந்திடுங்க, முடிச்சு வைக்கிறன்.”

போனவர் வரவில்லை. அன்று திரும்பவில்லை. அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. அதற்கு அடுத்த நாள் விட்டு அடுத்தநாள் கூட.
ஊஹும்! திரும்பவேயில்லை!
பெருநாள் நெருங்கிக்கொண்டிருந்தது.
மனதில் ஒரு நப்பாசை.

”இனி அந்த அறம் புடிச்ச மனுசன் வரமாட்டான்போலை இருக்கு. அது கிடந்து இனி ஆருக்கு என்ன லாபம்?” என்று நெஞ்சில் நினைவு அலைகள் சுழியிட்டன. இரண்டு நாட்களுக்கு முன்னர். அவன் துணிந்து விட்டான். நாளை ஒருநாள் போனால் ஹஜ் பெருநாள். அப்புறம் நாட்கள் கடந்துபோனல் அவனிடம் வக்கென்ன இருக்கிறது?
”அதைப் புதிசாக்கி ரகீலாவுக்கே பெருநாள் பரிசாகக் குடுத்துவிட்டால்..?”

ரகீலாவின் பெயரை வாய் உச்சரிக்கும்பொழுதே, நெஞ்சம் இனித்தது!

கடந்த மெளலத் மாதமே அவர்கள் இருவருக்கும் நிக்காஹ் நடந்தேறியது. எண்ணி ஒரு வருடம்கூட ஆகவில்லை. அதற்குள் ஹஜ் பெருநாள். ”எதைக் குடுப்போம்? - என்னத் தைப் பரிசாக அளிப்போம்? என்று மனம் துடிதுடித்த வேளை யில்தான் பென்சன்காரரின்” நினைவு அவன் மனதில் குதிர் விட்டது. அவர் தந்துவிட்டு எடுக்காமல் இருக்கும் பலரினா லேடி ஷூஸ் ஞாபகத்தில் தட்டுப்பட்டது.

ரகீலா அப்படியொன்றும் அவாக் கொண்ட பெண் அல்லத்தான்.

”ஆனா, ஒழுங்கையிலே என்ட மதிப்பு? நாளைக்கி நம்ப பீபியை இந்த ஒழுங்கைப் பெண்டுகள் மதிக்காட்டிபோனா, அவ என்னை மதிப்பாளா?”

ஹஜ் பெருநாளன்று அந்த வட்டத்துப் பெண்களெல்லாம் தொழுகைக்குப் போவார்கள். ஒழுங்கைத் திருப்பத்திலுள்ள பெரிய வீடுதான் பெண்கள் தொழுகை இடம். ஒழுங்கை பூராவிலுமுள்ள அத்தனை முஸ்லிம் பெண்களும் அங்கு ஒன்று கூடுவார்கள்.

”அந்த இடத்திலை, அவுங்களுக்கு மத்தியிலே நம்ம பீபி மதிப்பாய் இல்லையெண்டால், நாளேக்கு நம்மளே இவங்கள் மதிப்பாகளா, என்ன?”

நப்பாசை செயலாகப் பரிணமிக்கின்றது. இரவோடு இரவாய்க் கண்விழித்து, அந்தப் பலரினா லேடி ஷ9ஸ்களை நகாசு பண்ணித் தனது கைவண்ணத்தைக் காட்டிப் புதிதுபோலச் சிருஷ்டித்து விட்டான்.
…அடேயப்பா இப்போது அதன் மவுசுதான் என்ன!

தனது பீபிக்கு அன்புப் பரிசாக பலரினா லேடி ஷுஸ் களைப் பெருநாளன்று கொடுத்துவிட்ட மனப் பூரிப்பில் அவன் திளைத்துக் களித்தது நேற்று.

அந்த நினைவில்தான் எத்துணை இனிமை!

அவனுடைய அகத்தில் குழுமிய பெருமித அலைகள் மூகத் தில் இழைந்தன. இடையிடையே பைத்தியம் போன்று சிரித்துக் கொண்டான். நெஞ்சில் கவிந்திருந்த ரகீலாவின் சிரித்த முகம் அவனைப் பூரிப்பில் ஆழ்த்தியது. உலகத்து இன்பங்கள் எல்லாமே தன் காலடியில் என்று இறுமாந்து நேற்று நடை பயின்று உலாத்தி வந்ததும் இதே வீதியில்தான்.

…ஆனால், இன்று?

இன்று காலையில் சொல்லி வைத்ததுபோல, கடையைத் தேடி வந்துவிட்டார் அந்தப் பென்சன்காரர்.

”என்ன, நான் தந்திட்டுப் போன செருப்புத் தைச்சாச்சா?”

கடைப் பையன்தான் கடையில் இருந்தான்.
அப்பொழுது முத்து முகம்மது பட்டறையில் இல்லை. முன்னால் உள்ள தேனீர்க் கடையில் தேனீர் குடிக்கச் சென்றவன் தேனீர் அருந்திவிட்டு, பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு, கடையின் கதவுடன் சாய்ந்துகொண்டே, புகையை ஊதி ஊதி வாயாலும் மூக்காலும் வழியவிட்டுக் கொண்டிருந்தான்.

அவருடைய தலைக் கறுப்பைத் தனது கடைக்கு முன்னால் கண்டதும், தேநீர்க் கடையின் பின்வாசல் வழியாகப் பாய்ந்து சென்று மறைந்து, தப்பித்துக்கொண்டான் முத்து முகம்மது.

…அதற்காக முழுநாளுமே கடைக்கு வராமல் இருந்துவிட முடியுமா?
அதுவும் நாளைக்கு ஹஜ் பெருநாள். வேலையோ மலைபோல் இருக்கு. நாலு காசு உழைச்சால்தானே நாளைக்குப் பெருநாள் கொண்டாட்டம்?

கடையை நோக்கி நடந்துகொண்டிருந்தவன் மனத்தில் இப்படியான பிரச்சினைக்குரிய சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தன.

”அந்தச் சவத்தை வாங்கி, அந்த மனுசன்ரை முகத்திலே வீசி எறிஞ்சிட்டால்?

”நிக்காஹ் செய்து முதல்லை குடுத்த பரிசு. அதிலேயும் நாளைக்குப் பெருநாள் நாத்து அதைக் காலிலே போட்டுக் கொண்டு தொழுவப்போகும் வீட்டுக்குப் போகாட்டி, நம்மளுக்குத்தான் நல்லா இருக்குமா?”

”இண்டைக்குப் போகட்டும். நாளைக்குப் பெருநாள். கடை பூட்டிடுவம். நாளைக்கு மக்க நாள் திருப்பிக் குடுத்திடுவம்”

மனத்துடன் தர்க்கவாதம் புரிந்து பார்த்தான். சஞ்சல உணர்ச்சி செத்து மடிந்தது. தான் கட்டிய வலைக்குள் தானே விழுந்து தவிக்கும் சிலந்திப்பூச்சியைப்போல, தனது சிந்தனை வலைக்குள் சிக்குப்பட்டுத் தவிதவித்த தன்னையே தேற்றிக் கொண்டான்.

கடைப் படியில் ஏறிப் பட்டறையில் அமர்ந்ததே நினைவில் இல்லை.

பையன் ஒரு சோடிச் சப்பாத்துக்களையும் இரண்டு சிறுவர் களின் செருப்பையும் முன்னால் வைத்தான்.

”இதுகளை ஒரு கால்சட்டைக்காரத் துரை தந்திட்டுப் போனார், செய்து வைக்கட்டாம். சப்பாத்து ரெண்டுக்கும் நல்லாக் குதி அடிச்சு வைக்கட்டாம். இப்ப வருவாராம்?”
”சரி… சரி… நீ ஊட்டுக்குப் போய் சோறு தின்னுட்டு வா.”
மனதின் குரங்காட்டத்தை அடக்க, இதயத்தின் எழுச்சியை இறக்க, தொழிலில் மனத்தை இலயிக்க விட்டான். கை பரபரவென்று பழக்கப்பட்ட வேலையை இயந்திர கதியில் செய்கின்றது. மனம் காட்டில் மேயும் மான்குட்டியைப்போல, அலைந்து திரிகின்றது. அது சுற்றிச் சுற்றி…

ஒரு பூட்சிற்குக் கீல் அடித்தாயிற்று. அடுத்ததை எடுத்துக் குறட்டினால் ஆணிகளைக் கழற்றினான். படக்கென்று குறடு விடுபட்டு, முழங்கை சுவரில் மோதியது, இலேசான வலி. முகத்தில் வேர்வைச் சரம் கோத்து நிற்க, தலைமயிர் ஒழுங்குகெட்டு, முன்னால் கவிந்து கண்களை மறைக்க -பூட்சை வைத்துவிட்டு, நெற்றியில் விழுந்த மயிர்க் கற்றைகளேக் கையால் கோதி மேலேற்றித் தலையில் படிய அழுத்தி விட்டுக் கொண்டே, உடுத்தியிருந்த சாரத்தின் கீழ்த் தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான்.

தொடர்ந்து வேலை நடக்கிறது.

பூட்ஸ் இரண்டிற்கும் பாலீஸ் பண்ணி, வேலையைத் துப்புரவாக முடித்தாகிவிட்டது. அடுத்தது குழந்தைகளின் செருப்புகள்.

”இந்தாப்பா! உன்னட்டை எத்தனை தடவை அலையிறது?”
பழக்கப்பட்ட குரல்.
நிமிர்ந்து பார்த்தான்.
”சே! இந்த நசராணி புடிச்ச மனுஷன் இவ்வளவு நாளும் ஊட்டிலே சும்மா குந்தி இருந்திட்டு, இப்ப வந்து துலைக்கிறானே?”

அந்த மலாயாப் பென்சன்காரர் ஒவ்வொரு படியாக மேலேறுகின்றார், உருவம் உயர்ந்துகொண்டே வருகின்றது.

வெந்துகொண்டிருக்கும் சுடுமணலில் கால் வைத்தவனைப் போல், ஒரு கணம் திணறுகின்றான், முத்து முகம்மது.
மனம் மருளுகின்றது.
சற்று மெளனம்.
”இந்தாப்பா. தலையை நிமிர்த்திப் பார்”
நிமிர்ந்து தலையைத் திருப்புகின்றான். நெஞ்சம் ஆட்டுக் குட்டியின் வாலைப்போலப் பதறுகின்றது.
”அண்டைக்குத் தந்த அந்தச் செருப்புச் சோடியை எடு!”
கடையைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ளாமல் இடம் தவறி வந்துவிட்டவரைப் பார்ப்பதுபோல, அலட்சியமாகப் பார்த்த வண்ணம் நடித்து, ”எதைக் கேட்கிறீங்க? எந்தச் செருப்பு?” என்றான்.

”அதுதானப்பா.அண்டைக்குத் தந்தேனே, அந்தச் செருப்புகளைத்தான்…”
‘எப்ப உங்களுக்குத் தாற தவணை?”
“அண்டைக்கு வாறனெண்டன். வரமுடியாமல் போச்சு. அதுதான் இண்டைக்கு வந்திருக்கிறேன். ம்… எடு…” சொல்லிக்கொண்டே மடியைப் பிரித்து மணிபர்ஸை எடுத்து, விரித்துத் துழாவி ஒரு ஐம்பது சத நாணயத்தையும இருபத்தைந்து சத நாணயம் ஒன்றையும் எடுத்தார்.
”தவணை தப்பிப் போச்சானால் செருப்பு இங்கே இருக்காது. வெளியிலை குப்பை கூடைக்கை எறிஞ்சிருப்பம்” - வார்த்தைகளை அளந்து அவருடைய முகத்தை ஊடுருவிப் பார்த்தவண்ணம் கூறினான், முத்து முகம்மது.

குரலில் கூச்சம்; சற்று அச்சமும் நிழலாடியது.

அவர் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. வெள்ளைக்காரனான வெள்ளைக்காரனுக்கே கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய என்னை இந்தப் பொடிப்பயல் ஏமாத்தவா!? என்ற எண்ணம் பென்சன்காரருடைய மனதில் இழையோடினாலும், ஆத்திரத்தை வெளிக்குத் தெரியாமல் மறைத்தவாறு, ”என்னப்பா, விளேயாடுறாய்? புத்தப் புதிசு. குப்பேக்கை எறிஞ்சு போட்டன் என்கிறாயே? பதினெட்டு ரூபாயல்லவா?” என்றர்.

”சும்மா சத்தம் வேண்டாம். குப்பைக்கை எறிஞ்சு போட்டன் எண்டால் எறிஞ்சு போட்டன். ஆமா, இப்ப என்ன செய்யச் சொல்றீங்க?” -இந்தத் தடவை அவனுடைய பேச்சில் ஓர் அசாதாரணமான போலிக் கோபத் தொனி ஒலித்தது.

ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள அவர் சற்றுச் சிரமப்பட்டாலும் முடிவில் நெஞ்சுக் கொதிப்பை அடக்கிக்கொண்டு, ”*என்னப்பா இப்படிப் படுபொய் சொல்லுறியே! சத்தியம் பண்ணிச் சொல்லுவியா?” என்று கேட்டார். தொடர்ந்து, ”உன் பெத்த தாயைக் கொண்டு சத்தியம் பண்ணு எறிஞ்சு போட்டனென்டு உன் தாயைக் கொண்டு சத்தியம் பண்ணுவியா? என்றார்.

”உம்மா மேலாணையா எறிஞ்சு போட்டன்!?”

”உன்ரை அப்பனைக் கொண்டு சத்தியம் பண்ணு, பார்க்கலாம்?”

”வாப்பா மேலாணையா குப்பேக்கை எறிஞ்சிட்டன்!”
”ஆ?” - வாயைப் பிளந்தார்.
சிந்திப்பதற்கும் அப்பாற்பட்ட நிலை. ஒரு வெறி. ‘ஏமாற்றுகிறானே? என்ற நினைப்பில் ஏற்பட்ட ஒருவித ஆக்ரோஷம். உலைப்பட்டறை போன்று நெருப்பை உமிழும் அளவிற்கு உணர்ச்சி கொதிக்கின்றது.
”உன்ரை கடவுளைக்கொண்டு சத்தியம் பண்ணு! ஹும்…. பண்ணு, கடவுளைக் கொண்டு சத்தியம்!” என்று ஆத்திரமாகக் கத்தினார். கூச்சலிட்டார் என்றே சொல்லலாம். சொல்லிக் கொண்டே படியேறித் தாவி மேலேறி, கதவின் கீழ்நிலைப் படியுடன் பொருத்தப்பட்டிருந்த ஒரு சாண் அகலமுள்ளதும் பட்டறைப் பலகையுடன் இணைக்கப்பட்டிருந்ததுமான நிலைத்தளத்தில் நின்றுகொண்டார்.

”ஆண்டவன் ஆணையாக எறிஞ்சுபோட்டன்!”
”அட படுபாவி! கடைசிலை கடவுளைக்கொண்டு கூடச் சத்தியம் பண்ணிப்போட்டானே?
ஆயுதமற்று, யுத்தகளத்தில் நிற்கும் போர்வீரனின் மன நிலை. உலகமே தன்னைத் தன்னந்தனியாகக் கைவிட்டு விட்டதோ என்ற தவிப்பு, பென்சன்காரரின் நெஞ்சில், நீதியை நிலைநிறுத்தி, கடவுளைக் காப்பாற்றி விடுவதைவிட, தன்னுடைய சுய கெளரவத்தை எப்படியாவது நிலைநிறுத்தியாக வேண்டுமென்ற அசட்டுப் பிடிவாதத்துடன் சுற்றுமுற்றும் பார்க்கின்றர்.

ஒன்றுமே சட்டென்று மனதில் பிடிபடவில்லை. நினைவுக் கோணத்தில் மின்னல் பளிச்சிட்டது. தனது காலில் அணிந்திருந்த செருப்புகளைக் காலைவிட்டு நகர்த்திக் கழற்றினர்.

”ப்பூ! இனி என்னத்தைத்தான் செஞ்சு கிழிச்சிடப் போறார், பார்ப்போமே?”

இப்படி நினைத்திருந்த முத்து முகம்மதுவின் காதுகளில் பென்சன்காரர் உச்சரித்த வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.

”இதுதான் கடைசித் தடவை! ஓமோம், கடைசிமுறை. எங்ககை, இதை தொட்டுச் சத்தியம் பண்ணு, பார்ப்பம்! உனக்குச் சோறு போடுற இந்தச் செருப்பைத் தொட்டுச் சத்தியம் பண்ணு, உண்மையாய் எறிஞ்சு போட்டாயென்டு!” - கண்கள் தரையில் தாழ்ந்து, பதிந்து, தரையோடு உறவாடிக்கொண்டிருந்த, கீழே அனாதையாக விடப்பட்டிருந்த, அந்தச் செருப்புகள் இரண்டையும் அர்த்தத்தோடு வெறித்துப் பார்த்தன.

அவனுடைய விழிகளில் சலனம். மனச்சாட்சியின் மருண்ட பார்வை அவனுள்.

”இதைத் தொட்டா நான் சத்தியம் பண்ணுறது? எனக்குத் திங்கச் சோறு தாற இதைக் கொண்டா நான் பொய் பேசுறது?”

மெளனம்.

அந்த மெளனம், பென்சன்காரரின் ஆவேசம் அலைக்கழிக்கும் நெஞ்சில் வெற்றிப் பெருமித அலைகளைப் பாய்ச்சுகின்றது.
*என்ன, பேசாமல் சும்மா இருக்கிறாய்? ஹும்… சத்தியம் பண்ணன்….”

”முடியாது” என்பதற்கு அடையாளமாக அவன் தலை அங்குமிங்கும் ஆடி, அசைந்து, மறுப்புத் தெரிவித்தது.
”ஏலாது! இதைக்கொண்டு நான் சத்தியம் பண்ண மாட்டேன்!” என்றான், முத்து முகம்மது.

(1961)



No comments:

Post a Comment